Saturday, 16 November 2019

மத்யமர்_என்_பார்வையில்



என் மனம் கவர்ந்த முகநூல் தளம் மத்யமர் என்பதில் சந்தேகமில்லை. நான் சில முகநூல் தளங்களில் உறுப்பினர் என்றாலும் தவறாமல் பதிவு போடுவது மத்யமரில் மட்டுமே.

இதில் எனக்கு மிக பிடித்தது வார டாபிக். சிலவற்றிற்கு எழுத வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் எழுத வைத்து விடுவதுதான் இத்தளத்தின் மற்றும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அட்மின்களின் வெற்றி.

நான் பல தமிழ் மாத இதழ்களில் 25 வருடங்களுக்கு மேலாக கதை, கட்டுரைகள் சமையல் குறிப்புகள் ஆலய தரிசனக் கட்டுரைகள் நிறைய எழுதிக்
கொண்டிருக்கிறேன். கோலப் போட்டி கொலுப்போட்டி சமையல் போட்டிகளில் நிறைய பரிசுகளும் பெற்றதுண்டு.

சென்ற ஆண்டு என் தோழி ரஞ்சனி நாராயணன் மூலம் அறிந்து மத்யமரில் இணைந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதில் நிறைய எழுதிக் கொண்டி
ருக்கிறேன். ஞாயிறு ஸ்பெஷல் தலைப்புகளை பெரும்பாலும் எழுதத் தவறுவதில்லை.

விதவிதமான தலைப்புகளில் எழுதும்போது சுவாரசியம் கூடுகிறது. நம் மனதில் இருக்கும் சம்பவங்களை எழுத்து வடிவில் பதிய வைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம். இவற்றை நான் என் blog லும் உடனே save செய்து விடுவேன்.

மத்யமருடனான என் ஒன்றரை வருட பயணத்தில் நான் படித்து அறிந்த விஷயங்கள் பல. என் மனம் கவர்ந்த பதிவுகள் பல முன்பெல்லாம் பதிவுகள் அதிகம் இல்லை. அதனால் எதையும் தவற விடாமல் படித்து கமெண்ட்ட முடிந்தது.

இப்போது நிறைய்ய உறுப்பினர்கள். ஏகப்பட்ட பதிவுகள். அவரவர் சொந்தக் கதைகளே அதிகம். எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. நேரமும் இல்லை. தினமும் வெளியாகும் மாத இதழ் போன்ற தோற்றம்.எதுவும் அளவுக்கு மீறினால் ரசிக்காதே!

முன்பு போல் சமையல் குறிப்புகள் ஆன்மிகச் செய்திகள் அதிகம் வருவதில்லை. அப்போது அதிகம் எழுதிய உறுப்பினர்களையும் காண முடிவதில்லை. 'கடை விரித்தோம்..கொள்வாரில்லை..கட்டிவிட்டோம்' என்ற நிலமையோ!🤔

நான் ஆன்மிகம் பற்றி நிறைய எழுதுவேன். அவற்றை சிலர் கூட படிப்பதில்லை என்பதால் எழுதுவதைக் குறைத்து
விட்டேன்.
மத்யமரின் போட்டிகள் மிக சுவாரசியம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அதில் பங்குபெற அனுமதித்தது மிக அருமை. பரிசும் உண்டு என்பதால் உறுப்பினர்களுக்கு அவை ஒரு ஈர்ப்பையும் பங்கு பெறும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இப்பவும் என் பேத்திகள்..உங்க க்ரூப்ல போட்டியல்லாம் எப்போ பாட்டி ஆரம்பிக்கும்..என்கிறார்கள்!

அட்மின்கள் மாடரேட்டர்கள் லைக் கமெண்ட் போடுவதில்லை என்ற ஆதங்கம் நிறைய பேருக்கு இருப்பது தெரிகிறது. நான் இதில் முதன்முதலாக மங்கையர் மலரில் வெளியான என் கதையைப் போட்டபோது ரேவதி பாலாஜி...என் மனம் கவர்ந்த கதையாச்சே இது.நீங்கள் எழுதியதா?..
எனறபோது...அட!நம்மைக் கூட நாலு பேருக்கு தெரிஞ்சிருக்கே...என்று மனம் ஆனந்தமடைந்தது. 

என் பல பதிவுகளுக்கு ரேவதி பாலாஜி லைக் கமெண்ட் போட்டதுண்டு.
Senior Admin Shankar Rajarathnam அவர்களின் லைக்கும் கமெண்டும் அவ்வப்போது கிடைக்கும்! Junior Admin  Keerthivasan Rajamani இ(இந்தியா)ங்கு ஒரு காலும், அ(அமெரிக்கா)ங்கு ஒரு காலுமாக படு busy! அவர் கமெண்ட் கிடைப்பது குதிரைக்கொம்புதான்!

பசி நோக்கார்..கண் துஞ்சார்..கருமமே கண்ணாயினார்..என்றபடி அயராது செயல்பட்டு இந்த மத்யமர் தளத்தை சிறப்பாக்கும் மாடரேட்டர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது🙏🙏🙏🙏

முன்பெல்லாம் சிலரை tag செய்வேன். இப்பொழுது செய்ய கஷ்டமாக இருக்கிறது. அவர்களாக ஆர்வத்துடன் படித்தால் சரி..வரும் லைக் கமெண்ட்கள் போதும் என விட்டுவிட்டேன். இதுவரை 6 POTW, 2 GEM வாங்கி விட்டேன்.என் எழுத்துக்களும் மத்யமரில் வெளியாவதையே சந்தோஷமாக எண்ணுகிறேன்.

மத்யமர் சேரிட்டி மூலம் சமூக சேவைகள் செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். 'இயலாதவர்க்கு செய்யும் சேவையே  இறைவனுக்கு செய்யும் சேவை' யாகும்.  இத்தனை சிறப்பான தொண்டுகளைச்  செய்யும் முகநூல் குழுவில் உறுப்பினராயிருப்பதே பெருமையாக உள்ளது.

மத்யமர் அட்மினுக்கு என் சிறிய யோசனை..இதில் 20000க்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறோம். Active ஆக இருப்பவர்கள் 1000 பேர் இருக்குமா? எல்லோருக்கும் Membership fee என்று வைக்கலாமே. வருடம் 1000ரூ. (இது பெரிய தொகை இல்லையே) இரண்டு தவணைகளில் கட்டலாம். இதனால் உறுப்பினர் அனைவரும் சமூக சேவைகளில் பங்கு பெற்ற சந்தோஷம் கிடைக்குமே? 

எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன்.
மத்யமரின் இரண்டாவது பிறந்தநாள் விழா சீரோடும் சிறப்போடும் கோலாகலமாக நடைபெற வாழ்த்துகிறேன்.

Friday, 15 November 2019

பத்துவரிக்கதை....உண்மை சுடும்

உண்மை சுடும்

...குழந்தைகளோடவெளிபோய்  ரொம்ப நாளாச்சே. எங்கயாவது  வரலாமா...

மாதவன் ஐ.டி. கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான். மாலதி ஹவுஸ்வைஃப். ரமண் ஆறாம் வகுப்பும் சுமன் மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

...ரமண், சுமன் இங்க வாங்க. இன்னிக்கு நாம ஜாலியா எங்காவது போயிட்டு வருவோம். எங்க போலாம்?...

...ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா...
இருவரும் கோரஸாக சொல்லிவிட்டு beach playset டன் ரெடியாகிவிட,  மாதவன் காரை எடுத்தான்.

குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு வந்து மணலில் வீடு கட்டினார்கள்.

 மாலதியும் மாதவனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரமண் சுமன் இருவரும் அவரவர் இஷ்டப்படி வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் அழகாக செய்தார்கள்.

...யார் வீடு அழகா இருக்குனு நம்ம அப்பா அம்மாவைக் கேக்கலாமா...பெரியவன் ரமண் சொல்ல, இருவரும் தம் பெற்றோரை அழைத்தனர்.

...ஹை..சூப்பரா இருக்கு ரெண்டு வீடும். மேலே ஸீலிங் போடலியா?...என்று மாலதி கேட்க...உனக்கு உள்ளே இருப்பது தெரியாதே. அதான்அப்படியே விட்ருக்கோம்...என்றான் ரமண்.

...இங்க வாங்க. இவங்க எவ்வளவு அழகா வீடு கட்டிருக்காங்க பாருங்க...என்று மாதவனைக் கூப்பிட்டாள்.

இருவரும் அவர்கள் கட்டிய வீட்டில் கிச்சன், ஹால், படுக்கை அறை எல்லாம் காண்பித்தார்கள்.
மாதவன் இரண்டு வீட்டையும் பார்த்து விட்டு சுமனிடம்...ரமண் வீட்டில் இரண்டு ரூம் இருக்கு. உன் வீட்டில் ஏன் ஒரு ரூம்தான் கட்டிருக்க?...

...நான் பெரியவனா ஆனப்பறமா நீங்களும் அம்மாவும் நம்ம தாத்தா பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே. அதனால் ஒரு ரூம் போறுமே...என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டது போல் உணர்ந்தார்கள்.


Tuesday, 12 November 2019

சபாஷ்மத்யமர் கைவினைகலைப் போட்டி..



நவதானிய விநாயகர்..
விநாயக சதுர்த்திக்கு நவதானிய விநாயகர் செய்யலா
மென்றிருந்தேன். இந்தப் போட்டி அதற்கு வழி செய்தது. மிக சுலபமாக செய்யலாம். பொறுமையும் கற்பனையும் மட்டும் தேவை!

நான் செய்து முடித்ததும் என் கணவர் அதைக் கண்ணாடி போட்டு ஃப்ரேம் செய்து கொண்டு வந்துவிட்டார்! விநாயக சதுர்த்தி பூஜைக்கு பிள்ளையார் ரெடி!

தேவையானவை...
நவதானியங்கள்..வண்ண சமுக்கிகள்..ஃபெவிகால்..பிள்ளையார் ஓவியம் அல்லது படம்.

ஒன்பது தானியங்களையும் பிள்ளையாரின் பாகங்களில் ஃபெவிகால் தடவி அழகாக ஒட்ட வேண்டும். பிள்ளையாரைச் சுற்றி நம் கற்பனைக்கேற்ப அழகு படுத்த வேண்டும்.