Friday, 22 December 2017

அன்புள்ள மாமாவுக்கு அஞ்சலி..
'தாய்' மாமன் என்றும், 'அம்மா'ன் என்றும் என்னை ஈன்ற என்
அன்னையை நினைவூட்டும் அன்பு மாமா நீவிர்  வாழ்க!
அன்புக்கு மறுபெயர் நீங்கள்.
ஆதரவு தந்து அணைக்கும் உங்கள் அன்புக்கு அணையும், இணையும் ஏது!
இளகிய இதயம் கொண்ட தாங்கள்
ஈசன் வசம் பாசம் கொண்டீரோ?
உயிரான துணைவியை உத்தமமான பிள்ளைகளை
உடன் பிறந்தோரை உற்றாரை நட்பை
ஊதித் தள்ளிவிட்டு உற்சாகமாய்
எங்கே சென்றீர்கள் மாமா? நாங்கள் அனைவரும்
ஏக்கத்துடன் ஏங்கி அழுவது உங்களுக்கு தெரியவில்லையா?
ஐயப்பன் உங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு
ஒவ்வொரு நாளும் உங்களின்
ஓங்கி எழும் சரணம் பாடிக் கேட்க
ஆசை கொண்டாரோ?
காற்றில் கலந்தீரோ?
விண்ணில் மறைந்தீரோ?
நிறைந்த வாழ்த்துக்களை
தங்களிடம் என்றும் வேண்டி நிற்கும் இந்த சின்னவளின்
சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்
எம் மனங்களில் என்றும் விண் மீனாய்
விலகாத அன்பு மாமனாய் என்றும் வாழ்வீர்.
வாழ்க நீ அம்மான்!

இந்த நாள் இனிய நாள்...12.5.2017

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - டிரெட்ஸி.

 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் - கர்னல் கீல்.
ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.

 அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது - ரிரேஸ்.

சோகம் என்னும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம் - ஸ்டீலி.

 வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது. படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒவ்வொரு அடியாக - ஜோ கிரார்ட்.
வெற்றி என்னும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி - ட்ருமன் காபோட்.

வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல. வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது - ஸ்பார்கி ஆண்டர்சன்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் - தாமஸ் ஆல்வா எடிசன்.

 வெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைவீர்கள் - எரிக் தாமஸ்.

ஐரோப்பாவில் என் கிறிஸ்துமஸ் அனுபவம்...2013


Imageகிறிஸ்துமஸ்  கிறித்தவர்களின்  மிக  முக்கியமான  பெரிய  பண்டிகை.  அந்நாளில்  கேக்  செய்து,  புத்தாடை  அணிந்து,  காரோல்களைப்  பாடி  சர்ச்சுக்கு  சென்று  ஜீசஸை  வணங்குவர்.  இவ்வளவே  நான்  அறிந்தது.  இந்தியாவில்  கிறிஸ்மஸ்  இப்படித்தான்  கொண்டாடப்பட்டு  நான்  பார்த்திருக்கிறேன். 

 
ஆனாலும்  முழுக்க  கி
றிித்தவர்களையே  கொண்ட  ஐரோப்பிய,  அமெரிக்க  நாடுகளில்  இப்பண்டிகை  மிக  கோலாகலமாகக்  கொண்டாடப்படும்  என்று  கேள்விப்  பட்டதுண்டு.  இவ்வருடம்  ஜெர்மனியில்  ஸ்டுட்கார்ட்டில்  இருக்கும்    என்  மகன்  வீட்டில்  தற்சமயம்  இருக்கும் எங்களுக்கு  அதைக்  கண்டு  களிக்க  ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தது.


ஏசு  பிறந்தது  பெத்லகேம்  எனினும்  ஐரோப்பாவில்தான்  கிறிஸ்மஸ்  கொண்டாட்டங்கள்  ஆரம்பித்தனவாம்.  அதிலும்  கிறிஸ்மஸ்  மரம்,  கிறிஸ்துமஸ்   மார்கெட்,  அட்வென்ட்  காலண்டர்,  செயிண்ட்  நிகோலஸ்  தினம்   இவை  எல்லாம்  ஆரம்பிக்கப்பட்டது  முதன்  முதலாக  ஜெர்மனியில்தானாம்.  

இங்கு  டிசம்பர்  மாத  முதல்  தேதியிலிருந்தே  கொண்டாட்டங்கள்  ஆரம்பித்து  விடுகின்றன.  எல்லார்  வீட்டு  வாசல்  கதவுகளிலும்  கிறிஸ்துமசை   வரவேற்கும்  விதமாக  அதை  சம்பந்தப்படுத்திய  கிறிஸ்துமஸ்  தாத்தா,  ரெயிண்டீர்  வண்டிகள்,  பூக்கள்,  வண்ண  மணிகள்  ஆகியவை  தொங்கவிடப்  படுகின்றன.  சன்னலின்  வெளியே  வண்ண  விளக்குகள்,  ஏசுவின்  பிறப்பை  விளக்கும்  பொம்மைகள்  அழகாக   வைக்கப் படுகின்றன.

அட்வென்ட்  காலண்டர்  என்பது  24  நாட்கள்  கொண்டது. 24  சின்ன ஷூக்களைப்  போன்ற  பைகளை ,குழந்தைகளின்  அறையில்  மாட்டி  வைத்து  விடுவர்.    24  நாட்களுக்கும்  இதில்  பெற்றோர்  ஒரு  சஸ்பென்ஸ்  பரிசுப்பொருளை  வைத்து  விடுவர்.  பொருள்  பெரிதாக  இருந்தால்  வெளியில்  வைத்து  விடுவார்களாம்!  இந்த வருடம்  என்  பேத்தியின்  பரிசு  ஒரு   அழகிய மீன்தொட்டி!  குழந்தைகளுக்குதான்  இது  மிக  சுவாரசியமான விஷயம் .   காலை  கண்விழித்தவுடனேயே  அதைப்  பிரித்துப்  பார்ப்பதில்  அவர்களுக்கு  ஏக  சந்தோசம்.  
19ம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்டதாம்  இந்த  அட்வென்ட்  காலண்டர்.  அதற்கு  முன்பெல்லாம்  அட்வெண்டிஸ்ட்  டே  என்பதைக்  குறிக்க  வாசல்  கதவில்  சாக்பீஸால்  கோடு  வரைவராம்.    சிலர்  தினம்  ஒரு    மெழுகுவர்த்தி ஏற்றுவராம். 


1902ம்  ஆண்டு முதன்  முதலாக  அட்வெண்டிஸ்ட்  காலண்டர்கள்  தயாரிக்கப்பட்டு  செய்தித்  தாள்களுடன்  இலவச  இணைப்பாகக்  கொடுக்கப்பட்டன.  அதன்பின்பு  சிறிய  கதவுகளுடன்  கூடிய  காலண்டர்கள்  உள்ளே  சாக்லேட்டுகளுடன்  தயாரிக்கப்  பட்டன.  ஒவ்வொரு  நாளும்  ஒவ்வொரு  கதவைத்  திறந்து  சாக்கலேட்டுகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும்!  இப்பொழுது  அவற்றுக்குள்  சின்ன  கதைகள்,  பைபிள்  வாசகங்கள்,   இளைஞர்களுக்கான ரொமாண்டிக்  வாசகங்கள்   என்று  வித  விதமாக  இருக்கின்றன!


என்  மருமகள்  வெளிநாட்டுப்  பெண்  என்பதால்  இந்த  எல்லா  விஷயங்களும்  இங்கு  உண்டு!  இங்கு  ஏசு  வழிபாடும்  உண்டு!  சூரிய  பூஜையும்  உண்டு!  குழந்தைகளுக்கு,  என்  மகனுக்கு,  அவளுக்கு, எங்களுக்கு என்று  அவரவருக்கு  ஏற்ற  மாதிரி  வாங்கி  வைத்திருக்கிறாள்!  எங்களுக்கு  தினம்  ஒரு  சாக்லேட்!


டிசம்பர்   ஆறாம் தேதி  செயின்ட்  நிக்கோலஸ்  தினம். இது  ஜெர்மனியில்  மட்டுமே  ஆரம்பிக்கப்பட்டு  இன்று  உலக முழுதும்  பரவி  விட்டதாம். செயின்ட்  நிகோலஸ்  என்பவர்  மூன்றாம்  நூற்றாண்டில்  பாதிரியாராக  இருந்தவர்.  அவர்  சிறு  வயது  முதலே  ஏழைகளுக்கு  உதவும்  பொருட்டு  அவர்கள்  அறியாமல்  அவர்களின் காலணிக ளுக்குள்  பணத்தை  வைத்து  விடுவது  அவர்  வழக்கம்.  தான்  உதவி  செய்வது  அவர்களுக்கு  தெரியக்  கூடாது  என்ற  பெருந்தன்மையே  அதற்கு  காரணம். அவரே  சாண்டா க்ளாஸின்  முன்னோடி  எனப்படுகிறார்.அவர்  இறந்த  நாளான  டிசம்பர்  6ம்  தேதி  நிகோலஸ்  தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்  5ம்  தேதி  இரவே    தம்  காலணிகளை  சுத்தம்  செய்து  வாசலில்  வைத்து  விடுவாராம்.  அன்றிரவு    அருகில்  இருப்போர்  பரிசுப்  பொருள்களை  அதனுள்  வைத்து  விடுவர்.  என்  பேத்திகளின்  ஷூக்களிலும்  பல  சாக்லேட்கள்,  பொம்மைகள்,    ஸ்டிக்கர்கள்,  ஹேர்  பாண்டுகள்  என  பல பொருட்கள்  இருந்தன.  அந்த  சின்ன  மலர்களின்  முகத்தில்  மகிழ்ச்சியைப்  பார்க்கணுமே? அவற்றை  செயின்ட்  நிகோலசின் பரிசுகளாக  கருதுகின்றனர்.

ஐரோப்பாவின்  கிறிஸ்துமஸ்  மார்க்கெட்டுகள்  உலகப் புகழ்  பெற்றவை. பதின்மூன்றாம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்ட  இந்த  மார்க்கெட்டுகள்  இப்பொழுது  பல  நாடுகளிலும்  நடத்தப்  படுகின்றன.  இந்த  ஊரில்   நடக்கும்  கிறிஸ்துமஸ்   மார்க்கெட்  மிகப்  பழமையானதும், புகழ்  பெற்றதுமாகும்.   இங்கு  வித்யாசமான  கலைப்  பொருட்கள்,  மர   பொம்மைகள்,  அருகிலுள்ள கிராமங்களில்  உருவாக்கப்படும் கைவினைப்    பொருட்கள்,  பீங்கான்  சாமான்கள் , உணவுப்  பொருட்கள்,  பலவித  மதுவகைகள்,  சாக்லேட்கள்  விற்கும்  100க்கும்  மேற்பட்ட  கடைகள்  உள்ளன.  ஒவ்வொரு கடையின்  மேலும்  கிறிஸ்துமஸ்  பற்றிய  உருவபொம்மைகள்  வண்ண   விளக்குகளுடன் மின்னுகின்றன.   இங்கு  விற்கப்படும்  ஜிஞ்சர்  சாக்லேட்டுகள்  மிகவும்  ஸ்பெ ஷலானவையாம்!  நவம்பர்  கடைசியிலிருந்து   டிசம்பர்  20  வரை   மார்க்கெட்டுகள்  நடைபெறும்.  இச்சமயம்  இங்கு  விற்பனை  செய்பவர்களுக்கு  நல்ல  வருமானம்  கிடைக்குமாம்!
Image
கிறிஸ்துமஸின் மிக  முக்கிய  விஷயம்  கிருஸ்துமஸ்  மரம்.  இது  பைன்  மற்றும்  ஃ பர்   மரங்களின்  கிளைகளை  வெட்டி  உருவாக்கப்படுகிறது.     16ம்  நூற்றாண்டில்,  ஜெர்மனியில்  உருவானதாம். இது  உருவானதற்கு  பல  கதைகள்  கூறப்படுகிறது.  

முன்பெல்லாம்  வீட்டு  வாசல்களில்  கட்டப்பட்டிருந்த  (  நாம் பண்டிகை  நாட்களில்  மாவிலை  கட்டுவதுபோல்!)  கிறிஸ்துமஸ்  மரம்  தற்போது  வீட்டினுள்  அலங்கரிக்கப்படுவதற்கு   ஒரு  கதை!  

கிறிஸ்துமஸ்  தினத்திற்கு  முதல்  நாள்  ஒரு  வேட்டைக்காரர்   தம் குடும்பத்தோடு  குளிர்  காய்ந்து  கொண்டிருந்தபோது,  ஒரு  ஏழைச் சிறுவன்  வந்து  தங்க  இடம்  கேட்டான்.,  அவரின்  பிள்ளைகள்  தங்கள்  அறையை  விட்டுக்   கொடுக்க, மறுநாள்  அவர்கள்  எழுந்தபோது  வீடே  தேவதைகளின்  வரவால்  ஒளி   மயமாகத்  திகழ்ந்தது.  அந்தப்  பையன்  ஜீஸஸாக  மாறி  அருள்  செய்ததுடன்,  அவர்கள்  தோட்டத்திலிருந்த  ஃ பர்   மரக்கிளையை ஒடித்து   அவர்களிடம் கொடுக்க,  அது  முதல்  ஏசுவை  வரவேற்கும்  முகமாக  கிறிஸ்துமஸ்  மரம்  அனைவர்  வீடுகளிலும்  அலங்கரித்து  வைக்கப்பட்டது.

எங்கள்   வீட்டிலும்   கிறிஸ்துமஸ்  மரம்  என்  பேத்திகளின்   கைவண்ண அலங்காரங்களில்,  வண்ண  விளக்கொளியில்  ஜொலிக்கிறது.  என்  மருமகள்  எல்லாருக்கும்  பரிசுப்  பொருள்களைப்  பார்த்துப்  பார்த்து  வாங்கியிருக்கிறாள்!  கிறிஸ்துமஸ்  அன்று  முதல்  நாள்  அவற்றை  அதன்  கீழ்  வைத்து,  இரவு  அனைவரும்  எடுத்துக்   கொள்ள வேண்டுமாம் !  இப்பவே   வித விதமாக  கேக்,  குக்கீஸ்  என்று  செய்ய  ஆரம்பித்து  விட்டாள் !   தீபாவளியையும்,  பொங்கலையும்  கொண்டாடிய  நாங்கள்  இந்த  வருடம்  வித்யாசமாக  கிறிஸ்துமஸையும்   கொண்டாட  தயாராகி  விட்டோம்!  ஆமென்!

Friday, 15 December 2017

.மார்கழி நினைவுகள்...!!


மார்கழி  மாதம்  வந்தாச்சு…!

மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. .  மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எல்.  ஆர்.. ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், , திருப்பாவை,     திருவெம்பாவைப்  பாடல்களும் ,  காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை  விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத    ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  நிற்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃ பிளாட்டுகளில் வாசலும்  இல்லை: கோலமும்  இல்லை:  அதை    ரசிப்பவரும்  இல்லை.
என்   திருமணத்திற்கு முன்பு  நான்கு  மணிக்கெல்லாம்  என் அம்மா ‘எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு’  என்பார்.  கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும். கோலத்தை  போட்டு  முடித்து  குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று  பஜனையில்  பாடிவிட்டு,  சுடச்சுட  பொங்கலைப்  பெற்றுக்கொண்டு  வந்து  வீட்டில்  அதை  ருசித்து  சாப்பிடும்  அனுபவம் ….இன்றும்  மனம்  அந்த  நாளுக்காக  ஏங்குகிறது!   அறியாத  வயதில்  அன்று  செய்த  அந்தப்  புண்ணியம்தான்  இன்று  அன்பான  கணவரையும்,  அருமையான  குழந்தைகளையும்  கிடைக்கச்  செய்தது  போலும்! எட்டு  வயது முதல்  எந்தக்  கோலம்  பார்த்தாலும்  அதை  அப்படியே  மனதில்  வைத்து  மறுநாள்  வாசலில்  போடுவேன். விதவிதமாகக்  கோலம்  போடும்  என்  அம்மா  அச்சு  மாதிரி  சிறிதும்  வளையாமல்,  கோணல்  இல்லாமல்  புள்ளி  வைக்கும்  திறமையும்,  அளவெடுத்தாற்போல்  கோலம்  போடும்  அழகும்    என்னிடம்  கொஞ்சம்  குறைவுதான். 
ஆனாலும்  புள்ளிக்கோலம்,  வளைவுக்  கோலம்,  நேர்கோட்டுக்  கோலம்  என்று  எனக்குத்  தெரிந்த  கோலங்களைப்   போட்ட நோட்டுகள்  ஏழெட்டு  இன்னமும்  என்னிடம்  உள்ளன. அதிர்ஷ்ட  வசமாக  நாங்கள்  குடியிருந்த  வீட்டு  வாசல்கள்  கோலம்  போட   ஏற்றதாக  இருந்ததால்,  நானும்,  என்  மகளும்  சேர்ந்து  அமர்க்களமாகக்  கோலம்  போடுவோம். என்  கணவருக்கு,  பிள்ளைகளுக்கு  ரொம்ப  பிடித்த  கோலங்கள்  கூட  உண்டு!  தினமும்  போட   வேண்டிய  கோலங்களை  என்  பிள்ளைகள்தான்  தேர்ந்தெடுத்துக்  கொடுப்பார்கள்!   தினமலர்  பத்திரிகையின்  பரிசைக்  கூட  பெற்றுள்ளோம். கோலப்  போட்டிகளிலும்  கலந்து  கொண்டு  பரிசுகளைப்  பெற்றதுண்டு.  இன்றும்  எங்கள்    ஃ பிளாட்டி ல்  சின்ன  வாசல்தான்  என்றாலும்  மார்கழி  முழுவதும்  புள்ளிக்  கோலம்தான்  போடுவேன். இது  போன்ற  இனிய நினைவுகளும்,  அனுபவங்களும்    அக்காலப்  பெண்கள்  பலருக்கும்  இருக்கும்  என  நினைக்கிறேன்.
கோலம்  போடுவது  ஒரு  கலை மட்டும்  அல்ல.  நம்  உடலுக்கும்,  .கைகளுக்கும்,  இடுப்புக்கும்,  கண்ணுக்கும்,  மூளைக்கும் சிறந்த  உடற்பயிற்சியும்  கூட. மார்கழி  மாத  விடிகாலைகளில்  காற்றில்  ஓசோன் நிறைந்திருப்பதை  அந்நாளிலேயே  அறிந்த  நம்  முன்னோர்  இப்படி  கோலம்,  பஜனை,  கோவிலுக்கு  செல்வது  என்ற  பழக்கங்களை  உண்டாக்கியுள்ளனர். கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள்.  கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும்.
கோலம்  உருவானதற்கான  சில  சான்றுகளைப்  பார்ப்போம். வேத  காலத்தில்  அங்குரார்ப்பணத்தின்போது  முளைப்பாலிகை  பால்,  பால்குடம் ,  விளக்கு  இவற்றை  வைக்க  தனித்தனி    கட்டங்கள்  வரைந்து  அரிசிமாவு,  மஞ்சள்பொடி  நிரப்புவர்.அதுவே  காலப்  போக்கில்  கட்டக் கோலங்களாகி  விட்டன.அக்கினி  வளர்க்க  ஒன்பது  குழிகள்  தோண்டிக்  குண்டம்  அமைப்பர்.அவற்றை  இணைக்க  கோடு  இட்டதே  புள்ளிக்  கோலமானது. தமிழ்  மக்கள்  பழங்காலத்தில்  மணல்  ஓவியம்  வரைந்ததாக  பழைய  நூல்களில்  காணப்படுகிறது.வெண்மையும்,  
 சிவப்பும்  இணைந்த  கோலம்  சிவா-சக்தி  ஐக்கியமாகக்  கூறப்படுகிறது.
 Image 
 
வடநாடுகளில்  போடப்படும்  ரங்கோலி பற்றிய   சுவையான கதை  இது.  ஹோலி  என்ற   முனிவரின் மனைவி  அவள்  கணவர்  இறந்ததால்  அவர்  உருவத்தை  பல  வண்ணப்  பொடிகளால்  வரைந்து  அதன்  மீது  48  நாட்கள்  படுத்து  தன்   உயிரை  விடுகிறாள்.அவள்  நினைவாக  பல  வண்ணங்களில்  போட்ட  கோலம்  ரங்கோலி  ஆயிற்று.
கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.  நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  நல்லது. வீடு  வளம் பெறும்..வாசலில் சூர்யோதயத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும். விசே ஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  விசே ஷம்.  கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க  இரவானாலும்  கோலமிட  வேண்டும்.
 
அமாவாசை  மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.
இன்று  ஸ்டிக்கர்  கோலங்களே  பல  வீடுகளுக்கு  முன்  காட்சியளிக்கின்றன. தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசே ஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

Saturday, 13 May 2017

அன்புள்ள அம்மாவுக்கு ஆயிரம் வணக்கங்கள்!


14.5.2017 அன்று அன்னையர் தினத்திற்கும் , 15.5.2017 என் தாயின் நினைவு தினத்திற்குமான நினைவு அஞ்சலி!


அன்புள்ள அம்மாவுக்கு ஆயிரம் வணக்கங்கள்!

தொப்புள் கொடியோடு நம்
உறவுக் கொடியையும்
உருவாக்கிய என் தாயே!

உன் கருவறையில்
கனமாய் நான் இருந்தும்
சுமையாய் எண்ணாமல்
சுகமாய் அனுபவித்தவளே!

நான் வெளியுலகை
தரிசித்த போது
நீ ஆனந்தத்தின்
உச்சம் அடைந்தாய்!!

என் அழுகை சத்தம் உன்
காதுகளில் கேட்கும்முன்னே
அயராது எழுந்தோடி வந்து
அணைத்து என்னை உச்சி முகர்ந்து
அமுதான பாலூட்டிய உன்
அன்பை இனி எப்போது உணர்வேன்!

அன்பு எனும் உயிர் தந்து
உதிரம் எனும் பாலில்
தேன் எனும் பாசம் சேர்த்து
பிள்ளை என்ற உறவைக்
கொடுத்த அம்மா!

சின்ன நோய் வந்தாலும்
சில நொடி கூட கண் மூடாது
என்னைக் கைகளில் ஏந்தித்
தாலாட்டி சீராட்டி பாராட்டிய
உனக்கு நிகர் வேறு யார்?

உன் நகலாய் என்னை மாற்றி
என் நிழலாய் என்னுள் இருப்பவள்!
தோல்விகளில் தளராமல் தைரியம் தந்து
வெற்றிகளைப் பெற வழிகாட்டியவள்!
 எனக்கு ஊக்கமூட்டி வாழ்வில்
உயர வைத்த உத்தம தெய்வம்!

என் நல்ல தோழி நீ; உயர்ந்த உறவு நீ!
ஊக்கம் ஊட்டி யாவும் கற்பித்த ஆசிரியை நீ!
பலருடனும் பழகும் விதத்தை
பாங்காக எடுத்துக் கூறியவள் நீ!
எளிமையாய் வாழவும்
எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளவும்
இதமாகச் சொல்லிக் கொடுத்தவள் நீ!

அன்பு, அக்கறை,அரவணைப்பு,
பாசம், நேசம், தியாகம்
அனைத்தும் கொண்ட
என் தெய்வமே!
அன்புத் தாயே!
என்றும் என்னுடன் இருந்து
என்னைக் காப்பாயாக!!


Friday, 12 May 2017

இந்த நாள் இனிய நாள்...3.5.2017

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.👍

😀ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.👩💻 

😃ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்.💪

😀ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.✌

😃என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்.🖖

😃செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.👌

😃செய்வதை நம்பிக்கையோடு செய்யுங்கள்.👍

இந்த நாள் இனிய நாள்...2.5.2017

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.🐘

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.🦅

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.💪

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை.⏰

இந்த நாள் இனிய நாள்...1.5.2017



நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.🤘

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.👤

என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை 
இப்படிக்கு.....தோல்வி.👍