Monday 8 July 2019

புத்தியோகம்



புத்தியோகம்
..மத்யமரில் இந்த வார டாபிக் என்ன?..என்றார் என் கணவர்.
..புத்தி யோகம்.அதைப் பத்தி என்ன எழுதற்துனு புரியல..என்றேன்.
..சுய புத்தியால எப்படி யோகம்..அதாவது பேர் புகழ் வந்துதுனுதான எழுதணும்?..
..ஆமாம். கரெக்டா சொல்லிட்டேள்!நான் என்ன வேலைக்கு போறேனா, பெரிய பதவில இருக்கேனா.
என்னனு எழுதற்து?..
..இப்ப நீ எழுதற்தல்லாம் உன் அறிவை வச்சுதான எழுதற? இதை எங்காவது கத்துண்டியா? ட்ரெய்னிங் போனியா? உன்னுடைய சொந்த திறமைதான? அதுதான் புத்தி யோகம். உனக்கு இருக்கும் திறமைகள்தான் யோகம்...
...அப்டீங்கறேள். என்னைப் பத்தி நானே..எப்பவும் மொபைலும் கையுமா இருக்கயேனு கோச்சுக்காம என்னை எழுதச் சொல்ற நீங்க எனக்கு கிடைச்சதும் யோகம்தான்! எழுதிப் பார்க்கறேன்...
அனுமனுக்கு பலத்தை யாராவது எடுத்துச் சொன்னால்தான் நினைவு வருமாம்!  அதுமாதிரி நானும் என் திறமைகளை வரிசைப் படுத்துகிறேன்!
நான் படித்தது தமிழ் மீடியம். 11ம் வகுப்பில் (அப்பொழுது 11ம் வகுப்பிற்குப் பின் P.U.C. அதன் பின்பே பட்டப் படிப்பு.) பாதிவரை சென்னையில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். காலாண்டுத் தேர்வு முடிந்ததும் வங்கியில் பணிபுரிந்த என் தந்தைக்கு ஈரோடுக்கு பதவி உயர்வுடன் மாற்றலாகியது.
என் பள்ளியில் நான் முதல் ரேங்க் மாணவி. S.S.L.C.யில் நான் நிறைய மதிப்பெண்கள் பெற்று ஸ்டேட் ரேங்க் வருவேன் என்று எதிர்பார்த்த என் பள்ளி தலைமை ஆசிரியையும், வகுப்பு ஆசிரியையும் என்னைத் தொடர்ந்து இந்தப் பள்ளியிலேயே படிக்கும்படிக் கூறினர்.
எனக்கு கீழ் 3 தம்பிகள். என் அம்மா எங்களுடன் தனியே இருக்க விரும்பாததால் அப்பா ஈரோடில் இருந்த நண்பர்களிடம் விசாரித்தார். அங்கிருந்த கலைமகள் கல்வி நிலையம் மிகச் சிறந்த பள்ளி என்று அங்கு கேட்டதில், தலைமை ஆசிரியை 'பள்ளி இறுதித் தேர்வில் எப்பொழுதும் நூறு சத வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கும் பள்ளியில் இடையில் மாணவிகளை சேர்த்துக் கொள்வதில்லை. எல்லா பாடங்களிலும் டெஸ்ட் வைப்போம். தேறினால் சேர்த்துக் கொள்கிறேன்' என்றார்.
அந்த டெஸ்டில் அதிகபட்ச மார்க் வாங்கியதால் எனக்கு அங்கு அட்மிஷன் கிடைத்தது. இறுதித் தேர்வில் 78% மதிப்பெண் பெற்றேன். அவ்வருடம்  எங்கள் பள்ளி  மாணவி பெண்களில் முதல் மார்க் (State1st.)பெற்றாள்.
எனக்கு மேலே கல்லூரி செல்ல மிகவும் ஆசை. என் பெற்றோர் விரும்பாததால் அத்துடன் என் படிப்பிற்கு முற்றுப்புள்ளி!
சென்னையில் 10 வருடங்கள் கச்சேரி செய்யும் அளவிற்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். ஈரோடு வந்தபின் சரியான  ஆசிரியர் கிடைக்காததால் அதுவும் நின்றுவிட்டது!
Drawing வரைவது எனக்கு மிகவும் பிடித்த கைவந்த கலை. அஜந்தா டிராயிங் ஸ்கூலில் சேர்ந்து ஓவியக் கலையை மேலும் மெருகேற்றிக் கொள்ள ஆசைப் பட்டேன். ஈரோடில் எனக்கு exam centre. பரீட்சை வைத்து தேறியதும் சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். என் துரதிர்ஷ்டம் எனக்கு hall ticket வரவில்லை. Phone பண்ணிக் கேட்டதில் அனுப்பி விட்டதாக சொன்னார்கள். முதல்நாள் வரை எதிர்பார்த்து கிடைத்தது ஏமாற்றமே!
18 வயதில் திருமணம். திருச்சி வாசம். பாட்டு தெரிந்த பெண்ணைத் தேடித் திருமணம் புரிந்து கொண்ட என் கணவர் உதவியுடன் சங்கீதத்தைத் தொடர எண்ணினேன்.
அடுத்த ஆறு மாதத்தில் வங்கியில் பதவி உயர்வு..கண்ணன் பிறந்த ஊர் வடமதுரை என்று மட்டுமே தெரிந்த மதுராவுக்கு மாற்றல்! என் பாட்டு ஆசைக்கு மறுபடியும் பூட்டு!
மதுராவில் நாங்கள் இருந்த இடத்தில் தமிழர் யாரும் இல்லை. தமிழ் இதழ்களும் கிடைக்காது.  புத்தகங்கள்  படிக்காமல் பைத்தியம் பிடித்தது போல இருக்கும்.ஊருக்கு வரும்போதெல்லாம் நாவல்கள், தமிழ் வார மாத இதழ்களை என் அம்மாவிடமிருந்து எடுத்துச் செல்வேன்.
சாதாரண சமையல் மட்டுமே செய்யத் தெரிந்த நான், நேரம் கிடைத்த போதெல்லாம் சமையல் புத்தக உதவியுடன் பலவித சமையல்களும் செய்து என்னவரின் பாராட்டும் பெற்றேன்!
ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல். விகடன்,குமுதம், கல்கி மற்றும் மாத இதழ்கள் வாங்கிப் படிப்பேன். அவற்றில் சிறு துணுக்குகள் எழுதினேன். பிரசுரமானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரை ஒன்று முதன்
முதலாக மங்கையர் மலரில் பிரசுரமாக என் எழுத்தின்மேல் நம்பிக்கை வந்தது.
மும்பையில் இருந்தபோது அஷ்டவிநாயகர் ஆலயம் உட்பட அங்கிருந்த பல ஆலயங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் ஞான ஆலயம் இதழில் தொடர்ந்து பிரசுரமாகியது. சக்திவிகடன், பக்தி, பெண்மணி,குமுதம் சிநேகிதி,
அவள்விகடன், தீபம், ஹிந்து தமிழ் உள்ளிட்ட பல இதழ்களிலும் என் எழுத்துகள் வெளியாகிறது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக Hindu Metroplusல் பிரசுரமான என் ப்ளாக் பற்றிய பதிவு.
பட்டப்படிப்பு படிக்காத நான் பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து என் அறிவைக் கூட்டிக் கொண்டேன்.
என் குழந்தைகள் ஹிந்தி படித்த
போது நானும் கூடப்படித்து ஹிந்தியில் பேச எழுதக் கற்றேன்.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக Hindu Metroplusல் பிரசுரமான என் ப்ளாக் பற்றிய பதிவு.
The actual Webpage can also be viewed in the following links:
I blog, therefore I am - Page -1
I blog, therefore I am - Page -2
இன்று பல விஷயங்களைப் பற்றியும் என்னால் எழுதமுடிவது என் #புத்தியோகம்!
சங்கீதத்தை மேலும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நானே கேஸட்களை வாங்கிக் கற்றுக் கொண்டு (இப்பொழுது youtube) கச்சேரிகள் செய்யாவிட்டாலும் சுருதி லய சுத்தமாகப் பாடுவது #புத்தியோகம்!
தையல் கற்றுக் கொண்டதுடன் விட்டுவிடாமல், எனக்குத் தேவையானவற்றை நானே டிசைன் செய்து இன்றுவரை தைத்துப் போட்டுக் கொள்வது #புத்தியோகம்!
என் ஓவியத்திறமையினாலேயே நான் விதவிதமாகக் கோலம் போட முடிகிறது. புள்ளி,கோடு கோலங்கள் மட்டும் போட்டுக் கொண்டிருந்த
நான் இவ்வருட மார்கழியில் கண்ணனின் பல உருவங்களை கோலமாகப் போட்டது#புத்தியோகம்!
பாரம்பரிய சமையலுடன் வித்யாசமான வெளிமாநில சமையல்களையும், புதிய செய்முறைகளையும் செய்து, அவற்றின் செய்முறைகள் பல புத்தகங்களிலும் வெளியாகி எனக்கு பரிசுகளையும் பெற்றுத் தந்தது. 25 பேருக்கு தனியாக சமைக்கும் திறமை இன்று எனக்கு இருப்பது #புத்தியோகம்!

No comments:

Post a Comment