Saturday, 7 May 2016

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது. ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை. நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லி.....

 பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டுச் மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது. சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்.

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

தன சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்திருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என்னம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்.
2005 ம் ஆண்டு இதே எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

15ம் தேதி என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்!
 

Monday, 2 May 2016

திருத்தணி

திருத்தணி ஆலயம் செல்லும் நாம் இறைவனை வணங்கி வருவோம். ஆனால் அத்தலத்தில்  சிறப்பான பல பெருமைகள் உள்ளன. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு 365 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை ஒரு வருட நாட்களைக் குறிகின்றன.

சந்நிதி வாயிலின் தென்புறத்தில் 'பிரசன்ன காதர் ஈஸ்வரர்' என்ற சிவசந்நிதி  உள்ளது.தனக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை நீக்கி அருள் செய்த காரணத்தால் காதர் என்ற நவாப் இந்த லிங்கத்தை நிறுவியதோடு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் நவாப் வாத்திய மண்டபத்தையும் அமைத்துள்ளார்.இங்கு நாள்தோறும் பூஜை வேளைகளிலும்,உற்சவ காலங்களிலும் மகம்மதியர்கள் வாத்தியம் வாசிப்பார்கள். இந்து, முஸ்லீம் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.

வடக்கு பிரகாரத்தில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அரைக்கும் பெரிய கல் ஒன்று உள்ளது.இது தெய்வயானைக்கு இந்திரன் சீதனமாகக் கொடுத்ததாம். நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் இக்கல் தேயாமல் இருப்பது அதிசயமாக உள்ளது. இதில் அரைக்கும் சந்தனம் சுவாமிக்கு பூசப் பட்டு, பின் அடியார்களுக்கு  'பாதரேணு' என்ற அருட்பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.இது அனைத்து நோய்களையும்
தீர்க்கும். நோயுற்றோர் இப்பாதரேணு சந்தனத்தைப் பெற்று நாள்தோறும் மிளகு அளவு சாப்பிட வேண்டும்.

போருக்குப் பின் இங்கு சினம் தணிந்து எழுந்தருளி இருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கிடையாது. வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவம் இவ்வாலயத்தின் சிறப்பு. மகாசிவராத்திரி அன்று இரவில் முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

தணிகை முருகன் மூலவரின் மார்பில் சிறிது பள்ளமாக இருக்கும். தாரகாசுரன் திருமாலிடமிருந்து பறித்துக் கொண்ட சக்கரத்தை, அவனை வென்று முருகன் சிலகாலம் தம் மார்பில் அணிந்து கொண்டார். அந்த அடையாளமே அந்தப் பள்ளம். அதில் அணிவிக்கப்பெறும் சந்தனமே சர்வரோக நிவாரணியான பாதரேணு.

கிழக்குப் பிரகாரத்திலுள்ள ஐராவதம் இந்திரனால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஐராவதம் நீங்கியதால் இந்திரனின் செல்வ  வளம் குறைந்ததால், இந்திரன் வேண்டிக் கொண்டபடி அது இந்திரலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி நிற்கிறது.

நல்லாத்தூர் வீரமங்கள ஆஞ்சநேயர்



நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் அனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். வியாசராயர் தன சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே இந்த ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கி உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபாட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

 நான்கரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை,பூணூல் இவற்றோடு கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர்.
நான்கரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை,பூணூல் இவற்றோடு கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்றுபாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியான இவர் மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் ராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னி திகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.


இங்கு ராமநவமி, ஹனுமத் ஜெயந்திமிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக் கிழமை, சனிக்கிழமைகள் மிக விசே ஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666