உண்மை சுடும்
...குழந்தைகளோடவெளிபோய் ரொம்ப நாளாச்சே. எங்கயாவது வரலாமா...
மாதவன் ஐ.டி. கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான். மாலதி ஹவுஸ்வைஃப். ரமண் ஆறாம் வகுப்பும் சுமன் மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
...ரமண், சுமன் இங்க வாங்க. இன்னிக்கு நாம ஜாலியா எங்காவது போயிட்டு வருவோம். எங்க போலாம்?...
...ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா...
இருவரும் கோரஸாக சொல்லிவிட்டு beach playset டன் ரெடியாகிவிட, மாதவன் காரை எடுத்தான்.
குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு வந்து மணலில் வீடு கட்டினார்கள்.
மாலதியும் மாதவனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
ரமண் சுமன் இருவரும் அவரவர் இஷ்டப்படி வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் அழகாக செய்தார்கள்.
...யார் வீடு அழகா இருக்குனு நம்ம அப்பா அம்மாவைக் கேக்கலாமா...பெரியவன் ரமண் சொல்ல, இருவரும் தம் பெற்றோரை அழைத்தனர்.
...ஹை..சூப்பரா இருக்கு ரெண்டு வீடும். மேலே ஸீலிங் போடலியா?...என்று மாலதி கேட்க...உனக்கு உள்ளே இருப்பது தெரியாதே. அதான்அப்படியே விட்ருக்கோம்...என்றான் ரமண்.
...இங்க வாங்க. இவங்க எவ்வளவு அழகா வீடு கட்டிருக்காங்க பாருங்க...என்று மாதவனைக் கூப்பிட்டாள்.
இருவரும் அவர்கள் கட்டிய வீட்டில் கிச்சன், ஹால், படுக்கை அறை எல்லாம் காண்பித்தார்கள்.
மாதவன் இரண்டு வீட்டையும் பார்த்து விட்டு சுமனிடம்...ரமண் வீட்டில் இரண்டு ரூம் இருக்கு. உன் வீட்டில் ஏன் ஒரு ரூம்தான் கட்டிருக்க?...
...நான் பெரியவனா ஆனப்பறமா நீங்களும் அம்மாவும் நம்ம தாத்தா பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே. அதனால் ஒரு ரூம் போறுமே...என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டது போல் உணர்ந்தார்கள்.
No comments:
Post a Comment