Monday, 9 December 2019

10.பஞ்ச பத்ரி




பஞ்சபத்ரி
விஷால் பத்ரி
பத்ரி விஷால் பத்ரிநாதரின் பிரதான தலமான பத்ரிநாத். பூஜைகள் நடக்கும்போது, 'ஜெய் பத்ரி விஷால் கி'என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள்.

யோகபத்ரி
பத்ரிநாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோஷி மட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு பத்ரிநாதர் ஆளுயர சாளக்ராம மூர்த்தியாக யோகநிலையில் காட்சி தருகிறார்.

பாண்டு மஹாராஜா குந்தியை மணந்து பாண்டவர்கள் பிறந்து  பாண்டுகேஷ்வரரைத் துதித்து தியானம் செய்ததால் இது 'யோகத்யான் பத்ரி' என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டு மஹாராஜா தன்னுடைய இறுதி காலத்தை இங்கே கழித்ததாகச் சொல்லப் படுகிறது.
பாண்டவர்களும்தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராச்சியத்தை பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு
சுவர்க்காரோகணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து  துவங்கினர்.

பவிஷ்யபத்ரி 
இந்த ஊர், ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 2744 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச் செல்ல வேண்டும். நரசிம்மர் தரிசனம் தருகிறார்.ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது ஜெய-விஜய (நரநாராயண)மலைகள் இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் பாதை அடைபட்டு விடும்.அப்போது இந்தபவிஷ்யபத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்கிறார்கள்.

விருத்தபத்ரி
ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பிப்பல் கோட் போகும் பாதையில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்த தலம். நாரதருக்கு நாராயணர் முதியவராகக் காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 

ஆதிபத்ரி
கர்ண பிரயாகையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் ராணி கேத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சங்கு, சக்கரம், தாமரை,கதை இவற்றுடன் தரிசனம் தருகிறார் நாராயணன்.

இவை எல்லாவற்றையும் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. நாட்கள் போதாது. மலைகளில் ஏறி இறங்கி செல்வதும் கடினம்.
நாங்கள் பத்ரிநாத் (விஷால்பத்ரி) மற்றும் யோகபத்ரி மட்டுமே தரிசித்தோம்.

யாத்திரைபற்றி
நாங்கள் சார்தாம் யாத்திரை செல்வது பற்றி யோசிக்கவே இல்லை. கேதாரில் ஹெலிகாப்டர் போகாவிட்டால் 14 மைல் நடக்கவேண்டும், குதிரையில் போக வேண்டும் என்றெல்லாம் பலரும் பயமுறுத்த கேதார் போவதெல்லாம் கஷ்டம் என்று விட்டுவிட்டோம்.

என் நாத்தனார் அவர் உறவினர்களுடன் போவதால் எங்களையும் கூப்பிட..போவதா வேண்டாமா என்ற குழப்பம். என் பிள்ளையிடம்  கேட்டதும்..நல்ல சான்ஸ். இப்ப விட்டா போகமுடியாது. கண்டிப்பா போய்ட்டு வாங்கோ..என்று பணத்தையும் கட்டிவிட்டான்.
அந்த கடவுளே இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்து தரிசனம் பண்ண கூப்பிட்ட மாதிரி நினைத்து மெய்சிலிர்த்தோம். நல்ல அற்புதமான தரிசனங்கள். மனதில் பதிந்ததை எழுத்திலும் பதிய வைக்கவே இந்த யாத்திரை அனுபவங்கள்.

*யாத்திரை செல்ல ஏற்ற மாதங்களாக செப்டம்பர் அக்டோபரே சிறந்தது. அட்சய திருதியை அன்று ஆலயங்கள் திறந்ததும் தரிசனங்கள் ஆரம்பித்து விடுமாம். மே ஜூனில் மலைகளிலிருக்கும் பனி உருகி வருவதால் பாதைகள் ஈரமாகி நடப்பது கடினம் என்கிறார்கள். ஜூலை ஆகஸ்ட் நல்ல மழை பெய்வதால் ஹெலிகாப்டர்கள் செல்வது கடினம்.நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

*நிறைய டிராவல்கள் இந்த யாத்திரைகளை அழைத்து செல்கிறார்கள். அவர்களே தங்குமிடம் ஏற்பாடு செய்து உணவும் அவ்வப்போது சூடாக சமைத்துப் போடுகிறார்கள்.அந்தக் குளிருக்கு இதமாக உள்ளது! சமைக்கும் வசதியுள்ள ஹோட்டல்கள், தர்மசாலைகளில் நமக்கும் தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.

*கேதார்நாத் பத்ரிநாத் யமுனோத்ரியில் அதிகபட்ச குளிர் இருப்பதால் தெர்மல், ஜெர்கின்கள்,கையுறைகள், கம்பளி ஸாக்ஸ்கள், தலை குல்லாக்கள்,  ஷீக்கள் அவசியம் தேவை.

*எல்லா இடங்களுக்கும் நிறைய உயரமான படிகள் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் சுவாச பிரச்னை முழங்கால்வலி இருப்பவர்களுக்கு கடினமே. அங்கு விற்கும் மூங்கில் கழிகளை வாங்கிக் கொண்டால் சற்று வேகமாக நடக்க உதவும்.

*எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அந்த இறைவனை தரிசித்ததும் 'நாம் செய்த புண்ணியம்' என்று மனம் பக்தியிலும் சந்தோஷத்திலும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.

'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பெருமை நமக்குள்ளும் ஏற்படுகிறது. 'தேவபூமி' என்பதற்கேற்ப அந்த இயற்கை அழகும், பனி மூடிய மலைகளும், பெருகி ஓடும் நதிகளும், ஆன்மீக எண்ணங்களும்,மாசில்லாத சுற்றுச் சூழலும் அவ்விடத்திலேயே இருந்துவிட மாட்டோமா என்ற ஆசையைத் தூண்டுகிறது!

இதயம் கவர்ந்த இமயமே!
இயற்கை அழகில்
இமைக்க மறந்தேன்!
இன்பம் அடைந்தேன்!

உன்னில் நடந்தேன்!
உன்னை தீண்டினேன்!
உன்னை ரசித்தேன்!
உன்னில் மயங்கினேன்!

உன் உயரம் கண்டு வியந்தேன்!
என் துயரம் மறந்து மகிழ்ந்தேன்!
எத்தனை உயரம்..
எத்துணை ஆறுகள்..
அழகாய் இறங்கும் நீர்வீழ்ச்சிகள்..
ஆங்காங்கே ஆலயங்கள்..

என்னை மறந்து
உன்னில் கலந்தேன்!
ஈராறு நாட்கள் இணைந்திருந்தேன்!
இறைதரிசனங்களில்
இவ்வுலகம் மறந்தேன்!
இனி என்று காண்பேன்
இப்பிறவியில் உன்னை!

7.யமுனோத்ரி தாம்


பத்ரி, கேதார், கங்கோத்ரியை அடுத்து யமுனோத்ரி நான்காவது புண்ணியத்தலம்.  இமயமலையில் கார்வாலில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் யமுனோத்ரிக்கு மேல் 4400 மீட்டர் உயரத்திலுள்ள சம்பஸார் கிளேசியரிலிருந்து தன் நீண்ட பயணத்தைத் துவங்கும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, அழகாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள். அந்த யமுனோத்ரியே  யமுனையின் ஆலயம் அமைந்துள்ள சார்தாம்களில் ஒன்று.

அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரி வந்ததாக நம்பப்படுகிறது.

இத்தகு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்து 6 1/2 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான கடினமான மலைப்பாதையில் ஏறிச்சென்றால் யமுனோத்ரி அடையலாம். ஜானகிபாய் சட்டியிலிருந்து பார்க்கும்போது பனி சூழ்ந்த இமயமலைச் சிகரங்கள் இளம் வெயிலில் பளபளத்துக்கொண்டிருந்தது கண்களைப் பறிப்பதாக இருந்தது. இயற்கையின் அழகு நம்மைக் கட்டிப் போடுகிறது! மலையில் ஏறிச் செல்லும்போது கீழே ஒரு மெல்லிய வெண்மைக் கோடாக காட்சி தருகிறது யமுனை.

மேலே ஏற முடியாதவர்களுக்கு குதிரைகளும், நான்கு பேர் தூக்கிச் செல்லும் டோலிகளும் உள்ளன. குதிரைகளுக்கு 1000 முதல் 1200 வரையும், டோலிகளுக்கு 3500 முதல் 4500 வரையும் ஆகும் என்றார் எங்கள் டூர் மேனேஜர். நாங்கள் சென்றது சீஸனின் கடைசி டூர் என்பதால் அவர்கள் கேட்டதைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு ஏஜண்டுகள் இருப்பதால் அவர்கள் மூலமே நாம் புக் செய்ய முடியும்.

குதிரையில் செல்ல 1500ரூ. டோலி நான்கு பேர் என்பதால் 5000ரூ. குதிரைக்கு 100ரூபாயும், டோலிக்கு 500ரூ.யும் அரசுக்குவரி
செலுத்த வேண்டும். குதிரைக்காரருக்கு 500ரூ.யும் டோலிக்காரர்களுக்கு 1000ரூ.யும் சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். சீஸனில் குறைவாகக் கேட்பார்களாம். மேலே செல்ல குதிரையில் 1 மணி நேரமும் டோலியில் 2 மணி நேரமும் ஆகிறது.

மலை மிகவும் செங்குத்தாக இருப்பதால் ஏற முடியாதவர்கள் கண்டிப்பாக இப்படித்தான் மேலே ஏறி இறங்க வேண்டும். எங்கள் குழுவில் காலை 9 மணிக்கு கால்நடையாக ஏறிச் சென்றவர்கள் 5 மணிக்கு திரும்பி வந்தார்கள். திரும்ப வரும்போது மழை வந்துவிட்டதால் குதிரைகள் இறங்க முடியாமல் வழுக்கி விழுகின்றன.

நடந்து செல்பவர்கள் குதிரைகளுக்கும், டோலிகளுக்கும் வழிவிட்டுச் செல்லவேண்டும்.நான்கு பேரும் ஒரே மாதிரி கால் வைத்து நிதானமாக செல்கிறார்கள். டோலிக்காரர்கள் சற்று ஏற்றமில்லாத பாதைகளில் நம்மை இறக்கி விட்டு சற்று தூரம் நடக்கச் சொல்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே? அவர்கள் தூக்கிச் செல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. வழியில் தேனீர் சாப்பாட்டு கடைகளில் இறக்கி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். நடந்து செல்பவர்கள் ஓய்வெடுக்க வழியில் இருக்கைகளும்,கழிவறை வசதிகளும் உள்ளன.

பனியாறுகள் கொண்ட பிரம்மாண்ட பனிமலையாக இமயத்தின் தரிசனம். மனிதனின் அசுரக்கரங்கள் இன்னும் எட்டாத இடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து தப்பிப்பிழைத்த, மரங்களும், செடிகொடிகளும் கொண்ட பசுமையான பிரதேசம் கண்களுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலையும் மறுபுறம் அதலபாதாளமுமாக இயற்கையின் எழிலான காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மலையில் பிறந்து மண்ணில் இறங்கி நம்மை வாழவைக்கும் நதிகளின் பெருமையும் சிறப்பும் சொல்லி மாளாது.  இத்தனை நதிகள் இருந்தும் தண்ணீருக்கு நாம் படும் கஷ்டம் ஏன்? பதில் தெரியாத கேள்வி.

செல்லும் வழியில் ராமர், பைரவர் ஆலயங்கள் உள்ளன. நான் டோலியில் சென்றதால் பார்க்கும் பரவசக் காட்சிகளையும் இயற்கை அன்னையின் எழிலான தோற்றத்தையும் கண்களுக்குள் படம் பிடித்ததோடன்றி என்றும் காணும் விதமாக மொபைலிலும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிந்து கொண்டேன்.

யமுனை நதி தெளிவாகப் பளிங்குபோலும், சற்றே இளம்பச்சை நிறத்தோடும் அசைந்து வளைந்து நெளிந்து அழகாக ஓடிவருகிறாள். அருகிலேயே யமுனைக்கான ஆலயம் அமைந்துள்ளது. கீழே படிகளில் இறங்கிச் சென்றால் யமுனை நதி. கங்கை சரஸ்வதி போலின்றி சாதுவாக ஓடும் நதியில் நீரும் அதிகமில்லை. மேலே கிளேசியர்கள் உருகி வரும்போது நிறைய தண்ணீர் இருக்குமாம். 

யமுனோத்ரியில் பயங்கர குளிர். தண்ணீரைத் தொட்டாலே கைகள் குளிரில் மரத்துப்போகிறது.இதற்கு அருகில் எப்படி ஒரு வெந்நீர் ஊற்று என்று இயற்கையை நினைக்க  ஆச்சரியமாக உள்ளது. தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். டோலி ஆட்கள் விரைவாக வரச்சொன்னதால் குளிக்க முடியவில்லை.

அங்குள்ள சூர்யகுண்டம் என்ற வெந்நீர் ஊற்றுக் குளத்தின் தண்ணீரைப் ப்ரோக்ஷித்துக் கொண்டு அருகிலுள்ள யமுனாபாய் குண்டத்திற்கு சென்றோம்.சூரிய குண்டத்தின் அருகில் உள்ள 190°F.ல்  கொதிக்கும் நீரூற்று  'யமுனாபாய் குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கே யமுனையின் 'திவ்ய சிலா' பூஜிக்கப்படுகிறது. அங்குள்ள பண்டா என்ற  புரோகிதர்கள்   நாம் கொடுக்கும் அரிசியையும், உருளைக்கிழங்கையும்  ஒரு மெல்லிய துணியில் கட்டி  அந்த குண்டத்தில் 15 நிமிடங்கள்  வைத்துக் கொள்கிறார்கள். அது ஓரளவு வெந்ததும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த அரிசியைக் காயவைத்து பாயசம் செய்து சாப்பிட சொல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் அரிசி, உருளைக் கிழங்கு விற்கிறார்கள்.

அடுத்து யமுனையின் ஆலயதரிசனம். யமுனை சூரியனின் மகள். யமனின் சகோதரி. இவளை வணங்குவதால் யமபயம் இன்றி கஷ்டமில்லாத மரணம் சம்பவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலே வெகு உயரத்தில் இருந்த யமுனையின் ஆலயத்துக்கு யாரும் எளிதில் போகமுடியாததால் இவ்வாலயத்தை தேஹ்ரி அரசர் நரேஷ் சுதர்சன் ஷா  1839ம் ஆண்டு யமுனோத்ரியில் உருவாக்கினார்.

கர்ப்பகிரகத்தில் கருமை நிறத்தில் யமுனையும் வெண்ணிறத்தில் கங்கையும் காட்சி தருகிறார்கள். தீபாவளிக்கு அடுத்தநாளான யமதிவிதியை அன்று உற்சவ விக்ரகம் கீழுள்ள கர்சாலி என்ற இடத்திலுள்ள ஆலயத்துக்கு பல்லக்கில் விமரிசையாக எடுத்துச் சென்று பூஜிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு பின்பு அட்சயதிருதியை அன்று திரும்ப யமுனோத்ரிக்கு செல்லும்.

நான்கு தாம்களில் யமுனோத்ரி செல்வது சற்று கடினமாகவே உள்ளது. ஜானகிபாய் சட்டியிலிருந்து பாதை மிக குறுகலாகவும் மேடுபள்ளமாகவும் உள்ளது. தெரு விளக்குகளும் குறைவு.நாங்கள் திரும்பும்போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகலில் மயக்கும் இயற்கை அழகு இருளில் எதையும் ரசிக்க முடியாமல் நம்மை மிரட்டுகிறது. நல்லபடி போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. பேருந்து ஓட்டுனர்களின் திறமைக்கு தலை வணங்க வேண்டும். இந்த நான்கு தலங்கள் தவிர நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கியமான ஆலயங்களை பற்றி தொடர்கிறேன்.

9.சார்தாம் யாத்திரை..முக்கிய ஆலயங்கள்.

சார்தாம் யாத்திரையில் நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கிய ஆலயங்கள்.

உத்தரகாசி
உத்தர காசி  பாகீரதி நதிக்கரையில் கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல ஆறுகள் கொண்ட இம்மா
வட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள்.  வாரணாசியில் உள்ளது போலவே இங்கேயும் ஒரு 'அசி' நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் 'கலியுகத்தின் காசி' என்று சொல்லப்பட்டுள்ளது இத்தலம்.

கலியுகம் பாதி முடியும்போது இப்போதுள்ள பத்ரி கேதார் தலங்கள் அழிந்து விடுமாம். பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி பத்ரியாகவும் உத்தரகாசி கேதாராகவும் மாறிவிடும் என்கிறது புராணம்.

உத்தர காசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக அழகாக உள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசையில் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புராணம். இந்தத் தலம் மார்கண்டேய மஹரிஷிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தில் சற்றே தலை சாய்ந்த நிலையில் காசிவிஸ்வநாதர் லிங்கவடிவில்  காட்சி தருகிறார். உள்ளேயே விநாயகர் பார்வதி தேவி விக்ரகங்கள் உள்ளன. தற்போது உள்ள கோவில் தேஹ்ரி மன்னர் சுதர்ஷன் ஷாவின் மனைவி கனேதி தேவி 1857ல் கட்டியது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே, காசி விஸ்வநாதர் சன்னிதிக்கு எதிரே சக்தி தேவிக்கும் கோவில் உள்ளது. சக்தி தேவி 19.5 அடி உயரம் கொண்ட திரிசூலமாகக் காட்சி தருகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தத்தில் இந்த திரிசூலத்தைக் கடவுள்கள் பயன்படுத்தி அசுரர்களை அழித்ததாக ஐதீகம். இந்தத் திரிசூலத்தில், விஷ்ணுவின் சுதர்சன சக்கிரமும் பரசுராமரின் கோடரியும் சேர்ந்துள்ளதாம் .

இங்கே பாரத திபேத்திய கலாச்சாரப் பிணைப்பைக் காட்டும் விதத்தில் கல்வெட்டுக்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. வேதம் பயிலும் பாடசாலை உள்ளது. நாங்கள் சென்ற அன்று கர்வாசௌத் (Karva Chauth) பண்டிகை. அங்குள்ள பெண்கள் அன்று நம் காரடை நோன்பு போன்று கணவரின் ஆயுளுக்காக செய்யும் பண்டிகை என்பதால் கோவிலில் நிறைய பெண்கள் பூஜை செய்தனர்.

குப்தகாசி
ருத்ரப் பிரயாகையைத் தாண்டி உள்ளது குப்த காசி என்கிற இடம்.  குப்தகாசிக்கு எதிரே உள்ள ‘ஊகிமட்’ என்கிற கிராமத்தில்  மணிகர்ணிகா என்கிற  நீரூற்று  உள்ளது.

150 படிகளுக்கு மேல் அமைந்துள்ள  இந்தக் கோவில் கேதார்நாத், நேபாளம், பசுபதிநாத் ஆகிய ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இங்கு செய்யப்படும் பூஜை, புண்ணிய காரியங்கள்,தான தருமங்கள் அந்தத் தலங்களில் செய்த பலனைத் தருவதாக ஐதீகம்.

கோவில் மிகவும் அழகாக  கிட்டத்தட்ட கேதார்நாத் போலவே உள்ளது. கோவிலுக்கு முன்புறம் அழகிய சிறிய குளம் உள்ளது.
அதில் ஒரு பக்கம் ‘பசு’ முகத்திலிருந்து கங்கையும்  மறுபுறம் ‘யானை’ முகத்திலிருந்து யமுனை நீரும் ஊற்றிக்
கொண்டிருக்கிறது. சரஸ்வதி பூமியிலிருந்து இணைவதால் திரிவேணி சங்கமம் எனப்படுகிறது.

பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானைத் தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஈசன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் குப்தகாசி என்ற பெயர் பெற்றது.

அர்த்தமண்டபத்துடன்  சிங்கி-பிங்கி எனும் துவாரபாலகர்கள் ஆலயத்தை காவல் காக்க கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே  நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் சிறிய பஞ்சலோக நந்தியெம்
பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமான் கௌரிதேவியைஇங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதியாக சிவசக்தியின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார் சிவபெருமான்.இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி, திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை, திரிசூலம், திருப்பாதங்களில் நாகம்  என அழகு மிளிர்கிறது. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.

ஜோஷிமட்
ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமட் அல்லது திருப்பிருதி எனும் திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்பவிருக்ஷம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. நரசிம்மர், துர்கை ஆகியோருக்கு இங்கே கோவில்கள் இருக்கின்றன.

கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிர்மட்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை).

வசிஷ்டர்குகை
ரிஷிகேஷிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது வசிஷ்டர் குகை. சில படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்.

சப்தரிஷிகளில் ஒருவரும் பிரம்மாவின் மானஸபுத்திரருமான வசிஷ்டரின் பிள்ளைகள் விசுவாமித்திரரால் வஞ்சனை
யால் கொல்லப்பட்டபோது மனம் வெறுத்த வசிஷ்டர் தானும் கங்கையில் விழுந்து உயிர்விட  முடிவு செய்தார்.
கங்காதேவி அவரைக் காப்பாற்றி அங்கு தங்கியிருக்க வேண்டினாள். அருந்ததிக்கும் அவ்விடம் பிடித்துப் போய் அங்கேயே தங்கினர்.பல நூறு ஆண்டுகள் இங்கு தவம் செய்தபின் வசிஷ்டர் தன்  மனசஞ்சலம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
அருந்ததி குகையும் அருகில் உள்ளது.

இவ்விடம் சுவாமி புருஷோத்தமானந்தா ஆஸ்ரமத்தால்  மிக அழகாக பராமரிக்கப்படுகிறது. சற்று நீண்ட குகையினுள் சிறிய சிவலிங்கம் உள்ளது. அமைதியும் சுத்தமும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.அங்கு தியானம் செய்ய ஆசனங்களும் உள்ளன. எவரும் உள்ளே சென்று அமர்ந்து தியானம் செய்யலாம். அருகில் அமைதியாக ஓடும் கங்கை நதியின் அழகு சொக்க வைக்கிறது.

ஹனுமான்சட்டி
ஜோஷிமட் பத்ரிநாத் பாதையிலுள்ள ஹனுமான் சட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புராண பெருமை பெற்றது. பீமன் திரௌபதிக்காக சௌகந்திக புஷ்பத்தை தேடிச் சென்றான். வழியில் படுத்திருந்த ஹனுமனை வழிவிடும்படி பீமன் சொல்ல, ஹனுமனும் தன் வாலை நகர்த்திவிட்டு போகச் சொன்னார்.

தன் பலத்தைப் பற்றி அகந்தை கொண்டிருந்த பீமன் 'ஒரு குரங்கின் வாழை நகர்த்த முடியாதா' என்று அலட்சியமாக வாலை நகர்த்தினான். அது நகரக்கூட இல்லை.தன் கையால் பலம் கொண்டவரை நகர்த்தியும் முடியவில்லை. தன் கர்வம் குறைந்து பீமன் மன்னிப்பு கேட்க ஹனுமன் தான் யாரென்று கூறி சகோதரனை அணைத்து ஆசி வழங்கினார். அவ்விடமே இவ்வாலயம் உள்ள இடம். இதே பெயரில் உள்ள இன்னொரு ஊர் யமுனோத்ரி செல்லும் வழியில் உள்ளது.கோவில் சிறிதானாலும் மிக அழகாக இருக்கிறது. இங்கு ஹனுமான் சாலிஸா சொல்லி எதை வேண்டினாலும் நிறைவேறுமாம்.

இன்னும் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் புராண வரலாறுகள் உள்ளது. எல்லா இடங்களுக்கும் செல்ல யாத்திரையின் நாட்கள்தான் போதவில்லை!