Friday, 22 December 2017

ஐரோப்பாவில் என் கிறிஸ்துமஸ் அனுபவம்...2013


Imageகிறிஸ்துமஸ்  கிறித்தவர்களின்  மிக  முக்கியமான  பெரிய  பண்டிகை.  அந்நாளில்  கேக்  செய்து,  புத்தாடை  அணிந்து,  காரோல்களைப்  பாடி  சர்ச்சுக்கு  சென்று  ஜீசஸை  வணங்குவர்.  இவ்வளவே  நான்  அறிந்தது.  இந்தியாவில்  கிறிஸ்மஸ்  இப்படித்தான்  கொண்டாடப்பட்டு  நான்  பார்த்திருக்கிறேன். 

 
ஆனாலும்  முழுக்க  கி
றிித்தவர்களையே  கொண்ட  ஐரோப்பிய,  அமெரிக்க  நாடுகளில்  இப்பண்டிகை  மிக  கோலாகலமாகக்  கொண்டாடப்படும்  என்று  கேள்விப்  பட்டதுண்டு.  இவ்வருடம்  ஜெர்மனியில்  ஸ்டுட்கார்ட்டில்  இருக்கும்    என்  மகன்  வீட்டில்  தற்சமயம்  இருக்கும் எங்களுக்கு  அதைக்  கண்டு  களிக்க  ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தது.


ஏசு  பிறந்தது  பெத்லகேம்  எனினும்  ஐரோப்பாவில்தான்  கிறிஸ்மஸ்  கொண்டாட்டங்கள்  ஆரம்பித்தனவாம்.  அதிலும்  கிறிஸ்மஸ்  மரம்,  கிறிஸ்துமஸ்   மார்கெட்,  அட்வென்ட்  காலண்டர்,  செயிண்ட்  நிகோலஸ்  தினம்   இவை  எல்லாம்  ஆரம்பிக்கப்பட்டது  முதன்  முதலாக  ஜெர்மனியில்தானாம்.  

இங்கு  டிசம்பர்  மாத  முதல்  தேதியிலிருந்தே  கொண்டாட்டங்கள்  ஆரம்பித்து  விடுகின்றன.  எல்லார்  வீட்டு  வாசல்  கதவுகளிலும்  கிறிஸ்துமசை   வரவேற்கும்  விதமாக  அதை  சம்பந்தப்படுத்திய  கிறிஸ்துமஸ்  தாத்தா,  ரெயிண்டீர்  வண்டிகள்,  பூக்கள்,  வண்ண  மணிகள்  ஆகியவை  தொங்கவிடப்  படுகின்றன.  சன்னலின்  வெளியே  வண்ண  விளக்குகள்,  ஏசுவின்  பிறப்பை  விளக்கும்  பொம்மைகள்  அழகாக   வைக்கப் படுகின்றன.

அட்வென்ட்  காலண்டர்  என்பது  24  நாட்கள்  கொண்டது. 24  சின்ன ஷூக்களைப்  போன்ற  பைகளை ,குழந்தைகளின்  அறையில்  மாட்டி  வைத்து  விடுவர்.    24  நாட்களுக்கும்  இதில்  பெற்றோர்  ஒரு  சஸ்பென்ஸ்  பரிசுப்பொருளை  வைத்து  விடுவர்.  பொருள்  பெரிதாக  இருந்தால்  வெளியில்  வைத்து  விடுவார்களாம்!  இந்த வருடம்  என்  பேத்தியின்  பரிசு  ஒரு   அழகிய மீன்தொட்டி!  குழந்தைகளுக்குதான்  இது  மிக  சுவாரசியமான விஷயம் .   காலை  கண்விழித்தவுடனேயே  அதைப்  பிரித்துப்  பார்ப்பதில்  அவர்களுக்கு  ஏக  சந்தோசம்.  
19ம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்டதாம்  இந்த  அட்வென்ட்  காலண்டர்.  அதற்கு  முன்பெல்லாம்  அட்வெண்டிஸ்ட்  டே  என்பதைக்  குறிக்க  வாசல்  கதவில்  சாக்பீஸால்  கோடு  வரைவராம்.    சிலர்  தினம்  ஒரு    மெழுகுவர்த்தி ஏற்றுவராம். 


1902ம்  ஆண்டு முதன்  முதலாக  அட்வெண்டிஸ்ட்  காலண்டர்கள்  தயாரிக்கப்பட்டு  செய்தித்  தாள்களுடன்  இலவச  இணைப்பாகக்  கொடுக்கப்பட்டன.  அதன்பின்பு  சிறிய  கதவுகளுடன்  கூடிய  காலண்டர்கள்  உள்ளே  சாக்லேட்டுகளுடன்  தயாரிக்கப்  பட்டன.  ஒவ்வொரு  நாளும்  ஒவ்வொரு  கதவைத்  திறந்து  சாக்கலேட்டுகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும்!  இப்பொழுது  அவற்றுக்குள்  சின்ன  கதைகள்,  பைபிள்  வாசகங்கள்,   இளைஞர்களுக்கான ரொமாண்டிக்  வாசகங்கள்   என்று  வித  விதமாக  இருக்கின்றன!


என்  மருமகள்  வெளிநாட்டுப்  பெண்  என்பதால்  இந்த  எல்லா  விஷயங்களும்  இங்கு  உண்டு!  இங்கு  ஏசு  வழிபாடும்  உண்டு!  சூரிய  பூஜையும்  உண்டு!  குழந்தைகளுக்கு,  என்  மகனுக்கு,  அவளுக்கு, எங்களுக்கு என்று  அவரவருக்கு  ஏற்ற  மாதிரி  வாங்கி  வைத்திருக்கிறாள்!  எங்களுக்கு  தினம்  ஒரு  சாக்லேட்!


டிசம்பர்   ஆறாம் தேதி  செயின்ட்  நிக்கோலஸ்  தினம். இது  ஜெர்மனியில்  மட்டுமே  ஆரம்பிக்கப்பட்டு  இன்று  உலக முழுதும்  பரவி  விட்டதாம். செயின்ட்  நிகோலஸ்  என்பவர்  மூன்றாம்  நூற்றாண்டில்  பாதிரியாராக  இருந்தவர்.  அவர்  சிறு  வயது  முதலே  ஏழைகளுக்கு  உதவும்  பொருட்டு  அவர்கள்  அறியாமல்  அவர்களின் காலணிக ளுக்குள்  பணத்தை  வைத்து  விடுவது  அவர்  வழக்கம்.  தான்  உதவி  செய்வது  அவர்களுக்கு  தெரியக்  கூடாது  என்ற  பெருந்தன்மையே  அதற்கு  காரணம். அவரே  சாண்டா க்ளாஸின்  முன்னோடி  எனப்படுகிறார்.அவர்  இறந்த  நாளான  டிசம்பர்  6ம்  தேதி  நிகோலஸ்  தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்  5ம்  தேதி  இரவே    தம்  காலணிகளை  சுத்தம்  செய்து  வாசலில்  வைத்து  விடுவாராம்.  அன்றிரவு    அருகில்  இருப்போர்  பரிசுப்  பொருள்களை  அதனுள்  வைத்து  விடுவர்.  என்  பேத்திகளின்  ஷூக்களிலும்  பல  சாக்லேட்கள்,  பொம்மைகள்,    ஸ்டிக்கர்கள்,  ஹேர்  பாண்டுகள்  என  பல பொருட்கள்  இருந்தன.  அந்த  சின்ன  மலர்களின்  முகத்தில்  மகிழ்ச்சியைப்  பார்க்கணுமே? அவற்றை  செயின்ட்  நிகோலசின் பரிசுகளாக  கருதுகின்றனர்.

ஐரோப்பாவின்  கிறிஸ்துமஸ்  மார்க்கெட்டுகள்  உலகப் புகழ்  பெற்றவை. பதின்மூன்றாம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்ட  இந்த  மார்க்கெட்டுகள்  இப்பொழுது  பல  நாடுகளிலும்  நடத்தப்  படுகின்றன.  இந்த  ஊரில்   நடக்கும்  கிறிஸ்துமஸ்   மார்க்கெட்  மிகப்  பழமையானதும், புகழ்  பெற்றதுமாகும்.   இங்கு  வித்யாசமான  கலைப்  பொருட்கள்,  மர   பொம்மைகள்,  அருகிலுள்ள கிராமங்களில்  உருவாக்கப்படும் கைவினைப்    பொருட்கள்,  பீங்கான்  சாமான்கள் , உணவுப்  பொருட்கள்,  பலவித  மதுவகைகள்,  சாக்லேட்கள்  விற்கும்  100க்கும்  மேற்பட்ட  கடைகள்  உள்ளன.  ஒவ்வொரு கடையின்  மேலும்  கிறிஸ்துமஸ்  பற்றிய  உருவபொம்மைகள்  வண்ண   விளக்குகளுடன் மின்னுகின்றன.   இங்கு  விற்கப்படும்  ஜிஞ்சர்  சாக்லேட்டுகள்  மிகவும்  ஸ்பெ ஷலானவையாம்!  நவம்பர்  கடைசியிலிருந்து   டிசம்பர்  20  வரை   மார்க்கெட்டுகள்  நடைபெறும்.  இச்சமயம்  இங்கு  விற்பனை  செய்பவர்களுக்கு  நல்ல  வருமானம்  கிடைக்குமாம்!
Image
கிறிஸ்துமஸின் மிக  முக்கிய  விஷயம்  கிருஸ்துமஸ்  மரம்.  இது  பைன்  மற்றும்  ஃ பர்   மரங்களின்  கிளைகளை  வெட்டி  உருவாக்கப்படுகிறது.     16ம்  நூற்றாண்டில்,  ஜெர்மனியில்  உருவானதாம். இது  உருவானதற்கு  பல  கதைகள்  கூறப்படுகிறது.  

முன்பெல்லாம்  வீட்டு  வாசல்களில்  கட்டப்பட்டிருந்த  (  நாம் பண்டிகை  நாட்களில்  மாவிலை  கட்டுவதுபோல்!)  கிறிஸ்துமஸ்  மரம்  தற்போது  வீட்டினுள்  அலங்கரிக்கப்படுவதற்கு   ஒரு  கதை!  

கிறிஸ்துமஸ்  தினத்திற்கு  முதல்  நாள்  ஒரு  வேட்டைக்காரர்   தம் குடும்பத்தோடு  குளிர்  காய்ந்து  கொண்டிருந்தபோது,  ஒரு  ஏழைச் சிறுவன்  வந்து  தங்க  இடம்  கேட்டான்.,  அவரின்  பிள்ளைகள்  தங்கள்  அறையை  விட்டுக்   கொடுக்க, மறுநாள்  அவர்கள்  எழுந்தபோது  வீடே  தேவதைகளின்  வரவால்  ஒளி   மயமாகத்  திகழ்ந்தது.  அந்தப்  பையன்  ஜீஸஸாக  மாறி  அருள்  செய்ததுடன்,  அவர்கள்  தோட்டத்திலிருந்த  ஃ பர்   மரக்கிளையை ஒடித்து   அவர்களிடம் கொடுக்க,  அது  முதல்  ஏசுவை  வரவேற்கும்  முகமாக  கிறிஸ்துமஸ்  மரம்  அனைவர்  வீடுகளிலும்  அலங்கரித்து  வைக்கப்பட்டது.

எங்கள்   வீட்டிலும்   கிறிஸ்துமஸ்  மரம்  என்  பேத்திகளின்   கைவண்ண அலங்காரங்களில்,  வண்ண  விளக்கொளியில்  ஜொலிக்கிறது.  என்  மருமகள்  எல்லாருக்கும்  பரிசுப்  பொருள்களைப்  பார்த்துப்  பார்த்து  வாங்கியிருக்கிறாள்!  கிறிஸ்துமஸ்  அன்று  முதல்  நாள்  அவற்றை  அதன்  கீழ்  வைத்து,  இரவு  அனைவரும்  எடுத்துக்   கொள்ள வேண்டுமாம் !  இப்பவே   வித விதமாக  கேக்,  குக்கீஸ்  என்று  செய்ய  ஆரம்பித்து  விட்டாள் !   தீபாவளியையும்,  பொங்கலையும்  கொண்டாடிய  நாங்கள்  இந்த  வருடம்  வித்யாசமாக  கிறிஸ்துமஸையும்   கொண்டாட  தயாராகி  விட்டோம்!  ஆமென்!

No comments:

Post a Comment