Saturday 6 July 2019

எங்கள் பூஜையறை



      ....கடவுளை நம்பினோர் கைவிடப்படார்....
இதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. இதுதான் என்னைப் பல இன்னல்களிலிருந்து காப்பாற்றி வருகிறது என்பதை பலமுறை அனுபவித்ததுண்டு.


என் அம்மாவுக்கு பக்தி மிக அதிகம்.நிறைய சுவாமி படங்கள் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் உடன் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு விடுவார்! எல்லா பூஜைகளும் மடியாக இருந்து முறைப்படி செய்வார். பத்து வயதிலேயே எனக்கு பல ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்தார்.


திருமணமானதும் எனக்கு அதுவே தொடர்ந்தது. என் மாமியாரும் மிக ஆசாரம். ரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், அம்பிகை என்று பல படங்கள் இருந்தது. தினமும் அன்ன நைவேத்யம் உண்டு.

என் கணவர் தவறாமல் இரு வேளையும் சந்தியாவந்தனம் செய்பவர். வெளிநாடுகளுக்கு சென்றால் கூட செய்யத் தவற மாட்டார்.

என் கணவர் வேலையில் இருந்தபோது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமான வீடு. வங்கியில் கொடுக்கப்படும் quarters  பெரிதாக  இருக்கும்.  சமையலறையை ஒட்டியுள்ள அறையில் வரிசையாக சட்டம் அடித்து படங்களை மாட்டுவோம்.

ஒவ்வொரு மாறுதலின் போதும் அந்தப் படங்களை கண்ணாடி உடையாமல் pack செய்வது என் கணவருக்கு படு challenge ஆன வேலை! பல இடங்கள் மாறியதில் படங்கள் வீணாகிக் கிழிந்து விட்டது.
அதன்பின் முக்கிய படங்களுடன் விக்ரகங்கள் வாங்கிக் கொண்டேன். அவை இடம் அடைக்காது.

மும்பையில் பெரிய அறை இல்லாததால் சிறு அலமாரியில்தான் வைக்க முடிந்தது. இப்பொழுது திருச்சியில் சுவாமிக்கு தனி அறை இருப்பதால் மிக வசதியாக பூஜை செய்ய முடிகிறது.

அத்தனை தெய்வங்களும் தங்க முலாம் பூசி வைத்துள்ளதால் எப்பவும் ஜொலிக்கும் அழகுடன் அணி வகுத்து நிற்பர் எங்கள் வீட்டு பூஜை அறையில்! தி

என் கணவர் பஞ்சாயதன பூஜை செய்வார்.
மஹாகணபதி ரூபமான சோணபத்ரம், அம்பிகையின் ஸ்வர்ணரேகா,விஷ்ணுவின் சாளக்ராமம், சூரியனின் ரூப ஸ்படிகம், சிவன் பாணலிங்கம் இவற்றுடன் விஷ்ணுபாதம்  இவற்றிற்கு தினமும் அபிஷேகம் உண்டு. பாலபிஷேகம் நானும் செய்வேன்.

என் கணவர் தினமும் ஸ்ரீருத்ரம், சமகம், பூஸுக்தம், ஸ்ரீஸுக்தம், துர்காஸுக்தம் சொல்லி அபிஷேகம்செய்து திரிசதி அர்ச்சனை செய்வார். பின் நிவேதனம். காலை 8 மணிக்கு ஆரம்பித்தால் பூஜை முடிய  11 மணி ஆகும்.

வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம், சனிக்கிழமை விஷ்ணு சஹஸ்ரநாமம், ஞாயிற்றுக் கிழமை சூரிய நமஸ்காரம் இவையும் உண்டு.
எங்கள் குலதெய்வம் ஸ்ரீமதுரவீர ஸ்வாமி. காஞ்சி மகாசுவாமிகள் சொன்னபடி இவர் உக்ரமான மதுரைவீரன் அல்ல..சாந்தமான மதுரவீரன் என்று அறிந்து ஆகம முறைப்படி பூஜைகள் நடை
பெறுகிறது. சமீபகாலமாக அவரது படமும் வீடுகளில் வைத்து வணங்குகிறோம்.

முடி இறக்குதல் போன்ற பிரார்த்தனைகளுக்கு சுவாமிமலை சுவாமிநாதனும், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதனும் உடனிருந்து அருள்தரும் குலதெய்வங்கள்!

ஆடிப்பிறப்பில் ஆரம்பித்து சித்திரை வருடப்பிறப்பு வரை அந்நாளைய முறைப்படி சமையல், பூஜை இன்றும் தொடர்கிறது!
நவராத்திரியில் பெரிய அளவில் கொலு வைப்பதுடன் தினசரி பூஜை செய்வேன். லலிதா, லக்ஷ்மி,துர்கா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம் இவற்றோடு காமாக்ஷி, மீனாக்ஷி, பாலா, அன்னபூரணி என்று எல்லா அம்மன்களின் அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்வேன்!தினமும் பாயசம், சுண்டல் நிவேதனம் உண்டு.

காஞ்சி மகானும், சீரடி, சத்யசாயி பாபாவும் எங்கள் குரு🙏அவர்கள் அருளால் என் வாழ்வில் நடந்த  சில அதிசய நிகழ்வுகளும் உண்டு

விடியற்காலை விளக்கேற்றுவது சுபிட்சம் தரும் என்பதால் காலை எழுந்தவுடன் விளக்கேற்றி சின்னக்
கண்ணனுக்கு பால் நிவேதித்த பின்பே காஃபி! மா

நேரமும் தினமும் வாசலில் விளக்கு
ஏற்றுவேன்.
எனக்கு விதவிதமாகக் கோலம் போடப்பிடிக்கும் என்பதால் சுவாமி அலமாரியில் ஒரு தட்டு அதற்காகவே பொருத்திக் கொண்டேன். கோலத் தட்டுகளை வாங்குவதுடன் நானே செய்து வைத்துள்ளேன்.

சகல தேவதேவியரும் அருட்காட்சி தருவர் என் சமையலறையில்!

ஹாலில் 32 கணபதி ரூபங்களின் போஸ்டரை வருபவர் அனைவரும் வணங்கிச் செல்வர்!

என் உள்ளம்  கவர் கள்வன் கண்ணனின் நின்ற கோலமும் ராதாகிருஷ்ண தோற்றமும் எங்கள் ஹாலுக்கு extra அழகைக் கொடுப்பவை! மொத்தத்தில் எங்கள் வீட்டில் திரும்பிய இடமெல்லாம் தெய்வங்களின் காட்சி!

நாங்கள் வெளியூர் செல்லும்போதெல்லாம் எங்களுக்கு கையசைத்து விடை கொடுத்து வழியனுப்புபவர் என் குரு சாய்ராம்!

மனிதர்களிடம் மரியாதையுடன் பேசும் நம்மால் இறைவனிடம் மட்டுமே ஒருமையில் பேச முடியும். 'ஏண்டா கண்ணா..எனக்கு இந்த கஷ்டம்'...
'முருகா..உன்னை நம்பினேனே..என்னை இப்படி கைவிட்டுட்டயேடா'
'அம்மா தாயே பரமேஸ்வரி..நீதாண்டியம்மா என்னைக் காப்பாத்தணும்' என்றெல்லாம் உரிமையுடன் பேசமுடியும்.

எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும்  நிறைவான வாழ்க்கையைக் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி கூறுவதே நாம் செய்யும் ஆராதனைகள். எல்லாம் அவன் செயல் என்றிருந்தாலே அவன் நம் தீவினை போக்கி நல்லன நடக்க அருள்புரிவான்🙏

No comments:

Post a Comment