சார்தாம்
யாத்திரையில் முக்யமான தலம் பத்ரி நாராயணன் தவக் கோலத்தில் அருட்காட்சி தரும்
பதரியாச்ரமம் எனப்படும் பத்ரிநாத். இது 99வது திவ்யதேசம். அஷ்டாக்ஷர மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க பெருமாள் வந்த
இடம்.
அலகநந்தா
நதிக் கரையின் வலது கரையில் நர
நாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத்
ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது.
பத்ரிநாத், உத்தர்கண்ட் மாநிலம் சமோலியிலிருந்து
கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்
தொலைவில் இருக்கிறது. இங்கு செல்ல நான்கரை மணிநேரம் ஆகிறது. பாதை
மிக மிக மோசமாக உள்ளது. ஒரே பாதைதான், அதுவும் ஒரு பஸ்
செல்லும் அளவுதான் உள்ளது. இந்தப் பாதையில்தான் இருவழிப் பயணங்களும் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
வாகன
ஓட்டுனர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பக்கம்
அதலபாதாளமும், ஒரு
பக்கம் உயர்ந்த மலைச்சாரல்களும் என்று இந்தச் சாலை ஓட்டுனர்களுக்கு
சவாலாக இருக்கிறது. பள்ளத்தாக்குகளின் பக்கம் ஓரமாக பஸ்
செல்லும்போது நமக்கு கதி கலங்குகிறது. அந்த பகவானே கதி என்று ஸ்லோகங்கள் சொல்லிக்
கொண்டே சென்றோம்.
கடந்த
2013 வெள்ளத்தில்
நிலச்சரிவுகளினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதால், இச்சாலையில்
செல்வது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற நிலையில் உள்ளது. ஆறு வருடங்களாகியும்
சாலைப் பணிகள்
இன்னமும் நடந்துகொண்டிருப்பதால்,
வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்கின்றன.
உயர்ந்த
பனி மூடிய மலைச்சிகரங்கள், அடர்ந்த காடுகள், வெள்ளிக் கோடுகளாய் மலையிலிருந்து
விழும் நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள், சில
இடங்களில் நிதானமாகவும், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும்
ஓடிவரும் ஆறுகள்,வளைந்து நெளிந்து போகும் சாலை,
மண்சரிவு மிகுந்த ஆபத்தான இடங்கள் என்று அருமையான இயற்கைக்
காட்சிகள் நம் கண்களையும்,மனதையும்
கொள்ளை கொள்கிறது.
நான்கு
பக்கமும் இமயமலைச் சிகரங்களான நீலகண்ட பர்வதம்
(சிவபெருமான்), ஊர்வசி பர்வதம் மற்றும் நர-நாராயண பர்வதங்கள்
வானுயர்ந்து நிற்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நீலகண்ட பர்வதம்,
நர நாராயண பர்வதங்கள் மிக அழகாகக் காட்சி தந்தன. மஹாவிஷ்ணு, நர நாராயணர்களாக அவதரித்து, இந்த லோகக்ஷேமத்திற்காக நீண்ட நெடிய தவம் புரிந்தபோது, தவத்தைக் கண்டு அஞ்சிய தேவேந்திரன் அவர்களது தவத்தைக் கலைக்க அப்ஸரஸ்களை
அனுப்புகிறான். உடனே மஹாவிஷ்ணுவானவர் அந்த அப்ஸரஸ்களின் அகம்பாவத்தை அடக்கவும்,
தேவேந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவும், தன்
துடையிலிருந்து மிகவும் அழகான தேவதையைப் போன்ற ஊர்வசியை உருவாக்குகிறார்.
அவள்
அழகைக் கண்டு வெட்கிப்போன அப்ஸரஸ்கள் தங்கள் அகம்பாவத்தைக் களைகின்றனர்.
தேவேந்திரன் மனம் திருந்துகிறான். இதனால் பத்ரிநாராயணனின் ஆலயம் 'ஊர்வசி’ பீடம்
எனப்படுகிறது. ஆலயத்துக்குத் தெற்கில் ஊர்வசிக்கு ஒரு சிறு கோயில்
இருக்கிறது.பிறகு நர நாராயணர்கள் ஊர்வசியைத் தேவேந்திரனின் அரண்மனைக்கே அனுப்புகிறார்கள். அவளும் தேவேந்திரனின் அரசவையில்
ஆடலரசியாகப் பணிபுரிகிறாள்.
வசிஷ்ட
முனிவரின் மனைவி அருந்ததி, 'ஸ்ரீ பத்ரி நாதரின் பெருமையையும் பத்ரியைத்
தரிசிப்பதனால் ஏற்படும் பயன்களையும் கூறுங்கள்' என்று
கேட்டபோது, அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக, 'ஹிமாலயத்தில் இருக்கும் பத்ரிநாத்தைத் தரிசிப்பவன் தன்னுடைய பாவங்கள்
அனைத்தும் நீங்கப்பெற்று முக்தி அடைகிறான். எவனொருவன் எப்போதும் அவரைப் பிரார்த்திக்கிறானோ,அவனுக்கு பத்ரியைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது'என்றுரைக்கிறார்.
'பத்ரிநாதனைச் சரணடைந்தால், அவர் அவனுடைய பாவங்களைப்
போக்கி மோக்ஷம் தருகிறார். ஸ்நான சங்கல்பம் செய்து கங்கையில் நீராடி, பின்னர் தப்த குண்டம் என்று சொல்லப்படுகிற வெந்நீர் ஊற்றிலும்
நீராடிவிட்டு, பத்ரிநாதரை வலம் வந்து தரிசிப்பது ஒரு அஸ்வமேத
யாகம் செய்த பலனைத் தருவதாக பத்ரி நாதரே கூறியுள்ளார்' என்று
வசிஷ்ட முனிவர் தெரிவிக்கிறார்.
விஷ்ணுமனஸ்
என்ற அந்தணனின் மகன் விஷ்ஹரதி என்பவன்வேத சாஸ்திரத்தில் ஈடுபாடின்றி பத்ரி வந்தான்.
அங்கு பெருமாள் அருளால் நாரதராகி ஞானம்,
யோகித்வம்,இசை வல்லமை
பெற்று சிறப்படைந்தார். அதனால் இது நாரத க்ஷேத்திரம் எனப்படுகிறது. ஜனமேஜயன்
பெண்ணாசையால் அழிந்தபோது வியாசர் அறிவுரையால் திருந்திய தலம்.
சம்ஸ்க்ருதத்தில்
‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். ஆகவே இத்தலம்
இலந்தைவனமாகத் திகழ்கிறது. இங்கு
மஹாவிஷ்ணு தவக்கோலத்தில் இருக்கும்போது,
அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காக அவர் அருகேமஹாலக்ஷ்மி அரவிந்தவல்லித் தாயார் என்ற பெயரில் தானே இலந்தை மரமாக
நின்றிருக்கிறாளாம். சாதாரண
மானிடர்களான நமக்கே அருள் செய்யும் தேவி தன் மணாளனுக்கு மரமாக நிற்பதில்
வியப்பில்லையே! மஹாவிஷ்ணு தவத்தில் இருந்தபோது அவரை
தரிசிக்க வந்த பிரம்மா முதலிய முனிவர்களிடம் 'தாம் அங்குள்ள
நாரத குண்டத்தில் மறைந்திருப்பேன் என்றும் வெகுகாலத்திற்குப் பின் ஒரு ஆன்மீக
மஹானால் கண்டெடுக்கப்படுவேன். கலியுகத்தில் மக்களை தீய வழியிலிருந்து நல்வழிப்
படுத்த என்னை கஷ்டப்பட்டு வந்து தரிசித்தால் அவர்களுக்கு முக்தி தருவேன்' என்றும் கூறி மறைந்து விட்டார்.
பின்னர்
பிரம்மாவால் வடிக்கப்பட்ட சிலை புத்த மதம் தழைத்தபோது அவர்களால் சிதைக்கப்பட்டு
நாரத குண்டத்தில் வீசப்பட்டதாம்.
அந்த விக்கிரகம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால்
கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாரத குண்டத்திலிருந்துதான் ஆதி
சங்கரருக்கு சாளக்ராமம் கிடைக்கிறது. அதை தப்த
குண்டத்திற்கும் கருட சிலைக்கும் நடுவே பிரதிஷ்டை செய்தார். குஷ்ட நோயால்
அவதிப்பட்ட கர்வால் மகாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற தன்
குருவின் ஆலோசனைப்படி, இந்த மூர்த்தியைத் தற்போது உள்ள
மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளார். அதன் பயனாக அவருடைய
நோயும் நீங்கப்பெற்றுள்ளது.
பத்ரிநாத்
வைகுண்டத்தின் நுழைவாயில் என்பதால் தேவர்கள் அவரை வணங்க வேண்டியே ஆறு மாதங்கள்
பனிப்பொழிவதாகவும் கூறப்படுகிறது. இத்தலத்திற்கு பத்ரி விஷால் என்று பெயர்.
பத்ரியைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை.
ரிக் வேதத்தின் சில வாசகங்கள் இங்கு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
பத்ரிநாதர்
‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு
பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும்
காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. எனவே, இது சைவ
வைணவத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கு
சாக்கிய முனியாகவும், ஜைனர்களுக்கு தீர்த்தங்கரராகவும்
காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது.
ஆலயம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் இரண்டடி உயரத்தில் பத்ரிநாதர்
த்யான நிலையில் காட்சி தருகிறார். இவரைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. கருவறைக்கு
அருகே தர்ம சிலா என்கிற உண்டியலும் ஹோம குண்டமும் இருக்கின்றன.
வலப்பக்கம் நின்றநிலையில் நரநாராயணர்களும் இடப்புறம் குபேரனும்
விநாயகரும் காட்சி தர, பெருமாள் முன்புறம் நாரதர் அமர்ந்திருக்க,
மேலே சந்திர சூரியர்கள் உள்ளனர்.
கருமை
நிற சாளக்ராமத்தில் உள்ள பத்ரி நாதருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம்
நடைபெறுகிறது.’ மாலை சிங்கார தரிசனத்தின் போது, விஷ்ணு
சஹஸ்ரநாமமும், கீத கோவிந்தமும் பாடப்படுகின்றன.
ஆதிசங்கரரால் நியமிக்கப்பட்ட நம்பூதிரிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.
ஆலயத்தினுள்
கண்டா கர்ணனுக்கும், மஹாலக்ஷ்மிக்கும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. குபேரன், நாரதர், உத்தவர், நர
நாராயணர்களுக்கு சன்னிதி உண்டு. ஆதி சங்கரர், ராமானுஜர்,
வேதாந்த தேசிகர் ஆகியோரின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலயத்தின் உள்ளே ஆதிசங்கரர் மடமும், அவர் தவம்
செய்த குகையும், கற்பக விருட்ச மரமும் உள்ளது.
கோவில்
வாயிலில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் விதமாகப் பத்து தூண்கள்
அமைந்துள்ளன. கருடன் அழகாக வீற்றிருக்கிறார். அருகே விநாயகர் விக்ரகமும், ஹனுமான் விக்ரகமும்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
மூலஸ்தானமான
கர்ப்பக்கிருகத்தின் விமானம் பொன்னால் வேயப்பட்டிருக்கிறது.
சபா மண்டபத்தில் இருந்துதான் பக்தர்கள் பத்ரிநாதரைத் தரிசனம் செய்ய
முடியும்.
காலை
5 மணிக்கு கோயில்
திறக்கப்படுகிறது. தரிசன நேரம் காலை 6.30 முதல் பகல் 1
மணி வரையிலும், பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். வரிசையாக பூஜைகள்.
எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உண்டு. கட்டண தரிசனங்களுக்கு மட்டுமே கருவறையை அடுத்த
மண்டபத்துக்குள் அனுமதி. மற்றவர்கள் வரிசையில் வெளிமண்டபத்திலிருந்தே
தரிசிக்க வேண்டும். நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம பூஜையில் கலந்து கொண்டோம். இருபது
நிமிடங்கள் இறைவனை இதயபூர்வமாக தரிசித்தோம்.
வராஹ
ஷிலா, நாரத ஷிலா, நரசிங்க ஷிலா, கருட ஷிலா, மற்றும்
மார்கண்டேய ஷிலா என்று பஞ்ச ஷிலாக்கள் இங்கே இருக்கின்றன. இவை தப்த குண்டத்திற்கு
மேலே உள்ளன. அதைச் சுற்றிலும் பிரஹலாத தாரா, கூர்ம தாரா,
ஊர்வசி தாரா, பிருகு தாரா, இந்திர தாரா ஆகிய ஐந்து அருவிகள் (பஞ்ச தாரா)இருக்கின்றன.
பித்ரு
காரியங்களைச் செய்வதற்கு அலக்நந்தா கரையில்பிரம்ம கபாலம் என்கிற இடம் உள்ளது.
சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தபோது,அது அவர் கையிலேயே ஒட்டிக் கொண்டது. அத்தலை
இங்கு விழுந்ததால் பிரம்ம கபாலம் எனப்படுகிறது. இங்கு பிண்ட தர்ப்பணம் செய்வதால்
முன்னோர் நற்கதி அடைவதாகச் சொல்லப்படுகிறது.
ஆலயத்திற்கு போகும் வழியில் உள்ள தப்தகுண்டத்தில் நீர் புகை வரும் அளவு பயங்கர சூடாக உள்ளது.
இது இங்கு தோன்றியது எப்படி? பகீரதனுக்காக சிவபெருமானின்
கபாலத்திலிருந்து உருவான கங்கை என்பதால் சூடாக இருப்பதாக கூறப் படுகிறது.
இதில் மருத்துவ குணமுள்ளதால் இதில் குளிப்பவர்களின் நோய்கள்
குணமாவதாகக் கூறப்படுகிறது.
மஹாபாரதம், ஸ்கந்த புராணம்,
பாகவத புராணம்,
பத்மபுராணம் ஆகியவை பத்ரிநாத் தலத்தைப் பற்றிக் கூறுகின்றன.. பெரியாழ்வாரும்,
திருமங்கையாழ்வாரும் பத்ரி நாதரின் பெருமைகளைத் திவ்யப்
பிரபந்தங்களாகப் பாடியுள்ளனர்.
நவம்பரில்
ஆலயம் மூடப்பட்டபின் ஆறு மாதங்கள் உற்சவ விக்ரகங்கள் கீழே ஜோஷிமடம் எடுத்துச்
செல்லப்பட்டு பூஜைகள் தொடரும். அந்த ஆறு மாதங்களும் தேவர்கள் இவரை வழிபடுவதாகக்
கூறுகின்றனர். ஆலயம் மூடும்போது ஏற்றி வைக்கப்படும் விளக்கு ஆறு மாதங்கள் கழித்து
திறக்கும்வரை எரிந்து கொண்டிருப்பது அதிசயமாகக் கூறப்படுகிறது.
பயணம்
மனதில் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும்,
பத்ரிநாதனின் தரிசனம் நம் பாவங்களோடு அனைத்து துன்பங்களையும் தூசாக்கி நம் மனதைக்
கொள்ளை கொள்கிறது.