Sunday, 23 November 2014

படித்து....ரசித்து.....சிரித்தது!!!



பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.

எமன் சொன்னான்,
"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."


"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"

" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"

"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"

நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.

இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...

"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அ
ழைத்துச் சென்றார் எமன்.

அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.

"உன் விருப்பம்", எமன்.

இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.

அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.

"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.

பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"

 எமன் சொன்னான்...


 


"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"



Saturday, 22 November 2014

தன்னம்பிக்கை

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
----------------------------------------------

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.

 
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.

வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.

அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.

அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.

வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.

வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.

உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.

தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.

அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.

தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.

தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.

சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.

விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.

அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.

குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.

கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.

நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத
தன்னம்பிக்கை இருக்கிறது.


Wednesday, 5 November 2014

VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ..

 




 VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ....தேர்வாகாத விமரிசனம்..
கதைக்கான இணைப்புகள்...

இணைப்புகள்:

பகுதி-1 க்கான இணைப்பு:  
பகுதி-2 க்கான இணைப்பு:  

பகுதி-3 க்கான இணைப்பு:  

பகுதி-4 க்கான இணைப்பு:  

அழகான ஒருதலைக் காதல் கதை...ஒரு அரவத்தினால் இருவருக்குள்ளும் காதல் அரும்பி களிப்பூட்டும் கனவுகள் நிறைந்த அருமையான கதை.
ஆசிரியரின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். அது இந்தக் கதையிலும் அளவின்றி இருக்கிறது.
புதிதாகக் கல்யாணம் ஆன  ஒரு காதல் ஜோடியின் தவிப்பையும், ஆசைகளையும், காமத்தையும் மிக அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
தன மனைவியை விட்டுப் பிரிந்து இருப்பது எப்படி என்று மனம் வருந்தும் கணவனின் மனநிலையையும், தன்னை விட்டு நகராமல் பாடாய்ப் படுத்தும் தன கணவனின் அன்புத் தொல்லையையும் விவரிக்கும் ஆசிரியரின் கதை நயம் இயல்பாக இருக்கிறது.
ஆசிரியர் தரும் ஆலிங்கனத்துக்கான உதாரணம் சற்றே மனதை நெருடுகிறது.மார்க்கண்டேயனின் ஆலிங்கனம் பேரின்பத்தின் வாயில். மனோவின் ஆலிங்கனமோ சிற்றின்பம் தருவது.சிற்றின்பமே பேரின்பத்தின் ஆரம்பம் என்பதை சொல்கிறாரோ கதாசிரியர்!
பிள்ளைத் தாய்ச்சி பெண்ணை இப்படி படுத்துவது சரியல்ல என்று ஒரு மருத்துவரான மனோவுக்கு தெரியவில்லையே? அனுவுக்கு வலியெடுத்து விட்டதே....என்ன குழந்தை பிறந்ததோ என்ற ஆவலில் அடுத்த பாகத்தைப் படிக்க....அட! இவ்வளவும் கனவா?
தினமும் பாவாடை தாவணியுடன் விதவிதமாய்க் கோலம் போடும் பெண்ணை அவளுக்கு தெரியாமல் காதலித்தது போதாது என்று பைனாகுலர் மூலம் அவள் அழகை திருட்டுத் தனமாய் ரசிக்கும் மனோவின் மன நிலையை என்ன சொல்ல? பொதுவாக ஆண்களின் மனநிலை அது என்றாலும், அதை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளைக் கோலப் பைத்தியமாகக் கண்ட மனோவின் காதல் பைத்தியத்தை என்ன சொல்ல? உலகிலுள்ள மற்றவர்களைப் போல மனோவும் ஒரு விதத்தில் அனு பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்!
கோலங்கள் கூட பேசுவதாகக் கற்பனை செய்யும் மனோதத்துவ மருத்துவருக்கே மனநிலை சிதைந்து விட்டதோ?
பாவாடை, தாவணி, தொங்கும் ஜிமிக்கி, கொஞ்சும் கொலுசு, வழவழக் கைகளில் கண்ணாடி வளையல், தலை நிறைய பூ,(கண்ணில் தீட்டிய மையை விட்டு விட்டார்!) என்று அழகின் இலக்கணங்களை அடி மாறாமல் சொன்ன ஆசிரியரின் கற்பனை அற்புதம்! அதற்கேற்ற ஹன்சிகா மோட்வானியின் அழகிய படம் அருமை!

இது போன்ற படங்களை எங்கு தேடிப்  பிடித்து கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் ஆசிரியரின் கைவண்ணத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அனுவின் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியாய் தான் மாற மாட்டோமா என்று ஏங்கும் மனோ நிச்சயமாகக் காதல் பைத்தியம்தான்!!
ஒவ்வொரு பாகத்திலும் ஒரு புதிய திருப்பத்தை மிக இயல்பாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.
இவ்வளவு அழகான பெண்ணுக்கு வாய் பேச முடியாதா? அதைப் படிக்கும்போதே மனம் கலங்குகிறது.
அனுவின் அம்மா மனோவை மறுநாள் பெண் பார்க்க வருபவர்களுடன் பேச அழைக்கும்போது, ஓரளவு மனோவின் மனம் மாறி விடுகிறது. இனி இவளை நாம் அடையா முடியாது என்ற எண்ணமே அவனிடம் வருத்தம் ஏற்படுத்துகிறது. அவளுக்கு நல்ல, பொருத்தமான கணவன் கிடைக்க வேண்டுமே என்று உண்மையிலேயே கவலைப் படுகிறான்.
அதுவே அவளைப் பாம்பு கடிப்பது போலும், அவளைத் தான் காப்பாற்றுவது போலும் கனவு காண வைக்கிறது.காப்பாற்றிய அவனையே அனைவரும் ஒரு குற்றவாளியாக நினைப்பதை படித்து  நமக்கும் அவன் மேல் பரிதாபமே ஏற்படுகிறது. ஆனால் அச்சமயம் பேச்சு வந்துவிட்ட அனு ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்று நாம் குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நிகழ்ச்சியும் ஒரு கனவுதான் என்று புரிகிறது.
அடுத்து வரும் பாகத்தில் மனோவின் கனவுகள் பலித்துவிடும் என்ற திடுக்கிடும் தகவலுடன் கொண்டு செல்கிறார் ஆசிரியர்!

தாய், தந்தை மரணம், சக மாணவன் முதலிடம் பெற்றது இவை பலித்தது போல, ஐயோ பாவம்...இந்தப் பெண்ணுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்படும்போதே....அடுத்த திருப்பம்!
பெண் பார்க்க வந்தவனை நாகப்பாம்பு என்ற பொருள் கொண்ட நாகப்பன் என்ற பேட்டை ரவுடியாக்கி, அவனைப் பற்றி சகலமும்தெரிந்த மனோ அனுவின் தாயாரிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவளை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றியதை எடுத்துச் சொல்லி ஆசிரியர் அவன் கனவு உண்மையாகும் என்பதை சொல்லும் அதே நேரம், அவள் பேசுவதைப் போல் கனவு கண்டதனால், விரைவில் அவளுக்கு தக்க சிகிச்சை மூலம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி சுபம் போடுகிறார் ஆசிரியர்!
தன்னை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றிய மனோவை அனுவும் காதலிக்க ஆரம்பித்ததில் வியப்பென்ன? ஒரு சராசரிப் பெண்ணின் கனவே நல்ல, அன்பான, அழகானக் கணவன்தானே! மனோவும் அதற்கான அனைத்து தகுதிகளும் உடையவன் தானே?

'இந்த செவிட்டு ஊமைப் பெண்ணை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?' என்று நாகப்பன் கேட்க, அவளைத் தன்னால் மணக்க முடியும் என்பதைத் தன்  மனதில் சொல்லிக் கொள்ளும் மனோவின் காதல் விரைவில் கல்யாணத்தில் முடிய நாமும் வாழ்த்துவோம்!

மனோவின் எல்லாக் கனவுகளையும் போல அவள் கர்ப்பமாகி, அவளுடன் காதல் செய்யும் மனோவின் கனவும் விரைவில் நடக்கட்டும்!
காதும் கேட்காமல், வாயும் பேசாமல் அனுமானத்திலேயே எதையும் புரிந்து கொள்ளும் கதாநாயகிக்கு 'அனு' என்ற பெயரையும், மனோதத்துவ மருத்துவரான கதாநாயகனுக்கு 'மனோ' என்ற பெயரையும் ஆசிரியர் சூட்டியது இயல்பாகவா? அல்லது கதைக்கேற்றவாறு பெயர்களை வைத்தாரா? எப்படியோ கதைக்குப் பொருத்தமான அழகான பெயர்கள்!

நம் மனதின் எண்ணங்களே இரவில் நம் கனவுகளாக வரும் என்று கேள்விப் பட்டதுண்டு. அந்தக் கனவையே கருப் பொருளாகக் கொண்டு ஒரு கிளுகிளு காதல் கதையை ஆர்வம், எதிர்பார்ப்பு, சுவாரசியத்துடன் எழுதி நம்மை மகிழ்வித்த ஆசிரியரின் திறமைக்கு ஒரு ஜே!
இக்கதை வல்லமை மின் இதழில் வெளியானதற்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

அன்று அடைந்த மகிழ்ச்சியைவிட இன்று விமரிசனங்களைப் படித்து அளவற்ற மகிழ்ச்சியை அடையட்டும் நம் பதிவுலக பிதாமகர்!