Tuesday, 11 December 2018

Night at the Golu!நகைச்சுவை பதிவு!!

Night at the Golu!
நகைச்சுவை பதிவு

கணபதி...எல்லோரும் எழுந்திருங்க. வீட்டில் எல்லாரும் தூங்கியாச்சு.

பார்வதி...கணேசா! நீ எங்க கிளம்பிட்ட?

கணபதி...நவராத்திரி நாளையோட முடியற்தே. நம்ம இடத்துக்கு கிளம்ப வேண்டியதுதான.

பார்வதி...பத்து நாளா ஒரே இடத்தில உட்கார்ந்து கால்வலி . கொஞ்சம் நடப்போமா.

லக்ஷ்மி...பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம்...எங்க போனாலும் படுத்து தூங்கற்துதான் வேலை.வந்து எனக்கு கொஞ்சம் காலைப் பிடிச்சு விடுங்கோ... வலி தாங்கல.

விஷ்ணு...நல்ல தூக்கத்துல இருந்தேன். சரி வா. பக்கத்துல உக்காரு.

பார்வதி....சரஸு பார்த்தியா லக்ஷ்மியை. அதிர்ஷ்டக்காரி. வீட்டுக்காரர் எப்புடி கால் பிடிச்சு விடறார்.

சரஸ்வதி....பணப்பை அவகிட்ட இருக்கே..அதான்!

பார்வதி...அதுவும் சரி. நம்மகிட்ட இல்லையே!

சரஸ்வதி...நீங்களும் பரமேஸ்வரரை கூப்பிடுங்கோளேன்!

பார்வதி...ஹ்ம்.கிழிச்சார். தன் உடம்புல பாதியைக் கொடுத்து  காலத்துக்கும் நிக்க வச்சுடுவார்.

சரஸ்வதி...நீங்கள்ளாம் கொடுத்து வச்சவா. எங்காத்துக்காரர் என்கூட ஒரு இடம் வரதில்ல. கோவில்லதான் அவருக்கு இடம் இல்லனா கொலுவிலயும்  இல்லையே?😰

பார்வதி....இதான் உன் கவலையா? அடுத்த வருஷ கொலுபொம்மை ஸ்பெஷலா சரஸ்வதி பிரம்மாவை உருவாக்க வெச்சுடுவோம்!

முருகன்....என் மாமாக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா ராஸக்ரீடை பண்ணிண்டிருக்காரே.ஹ்ம்ம்..

கண்ணன்...ஏன் அலுத்துக்கற முருகா. வள்ளி, தெய்வானை எங்கே?

முருகன்....ரெண்டு பேரும் நவராத்திரி விரதம்னு சொல்லிட்டு அவா பிறந்தாத்துக்கு போயாச்சு.

ராமர்....இந்த வீட்டில பாயசம்,சுண்டல்,பட்சணமெல்லாம் செம டேஸ்ட்டு. இங்கயே பெர்மனென்ட்டா இருந்துடப் போறேன்.

சிவன்....அதான் நன்னா சாப்பட்றவாளை 'சாப்பாட்டுராமன்'ங்கறா!

ராமர்...ஹி.ஹி...
சீதை...மூணு அம்மாக்களுமா விதவிதமா சமைச்சுப் போட்டு நாக்கை வளர்த்து வெச்சிருக்கா. காட்டுல அடுப்பை ஊதி ஊதி நான் இவருக்கு சமைச்சுபோடறதுக்குள்ள போறும்னு ஆய்டுத்து!

பக்கத்தில் ஏதோ கசமுசவென்று சத்தம்...

முருகனும், கணபதியும் அடுத்து இருந்த திருமணம் நடக்கும் பொம்மைகளிடம் போய் பேட்டி எடுத்தனர்.

முருகன்...வருஷாவருஷம் கல்யாணமா உங்களுக்கு?

மாப்பிள்ளை....பணம் கிடைத்தா தினமும் கூட பண்ணிக்கலாமே!

கணபதி...எவ்வளவு குழந்தைகள்?

மாப்பிள்ளை....நாலஞ்சு இருக்கு. எல்லாரும் இந்த கொலுவிலதான் அங்கங்க இருப்பாங்க.

செட்டியாரம்மா....நேத்து ஒரு அம்மா பச்சைகலர்ல ஒரு பட்டு புடவை கட்டிட்டு வந்தாங்களே.அது போல ஒரு புடவைவாங்கித்தாங்க!

செட்டியார்....இந்த வருஷ வியாபாரம் சரியில்ல. டூப்ளிகேட் பட்டு வாங்கிக்க!

செட்டியாரம்மா...இங்க நாமளே  அப்டிதான!!😢

முருகனும்,பிள்ளையாரும் மொபைலுக்காக சண்டை போட்டு ஓடியதில் zooவில் இருந்த மிருகங்கள் பயந்து ஓட ஆரம்பித்தன.

திடீரென்  ஏதோ பேச்சுக் குரல் கேட்க
எல்லாரும் அவரவர் இடத்தில் போய் நின்றனர்.

'ஏதோ சத்தம் கேட்டுதே'என்று பாதி தூக்கத்தில் எழுந்து வந்த வீட்டு எஜமானர் கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றிலும் பார்த்து விட்டு திரும்பிப் போய் படுத்து விட்டார்.

முருகனும், கணபதியும் அடுத்து குறவன், குறத்தியிடம் தம் பேட்டியை ஆரம்பித்தனர்.

கணபதி...இந்த கொலுவில எத்தனை வருஷமா இருக்கீங்க?

குறவன்...ஒரு பத்து வருஷம் இருக்கும் ஷாமி.

குறத்தி...ஏன் சாமி..உங்க தம்பிதான எங்க சாதிப் பொண்ணை கல்யாணம் கட்டிக்கிச்சு?

கணபதி...ஆமாம்.அதோ நிக்கிறானே அவன்தான்.

குறவன்...நல்லா இருக்கட்டும் ஷாமி.

முருகன்...சங்கீத மும்மூர்த்திகளிடம்...மாமா நீங்கள்ளாம் சௌக்யமா?

தியாகய்யர்....என்னத்தை சொல்ல.நேத்து ஒரு பெண்மணி என் பாட்டை பாடினா. தவறான உச்சரிப்பு. தாளமில்லாத பாட்டு. சரியில்லாத ராகம். எழுந்து ஓடமுடியாம உக்காந்திருக்கேன்.😵

'நீங்கள்ளாம் யாரு? எந்த ஊரு?'..கீழே இருந்த பொம்மைகளைப் பார்த்துக் கேட்டார் கணபதி.

நாங்கள்ளாம் art from waste ல் உருவானவர்கள். குப்பைத் தொட்டியிலும், சாக்கடையிலும் இருக்க வேண்டிய எங்களை இப்படி அழகான உருவங்களா மாத்தி உங்களுடன் வெச்சிருக்காங்களே.அதுவே எங்க  அதிர்ஷ்டம்!
 .
பார்வதி....எல்லாரும் அவாவா இடத்துக்கு போங்கோ. . நாளைக்கு நம்ம எல்லாரையும் பெட்டில வெச்சு அடுக்கிடுவா. அடுத்த வருஷம்தான் நாம பார்த்துக்க முடியும்.

கொலுவில் இருந்த மிருகங்கள் அங்குமிங்கும் சென்று கொலுவை ரசித்தன.

எல்லோரும் அவரவர் இடம் செல்ல, முருகன் மட்டும் மொபைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்!

பார்வதி....முருகா! நான் சொன்னது காதில் விழலயா?

முருகன்....இதோ போறேம்மா!

கணபதி....அப்படி என்னதான் எழுதற?

முருகன்....FBல மத்யமர்னு ஒரு க்ரூப் இருக்கு. அதில போஸ்ட் போட்டிண்டிருக்கேன்.

கணபதி....எனக்கு தெரியாதே.அதுல என்ன ஸ்பெஷல்?

முருகன்....அம்மா, அப்பாவை மட்டுமே சுத்தி வந்துண்டிருந்தா உனக்கு என்ன தெரியும்? என்னை மாதிரி உலகத்தை சுற்றி வரணும்!

பார்வதி....அதைப் பற்றி சொல்லேன் முருகா.

முருகன்....அதில் நல்ல போஸ்ட்டை தேர்ந்தெடுத்து  POTWனு சர்ட்டிஃபிகேட் கொடுப்பா. நல்ல விஷயங்களை ஷேர் பண்ணினா GEM ஆகலாம். இந்தாத்து மாமிக்கு கூட POTW கிடைச்சிருக்காம். அவா சந்தோஷத்தில வரவா, போறவாகிட்டல்லாம் இதைப் பற்றி சொல்லிண்டிருக்கா! நானும் அதில join பண்ணிருக்கேன்.

எல்லா தெய்வங்களும் கோரஸாக....நாமெல்லாம் இப்போ மேல் லோகத்திலயோ, பாதாள லோகத்திலயோ இல்லாம மத்தியில் பூலோகத்திலதான இருக்கோம். அதனால நாமும் மத்யமர்தான்!நாம எல்லோரும் மத்யமர்ல சேர்ந்து டுவோம்!

ராதாபாலு

மார்கழி நினைவுகள்...!!


மார்கழி  மாதம்  வந்தாச்சு…!
மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் திருப்பாவை,  திருவெம்பாவைப்  பாடல்களும் ,  எல்.ஆர்.ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத  ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  இனிக்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃ பிளாட்டுகளில் வாசலும்  இல்லை: கோலமும்  இல்லை:  அதை ரசிப்பவரும்  இல்லை.

என்   சின்ன வயதில் நான்கு
மணிக்கெல்லாம்  என் அம்மா ‘எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு’  என்பார்.  இதமான மார்கழிக் குளிரில் கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும்.

கோலத்தை  போட்டு  முடித்து குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று  பஜனையில்  பாடிவிட்டு,  சுடச்சுட  பொங்கலைப்  பெற்றுக்கொண்டு  வந்து  வீட்டில்  அதை  ருசித்து  சாப்பிடும்  அனுபவம் ….இன்றும்  மனம்  அந்த  நாளுக்காக  ஏங்குகிறது!   அறியாத  வயதில்  அன்று  செய்த  அந்தப்  புண்ணியம்தான்  இன்று  அன்பான  கணவரையும்,  அருமையான  குழந்தைகளையும்  கிடைக்கச்  செய்தது  போலும்!

எட்டு  வயது முதல்  எந்தக்  கோலம்  பார்த்தாலும்  அதை  அப்படியே  மனதில்  வைத்து  மறுநாள்  வாசலில்  போடுவேன். விதவிதமாகக்  கோலம்  போடும்  என்  அம்மா  அச்சு  மாதிரி  சிறிதும்  வளையாமல்,  கோணல்  இல்லாமல்  புள்ளி  வைக்கும்  திறமையும்,  அளவெடுத்தாற்போல்  கோலம்  போடும்  அழகும்    என்னிடம்  கொஞ்சம்  குறைவுதான். 
ஆனாலும்  புள்ளிக்கோலம்,  வளைவுக்  கோலம்,  நேர்கோட்டுக்  கோலம், ரங்கோலி என்று  எனக்குத்  தெரிந்த  கோலங்களைப்   போட்ட நோட்டுகள்  ஏழெட்டு  இன்னமும்  என்னிடம்  உள்ளன.

திருமணம் ஆனதுமே உத்திரபிரதேசத்திற்கு மாற்றலாகி விட்டதால் அங்கு கோலம் போட வாய்ப்பில்லை. என் முதல் பிரசவத்திற்கு என் அம்மா வீட்டிற்கு  நாகர்கோவிலுக்கு வந்தபோது, என் மகன் பிறந்த அன்றுவரை வாசல் நிறைத்து கோலம் போட்டிருந்தேன்.

திரும்ப தமிழ்நாட்டிற்கு மாற்றிவந்தபோது அதிர்ஷ்ட  வசமாக  நாங்கள்  குடியிருந்த  வீட்டு  வாசல்கள்  கோலம்  போட   ஏற்றதாக  இருந்ததால்,  நானும்,  என்  மகளும்  சேர்ந்து  அமர்க்களமாகக்  கோலம்  போடுவோம். என்  கணவருக்கு,  பிள்ளைகளுக்கு  ரொம்ப  பிடித்த  கோலங்கள்  கூட  உண்டு!  தினமும்  போட   வேண்டிய  கோலங்களை  என்  பிள்ளைகள்தான்  தேர்ந்தெடுத்துக்  கொடுப்பார்கள்! 

தினமலர்  பத்திரிகையின்  பரிசைக்  கூட  பெற்றுள்ளோம். பல கோலப்  போட்டிகளிலும்  கலந்து  கொண்டு  பரிசுகளைப்  பெற்றதுண்டு! இன்றும்  எங்கள்   ஃபிளாட்டில் மார்கழி  முழுவதும் விதவிதமாய்க் கோலம் போடுவேன்! இது  போன்ற  இனிய நினைவுகளும், அனுபவங்களும்  அக்காலப்  பெண்கள்  பலருக்கும்  இருக்கும்  என  நினைக்கிறேன்.

கோலம்  போடுவது  ஒரு  கலை மட்டும்  அல்ல.  நம்  உடலுக்கும்,  .கைகளுக்கும்,  இடுப்புக்கும்,  கண்ணுக்கும்,  மூளைக்கும் சிறந்த  உடற்பயிற்சியும்  கூட. மார்கழி  மாத  விடிகாலைகளில்  காற்றில் ஓசோன் நிறைந்திருப்பதை  அந்நாளிலேயே  அறிந்த  நம்  முன்னோர்  இப்படி  கோலம்,  பஜனை,  கோவிலுக்கு  செல்வது  என்ற  பழக்கங்களை  உண்டாக்கியுள்ளனர். கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள். கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும்.

கோலம்  உருவானதற்கான  சில  சான்றுகளைப்  பார்ப்போம். வேத  காலத்தில்அங்குரார்ப்பணத்தின்
போது முளைப்பாலிகை  பால்,  பால்குடம் ,  விளக்கு  இவற்றை  வைக்க  தனித்தனி    கட்டங்கள்  வரைந்து  அரிசிமாவு,  மஞ்சள்பொடி  நிரப்புவர்.அதுவே  காலப்  போக்கில்  கட்டக் கோலங்களாகி விட்டன.  அக்கினி  வளர்க்க  ஒன்பது  குழிகள்  தோண்டிக்  குண்டம் அமைப்பர்.
அவற்றை  இணைக்க  கோடு  இட்டதே  புள்ளிக்  கோலமானது. தமிழ்  மக்கள்  பழங்காலத்தில்  மணல்  ஓவியம்  வரைந்ததாக  பழைய  நூல்களில் காணப்படுகிறது.
வெண்மையும்,  சிவப்பும்  இணைந்த  கோலம்  சிவா-சக்தி  ஐக்கியமாகக்  கூறப்படுகிறது.

வடநாடுகளில்  போடப்படும்  ரங்கோலி பற்றிய   சுவையான கதை  இது.  ஹோலி  என்ற   முனிவரின் மனைவி  அவள் கணவர்
இறந்ததால்  அவர்  உருவத்தை  பல  வண்ணப்  பொடிகளால்  வரைந்து  அதன்  மீது  48  நாட்கள்  படுத்து  தன்   உயிரை  விடுகிறாள்.அவள்  நினைவாக  பல  வண்ணங்களில்  போட்ட  கோலம்  ரங்கோலி  ஆயிற்று.

கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.  நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  நல்லது. வீடு  வளம் பெறும்..வாசலில் சூர்யோதயத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும். விசேஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  நல்லது. கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க இரவானாலும்  கோலமிட  வேண்டும்.
அமாவாசை  மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.

இன்று  ஸ்டிக்கர்  கோலங்களே  பல  வீடுகளுக்கு முன் காட்சி
அளிக்கின்றன. தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

Wednesday, 28 November 2018

பாராட்டு எனும் டானிக்!

பாராட்டு எனும் டானிக்!
'எல்லா பேச்சுகளிலும் நமக்கு மிகவும் இனிமையானதும், மகிழ்ச்சி தருவதும் பிறர் நம்மைப் பாராட்டிப் பேசும் வார்த்தைகளே' என்பது ஒரு அறிஞரின் கூற்று.
பாராட்டை விரும்பாத மனிதர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. அடுத்தவர் செய்யும் செயல் மிகச்சாதாரணமானதாக இருந்தாலும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை.
எத்தனை சுலபமான, சிறிய செயலையும்  நேர்த்தியாக செய்தாலும் அதைப் பாராட்டுவதில் என்ன தவறு?அது தரும் சந்தோஷம் பாராட்டப் பட்டவர்களே அறிவர்.வெளிநாட்டினர் சிறு விஷயத்திற்கு கூட நன்றி சொல்வார்கள். அவர்கள் செல்லும் வழியில் நிற்கும் நாம் சற்று நகர்ந்து கொண்டாலும் 'தேங்க்யூ' என்று முகமலர சொல்லிவிட்டு செல்வார்கள்!
'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'என கீதை சொன்னாலும், தொடர்ந்து  முறையாக நம் கடமையைச் செய்ய, முதல் முறை செய்த வேலைக்கு  ஒரு சிறிய பாராட்டு தேவைப்படுகின்றது. இந்த பாராட்டு என்பது மிகப்பெரிய பரிசாகவோ,  இல்லை பணமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. #நன்றி என்ற ஒரு  சொல்லே போதுமானது. இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு ஆசைப்படாத மனிதர் உண்டோ!
மனிதனுக்குள் காணப்படும் மிக உயரிய பண்புகளில் இந்த பாராட்டுதலும் ஒன்று. சிலருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது என்பதே தெரியாது. மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும், ஆனால்  நாம் யாரையும் பாராட்டி விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள்.  மற்றவர்களைப் பாராட்டினால் இவர்களின் கவுரவம்  பாதிக்கப்படும் என்றும் பாராட்டு பெறுபவர்களுக்கு தலைக்கனம் கூடிவிடும் என்றும் கருதுவார்கள்!
இரண்டு வயதுக் குழந்தை கண்டபடி கோடுகளை வரைந்து காக்கா, குருவி என்று  காட்டும்போது, 'ஜோராக வரைந்திருக்கிறாயே'  என்று பாராட்டும்போது, அந்த உற்சாகம் பின்னால் அந்தக் குழந்தை பெரிய ஓவியராக வழி வகுக்கும்!
படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது இக்காலத் தாய்மார்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. குழந்தைகள் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும்,அவர்களைப் பாராட்டி, தட்டிக் கொடுத்து அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்பதை அன்போடும், ஆதரவாகவும் சொல்வதுதான் புத்திசாலித்தனம்!
பல இல்லத்தரசிகளுக்கு எப்பொழுதும் ஒரு குறை! தான் எத்தனை அருமையாகச் சமைத்தாலும், வீட்டை சிறப்பாக வைத்துக் கொண்டாலும் தன் வீட்டார், முக்கியமாக தன் கணவரிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட கிடைப்பதில்லையே என்று!
ஒரு சின்ன பாராட்டு, பெரிய மலை போன்ற காரியத்தைக் கூட  ஆர்வத்துடன், எளிதாகச் செய்ய வைக்கும் ஆயுதம் என்பதைப் பலர் அறிவதில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் வேறுபட்ட திறமைகளை மதித்துப் பாராட்டிக் கொள்வதும், அதன் சார்பாக சின்னச் சின்ன பரிசுகள் கொடுத்துக் கொள்வதும்  குடும்பத்தினருக்குள் பாசப் பிணைப்பு பெருக உதவும். 
சின்னக் குழந்தைகளின் மழலைப் பாட்டு,  கிறுக்கல் ஓவியம், பள்ளி, கல்லூரி குழந்தைகளின் விளையாட்டுத் திறமை,மனைவியின் ஸ்பெஷல் சமையல் ,துணைவரின் அலுவலகத் திறமை, பக்கத்து வீட்டு பாட்டியின் இழை விலகாத கோலம், எதிர் வீட்டுத் தோழியின் எம்பராய்டரி வேலை, மத்யமரில் நண்பர்களின் அனுபவம்.... இப்படி பாராட்ட எத்தனை விஷயங்கள்!
ஒரு வேலையை எவ்வளவு உழைத்து செய்தாலும், அதற்காக நான்கு பேருக்கு  மத்தியில் நம்மை ஒருவர் பாராட்டும்பொழுது, அந்த வேலையைச் செய்ய நாம் பட்ட துன்பங்கள் அனைத்தும்  மறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவ்வளவு கடினமாக உழைத்தும், அதற்கான ஒரு  சிறிய பாராட்டு கூட கிடைக்கவில்லை  என்றால் நமக்கு  மனவருத்தம்தான் ஏற்படுகிறது.
வெற்றிகளைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு விஷயமாக இருந்தாலும் அதனைக் கொண்டாடுவது, அதைவிட மிகப் பெரிய வெற்றிகளை அடைவதற்கு வித்தாக அமையும்!
பாராட்டும் பொழுது 'நீ இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்' என்கிறபோது பாராட்டியதற்கான அர்த்தமே இல்லாமல் போகிறது. பாராட்டும் பொழுது 'ஆனால்' என்ற   வார்த்தை வந்தால் அதற்கு  முன் கூறிய பாராட்டு வார்த்தைகள் மதிப்பிழக்கின்றன.
மனம் விட்டுப் பாராட்டுங்கள்! பாராட்டினால் ஒரு பெரும் பயனும் உண்டு. பிறர் நம் செயலைப்  பாராட்டும்போது,நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் திறமை வெளிப்பட்டு, அதன் மூலம் நாம் அடையும்  முன்னேற்றம் வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக அமைய வாய்ப்புண்டு!
முப்பது  வருடங்களுக்கு முன் என் சிறு  துணுக்கு ஒரு பிரபல பெண்கள் பத்திரிகையில் பிரசுரமானது. அதைப் பார்த்த என் கணவர் என்னைப் பாராட்டி, நிறைய எழுது எனக் கொடுத்த ஊக்கமே, இன்று நான் பல பத்திரிகைகளிலும் எழுத   காரணமாயிற்று! எனக்குள்ளிருக்கும் எழுத்துத் திறமை வெளிவரக் காரணம் என் கணவர்,  சுற்றத்தார், நண்பர்கள், என் குழந்தைகளின் பாராட்டுதான்!
குழந்தைகளுக்கு எந்தத்துறையில் ஆர்வம்,ஈடுபாடு உள்ளதோ அதை மனமாரப் பாராட்டுங்கள்! உங்கள் பாராட்டு அவர்களிடம் அற்புதங்கள் செய்வதைக் கண்டு  மகிழ்வீர்கள்.
கணவன், மனைவிக்குள்'ஈகோ' இல்லாமல் பாராட்டிக் கொள்வது,   தாம்பத்தியம் மேலும் இறுக வழி செய்யும்!
அரசியல் வாதிகளுக்கும்,சாதனை செய்தவர்களுக்கும் பாராட்டு விழா நடத்துவது அவர்கள் மேலும் சிறந்த முறையில் மக்களுக்கு பணி ஆற்ற வேண்டும் என்பதற்கே!
கடவுளைக் கூடப் பாராட்டி,துதி செய்துதான் நாம் பிரார்த்தனை செய்கிறோம்!
ஒரு சிறு விதை விருட்சமாக வளர உதவுவது தண்ணீர்! அது போல ஒருவரின் செயலைப் பாராட்டுவதின் மூலம் அந்த செயல் மென்மேலும் சிறப்படையும்!
பாராட்டும்போது, வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், பெருந்தன்மையோடும், நல்ல மனதோடும், உண்மையாகவும் பாராட்டுங்கள்!
மத்யம நண்பர்களே! நீங்கள் படிக்கும் கட்டுரைகள் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம், வருத்தம் தரலாம், 'ஆ.அப்படியா' என்று வியக்க வைக்கலாம், சில அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அவற்றை படித்து #லைக் போட்டுவிட்டு அடுத்த பதிவுக்கு போகாமல், உங்கள் மனதில் தோன்றும் #கமெண்ட்டை போடலாமே! இது பதிவு போட்டவர்களுக்கு ஒரு சின்ன #பாராட்டு ஆயிற்றே! கூடவே நீங்களும் #மத்யமருள்மாணிக்கம் ஆகலாமே! செய்வீர்களா நண்பர்களே!
பாராட்டில் #போலிப்பாராட்டும் உண்டு! இதில் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! நம்மைப் பாராட்டுவதுபோல் தங்கள் வேலைகளை நம் தலையில் கட்டி விட்டு 'ஹாயாக' இருக்கும் சோம்பேறிகளை இனம் கண்டு ஒதுங்க வேண்டியது உங்கள் திறமை!!
#ராதாபாலு