வருடம் தோறும்நவராத்திரி வந்தாலும் ஒவ்வொரு வருடமும் வழக்கமான படிகள் பொம்மைகளுடன் நவமாக (புதிதாக) என்ன செய்வது என யோசிப்பேன்.
சென்ற வருடம் துர்கா,லக்ஷ்மி, சரஸ்வதியும், அதற்கு முதலாண்டு மும்மூன்று நாட்களுக்கு முறையே காமாக்ஷி, அன்னபூரணி, மீனாக்ஷியை உருவாக்கினேன். அந்த தெய்வங்களுக்கான முகத்தை சந்தனத்திலும், கை, கால்களுக்கு துணியின் உள்ளே பஞ்சு வைத்து நானே தைப்பேன்.
இவ்வருடம் என் கணவரின் விருப்பப்படி ஸ்ரீபாலாவும் மகாபெரியவரும் வைக்கலா
மென்றார். தயாராகக் கிடைக்கும் அம்மன் முகம் வைத்து அம்மனை உருவாக்கி விடலாம். ஆனால் பெரியவர் முகம்...?
நான் யோசித்தபோது...நீதான் சந்தனத்தில் அம்மன் முகம் பண்ணுவயே. அந்த மாதிரி பெரியவா முகமும் பண்ணு...என்று சொல்லிவிட்டார் என் கணவர்.
அம்மன் முகத்துக்கு அடையாளம் தேவையில்லை. ஆனால் பெரியவரை நாம் பார்த்தி
ருக்கிறோமே..அது மாதிரி வருமா..முயற்சிப்போம் என்று பெரியவரை மனதில் தியானித்து முகம் செய்தேன். ஓரளவு அவரைப் போல வந்ததாகத் தோன்றியது.
அவர் பாலா அருகில் வீணை வாசிப்பது போல் உருவாக்க எண்ணினோம். அது போன்ற அவர் புகைப்படத்தை பார்த்து செய்தேன். சென்ற ஆண்டு சரஸ்வதிக்கு என் கணவர் செய்த வீணை இருந்தது. அதை மடியில் வைத்து அவர் வீணை வாசிப்பது போலவும், புகைப்படத்தில் இருந்தது போன்று கண்ணாடியும் அணிவித்ததும் அவரைப் போன்ற தோற்றம் கிடைத்தது.
கொலுவுக்கு வருபவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம் மனதில். பார்த்த அனைவரும் பெரியவரை மிக அழகாக செய்திருக்கிறீர்கள் என்றபோது அந்த மகானுக்கு இருகரம் கூப்பி அஞ்சலி செய்தேன்.
அடுத்து கிரஹலக்ஷ்மியை என் வீட்டில் இருந்த உயரமான விளக்கில் உருவாக்க, அதன் அழகு கண்களைக் கவர்ந்தது.
நான் பத்து நாட்களும் அம்மனின் ஒவ்வொரு அஷ்டோத்திரம், சகஸ்ரநாம அர்ச்சனையும், தினம் ஒரு பாயசமும், சுண்டலும் செய்வது வழக்கம்.
நவராத்திரியில் சுவாசினிகளுக்கும், கன்யா பெண்களுக்கும் உடை கொடுத்து உணவளித்து மங்கலப் பொருட்களுடன் தாம்பூலம் அளித்தால் தேவி மனமகிழ்ந்து நல்வாழ்க்கை, செல்வம் தருவாள் என்கின்றன புராணங்கள்.
நான் எங்களுக்கு அப்பளம்,வடாம் இட்டுக் கொண்டு தரும் மீனாட்சி மாமியையும்(88), மாமாவையும்(91) கூப்பிட்டு உணவளித்து புடவை, வேட்டிவாங்கித் தருவேன். அவர்களுக்கு பெண் கிடையாது. மாமா என் கையைப் பிடித்துக் கொண்டு..நீ என் பெண்மா..என்று கண்கலங்கி விடுவார். பிள்ளைகள் இருந்தும் இந்த வயதிலும் தானே சம்பாதித்து வாழ வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் எனக்கு அவர்கள் மேல் மிக மரியாதையை ஏற்படுத்தியது.
ரொம்ப வருடம் கழித்து என் மகள் இம்முறை அவள் மகளுடன் வந்து இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தினமும் என் பேத்திக்கு கன்யா பூஜை!
என் மகளின் விதவிதமான ரங்கோலிகளும், என் பேத்தி பல தினுசாக தினம் ஒரு புடவை கட்டி அசத்தியதும் இந்த நவராத்திரி ஸ்பெஷல்! என் மருமகளும்,
பேத்திகளும் வந்தபின் வீடே கலகலப்பானது!
இந்தமுறை மத்யமர் நண்பர்களை கொலுவுக்கு அழைத்து தாம்பூலம் கொடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. திரு மோகனும், திரு கிருஷ்ணமோகனும் என் கணவருடன் திருச்சியில் வங்கியில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ரேவதி மோகனும் மத்யமரே. மத்யமர் ஜெயந்தி ஜெயராமன் அன்று அலுவலகத்திலிருந்து மாலை நேராக வந்து எங்களுடன் கலந்து கொண்டார்.
என் கணவருக்கு அன்று பிறந்தநாள். என் பேத்திகள் வலுக்கட்டாயமாக என் கணவரை வாழ்வில் முதல் முறையாகக் கேக் வெட்டச் சொல்லி எல்லோருடனும் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!
நாவுக்கு சுவையாக ஸ்வீட் காரம் கேக் ஜூஸுக்குப் பின்பு ஆரம்பமாயிற்று பாட்டு நேரம்! நவராத்திரியின் முக்யமே அம்மனைப் போற்றிப் பாடுவதாயிற்றே! எல்லோரும் ஆளுக்கு ஒரு பாட்டு பாட, என் பேத்தி டேன்ஸ் ஆட, என் மருமகள் திரைப்பாடல்களை வரிசையாகப் பாட, கிருஷ்ணமோகன் மனைவி அந்தக் கால பாடல்களை இணைந்து பாட....
நேரம் போனது தெரியவில்லை.
இப்படி ஒவ்வொரு நாளும் உற்சாகமான நவராத்திரி முடிந்தபோது..இன்னும் இது போன்ற சந்தோஷ நாளுக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் ஏற்பட்டது. மொத்தத்தில் இந்த வருட நவராத்திரி மறக்க முடியாத மிகமிக ஸ்பெஷலான நவராத்திரி!
No comments:
Post a Comment