ஆலயங்கள் மூடியதும் இறைவனை தரிசிக்க முடியாததும் என் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி யோசித்தபோது எனக்கு தோன்றியதை எழுதினேன்.
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை🙏🏼
நாரதர் வைகுண்டம் வருகிறார். நாராயணனைப் பணிந்து வணங்குகிறார்.
..நாராயண..நாராயண..
..வா நாரதா. நலமா?
..தங்கள் அருளால் நலம் தேவா.
..உன் முகம் வாடியிருப்பதன் காரணம் என்னவோ?
..என்ன சொல்வது ப்ரபோ. உங்களுக்கு தெரியாததா?பூலோகம் இன்றிருக்கும் நிலைமை அறியாதவரா தாங்கள்?
ஏன் இந்தக் கஷ்டம் ஐயனே?
..பூவுலகில் அதர்மம் அதிகமாகும்போது நான் அவர்களைத் தடுத்தாட் கொண்டு அருள் செய்வது நீ அறிந்ததுதானே?அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன்.
..அப்படியென்றால் கலியுகம் முடியப் போகிறதா பரந்தாமா?
பகவான் சற்று பெரிதாக சிரித்தார்!
..என்ன கேள்வி கேட்கிறாய் நாரதா.அதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உள்ளன.
..முன்பெல்லாம் அரக்கர்களை உருவாக்கி நல்லவர்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது ஏதோ கிருமியாமே? அப்படியென்றால்..?
..இப்பொழுது பிரம்மன் படைத்த மனிதர்களே அரக்க குணத்துடன் கடவுள் பக்தியின்றி ஆன்மிகத்தில் நம்பிக்கையின்றி மனம் போனவாறு வாழ்கிறார்
களே..அவர்களை நல்வழிப்
படுத்தவே இந்தக் கிருமிகளை உருவாக்கினேன்.
..அது சரி. ஆனால் ஆலயங்கள் மூடப்பட்டு நீங்களும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டீர்களே? மானுடர்கள் தம் கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள தங்களை நாடி ஆலயங்களுக்குதானே வருவார்கள்?
..உண்மை. ஆனால் உலக நலனை வேண்டி வருபவர்களை விட தானும் தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டி மிகப் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்ய வருபவர்களே அதிகமாக இருப்பர். என் சிலைகளையே கடத்தி விற்று சம்பாதிப்பவர்கள் இதில் எத்தனை ஊழல் செய்வார்களோ? உண்மையான பக்தியுடன் என்னை நாடி வருபவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். அதனால்தான் நான் ஒதுங்கி விட்டேன். நிஜமான பக்தி உள்ளோர் வேறு வழியின்றி வீட்டிலேயே என்னை வழிபடுவார்களே?
..எனக்கு இது சரியாகப் படவில்லையே சுவாமி.உங்கள் அருகாமை தேவையானபோது நீங்கள் ஒதுங்கிவிட்டதாக பேசுவார்களே?
..தவறு நாரதா. நான் இவ்வுலகம் முழுதும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறேன். நான் உங்களையெல்லாம் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளேன். என் குழந்தைகளை நான் கஷ்டப்பட விடுவேனா? என்னை முழுமையாக நம்புபவர்கள் என்றும் பக்தி வழியிலிருந்து விலக மாட்டார்கள். உலகில் நாத்திகம் அதிகமாகும்போது என்னை நிலைநாட்டிக் கொண்டு 'என்னை பக்தியுடன் பணிபவர்களை நான் கைவிட மாட்டேன்' என்பதை இவ்வுலகுக்கு உணர்த்தவே இந்த லீலை.
..இது இன்னும் எத்தனை நாளைக்கு இறைவா?
..கவலைப்படாதே. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் அதனை வெல்லும்.
"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்" என்று நான் கீதையில் உரைத்ததை மறந்து விட்டாயா நாரதா? உலகம் என்னை அறியவே இந்த திருவிளையாடல். கவலைப் படாதே.விரைவில் உலகம் பூராவும் என் நாமம் ஒலிக்கும். மக்களின் இடர் நீங்கி நன்மை உண்டாகும்.
..உமக்கு எல்லாமே விளையாட்டுதான். நான் சென்று வருகிறேன் ப்ரபோ.
நாராயண..நாராயண..
No comments:
Post a Comment