Monday 1 July 2019

சங்கீத அனுபவம்


நான் கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னையில் சங்கீதம் கற்றுக் கொண்டேன். என் பாட்டு வாத்யார் திரு.K.S.கிருஷ்ணன் என்று பெயர். ஆல் இண்டியா ரேடியோவில் அடிக்கடி பாடுவார். அவர்  மதுரைமணி ஐயர் பாணியில், அவரைப் போலவே பாடுவார். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நிறைய சங்கதி சொல்லிக் கொடுப்பார். இப்பொழுதெல்லாம் இரண்டு சங்கதிக்கு மேல் யாரும் பாடுவதில்லை.
அவர் தெலுங்கு பேசுபவர் என்பதால் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அர்த்தம் சொல்லிவிட்டே பாட்டு சொல்லிக் கொடுப்பார். தாளம் தப்பினாலோ, ராகம் மாறினாலோ திரும்பத் திரும்ப பாடச் சொல்லி சரியாகும்வரை சொல்லிக் கொடுப்பார்.
நகைச்சுவையாக நிறைய விஷயங்கள் பேசுவார். 'மீனாக்ஷி மேமுதம் தேஹி' என்ற தீக்ஷிதர் கிருதி சொல்லிக் கொடுத்தபோது, தீக்ஷிதர் தம் இறுதி நேரத்தில் இந்த கீர்த்தனையை சிஷ்யர்களைப் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டே உயிர் நீத்தார் என்றார்.
சரணத்தில்..மதுராபுரி நிலயே மணி வலயே..என்ற வரிகளை சங்கதியுடன் சொல்லிக் கொடுத்தவர் 'இந்த வரிகளை நிறைய சங்கதியுடன் பாடுவது ஏன் தெரியுமா?'என்றார். எங்களுக்கு புரியவில்லை.
'பாடகருக்கு கொடுக்க வேண்டிய சம்பாவனை இன்னும் வரவில்லை என்பதை கச்சேரி நடத்துபவர்கள் புரிந்து கொள்ளவே ..மணி(பணம்) வ(ர)லயே..என்று பல சங்கதி
களுடன் பாடுவதன் அர்த்தம் 'என்று சொல்லி சிரித்தார். 'ஆஹா.நல்ல ஐடியா' என்று நாங்களும் ரசித்து சிரித்தோம்!
என் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது திருப்பாவை சொல்லிக் கொடுப்பேன். அந்த வயதிலேயே அத்தனையும் அவனுக்கு மனப்பாடம். போட்டிகளில் பரிசுகளும் வாங்கியிருக்கிறான். அவன் என்னிடம் முப்பதாம் பாடலில் வரும் 'சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்' என்ற வரியைச் சொல்லி 'ஏம்மா.இதை எழுதின ஆண்டாள் ஏன் எல்லாமே தப்புனு சொல்லிருக்கா?' என்று  குழந்தைத்தனமாக ஒரு கேள்வி கேட்டானே பார்க்கணும்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.  பின் அதன் பொருளை 'முப்பது பாடலும் தப்பில்லாமல் சொல்பவர்களுக்கு நாராயணர் அருள் பண்ணுவார்னு அர்த்தம்' என்று சொல்லிக் கொடுத்தேன். இப்பவும் இந்த விஷயத்தை சொல்லி அவனை பரிகசிப்போம்!
நாம் எந்த மொழியில் பாடினாலும் அதன் அர்த்தத்தை ஓரளவு தெரிந்து கொண்டு பதங்களை சரியாக உச்சரித்துப் பாடினால் நாமும் பக்தியுடன் இசையோடு ஒன்றிக் கேட்பவரையும் மகிழ வைக்கலாம்.

No comments:

Post a Comment