Saturday, 9 November 2019

கணபதி பப்பா மோரியா🙏



ஸ்ரீகணபதி செல்வம் கொழிக்கும் மஹாராஷ்டிரத்தின் முதல் முக்கிய கடவுள். ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி இங்கு மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகளில் ஐந்து நாட்களும், ஆலயங்களில் பத்து நாட்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

கடைசி நாளன்று ‘கணபதி பப்பா மோரியா...பிச்சா வர்ஷி லவுகரி யா' (அடுத்த வருடம் சீக்கிரம் வா) என்று விண்முட்டும் கோஷத்துடன் விசர்ஜன் செய்தபின் ஊரே மிக அமைதியாகி விட்டதான உணர்வு தோன்றும். மொத்தத்தில் இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாக பிள்ளையார் விளங்குகிறார்.

இங்குள்ள விநாயகர் ஆலயங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொன்றும் புகழும் பெருமையும், பிரசித்தமும் உடையவை. ‘அஷ்ட விநாயகத் தலங்கள்’ மிக முக்கியமானவை.

மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பல விநாயகர் ஆலயங்களுக்கும் சிகரமாக விளங்குவது பிரபாதேவியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, ஹிந்து சாஸ்திர நிபுணர்களால் கர்ப்பக்கிரகத்தின் புனிதத் தன்மை கெடாதவாறு பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது.

கோயிலுக்கு 13 அடி உயரமுள்ள மூன்று மரக் கதவுகள் உண்டு. அவற்றில் அஷ்ட லட்சுமி, அஷ்ட கணபதி, தசாவதாரக் காட்சிகள் மிக அருமையாகக் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

ஆலயத்தின் பிரதான கோபுரத்தின் மேலுள்ள கலசம் 12 அடி உயரமும், 1500 கிலோ எடையும் கொண்டு தங்கத் தகடுகளால் வேயப்
பட்டுள்ளது. அது தவிர 37 கலசங்களைக் கொண்டு, கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம்.

இறைவன் அமர்ந்து அருள் தரும் கர்ப்பக்கிரஹம் பத்தடி உயரத்தில் எண்கோண வடிவமாக அமைந்துள்ளது. உட்புறம் தங்கத் தகடுகளில் அற்புதமான வேலைப்பாட்டுடன் அழகு செய்யப்பட்டுள்ளது. மேலே அமைந்துள்ள அலங்கார தொங்கு விளக்கின் அழகு நம் கண்ணையும், மனதையும் கவர்வதுடன், இறைவனின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது!

உயர் ரக கரு நிறக் கல்லாலான சித்தி விநாயகரின் திரு உருவம் 2½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு விசேஷமான அமைப்பில் வலம்புரி கணபதியாக அமைந்
துள்ளது.

சதுர்ப்புஜதாரியாக, மேல் வலக்கையில் தாமரையும், இடக்கையில் அங்குசமும், கீழ் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் மோதகங்கள் நிறைந்த கிண்ணமும் கொண்டு காட்சி அளிக்கும் கணநாதரைக்
காண கண் கோடி வேண்டும். வலது தோளிலிருந்து இடது வயிறு வரை பூணூலாக ஒரு அரவம்  காட்சியளிக்கிறது.

விநாயகரின் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. இது சிவ பெருமானின் அம்சத்தைக் குறிக்கிறது. மனைவியரான சித்தி தேவி, புத்தி தேவி இருவரும் செல்வம், வளமை இவற்றின் அம்சமாக இருபுறமும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.

1801 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வியாழக்கிழமை இந்த பழைய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கருவறை பலமுறை மாற்றியமைக்கப் பட்டாலும் மூலமூர்த்தி அதே இடத்தில் உள்ளது. 1994ல் சிருங்கேரி சங்கராசாரியாரால் கும்பாபிஷேகம் நிகழப் பெற்றது.

ஐந்து மாடிகளைக் கொண்டு ஒரு கோட்டை போல் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் மாடியிலிருந்து விசேஷ நாட்களில் பக்தர்கள் இறைவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இரண்டாவது மாடியில் அர்ச்சகர்களுக்கான அறை, இறைவனுக்கு மகா நைவேத்யம் தயாரிக்கும் அறை ஆகியவை உள்ளன. அங்கிருந்து நைவேத்யம் நேரடியாக கர்ப்பக் கிரஹத்துக்கு எடுத்துச் செல்ல லிப்ட் வசதி உள்ளது. மூன்றாவது மாடியில் நிர்வாக அறையும், நான்காம் மாடியில் 8500க்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நூலகமும் உள்ளது. ஐந்தாம் மாடி விசேஷ நாட்களுக்கு செய்யும் ஏற்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. சோலார் எனர்ஜி மூலம் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

கணபதிக்கு எதிரில் பளிங்கு மண்டபத்தில் காட்சி தரும் ஒன்றரை அடி உயர வெள்ளி மூஞ்சூறு நம் விருப்பங்களை பிள்ளையாரிடம் எடுத்துக் கூறுவதாக ஐதிகம். அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அவர் காதில் நம் விருப்பத்தை கூற வேண்டும்.

இவ்வாலயத்தினுள் ஹனுமான் சன்னதி ஒன்றும் அமைந்துள்ளது. காவி வண்ண மண்டபத்தில் வாலை உயர்த்தியபடி தரிசனம் தரும் இவர் சயான்  சாலையை சீர்படுத்திய சமயம் கிடைத்தவராம். இவரும் வரப்ரசாதியாக வணங்கப் படுகிறார்.

இத்தனை சிறப்பாகக் கோட்டை போல் அமைந்துள்ள ஆலயத்தில், வெள்ளி மண்டபத்தில் கவிழ்த்த தாமரை போன்ற தங்க விதானத்தின் கீழ் விதவிதமான அலங்காரத்துடன் அரசனைப் போல் எந்த நேரமும் அலங்கா
ரத்தோடு காட்சி தந்து வேண்டு
வோர்க்கு வேண்டிய வரம் தரும் விநாயகரின் முன் நின்றால் நகர்வதற்கு நமக்கு மனமே வராது.

சித்தத்தைப் பித்தம் கொள்ள வைக்கும் சித்தி விநாயகரை தரிசிக்க ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் அங்காரக சங்கஷ்டி எனும் செவ்வாயன்று வரும் சதுர்த்தி தின்ங்களில் இங்கு மக்கள் விடிகாலை மூன்று மணி முதலே வரிசையில் காத்திருப்பர். 1½ முதல் 2 லட்சம் மக்கள் தரிசிப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் முதல் முக்கியக் கடவுளாகக் கருதப்படும் சிரித்த முகத்துடன் அருட்காட்சி தரும் சித்தி விநாயகரின் அழகைச் சொல்லி முடியாது. நேரில் தரிசித்தாலே உணர முடியும். 'நவசால பவனார கணபதி' என்று மராத்தியில் கூறப்படும் இந்த விநாயகர் எளிய உண்மையான வேண்டுதலை உடன் நிறைவேற்றுவார் என்பது பொருளாம். பாலிவுட் நடிகர்களுக்கு மிகவும் விருப்ப
மானவர் இப்பிள்ளையார்!

15 வருடங்களுக்கு மிகச் சுலபமாக ஆலயம் சென்று வணங்கி அமர்ந்து வருவோம் நாங்கள். இப்பொழுது சாதாரண நாட்களிலேயே  வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு அதிக தூரம் நடந்து வந்து வரிசையில் நின்று தரிசிக்க 4,5 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி நாட்களில் பல மணி நேரம் ஆகும்.

நினைத்ததை நடத்திவைத்து, இடர்களை இல்லாதாக்கி, இறைபக்தியுடனான இனிய வாழ்வை வரமாகத் தரும் முக்கண்ணன் மகன் முதல் தெய்வமான முத்தான சித்திவிநாயகனை இத்திருநாளில் சிந்தித்து சிறப்புற வாழ்வோம்🙏

No comments:

Post a Comment