Sunday, 10 November 2019

ரிஷிகேஷ்



உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.  சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அடக்கமாக, அமைதியாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம்.

நகரெங்கும் யோகா மையங்கள். சிவானந்த சுவாமி ஆசிரமம் மிக அருமையாக உள்ளது.  அனைத்து நாடுகளிலிருந்து ஆயிரக்
கணக்கான சுற்றுலாப்பயணிகள்
வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர்.  ”உலகின் யோகா தலைநகரம்”
என்று போற்றப்படுகின்றது.

ரிஷிகேஷ் ஹிந்துக்களின் மிகப்புனிதமானத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது’இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயில்’என்றும் போற்றப்படுகிறது. ”ரிஷிகேஷ்” என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு “இந்திரியங்களுக்கு அதிபர்” (புலன்களின் கடவுள்) என்று பெயர்.

ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.ஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு வந்து தவம் புரிந்துள்ளார்கள்.

ராவணனைக் கொன்றதற்காக ராமபிரான் இங்கே பிராயச்சித்த சடங்குகளைச் செய்யும்போது ஆர்பரித்து ஓடும் கங்கை தொந்தரவாக இருந்ததால், ஒரு அம்பை எய்து அதை அமைதி
யாக்குகிறான் லக்ஷ்மணன். இன்றும் கங்கை அமைதி
யாகத்தான் அங்கே ஓடிக்கொண்டி
ருக்கிறாள். மேலும் கங்கையைக் கடந்து செல்ல லக்ஷ்மணன் ஒரு தொங்குப் பாலத்தைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.

இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. சமீபத்தில் அதுவும் சிதிலமாகி விட்டதால் அதில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

அருகிலேயே “ராமன் ஜூலா” என்கிற பெயரில் ஒரு பாலத்தையும் அரசு கட்டியுள்ளது. இதுசிவானந்த பாலம் எனப்படுகிறது. இதற்கு எந்தப் புராண சம்பந்தமும் இல்லை. இங்கு
ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்குக் கோவில்கள் இருக்கின்றன.

இந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில்  படகுப் பயணத்தோடு bunky jumping, river rafting போன்ற விளையாட்டுக்களையும்
அனுபவிக்கின்றனர்.

மிகவும் புராதனமான பரத் மந்திர் கோவில் தான் ரிஷிகேஷ் நகரம் உருவாவதற்குக் காரணம். ரைப்ய மஹரிஷி புலன்களை அடக்கித் தவமிருந்தபோது மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் பரத் மகராஜ் என்ற பெயரில் காட்சி தந்த ஆலயம். 13ம் நூற்றாண்டில்  வசந்த பஞ்சமி  அன்று ஆதிசங்கரர் உருவாக்கியது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. இதனுடன் அரச மரமும் அதே வகையான வேறொரு மரமுமாக மூன்று மரங்கள் பின்னிப்பிணைந்து ஒரே மரமாகக் காட்சி தருகின்றன. இவை மூன்றையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக மக்கள் வழிபடுகின்றனர்.

பரத் மந்திரை அடுத்த கங்கைக் கரையில் அமைந்துள்ள திரிவேணி கட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி இணைந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்
படுகிறது. இங்கே தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.

ரிஷிகேஷிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நீலகண்டர் கோவில் இருக்கிறது. போகும் வழியில் வில்வ மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.அந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

அம்மரத்தில் குடியிருக்கும் தேனீக்களின் ரீங்காரத்தை சாமகானமாகக் கேட்டு மகிழும் சிவபெருமான் காட்சி தருகிறார். இங்கே பார்வதிக்கும்
அஞ்சனையின் கைகளில் காட்சி தரும் பால ஹனுமானுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன.

ருத்திராட்சங்களும், ஸ்படிகங்களும் இங்கு விற்கப்படுகின்றன.ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலைகள், ஸ்படிக லிங்கம் போன்றவை அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் கியாரண்டியுடன் கிடைக்கின்றன.

தீபாவளித் திருநாள்🔥2019


தீபாவளித் திருநாள்🔥
கடந்த 2000 ஆண்டுகட்கும் மேலாகப் பண்பாடு, கலாச்
சாரத்தின் அடிப்படையில் பாரதத்தில் மட்டுமின்றி, மலேயா, சீனா, ஜப்பான், நேபாளம் என பலநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீப + ஆவளி என்பதே ‘தீபாவளி’ ஆனது. இதற்கு தீபங்களின் வரிசை என்று பொருள். அதனாலேயே வடநாடுகளில் தீபாவளியன்று மாலை வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர்.
நேபாளத்தில் ஐந்து நாள் தீபத் திரு நாளாகவும், சைனாவில் தீய சக்திகளை எதிர்க்கும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
ஜப்பானியர்கள் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர்.
சீக்கியர்கள் குரு கோவிந்தசிங் ஔரங்கசீப்பிடமிருந்து விடுதலை பெற்று அமிர்தசரஸூக்கு வந்த நாளாகவும், சமணர்கள் மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளாகவும் கொண்டாடுவர்.
குவாலியரைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் தம் வீரர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தும் நாளாகவும், வைணவர்கள் திருமகள் மாலவனை மணந்த நாளாகவும் கொண்டாடுவர்.
தீபாவளி நம் நாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
தீபாவளிக்கு முதல் நாள் ‘தன்தே ராஸ்’, ‘தன திரதோயசி’, ‘தன்வந்திரி ஜயந்தி’ என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது.
தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த 14 பொருட்களில் தன்வந்திரியும் ஒருவர். அவர் அமிர்தத்தில் தனக்கு பங்கு கேட்க, திருமால், ‘நீ திருமேனி பெற்றிருப்பதால் உலகில் ஆயுர்வேதத்தை செழிக்கச் செய்து பெயர் பெறுவாய்’ எனக் கூற அந்த நாளே ‘தனத்ரயோதசி.’
இதற்கு இன்னொரு கதையும் உண்டு. ஹிமா என்ற அரசனின் மகன் மணமான நான்கு நாளில் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்பது அவனது ஜாதகக் கூற்று. அது அறிந்த அவன் மனைவி அன்று இரவு அவனைத் தூங்க விடாது அவனது படுக்கையறை முழுதும் அவளது தங்க நகைகள், வெள்ளிக் காசுகளை பரப்பி, ஏகப்பட்ட விளக்குகளை ஒளிர விட்டாள். இனிய பாடல்களைப் பாடினாள்.
அச்சமயம் பாம்பு உருவில் வந்த யமன் அந்த ஒளியினால் கண்கள் கூச, மலைபோலிருந்த நாணயங்களில் ஏறிச் செல்ல முடியாது, இசையில் மயங்கி, மறு நாள் திரும்பிச் சென்று விடுகிறான்.
இவ்வாறு அந்த மதியூகியான இளம் மனைவியின் செயலால் இளவரசன் காப்பாற்றப்பட்டான். அது முதல் தீபாவளிக்கு முந்தைய நாள் ‘யமதீபதான்’ என்ற பெயரில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது. இதனால் யமபயம் நீங்கும்.
இரண்டாம் நாள் ‘நரக சதுர்த்தசி’ மற்றும் ‘சோட்டி தீபாவளி’ என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளே நரகாசுர வதம் நடந்த நாள்.
துவாபர யுகத்தில் பூதேவியின் புதல்வன் நரகாசுரன் பதினாறாயிரம் கன்னியரை சிறை வைத்தும், இந்திரனின் தாய் அதிதியின் கர்ண குண்டலங்
களைக் கவர்ந்து செல்ல, தேவர்கள் முறையீட்டுக்கு இரங்கிய ஸ்ரீகிருஷ்ணன், தேவி சத்யபாமாவுடன் நரகனின் ஊரான ப்ராக்ஜோதிஷபுரம் மீது போர் செய்து கொன்றார். வெற்றித் திலகத்துடன் விடிகாலை திரும்பிய கிருஷ்ணனை தாதியர் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டதால் விடியற்காலை சூரியோதயத்துக்கு முன் குளிக்க வேண்டும் என்பது வழக்கம்.
சோகத்திலேயே பெரிய புத்திர சோகத்தை அடைந்த பூதேவி தன் மகன், கிருஷ்ணன் கையால் மோட்சம் பெற்றதால் மகிழ்ந்து, உலகத்திலுள்ளோர் நரகாசுரன் இறந்த நாளாய்க் கொண்டாடும் விதமாக விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு கொண்டாட வேண்டுமென பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.
நாம் துன்பப்பட்டாலும் உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம்.
தீபாவளியன்று லட்சுமி கங்கை நீரிலும், எண்ணெயிலும் இருப்பதால் அன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்ததாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று காலை யம தர்ப்பணம் செய்தால் யமதர்மன் திருப்தியடைந்து, நாம் ஒரு வருடம் செய்யும் பாபம் விலகுவதாக ஐதீகம்.
மூன்றாம் நாள் மார்வாடிகள், மற்றும் பல வட நாட்டினர் லக்ஷ்மி பூஜையை மாலையில் செய்வர். வாமன அவதாரம் எடுத்து மகா விஷ்ணு, பலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி, அவனை அழித்து அவன் சிறைப்படுத்தி வைத்திருந்த லக்ஷ்மி தேவியை விடுவித்தார். அந்த நாளே வணிகர்கள் லக்ஷ்மி பூஜை செய்யும் நாளாயிற்று.
அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வழக்கம். உறவினர், நண்பர்
களுக்கு இனிப்புகள் வழங்கி வரும் ஆண்டு லாப ஆண்டாக இருக்க லக்ஷ்மி தேவியை வரவேற்று, பிரார்த்தனை செய்வர்.
பார்வதி தேவி, சிவபெருமானுடன் தாயக்கட்டம் ஆடிய நாள் அது என்பதால் அன்று கண்டிப்பாக சூதாட்டம் ஆடுவது பல வட நாடுகளில் வழக்கமாயுள்ளது. அன்று இரவு சூதாட்டம் ஆடுவதால். அவ்வருடம் முழுதும் சுபிட்சமாக இருக்குமென்பது அவர்கள் நம்பிக்கை.
நான்காம் நாள் ‘பலிப்ரதிபாதா’, ‘பலிபத்யாமி’, 'கோவர்த்தன் பூஜா'என்று கொண்டாடப்படுகிறது. பலியை மூன்று அடியால் பாதாள லோகத்தில் அழுத்தி அழித்த விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை அடுத்த பிரதமை அன்று வந்து அவனது அறிவு ஒளியால், உலகின் அஞ்ஞான இருட்டை அழிக்க அனுமதித்ததால், அன்று பல இடங்களில் பலிச் சக்கரவர்த்தி வழிபாடு செய்து, கோ பூஜை செய்வர்.
ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தன
மலையைத் தூக்கி இந்திரனை வென்ற நாளாக கோவர்த்தன் பூஜா செய்யப்படுகிறது.
ஐந்தாம் நாள் ‘பாவ்பீஜ்’,
'பாய்தூஜ்' என்ற பெயரில் சகோதர, சகோதரிகளுக்குள் நெருக்கம் ஏற்படுத்தும் நாள். இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு.
எமன் தன் தங்கை யமுனாவிடம் மிகவும் பாசம் கொண்டிருந்தாலும் அவளைக் காண அடிக்கடி வருவதில்லை. தீபாவளிக்குப் பிறகு வரும் துவிதியை அன்று அதிசயமாக வந்த அண்ணன் யமனை வரவேற்ற யமுனை 'ஒவ்வொரு ஆண்டும் தன்னைக் காண அந்த நாளில் வருவதுடன் உலகில் எல்லா சகோதரர்களும் தங்கள் சகோதரிகளின் வீட்டுக்கு சென்று உபசரணைகளை ஏற்க வேண்டும். அவர்களுக்கு யமபயம் இருக்கக் கூடாது' எனவும்  வேண்டிக் கொண்டாள். அதனா
லேயே அன்று சகோதரர்கள் தம் சகோதரிகள் வீட்டுக்குச் சென்று விருந்துண்ணும் பழக்கம் ஏற்பட்டது.
அன்றுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உலகுக்கே வேதமான ஸ்ரீமத் பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்த நாள்.
மஹாவீரர் நிர்வாண நிலை அடந்த நாள்.
உண்மையைத் தேடி அலைந்த நசிகேதன் யமனை சந்தித்து மரணத்தை வெல்லும் வழி கேட்க, ‘இறைவனைப் பற்றிய விழிப்பு நிலை பெறும்போதே, உனக்கு ஜனன, மரண பந்தம் விலகி முக்தி கிட்டும்’ என எமன் போதித்த நாளும் இதுவே.
மற்ற மாநிலங்களில் இரண்டு முதல் ஐந்து நாட்கள் கொண்டா
டப்படும் தீபாவளி நம் தமிழ் நாட்டில் ஒரு நாள் மட்டுமே கொண்டா
டப்படுகிறது.
அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் செய்வது நம் தமிழ் நாட்டு வழக்கம். தேவி பார்வதி இந்த விரதத்தை நோற்றே, இறைவன் உடலில் பாதி பெற்றதால் இதைச் செய்யும் பெண்கள் கணவருடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.
நாமும் தீபாவளி நன்னாளில்  இறைவனைத் துதித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்!

Saturday, 9 November 2019

கணபதி பப்பா மோரியா🙏



ஸ்ரீகணபதி செல்வம் கொழிக்கும் மஹாராஷ்டிரத்தின் முதல் முக்கிய கடவுள். ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி இங்கு மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகளில் ஐந்து நாட்களும், ஆலயங்களில் பத்து நாட்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

கடைசி நாளன்று ‘கணபதி பப்பா மோரியா...பிச்சா வர்ஷி லவுகரி யா' (அடுத்த வருடம் சீக்கிரம் வா) என்று விண்முட்டும் கோஷத்துடன் விசர்ஜன் செய்தபின் ஊரே மிக அமைதியாகி விட்டதான உணர்வு தோன்றும். மொத்தத்தில் இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாக பிள்ளையார் விளங்குகிறார்.

இங்குள்ள விநாயகர் ஆலயங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொன்றும் புகழும் பெருமையும், பிரசித்தமும் உடையவை. ‘அஷ்ட விநாயகத் தலங்கள்’ மிக முக்கியமானவை.

மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பல விநாயகர் ஆலயங்களுக்கும் சிகரமாக விளங்குவது பிரபாதேவியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, ஹிந்து சாஸ்திர நிபுணர்களால் கர்ப்பக்கிரகத்தின் புனிதத் தன்மை கெடாதவாறு பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது.

கோயிலுக்கு 13 அடி உயரமுள்ள மூன்று மரக் கதவுகள் உண்டு. அவற்றில் அஷ்ட லட்சுமி, அஷ்ட கணபதி, தசாவதாரக் காட்சிகள் மிக அருமையாகக் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

ஆலயத்தின் பிரதான கோபுரத்தின் மேலுள்ள கலசம் 12 அடி உயரமும், 1500 கிலோ எடையும் கொண்டு தங்கத் தகடுகளால் வேயப்
பட்டுள்ளது. அது தவிர 37 கலசங்களைக் கொண்டு, கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம்.

இறைவன் அமர்ந்து அருள் தரும் கர்ப்பக்கிரஹம் பத்தடி உயரத்தில் எண்கோண வடிவமாக அமைந்துள்ளது. உட்புறம் தங்கத் தகடுகளில் அற்புதமான வேலைப்பாட்டுடன் அழகு செய்யப்பட்டுள்ளது. மேலே அமைந்துள்ள அலங்கார தொங்கு விளக்கின் அழகு நம் கண்ணையும், மனதையும் கவர்வதுடன், இறைவனின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது!

உயர் ரக கரு நிறக் கல்லாலான சித்தி விநாயகரின் திரு உருவம் 2½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு விசேஷமான அமைப்பில் வலம்புரி கணபதியாக அமைந்
துள்ளது.

சதுர்ப்புஜதாரியாக, மேல் வலக்கையில் தாமரையும், இடக்கையில் அங்குசமும், கீழ் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் மோதகங்கள் நிறைந்த கிண்ணமும் கொண்டு காட்சி அளிக்கும் கணநாதரைக்
காண கண் கோடி வேண்டும். வலது தோளிலிருந்து இடது வயிறு வரை பூணூலாக ஒரு அரவம்  காட்சியளிக்கிறது.

விநாயகரின் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. இது சிவ பெருமானின் அம்சத்தைக் குறிக்கிறது. மனைவியரான சித்தி தேவி, புத்தி தேவி இருவரும் செல்வம், வளமை இவற்றின் அம்சமாக இருபுறமும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.

1801 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வியாழக்கிழமை இந்த பழைய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கருவறை பலமுறை மாற்றியமைக்கப் பட்டாலும் மூலமூர்த்தி அதே இடத்தில் உள்ளது. 1994ல் சிருங்கேரி சங்கராசாரியாரால் கும்பாபிஷேகம் நிகழப் பெற்றது.

ஐந்து மாடிகளைக் கொண்டு ஒரு கோட்டை போல் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் மாடியிலிருந்து விசேஷ நாட்களில் பக்தர்கள் இறைவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இரண்டாவது மாடியில் அர்ச்சகர்களுக்கான அறை, இறைவனுக்கு மகா நைவேத்யம் தயாரிக்கும் அறை ஆகியவை உள்ளன. அங்கிருந்து நைவேத்யம் நேரடியாக கர்ப்பக் கிரஹத்துக்கு எடுத்துச் செல்ல லிப்ட் வசதி உள்ளது. மூன்றாவது மாடியில் நிர்வாக அறையும், நான்காம் மாடியில் 8500க்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நூலகமும் உள்ளது. ஐந்தாம் மாடி விசேஷ நாட்களுக்கு செய்யும் ஏற்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. சோலார் எனர்ஜி மூலம் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

கணபதிக்கு எதிரில் பளிங்கு மண்டபத்தில் காட்சி தரும் ஒன்றரை அடி உயர வெள்ளி மூஞ்சூறு நம் விருப்பங்களை பிள்ளையாரிடம் எடுத்துக் கூறுவதாக ஐதிகம். அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அவர் காதில் நம் விருப்பத்தை கூற வேண்டும்.

இவ்வாலயத்தினுள் ஹனுமான் சன்னதி ஒன்றும் அமைந்துள்ளது. காவி வண்ண மண்டபத்தில் வாலை உயர்த்தியபடி தரிசனம் தரும் இவர் சயான்  சாலையை சீர்படுத்திய சமயம் கிடைத்தவராம். இவரும் வரப்ரசாதியாக வணங்கப் படுகிறார்.

இத்தனை சிறப்பாகக் கோட்டை போல் அமைந்துள்ள ஆலயத்தில், வெள்ளி மண்டபத்தில் கவிழ்த்த தாமரை போன்ற தங்க விதானத்தின் கீழ் விதவிதமான அலங்காரத்துடன் அரசனைப் போல் எந்த நேரமும் அலங்கா
ரத்தோடு காட்சி தந்து வேண்டு
வோர்க்கு வேண்டிய வரம் தரும் விநாயகரின் முன் நின்றால் நகர்வதற்கு நமக்கு மனமே வராது.

சித்தத்தைப் பித்தம் கொள்ள வைக்கும் சித்தி விநாயகரை தரிசிக்க ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் அங்காரக சங்கஷ்டி எனும் செவ்வாயன்று வரும் சதுர்த்தி தின்ங்களில் இங்கு மக்கள் விடிகாலை மூன்று மணி முதலே வரிசையில் காத்திருப்பர். 1½ முதல் 2 லட்சம் மக்கள் தரிசிப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் முதல் முக்கியக் கடவுளாகக் கருதப்படும் சிரித்த முகத்துடன் அருட்காட்சி தரும் சித்தி விநாயகரின் அழகைச் சொல்லி முடியாது. நேரில் தரிசித்தாலே உணர முடியும். 'நவசால பவனார கணபதி' என்று மராத்தியில் கூறப்படும் இந்த விநாயகர் எளிய உண்மையான வேண்டுதலை உடன் நிறைவேற்றுவார் என்பது பொருளாம். பாலிவுட் நடிகர்களுக்கு மிகவும் விருப்ப
மானவர் இப்பிள்ளையார்!

15 வருடங்களுக்கு மிகச் சுலபமாக ஆலயம் சென்று வணங்கி அமர்ந்து வருவோம் நாங்கள். இப்பொழுது சாதாரண நாட்களிலேயே  வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு அதிக தூரம் நடந்து வந்து வரிசையில் நின்று தரிசிக்க 4,5 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி நாட்களில் பல மணி நேரம் ஆகும்.

நினைத்ததை நடத்திவைத்து, இடர்களை இல்லாதாக்கி, இறைபக்தியுடனான இனிய வாழ்வை வரமாகத் தரும் முக்கண்ணன் மகன் முதல் தெய்வமான முத்தான சித்திவிநாயகனை இத்திருநாளில் சிந்தித்து சிறப்புற வாழ்வோம்🙏