ஸ்ரீசாய்ராம்🙏 |
சீரடி சாய் பாபாவின் ஆலயம் பல ஊர்களில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் நிறைய உள்ளது. பக்தியைப் பார் முழுதும் சாதி மத பேதமின்றி பரப்பிய சாயி பல அற்புதங்களை நிகழ்த்தியவர்.
கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக, உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால் தான் ஊர் தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வண்ணம் உருவாகி வருகின்றன.
அது போன்று இன்று திருச்சியில் உருவாகியிருப்பதுதான் தென்சீரடி என்ற அக்கரைப்பட்டி பாபா ஆலயம். திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார், சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் அருளாட்சி செய்யும் புனிதத் தலமான திருச்சியில் பாபா தானும் கோவில் கொள்ள ஆசை கொண்டார் போலும்!
ஸ்ரீ சாய் கற்பக விருக்ஷா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கே.சந்திரமோகன் அவர்களுக்கு சாய்பாபாவின் கட்டளை கிடைக்க உருவானது ஆலயம்! அவரது கனவில் தோன்றி தன் விருப்பத்தை உணர்த்தியதன் பேரில் திருச்சிக்கு அருகில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் தென் சீரடி என்ற பிரமாண்டமான ஆலயம் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்றைக்கு உலகத்தின் சாய் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கும் சீரடிக்கு சாய்பாபா முதன்முதலில் வந்தபோது அமர்ந்த இடம் எது தெரியுமா? ஒரு பாறைக்குள் இருந்து முளைத்து வந்த ஒரு வேப்பமரத்தின் அடியில்தான். அந்த இடமே குருஸ்தான் என்று கோடானு கோடி மக்களால் வணங்கப்படுகிறது. அங்கு அமர்ந்துதான் சீரடி சாய்பாபா பல்லாயிரக்கணக்கான பேரின் குறை தீர்த்தார்.
அதே போன்று அக்கரைப்
பட்டியிலும் பாறைக்கு இடையே ஓர் வேப்பமரம் வளர்ந்திருந்தது. சீரடியில் நிலவிய அதே அமைப்பு, அக்கரைப்பட்டியிலும் இருந்ததை தன் பக்தருக்கு கனவில் உரைத்தார் சாயி. அங்குதான் முதலில் பாபா சிலை வைக்கப்
பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அவ்வாலயமே சமயபுரம் அருகே அக்ரஹாரப்பட்டி என்கிற அக்கரைப்பட்டியில் 50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2011ல் குருஸ்தான் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் ஆரம்பிக்கப் பட்டன.
2016ல் துவாரகமாயி பிரம்மாண்
டமாக சீரடியில் உள்ள சாய்பாபா கோவில் போன்றே நேர்த்தியான கட்டிடக்கலையுடன் உருவாகி கம்பீரமாகக் காட்சி தருகிறது. 3.6 அடி உயரத்தில் 30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தமிழகத்தின் மிகப்பெரிய பாபா ஆலயம் என்ற பெயரைப் பெறுகிறது.
ஜனவரி 20ம் தேதி கும்பாபி
ஷேகம் நடந்த ஆலயத்தை தரிசிக்க சென்ற வாரம் சென்றிருந்தோம். வெண்ணிறப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அழகிய ஆலயம் விரிந்து பரந்து உயர்ந்து நின்று..என்னை தரிசிக்க வருபவர்களின் துன்பங்களை தூசாக்கி அவர்களுக்கு முக்தியளிப்பேன்...என்று பாபா கூறுவது போல் உள்ளது.
சில படிகள் ஏறிச் சென்றால் எதிரில் சாயி பகவான் தரிசனம் நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
சுற்றிலும் வண்ணக் கண்ணா
டிகள் பொருத்தப்பட்டு கண்கவர் அழகில் காட்சி தரும் சந்நநிதி. மேல் விதானங்களில் பாபா சீரடியில் செய்த அருள் பொங்கும் திருவிளையாடல்களின் ஓவியங்கள்.
பாபாவின் வெண்ணிற உருவமும் அவர் முன்புள்ள சமாதியும் அச்சு அசலான சீரடியின் தோற்றம். பகவானின் கண்களின் தீட்சண்யம், 'என் பாதங்களைப் பற்றிக் கொண்டு உன் வேதனைகளைத் தீர்த்துக் கொள்' என்று சொல்வது போல் காருண்யத்துடன் காட்சி தருகின்றது.
சமாதி மந்திரில் சென்று பாபா
முன் நிற்கிறோம். சாந்தமான கருணை வழியும் விழிகள்.
வாவென்று அழைப்பதைப்
போன்ற புன்னகை வதனம். 'உன் வினைகளைத் தீர்க்க நான் இங்கே விச்ராந்தியாக அமர்ந்திருக்க நீ என்னை எங்கெங்கோ தேடுகிறாயே! என் பாதங்களைப் பற்றிக்கொள். உன் கவலைகளை நான் காணாமல் போகச்
செய்கிறேன்' என்று வெள்ளித்
திருவாசியும், பட்டு பீதாம்பர
முமாக் கம்பீரமாகக் காட்சி தரும்
பாபாவின் திருவுருவம்
நம் மனதை ஆசைகளில்
இருந்து விலக்கி 'நீயே சரணம்'
என்று அடிபணிய வைக்கிறது.
அந்த ஆகர்ஷண சக்தியில் கட்டுண்டு அங்கு சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தாலே
நம் மனம் அமைதி பெறுகிறது
காலை 9 மணிக்கு நடைபெறும் சோட்டா(சிறிய) ஆரத்தி தரிசனம். அனைவரும் அமர்ந்து அமைதியான சூழ்நிலையில் சாயிநாமத்தை வாயினால் ஓதி மனதினால் சிந்தித்து கண்மூடி அமர்ந்து அவரை தியானித்தபின், சாயியின் பாத தரிசனம்.
துவாரகமாயியின் தரிசனம் நம்மை மெய் மறக்க வைத்து சாயி..சாயி..என்ற நாமம் ஒன்றையே சொல்லத் தூண்டுகிறது. பாபாவின் விதவிதமான தோற்றங்களோடு மகாபெரியவர், ராமானுஜர் போன்ற குருமகான்களின் ஓவியங்கள் கண்ணைக் கவர்கின்றன.
பின் பாபாவின் அருட் பிரசாதமான உதியைப் பிரசாதமாகப் பெற்று நாம் நெற்றியில் பூசிக் கொள்ளும்
போது 'எதுவும் நிரந்தரமில்லை, என்றேனும் ஒரு நாள் நாமும் சாம்பல்தான் என்பதையும், அதனால் இந்த உலக வாழ்க்கையின் மீது அதீத ஆசையும், போதையும் கொள்ள வேண்டாம்' என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
உதி பிரசாதம் பெற்று வெளியில் வந்து குருஸ்தான், சிவலிங்கம், தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வழி அமைத்துள்ளதால் அந்த வழியில் சென்று தரிசித்து வெளியில் வந்து விடலாம்.
தினம் ஐந்துமுறை ஆரத்தி உண்டு.மதியம் அன்னதானம் உண்டு. இன்னமும் ஆலய சுற்றுப்புற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்
கின்றன.
பக்தர்கள் வேண்டும் வரங்க
ளையும், எல்லையில்லா அன்பு,
அருள், அமைதியையும் வாரி வழங்கும் சாயி பகவானை ஆரவார
மின்றி தரிசிக்க விரும்புவோர்
அவசியம் செல்ல வேண்டிய ஆலயம் இந்த தென் சீரடி!
திருச்சியிலிருந்து ஆலயத்திற்கு வாகன வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment