Monday, 1 July 2019

சங்கீத அனுபவம்


நான் கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னையில் சங்கீதம் கற்றுக் கொண்டேன். என் பாட்டு வாத்யார் திரு.K.S.கிருஷ்ணன் என்று பெயர். ஆல் இண்டியா ரேடியோவில் அடிக்கடி பாடுவார். அவர்  மதுரைமணி ஐயர் பாணியில், அவரைப் போலவே பாடுவார். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நிறைய சங்கதி சொல்லிக் கொடுப்பார். இப்பொழுதெல்லாம் இரண்டு சங்கதிக்கு மேல் யாரும் பாடுவதில்லை.
அவர் தெலுங்கு பேசுபவர் என்பதால் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அர்த்தம் சொல்லிவிட்டே பாட்டு சொல்லிக் கொடுப்பார். தாளம் தப்பினாலோ, ராகம் மாறினாலோ திரும்பத் திரும்ப பாடச் சொல்லி சரியாகும்வரை சொல்லிக் கொடுப்பார்.
நகைச்சுவையாக நிறைய விஷயங்கள் பேசுவார். 'மீனாக்ஷி மேமுதம் தேஹி' என்ற தீக்ஷிதர் கிருதி சொல்லிக் கொடுத்தபோது, தீக்ஷிதர் தம் இறுதி நேரத்தில் இந்த கீர்த்தனையை சிஷ்யர்களைப் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டே உயிர் நீத்தார் என்றார்.
சரணத்தில்..மதுராபுரி நிலயே மணி வலயே..என்ற வரிகளை சங்கதியுடன் சொல்லிக் கொடுத்தவர் 'இந்த வரிகளை நிறைய சங்கதியுடன் பாடுவது ஏன் தெரியுமா?'என்றார். எங்களுக்கு புரியவில்லை.
'பாடகருக்கு கொடுக்க வேண்டிய சம்பாவனை இன்னும் வரவில்லை என்பதை கச்சேரி நடத்துபவர்கள் புரிந்து கொள்ளவே ..மணி(பணம்) வ(ர)லயே..என்று பல சங்கதி
களுடன் பாடுவதன் அர்த்தம் 'என்று சொல்லி சிரித்தார். 'ஆஹா.நல்ல ஐடியா' என்று நாங்களும் ரசித்து சிரித்தோம்!
என் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது திருப்பாவை சொல்லிக் கொடுப்பேன். அந்த வயதிலேயே அத்தனையும் அவனுக்கு மனப்பாடம். போட்டிகளில் பரிசுகளும் வாங்கியிருக்கிறான். அவன் என்னிடம் முப்பதாம் பாடலில் வரும் 'சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்' என்ற வரியைச் சொல்லி 'ஏம்மா.இதை எழுதின ஆண்டாள் ஏன் எல்லாமே தப்புனு சொல்லிருக்கா?' என்று  குழந்தைத்தனமாக ஒரு கேள்வி கேட்டானே பார்க்கணும்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.  பின் அதன் பொருளை 'முப்பது பாடலும் தப்பில்லாமல் சொல்பவர்களுக்கு நாராயணர் அருள் பண்ணுவார்னு அர்த்தம்' என்று சொல்லிக் கொடுத்தேன். இப்பவும் இந்த விஷயத்தை சொல்லி அவனை பரிகசிப்போம்!
நாம் எந்த மொழியில் பாடினாலும் அதன் அர்த்தத்தை ஓரளவு தெரிந்து கொண்டு பதங்களை சரியாக உச்சரித்துப் பாடினால் நாமும் பக்தியுடன் இசையோடு ஒன்றிக் கேட்பவரையும் மகிழ வைக்கலாம்.

Friday, 28 June 2019

போவோமா2047

...நாராயண..நாராயண...

...என்ன நாரதா. நலம்தானே?...

...வணங்குகிறேன் மகாதேவா!தாங்கள் வரச் சொன்னதாக நந்திதேவர் கூறினார்.என்ன விஷயம் என்று...

...ஆம். புவனத்தை சுற்றிப் பார்த்து வர ஆசை. உடன் நீயும் இருந்தால் சுவாரசியமாக இருக்குமே என்றுதான்...

...வருகிறேன் ஈசா...

பரமேசுவரனும் நாரதரும் கிளம்புகிறார்கள்.

...முதலில் பாரதத்தை பார்த்து வருவோம் நாரதா...

...நல்லது பரமனே...

இருவரும் தமிழகத்திற்கு முதல் விஜயம்! ஊரெங்கும் ஜெகஜோதியாக விளக்கு வெளிச்சம். நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மக்களின் மகிழ்ச்சி அவர்கள் பேச்சில் தெரிகிறது.

...ஊரெங்கும் ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு அமர்க்களமாக பூஜைகள் நடக்கின்றன ஐயனே...

...ஆம் நாரதா. முப்பது வருடம் முன்பு ஆலயங்கள் அழிந்து விடுமோ என்று பயந்தவர்களின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்ட நான் செய்த மாற்றமே இது...

...நல்லது ஈசுவரா...

இன்னும் சற்று தூரம் நகர்ந்து சென்றபோது ஒரு பெரிய ஹாலில் திருவிழா போல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

இருவரும் யாரும் அறியாத நிலையில் ஒரு ஓரமாக நின்றனர்.

...ஏதோ அரசியல் கூட்டம் போலிருக்கு தேவா...

...இது மத்யமர் என்ற ஒரு முகநூல் குழுவினரின் மீட்டிங்...

...உங்களுக்கு இதுபற்றி தெரியுமா?...

...யாவும் நாம் அறிவோம். இக்குழுவின் அட்மின் என் பெயர் கொண்டவர், சங்கர் #ShankarRajarathnam. இன்னொரு அட்மின் 'புகழை விரும்புபவன்'என்ற பொருளில் விளங்கும் என் இன்னொரு பெயரைக் கொண்ட கீர்த்திவாசன் #KeerthivasanRajamani...

...தாங்களும் இந்தக் குழுவில் உறுப்பினரோ?...

...ஆம் நாரதா! என் பெயர் கொண்ட குழுவில் நான் இல்லாமலா! இதில் வரும் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பானவை. அருமையாகஇருக்கும்!  கைலாயத்தில் பொழுது போகாதபோது நான் இதைப் படிப்பதுண்டு!

...நீயும் இதில் இணைந்து கொள். உலகம் சுற்றும் உனக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்...

...நாராயண! நாராயண!...

...சற்று பொறு. அட்மின் பேசுவதைக் கேட்போம்...

...அனைவருக்கும் வணக்கம். நம் குழுவில் தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள். உள்ளோம். நம் மத்யமர் சேரிட்டி பலருக்கும் பலவித நன்மைகளையும்
செய்து வருகிறது.

...முப்பது வருடங்களுக்கு மேல் ஒரு முகநூல் குழு பல சிறந்த செயல்களைச் செய்வதற்கு உங்களைப் போன்ற உறுப்பினர்களே காரணம். உங்கள் அனை
வருக்கும் நன்றிகள்.

..மேலும் நம் குழு ஆரம்பித்த நாள்முதல் இன்றுவரை பல நல்ல பதிவுகளை எழுதி நம் குழுவின் சிறப்புக்கு காரணமான தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட
வர்களுக்கு நம் மத்யமர் சின்னம் பதித்த வெள்ளி பதக்கம் அணிவித்து சிறப்பிக்கிறேன்...

...பரமேஸ்வரா! எனக்கு ஒரு சந்தேகம். இதில் இளைஞர்களைவிட அதிகமாக 90 வயதுக்கு
மேற்பட்ட முதியோர்..எப்படி இவ்வளவு இளமையாக..
ஆரோக்யமாக?...

...நாரதா! இக்குழுவின் பெயரைக் கூறு..

...(மனதுக்குள்..இவருக்கு தெரியாதா?நாம் சொல்லணுமா?)..மத்யமர்...

...நீ ருத்ரம் அறிவாயா?...

...என்ன சுவாமி கேள்வி இது?நன்கு அறிவேன்...

...ஆறாவது அனுவாகம் சொல்...

...நமோ ஜேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாயச
நமோ #மத்யமாய சாபகல்பாயச...

...நிறுத்து.இதில் கடைசி வரி...

...நமோ #மத்யமாய...

...அதன் பொருள் சொல்...

...சிறுவனும் இல்லாத, முதியவருமில்லாத இடைப்பட்ட இளவயது நிலையிலுள்ள ஈசனை வணங்குகிறேன்...

...அதானே இந்தக் குழுவின் பெயர். இக்குழுவினர் சதா நேரமும் '#மத்யமர்..#மத்யமர்' என்ற நினைவால் என்னை ஜபித்துக் கொண்டே இருப்பதால் இளமையாகவும் ஆரோக்யமாயும் உள்ளனர். இவர்களின் நீண்ட ஆயுளுக்கு நான் கேரண்டி! புரிந்ததா?...

...நன்கு புரிந்து கொண்டேன் இறைவா! நமசிவாய! நமசிவாய!...

...நாராயணன் பெயரை சொல்வாயே!...

...நானும் ஆரோக்யத்தோடும், இளமையோடும் இருக்கத்தான் இந்த மாற்றம் ஈசனே!...

...அட! நேரமாகி விட்டது. பார்வதி ஏதோ ஷாப்பிங் போகவேண்டும் என்றாள். போகலாம்...

Sunday, 12 May 2019

அன்னையர்தினஸ்பெஷல்


அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை.

நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன்  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லித் துடைத்து...😞

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டு மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது.

சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்!

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்!

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்!

தன் சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்தி
-ருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என் அம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்!

2005 ம் ஆண்டு  எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

என் அம்மாவின் 68ம் வயதில்..2000ல் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. பல டாக்டர்களையும் சோதனைகளையும் செய்தபின் என் அம்மாவின் இருதய வால்வில் கசிவு ஏற்பட்டு அது ஃபங்கஸாகி பரவியிருப்பதாக தெரிந்தது.

அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்ட தஞ்சை டாக்டர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யும்படி கூறினார். அவர்கள் பல சோதனைகளைச் செய்தபின் bypass surgery செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

என் அம்மாவுக்கு ஊசி போட்டுக் கொள்ளவே பயம். இதில் ஆப்பரேஷன் என்றதும்...வேண்டாம். எனக்கு தேவையில்லை...என்று சொல்லிவிட்டார்.

பின் மருந்து மாத்திரை ஊசி என்று சாப்பிட்டதில் சிறிது முன்னேற்றம் இருந்தது. 2004ல் மும்பையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு டாக்டர் ...ஃப்ளைட்,ரயிலில் ஜெர்க் இருக்கும்.போக வேண்டாம்... என்று சொல்லியும்..என் முதல் பேத்தி திருமணம். எனக்கு என்ன ஆனாலும் சரி. நான் போகவேண்டும்...என்று டாக்டரிடமே சொல்லிவிட்டு வந்தார்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் நடந்த என்மகன் நிச்சய
தார்த்தத்திற்கு வந்தவர்...பேரன் கல்யாணமும் பார்த்து விட்டால் எனக்கு மிகவும் சந்தோஷம்...என்றார்.

ஆனால் மே15 திடீரென்று உடல்நிலை மோசமாகி, என் தம்பியும் அவன் மனைவியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய முடிவு செய்து, அழைத்துச் சென்றபோது அங்கு தங்கவேண்டி வருமென்று ஒரு செட் புடவை, சீப்பு, கண்ணாடி, குங்குமம்,விபூதி, சத்யசாயிபாபா படம் அத்தனையும் எடுத்துச் சென்றாராம்.

அவ்வளவு நம்பிக்கையுடன் சென்றவர்...ஆஸ்பத்திரியில் வீல்சேரில் போகும்போதே தலை சாய்ந்துவிட..உடன் எமர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்து எத்தனையோ முயற்சித்தும் இறந்து விட்டார்.அம்மாவை எப்போதும் பிரிந்திராத என் அப்பா இச்செய்தி கேட்டு அதிர்ச்சியாகி விட்டாராம்.

என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. மனதின் துக்கத்தையும் என்னால் அடக்க முடியவில்லை. மும்பையிலிருந்து சென்னை வருவதற்குள் ஒரு யுகம் போலிருந்தது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

மறுநாள் காரியங்கள் செய்ய அம்மாவை வெளியில் எடுத்தபோது அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

ஒவ்வொருமுறை நான் அம்மாவைப் பார்க்க வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதும் என்னைக் கட்டியணைத்து கண்கலங்கி வழியனுப்பும் அம்மாவை இனி காண்பது எங்கே..எப்போ😩😰

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்🙏