Tuesday, 12 November 2019

ஓம் கணேசாய நம:

‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு’



நம் பாரத பூமியில் தோன்றிய அனைத்து இந்து மதத்தினரும் கணபதியையே முதல் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். வீடுகளில் எந்த விசேஷம் ஆரம்பிக்குமுன்பும் கணபதி பூஜை செய்த பின்பே ஆரம்பிக்கிறோம். ஆலயங்களிலும் அவ்வாறே. இந்த ஐதீகம் வட கயிலயங்கிரியிலிருந்து தென்கோடி இலங்கை வரை வேரூன்றி தொன்று தொட்டு இருந்து வருகிறது. விஷ்ணு ஆலயங்களிலும் கணப்தி ‘தும்பிக்கையாழ்வார்’ என்ற நாமத்தோடு விளங்குகிறார். ஜைன மதத்தவர் கணபதியை சிறப்பாகப் போற்றி வணங்குவர். பௌத்த தேவாலயங்களிலும் புத்த பெருமானின் பலவித விக்ரஹங்களுக்கு இடையில் கணபதியின் உருவத்தைக் காணலாம். பிள்ளையார் இல்லாத ஆலயங்களே கிடையாது. பெரும்பாலும் முச்சந்திகள், ஆற்றங்கரை இவற்றில் இவர் எழுந்தருளியிருப்பது நிச்சயம்.


கணபதி எனும் சொல்லில் ‘க’ என்ற அக்ஷரம் ஞானத்தையும், ‘ண’ என்பது மோட்சத்தையும் குறிக்கிறது. ‘பதி’ என்பது தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்ரும்ம ஸ்வரூபமான கணபதியே ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் தலைவனாகிறார். ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வெள்ளை யானை மீதேறியும், ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் வெண்பரி மீதேறியும் கயிலைக்குப் போகும்போது விநாயகர் பூஜையில் அமர்ந்திருந்த ஔவையார் அவர்களை அழைக்க அவர் அப்பூஜையை முடித்து ‘விநாயகர் அகவலை’ப் பாடவும், கணபதி அருள் கூர்ந்து ஔவையை அவ்விருவருக்கும் முன்பாக கயிலையை அடையச் செய்தார். இச்சம்பவத் தொடர்பாகத்தான் ‘குதிரையும் காதம், கிழவியும் காதம்’ என்ற பழமொழி பிறந்தது.


கணபதியின் - நாடி ப்ரம்ம ஸ்வரூபம், முகம் விஷ்ணு அம்சம், நேத்ரம் சிவமயம். இடது பாகம் சக்திவடிவம், வலபாகம் சூரிய ஸ்வரூபம், ஐங்கரங்களும் பஞ்ச கிருத்தியத்தை ஐந்தொழிலாய் செய்யும் ஆற்றலுடையவை. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை மலவாதனை ஆட்கொள்ளாமல் காத்து வினை வெப்பத்தைப் போக்கக் கூடியவை. இத்தகைய தத்துவம் கொண்டவரே கணபதி.


சிவபெருமான் திரிபுராசுரனுடன் போர்புரிய புறப்படுமுன் பிள்ளையார் பூஜை செய்யாமல் புறப்பட்டுச் சென்றதால் சிற்றூர் அருகே தேரின் அச்சு முறிய, சிவபெருமான் திரும்ப வந்து கணபதியைப் பூஜித்து அருள் பெற்று அசுரனை அழித்தார்.


உமாதேவி பண்டாசுரனுடன் போர் புரிந்து வெல்லமுடியாத தருணத்தில் நாரதர் சொல்படி மயூரேச க்ஷேத்திரத்தில் விநாயகரை வேண்டினார். பண்டாசுரனின் அசுரரில் ஒருவனான விசுக்ரன் யுத்த பூமியில் பிரதிஷ்டை செய்திருந்த விக்ன யந்திரத்தை விநாயகர் உடைத்தெறிந்தும் பார்வதி அந்த அரக்கனை மாய்த்ததாக வரலாறு. இதைப் பற்றி லலிதாஸஹஸ்ர நாமத்தில், ‘காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா மஹா கணேச நிர்ப்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்றுள்ளது.


ஸ்ரீ ராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்த திருமால் சிவபெருமான் உபதேசிக்க ஹேரம்ப விநாயகரை உபாசித்ததாக வரலாறு உள்ளது.


பிரம்மா விநாயகரை வணங்காமல் சிருஷ்டி செய்ததால் சிருஷ்டி செய்யப்பட்ட மனிதன் மிருகம் அனைத்தும் பேயாக மாறியதை அறிந்து, தன் தவறை உணர்ந்து தும்பிக்கை ஆழ்வாரை வழிபட்டு, பின் சிருஷ்டி செய்ததாக வரலாறு.


கணபதியின் திவ்ய வடிவம் ஜீவ-பிரும்ம ஐக்யத்தை எடுத்துக் காட்டுவது. கழுத்துவரை மனித ரூபமும், அதற்கு மேல் யானை முகமும் கொண்டிருப்பது மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ ரூபத்தில் ப்ரும்ம ஸ்வரூபத்தையும் காட்டுகிறது.


விநாயக லோகமான ஆனந்த பவனத்தில் ஸித்தி, புத்தி எனும் இரண்டு சக்திகளுடன் இருப்பது ஞானப்ரம்ம வடிவமே. ஸித்தி-கிரியா சக்தி, புத்தி-இச்சாசக்தியின் வடிவம். இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்ற தத்துவத்தின் விளக்கமே சித்தி புத்தி ஸமேத ஞான கணபதி.


பிள்ளையார் சுழி


உலகில் முதன் முதலில் எழுத்தைக் கண்டு பிடித்து எழுத ஆரம்பித்தவர் விநாயகரே. வேத வியாசர் மகாகாவியமான பாரதத்தை எடுத்துரைத்த போது, அந்த மாகாவியம் அழியாது அனைவரும் படித்து பேறு பெறும் பொருட்டு கணபதி தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து எழுத்தாணியாகக் கொண்டு எழுதினார். எழுத்தைக் கண்டுபிடித்த கருணை கணபதிக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டே நாம் எழுதத் துவங்குமுன் ‘பிள்ளையார் சுழி’ போட்டு எழுத ஆரம்பிக்கிறோம்.


நெற்றியில் குட்டிக் கொள்வது


நாம் எந்த பூஜை செய்தாலும் முதலில் ‘சுக்லாம் பரதரம்’ சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்பே ஆரம்பிக்க வேண்டுமென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். இதற்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகின்றன.


அகத்தியர் காவேரியை கமண்டலத்தில் அடைத்து வைக்க, அதனை பூவுலகிற்கு பயனளிக்க வேண்டி கணபதி காக்கை வடிவில் சென்று கமண்டலத்தைக் கவிழ்த்துவிட விடுதலையான காவேரி பொங்கி வந்ததாம். இதனால் கோபமுற்ற குறுமுனி காக்கையின் தலையில் குட்ட, கணபதி தந் சுயரூப தரிசனமளித்தார். இதைக் கண்டு மன்னிப்புக் கேட்டு சரணடைந்தார் அகத்தியர். தன் சந்நிதியில் குட்டுப் போடுபவர்களுக்கு சகல நன்மையும் ஏற்படுமென கணபதி அருளினார்.


மற்றொரு வரலாறு இராவணன் கயிலையிலிருந்து ஆத்ம லிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாங்கி வரும் வழியில் அவனுக்கு சிறுநீர் கழிக்க எண்ணம் ஏற்படுகிறது. கணபதி சிறுவன் உருவில் வந்து அந்த ஆத்ம லிங்கத்தை வாங்கிக் கொண்டு மும்முறை கூப்பிடுவதற்குள் வராவிட்டால் கீழே வைத்து விடுவதாகக் கூறி மும்முறை கூப்பிட்டும் ராவணன் வராததால் அதனைக் கீழே வைத்து விட்டார். சினங்கொண்ட ராவணன் சிறுவனைத் தலையில் குட்ட, சிறுவன் கணபதியாக மாறி தரிசனமளிக்க, ராவணன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதோடு தானும் தலையில் குட்டிக் கொண்டதால் இந்தப் பழக்கம் ஏற்பட்டதாகவும் வரலாறு.


விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும்போது உள்ளங்காலில் இருந்து தலையுச்சி வரை அனேக நரம்புக் கற்றைகள் உள்ளன. அவை சுருங்கி சோர்வடையாமலிருக்கவும், ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்குப் பலம் கொடுக்கவும் நாம் நம் நெற்றியில் குட்டிக் கொள்வது பல நன்மைகளைப் பயக்கும் எனக் கூறப்படுகிறது. அகந்தை, ஆணவம் அழிந்ததைக் காட்டவே குட்டுப் போடுவதும், தோப்புக் கரணம் போடுவதும்.


அருகம் புல்


கஜமுகாசுரனுடன் போர் புரிந்த குழந்தை கணபதி தன் அருகிலிருந்த அருகம்புல்லில் ஒன்றைக் கிள்ளி பிரணவ மந்திரத்தை ஓதி சேனைகளின் மேல் ஏவ, அப்புல்லானது உக்கிரத்துடன் சேனைகளைக் கொன்று விட்டது. அதுமுதலே ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி தோன்றியது.


மூஞ்சூறு வாகனம்


கஜமுகாசுரன், கணபதியை எதிர்க்க முடியாமல் அவரைக் கொல்ல எண்ணி, பெருச்சாளி ரூபத்தில் பூமியைக் கிண்டி கணநாதனின் முதுகை அசைக்கும் போது, கணபதி தன் பலத்தால் அவனை அமுக்க, விழிகள் பிதுங்கி பிராணன் நீங்கும் சமயம் கஜமுகாசுரன் விநாயகரைத் துதித்து, தன்னை மன்னித்து வாகனமாய் ஏற்கும்படி வேண்ட, விநாயகரும் அவனுக்கு ‘ஆகுவாகனன்’ எனப் பெயர் சூட்டி தன் வாகனமாக்கிக் கொண்டார்.


மோதக ஹஸ்தர்


அருந்ததி, விநாயக தத்துவத்தை உணர்ந்து அண்டத்திற்குள்ளே விநாயகர் பூரணமாய் நிறைந்திருப்பதைப் போற்றும் வண்ணம், மாவுக்குள் வெல்லப் பூரணம் நிறைத்து மோதகம் செய்து வசிஷ்டர் மூலம் பூஜிக்க, அதை அன்போடு ஏற்ற கணபதி, அவளைப் போன்று மோதகம் செய்து பூஜிப்பவர்க்கு நல்லருள் கிட்டும் என்பதை உணர்த்த மோதகத்தை தம் கைகளில் ஏந்தியுள்ளார்.


சிதறு தேங்காய்



அவரவர் பாவங்கள் உருண்டு திரண்டு தேங்காய் போலிருப்பதால் அவை சிதறிப்போக சிதறு தேங்காய் உடைக்கிறோம்.

Monday, 11 November 2019

ஆசை...சிறுகதை


ஆசை
ஆறு மாதங்களுக்கு முன்பு....
'ராசாத்தி! அடுத்த தெருவில ஒரு சாமி வந்திருக்காராமில்ல. அவரு கைரேகை, சோசியம், சித்த மருந்து எல்லாம் தெரிஞ்சவராம். உன் புள்ளைக்கு சளி ரொம்ப நாளா இருக்குன்னியே, காட்டிட்டு வரலாம் வா'.

'அப்படியா. அவரு எவ்வளவு பணம் கேப்பாரோ? என்கிட்ட 50 ரூவாதான் இருக்கு சரசு'.

'எடுத்துக்கிட்டு வா.கூடக் கேட்டாருன்னா அப்றம் கொடுத்துக்கிடலாம்'.

இருவரும் குழந்தையுடன் அவரைப் பார்க்க சென்றனர். நாடி பிடித்து பார்த்தவர் சளி எவ்வளவு நாளாய் இருக்கிறது, என்ன சாப்பாடு கொடுக்கிறாய் என்றெல்லாம் கேட்டுஒரு கஷாயமும், சூரணமும் கொடுத்தார். ஐந்து நாட்கள் கொடுத்துவிட்டு, பிறகு வரச் சொன்னார்.

'பணம் எவ்வளவுங்க சாமி?' ராசாத்தி கேட்டாள்.

'பத்து ரூபாய் கொடு'.

வெளியே நல்ல கூட்டம். ஏழைகள் முதல் பணம் படைத்தவர்கள் வரை இருந்தார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொருகுறை;பிரச்னை;வியாதி.இவர் எல்லாவற்றிலும் தேர்ந்தவர் என்பதால் மக்கள் கூட்டமும் அதிகம்.

அது ஒரு நாகரிகத்தின் சாயல் அதிகம் படாத, இயற்கை அழகை இன்னும் இழக்காத  சிறு கிராமம்.பெரும்பான்மையோரின் தொழில் விவசாயம். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறு பள்ளியும், ஒரு சிறு ஆஸ்பத்திரியும் மட்டுமே உண்டு.அக்கிராமக் குழந்தைகளுக்கு முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு வழியில்லை என்று அவர்கள் கூறியபோது அவருக்கு மிக  வருத்தமாக இருந்தது.

சாமியப்பன் இவ்வூருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அந்தத் தெருவில் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறார். அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் ஆர்வமாக விசாரித்தபோதும் எதுவும் சொல்லாமல் 'தான் அமைதியாக இருக்க விரும்பியே இங்கு வந்துள்ளதாகவும், நாட்பட்ட நோய்களையும் தம்மால் குணப்படுத்த முடியுமெ'ன்றும் சொன்னார். மேலும் அவர் ஜோசியம்,கைரேகை பார்த்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே சரியாக நடக்க, மக்கள் அவரை நாடி வருவது அதிகமாயிற்று.

அவர் அதிகம் யாருடனும்  பேசமாட்டார்.தினமும் இருவேளை பூஜை. மிக எளிய உடை. தானே உணவு சமைத்து சாப்பிடுவார். ஒரு சாமியார் போன்று இருக்கும் அவருக்கு சாமி என்ற பெயரும் பொருத்தமாகவே இருந்ததது!

தன்னிடம் வைத்தியம், ஜோசியம் பார்ப்பவர்களின் தகுதிக்கேற்றபடி பணம் கூடவோ, குறைத்தோ வாங்கிக் கொள்வார். வசதி உள்ளவர்களிடம் சற்று அதிகமாகவே வசூல் செய்வார். ஆனால் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தபின்பே வைத்தியம்!

மாலையில் அவ்வூர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதுடன், இறைவனைப் பற்றியும், இறையடியார் பற்றியும், திருக்குறள் கதைகளையும் சொல்வார்.

அவருக்கு குடும்பமோ
குழந்தைகளோ உண்டா, இங்கு வந்து தனிமையில் வாழ்வது ஏன் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததே இல்லை.மாதம் ஒருநாள் பக்கத்திலுள்ள நகரத்திற்கு சென்று வருவார்.

மூன்று வருடத்திற்குப் பிறகு.....
அந்த கிராமம் மட்டுமன்றி பக்கத்து கிராமங்களிலிருந்தும் நிறைய பேர் வர ஆரம்பித்தனர். சில நாட்கள் அவர் தூங்குவது 2,3 மணி நேரங்கள் மட்டுமே! மொத்தத்தில் அக்கிராம மக்கள் அவருடன் மிகவும் ஒன்றிவிட்டனர்.

நாட்கள் செல்லச்செல்ல அவ்வூர் மக்களுக்கு அவர் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது.அமைதியைத் தேடி வந்தவருக்கு பணத்தின் மேல் ஆசை ஏன்? எல்லோரிடமும் பணத்தை வாங்கி யாருக்கு கொடுக்கிறார்?ஆனாலும் அவரால் பல நன்மைகள் இருந்ததால் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை.

அன்றும் வழக்கம்போல் அவர் மாலை கதைகள் சொல்ல ஆரம்பித்தார்.சுவாரசியமாக குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படி கதை சொல்வதால் ஊரில் இருக்கும் சிறியவர்,பெரியவர்,குழந்தைகள் என்று அனைவரும் கூடிவிடுவர்.

திருக்குறள் அதிகாரத்தில் அன்று  அவாவறுத்தல் என்பதைப் பற்றி பேசியவர் ஆசைகளை அறவே நீக்கி இறைவனை அடையும் வழியை நாட வேண்டும்.ஆசையே துன்பங்களுள் பெரிய துன்பம். ஆசையினாலே நாம் அடுத்தவரை வஞ்சிக்கிறோம். தேவையற்ற ஆசைகளைத் துறந்தாலே இன்ப வாழ்வு வாழமுடியும் என்று ஒரு சிறு கதையையும் கூறி முடித்தார்.

கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் விருட்டென்று எழுந்தான்.

'சாமி..உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?'

'தாராளமா கேளுப்பா'.

'எங்களுக்கு ஆசை கூடாதுனு சொல்ற நீங்க எங்ககிட்ட பணம் வாங்கி என்ன செய்யறீங்க? அதுவும் ஆசைதான?யாருமே உங்களுக்கு இருக்கிறதா தெரியல. இந்த பணம் உங்களுக்கு எதுக்கு?'

'அது பற்றி நீங்க சீக்கிரம் தெரிஞ்சுப்பீங்க.இப்போ போய்ட்டு வாங்க'

அதன்பின் மேலும் ஆறு மாதங்கள் கடந்தன. சாமியப்பனை பார்க்க சிலர் வந்தனர். அவருடன் சென்று ஊருக்கு நடுவில் ஓரிடத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி கட்டுவது பற்றி முடிவு செய்து மறுநாள் முதல் வேலைகளை ஆரம்பித்தனர்.

இதைக்கண்ட கிராம மக்களுக்கு ஆச்சரியம்!

'என்னங்க இதெல்லாம்'என்று கேட்டனர்.

'இங்கு பன்னிரண்டாம் வகுப்புவரை இந்த ஊரிலேயே எல்லாரும் படிக்க ஒரு பள்ளி வரப் போகிறது. பெண்களுக்கு கல்வி மிக அவசியம். இந்த கிராமத்துப் பெண்குழந்தைகள் மேலே படிக்க வெளியூருக்கு போக முடியவில்லை.இனி எல்லாரும் இங்கேயே படிக்கலாம்'.

'யாரு சாமி இம்புட்டு பணம் போட்டு பள்ளிக்கூடம் கட்டறாங்க?'

'இது உங்கள் பணம்தான். நான் பணத்தாசை பிடித்தவன் என்று நீங்கள் கேட்டீர்களில்லையா! உங்களிடம் நான் வாங்கிய பணம்தான் இந்தப் பள்ளியை உருவாக்கப் போகிறது'.

ஆச்சரியத்தில் மலைத்து நின்று விட்டனர் அக்கிராம மக்கள். இவரையா தப்பா நினைத்தோம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும்.

'சாமி..உங்களைத் தப்பா நினைச்ச எங்களை மன்னிச்சுடுங்க சாமி'.

'நான் கிளம்பறேன். இன்னும் சில மாதங்களில் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்படும். எல்லா ஏற்பாடுகளும் நான் செய்து விட்டேன். நீங்கள் எல்லா ரும் நன்றாகப் படித்து உங்கள் வீட்டுக்கும்,  நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்'என்று குழந்தைகளைப் பார்த்து சொன்னார்.

இதைக்கேட்ட அம்மக்கள் கண்கள் கலங்கியது. அவரைப் பார்த்து கைகளைக் கூப்பினர்.

'சாமி உங்க குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து எங்களோடவே இருங்க'.

'எனக்கு மனைவி இல்லை.என் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தில் இது போன்ற நல்ல காரியங்களை செய்து நம் நாட்டை உயர்நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை. அதைத்தான் நான் செய்கிறேன்'.

'நீங்களும் உங்க பிள்ளைங்ககிட்ட போறீங்களா சாமி?'

'அடுத்து இது போன்ற ஒரு ஊருக்கு சென்று என் வேலைகளைத் தொடரப் போகிறேன்'.

கையில் பெட்டியுடன் தன் ஆசையை நிறைவேற்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட  கிராமங்களை நாடிச் சென்றார் சாமியப்பன்!

Sunday, 10 November 2019

இன்பம் தரும் நவராத்திரி





வருடம் தோறும்நவராத்திரி வந்தாலும் ஒவ்வொரு வருடமும் வழக்கமான படிகள் பொம்மைகளுடன் நவமாக (புதிதாக) என்ன செய்வது என  யோசிப்பேன்.

சென்ற வருடம் துர்கா,லக்ஷ்மி, சரஸ்வதியும், அதற்கு முதலாண்டு மும்மூன்று நாட்களுக்கு முறையே காமாக்ஷி, அன்னபூரணி, மீனாக்ஷியை உருவாக்கினேன். அந்த தெய்வங்களுக்கான முகத்தை சந்தனத்திலும், கை, கால்களுக்கு துணியின் உள்ளே பஞ்சு வைத்து நானே தைப்பேன்.

இவ்வருடம்  என் கணவரின் விருப்பப்படி ஸ்ரீபாலாவும் மகாபெரியவரும் வைக்கலா
மென்றார். தயாராகக் கிடைக்கும் அம்மன் முகம் வைத்து அம்மனை உருவாக்கி விடலாம். ஆனால் பெரியவர் முகம்...?

நான் யோசித்தபோது...நீதான் சந்தனத்தில் அம்மன் முகம் பண்ணுவயே. அந்த மாதிரி பெரியவா முகமும் பண்ணு...என்று சொல்லிவிட்டார் என் கணவர்.

அம்மன் முகத்துக்கு அடையாளம் தேவையில்லை. ஆனால் பெரியவரை நாம் பார்த்தி
ருக்கிறோமே..அது மாதிரி வருமா..முயற்சிப்போம் என்று பெரியவரை மனதில் தியானித்து முகம் செய்தேன். ஓரளவு அவரைப் போல வந்ததாகத் தோன்றியது.

அவர் பாலா அருகில் வீணை வாசிப்பது போல் உருவாக்க எண்ணினோம். அது போன்ற அவர் புகைப்படத்தை பார்த்து செய்தேன். சென்ற ஆண்டு சரஸ்வதிக்கு என் கணவர் செய்த வீணை இருந்தது. அதை மடியில் வைத்து அவர் வீணை வாசிப்பது போலவும், புகைப்படத்தில் இருந்தது போன்று கண்ணாடியும் அணிவித்ததும் அவரைப் போன்ற தோற்றம் கிடைத்தது.

கொலுவுக்கு வருபவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம் மனதில். பார்த்த அனைவரும் பெரியவரை மிக அழகாக செய்திருக்கிறீர்கள் என்றபோது அந்த மகானுக்கு இருகரம் கூப்பி அஞ்சலி செய்தேன்.

அடுத்து கிரஹலக்ஷ்மியை என் வீட்டில் இருந்த உயரமான விளக்கில் உருவாக்க, அதன் அழகு கண்களைக் கவர்ந்தது.




நான் பத்து நாட்களும் அம்மனின் ஒவ்வொரு அஷ்டோத்திரம், சகஸ்ரநாம அர்ச்சனையும், தினம் ஒரு பாயசமும், சுண்டலும் செய்வது வழக்கம்.

நவராத்திரியில் சுவாசினிகளுக்கும், கன்யா பெண்களுக்கும் உடை கொடுத்து உணவளித்து மங்கலப் பொருட்களுடன் தாம்பூலம் அளித்தால் தேவி மனமகிழ்ந்து நல்வாழ்க்கை, செல்வம் தருவாள் என்கின்றன புராணங்கள்.

நான் எங்களுக்கு அப்பளம்,வடாம் இட்டுக் கொண்டு தரும் மீனாட்சி மாமியையும்(88), மாமாவையும்(91) கூப்பிட்டு உணவளித்து புடவை, வேட்டிவாங்கித் தருவேன். அவர்களுக்கு பெண் கிடையாது. மாமா என் கையைப் பிடித்துக் கொண்டு..நீ என் பெண்மா..என்று கண்கலங்கி விடுவார். பிள்ளைகள் இருந்தும் இந்த வயதிலும் தானே சம்பாதித்து வாழ வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் எனக்கு அவர்கள் மேல் மிக மரியாதையை ஏற்படுத்தியது.

ரொம்ப வருடம் கழித்து என் மகள் இம்முறை  அவள் மகளுடன் வந்து இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தினமும் என் பேத்திக்கு கன்யா பூஜை!

என் மகளின் விதவிதமான ரங்கோலிகளும், என் பேத்தி பல தினுசாக தினம் ஒரு புடவை கட்டி அசத்தியதும் இந்த நவராத்திரி ஸ்பெஷல்! என் மருமகளும்,
பேத்திகளும் வந்தபின் வீடே கலகலப்பானது!

இந்தமுறை மத்யமர் நண்பர்களை கொலுவுக்கு அழைத்து தாம்பூலம் கொடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. திரு மோகனும், திரு கிருஷ்ணமோகனும் என் கணவருடன் திருச்சியில் வங்கியில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ரேவதி மோகனும் மத்யமரே. மத்யமர் ஜெயந்தி ஜெயராமன் அன்று அலுவலகத்திலிருந்து மாலை நேராக வந்து எங்களுடன் கலந்து கொண்டார்.

என் கணவருக்கு அன்று பிறந்தநாள். என் பேத்திகள் வலுக்கட்டாயமாக என் கணவரை  வாழ்வில் முதல் முறையாகக் கேக் வெட்டச் சொல்லி எல்லோருடனும் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!

நாவுக்கு சுவையாக ஸ்வீட் காரம் கேக் ஜூஸுக்குப் பின்பு ஆரம்பமாயிற்று பாட்டு நேரம்! நவராத்திரியின் முக்யமே அம்மனைப் போற்றிப் பாடுவதாயிற்றே! எல்லோரும் ஆளுக்கு ஒரு பாட்டு பாட, என் பேத்தி டேன்ஸ் ஆட, என் மருமகள் திரைப்பாடல்களை வரிசையாகப் பாட, கிருஷ்ணமோகன் மனைவி அந்தக் கால பாடல்களை இணைந்து பாட....
நேரம் போனது தெரியவில்லை.

இப்படி ஒவ்வொரு நாளும் உற்சாகமான நவராத்திரி முடிந்தபோது..இன்னும் இது போன்ற சந்தோஷ நாளுக்கு ஒரு வருடம்  காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் ஏற்பட்டது. மொத்தத்தில் இந்த வருட நவராத்திரி மறக்க முடியாத மிகமிக ஸ்பெஷலான நவராத்திரி!