Saturday, 4 April 2020

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை


ஆலயங்கள் மூடியதும் இறைவனை தரிசிக்க முடியாததும் என் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி யோசித்தபோது எனக்கு தோன்றியதை எழுதினேன்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை🙏🏼

நாரதர் வைகுண்டம் வருகிறார். நாராயணனைப் பணிந்து வணங்குகிறார்.

..நாராயண..நாராயண..

..வா நாரதா. நலமா?

..தங்கள் அருளால் நலம் தேவா.

..உன் முகம் வாடியிருப்பதன் காரணம் என்னவோ?

..என்ன சொல்வது ப்ரபோ. உங்களுக்கு தெரியாததா?பூலோகம் இன்றிருக்கும் நிலைமை அறியாதவரா தாங்கள்?
ஏன் இந்தக் கஷ்டம் ஐயனே?

..பூவுலகில் அதர்மம் அதிகமாகும்போது நான் அவர்களைத் தடுத்தாட் கொண்டு அருள் செய்வது நீ அறிந்ததுதானே?அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன்.

..அப்படியென்றால் கலியுகம் முடியப் போகிறதா பரந்தாமா?

பகவான் சற்று பெரிதாக சிரித்தார்!

..என்ன கேள்வி கேட்கிறாய் நாரதா.அதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உள்ளன.

..முன்பெல்லாம் அரக்கர்களை உருவாக்கி நல்லவர்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது ஏதோ கிருமியாமே? அப்படியென்றால்..?

..இப்பொழுது பிரம்மன் படைத்த மனிதர்களே அரக்க குணத்துடன் கடவுள் பக்தியின்றி ஆன்மிகத்தில் நம்பிக்கையின்றி மனம் போனவாறு வாழ்கிறார்
களே..அவர்களை நல்வழிப்
படுத்தவே இந்தக் கிருமிகளை உருவாக்கினேன்.

..அது சரி. ஆனால் ஆலயங்கள் மூடப்பட்டு நீங்களும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டீர்களே? மானுடர்கள்  தம் கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள தங்களை நாடி ஆலயங்களுக்குதானே வருவார்கள்?

..உண்மை. ஆனால் உலக நலனை வேண்டி வருபவர்களை விட  தானும் தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டி மிகப் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்ய வருபவர்களே அதிகமாக இருப்பர். என் சிலைகளையே கடத்தி விற்று சம்பாதிப்பவர்கள் இதில் எத்தனை ஊழல் செய்வார்களோ? உண்மையான பக்தியுடன் என்னை நாடி வருபவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். அதனால்தான் நான் ஒதுங்கி விட்டேன். நிஜமான பக்தி உள்ளோர் வேறு வழியின்றி வீட்டிலேயே என்னை வழிபடுவார்களே?

..எனக்கு இது சரியாகப் படவில்லையே சுவாமி.உங்கள் அருகாமை தேவையானபோது நீங்கள் ஒதுங்கிவிட்டதாக பேசுவார்களே?

..தவறு நாரதா. நான் இவ்வுலகம் முழுதும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறேன். நான் உங்களையெல்லாம் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளேன். என் குழந்தைகளை நான் கஷ்டப்பட விடுவேனா? என்னை முழுமையாக நம்புபவர்கள் என்றும் பக்தி வழியிலிருந்து விலக மாட்டார்கள். உலகில் நாத்திகம் அதிகமாகும்போது என்னை நிலைநாட்டிக் கொண்டு 'என்னை பக்தியுடன் பணிபவர்களை நான் கைவிட மாட்டேன்' என்பதை இவ்வுலகுக்கு உணர்த்தவே இந்த லீலை.

..இது இன்னும் எத்தனை நாளைக்கு  இறைவா?

..கவலைப்படாதே. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் அதனை வெல்லும்.
"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்" என்று நான் கீதையில் உரைத்ததை மறந்து விட்டாயா நாரதா? உலகம் என்னை அறியவே  இந்த திருவிளையாடல். கவலைப் படாதே.விரைவில் உலகம் பூராவும் என் நாமம் ஒலிக்கும். மக்களின் இடர் நீங்கி நன்மை உண்டாகும்.

..உமக்கு எல்லாமே விளையாட்டுதான். நான் சென்று வருகிறேன் ப்ரபோ.
நாராயண..நாராயண..

என்வாழ்வின்பொன்னானதருணங்கள்


கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்  பொன்னானவைதான் என்பது என் எண்ணம்.

அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பொன்னானதுதானே!

தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கமான தருணம்!

பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த தருணங்கள் பொன்னானதே!

மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான தருணங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை!

இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் தங்கத் தருணங்கள்!

என் மகள் மருத்துவரானதும், கடைக்குட்டி மகன் IITயில் M.Tech படித்து சிங்கப்பூரில் வேலைக்கு சென்றதும் 'என் தங்கமே' என்று அவர்களைப் பாராட்டிப் பரவசமடைந்த  ஹால்மார்க் தங்கத் தருணங்கள்!

மாற்றுக் குறையாத தங்கம் போன்ற மருமகள்களும், இன்னொரு பிள்ளையாக மாப்பிள்ளையும், நவரத்தினங்களாக பேரன் பேத்திகளும் கிடைத்த நேரங்கள் ஒரு நல்ல சிறப்பான வாழ்க்கை கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறிய  தங்கத் தருணங்கள்!

புத்தகங்களில் மட்டுமே படித்தறிந்து அவற்றின் அழகில் சொக்கிப்போன பாரிஸையும், ஸ்விஸ்ஸையும் பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்ட எனக்கு அவை மட்டுமல்லாமல் கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம், பாலியின் இந்து ஆலயங்கள், பாங்காக்கின் டைகர் டெம்பிள்,ரோமின் கொலோசியம், வாடிகனின் புகழ் பெற்ற சர்ச், லண்டன்  பக்கிங்காம் அரண்மனை என்று பல நாடுகளையும் கண்டு மகிழக் கிடைத்த  வாய்ப்புகள் தகதகக்கும் தங்க நினைவுகள்!

பாரத நாட்டின் பல ஆலயங்களை தரிசித்திருந்தாலும் சமீபத்தில் சென்று தரிசித்த  சார்தாம் யாத்திரையில் கேதார்நாத் ஈசனை தொட்டு வணங்கியபோது 'பொன்னார் மேனியனை தரிசித்து பிறந்த பயனை அடைந்து விட்டோம்' என்று மெய்சிலிர்த்த பொன்னான தருணம்!

முப்பது வருடங்களாக தமிழ் இதழ்களில் கதை, கட்டுரை, போட்டிகளில் எழுதி அவை பிரசுரமாகி அவற்றை இதழ்களில் கண்டு சந்தோஷிக்கும் நேரம் பொன்னே கிடைத்ததாய் மகிழ்ந்த நேரங்கள்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மத்யமரில் பல தலைப்புகளில் எழுதுவதும், அவற்றிற்கு பல மத்யமர்களின் பாராட்டுகளும், எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தும் பூஸ்ட்டாக அட்மின்களால் கொடுக்கப்பட்ட  ஏழு POTW மற்றும் 2 GEMம் பெற்ற நேரங்கள் 'இங்கு நம் எழுத்துக்கும் மதிப்பு இருக்கிறது' என்று மனம் களிப்படைந்த நிமிடங்கள் தரம் குறையாத பொன்னான தருணங்கள் மட்டுமா என்னை வானில் சிறகடித்து பறக்க வைத்த தருணங்களும் கூட!

நான் போடும் பலவகைக் கோலங்கள், இசையுடன் இயைந்து பாடும் கீர்த்தனைகள், விதவிதமாய் செய்யும் பாரம்பரிய மற்றும் புதுவித சமையல்கள், என் blouseகளில் நானே உருவாக்கி தைக்கும் டிசைன்கள், அழகிய கைவேலைகள்..இவற்றை மனம் ஒன்றி செய்து அவை சிறப்பாக அமையும்போது அந்த நேரங்கள் நானே மகிழும் தங்கத் தருணங்கள்! இன்னும் இதுபோல் நிறைய்...ய!

ஒரு இல்லத்தரசியாக இருந்து எல்லா கடமைகளையும் முடித்து என் கணவருடன்  இனி இறை சிந்தனையுடன் வாழும்  வானப்ரஸ்த வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப் பொன்னான நேரத்தில் 'இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம்' என யோசிக்க வைத்து அந்தப் பொன்னான நேரங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்த மத்யமருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼

உலகம் முழுக்க விடுமுறை..!

ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட நாட்களில்தான் விடுமுறை விடுவார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளுக்கும் விடுமுறை கொடுத்து நாம் கேள்விப் படுவது இதுவே முதன்முறை!

இன்றைய நம் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இது போன்ற நிலைமையை நாம் யோசிக்கக் கூட இல்லையே? கோடை விடுமுறைக்கு எங்கே எவ்வளவு நாள் போகலாம் எப்படியெல்லாம் enjoy பண்ணலாம் என்று எவ்வளவு முடிவு செய்து வைத்திருந்தோம்? இன்றோ வாசல்படியைக் கூட தாண்ட  முடியாத நிலை. வெளியூர்களில் வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பற்றிய கவலை.

70, 80 ஆண்டுகளுக்கு முன்பு நம் பெரியோர்கள் நமக்கு காட்டித் தந்த வாழ்க்கை நெறிமுறைகளை நாம் இன்று கடைப் பிடிக்கிறோமா?

அன்றைக்கு மடி ஆசாரம் என்று பெரியவர்கள் சொன்னதை இந்நாளில் கேலி செய்து புறம் தள்ளினோம். சாதத்தை தொட்டால் கை அலம்ப வேண்டும், கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட இடத்தை துடைக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்தோம்.

வாசலில் சாணி கரைத்த தண்ணீரை தெளித்தால் கிருமிகள் வீட்டுக்குள் வராது, வெளியில் போய் விட்டு வந்தால் கை கால்களை அலம்ப வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை என்றானது. தலைமுடியைத் தொட்டாலும், நகம் வெட்டினாலும் கை அலம்ப வேண்டும் என்றதெல்லாம் கிருமிகள் நம்மிடமிருந்து விலக என்பதை அறியவில்லை.

வாசலில் கோலம் போடுவது தீய சக்திகளை உள்நுழையாமல் தடுக்கும் என்ற நம்பிக்கை
யெல்லாம் பத்தாம்பசலித்தனம் என்றாகி ஸ்டிக்கர் கோலம் இடம் பிடித்தது. வாசலில் மட்டுமா..பெண்களின் நெற்றியிலும் குங்குமம் வைப்பது அநாகரிகமாகி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.

ஒரு குழந்தை போதும் என்ற மனோபாவம் வளர்ந்தது.  ஒருவருக்கு ஒரு வீடு என்பது போக இரண்டு மூன்று வீடுகள்.  எல்லோரிடமும் எக்கச்சக்க   பணவசதி. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்பதால் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்
கொருவர் தேவையில்லாமல் போய்விட்டது.

சாப்பாடு கூட ரெடியாகக் கிடைக்கும் போது தாய் தாரம் எதுவுமே அவசியமில்லா
ததாயிற்று. பணம் அதிகமாக கடவுளிடம் பயம் விலகி பக்தியும் காணாமல் போனது. ஆசார அனுஷ்டானங்கள்,  இரு பாலாருக்குமான அத்யாவசிய நியமங்கள் அநாவசியமாகிப் போனது.

ஆலயங்களில் இறைவன் எதிரிலேயே ஊழல், ஏமாற்றுதல், கடவுளை தரிசிக்க பணம் வாங்குதல் என்று 'கடவுளாவது ஒண்ணாவது..அவர் வெறும் கல்' என்று அவரை பணம் சம்பாதிக்க மட்டுமே கருவியாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகமாகிப் போனது. பாவம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது போய் பாவம் செய்தாவது சொத்து சேர்க்கும் குணம் அதிகமாயிற்று.

அதர்மம் ஓங்கும்போதுதான் இறைவனின் அருள் வெளிப்படும். நமக்கு துன்பமும், துயரமும் வரும்போது நாம் தட்டுவது  இறைவன் வாழும் ஆலயக் கதவுகளையே.அந்த இறைவனே இன்று கோபித்துக் கொண்டு நம்மை அண்டவிடாது ஆலயக் கதவுகளை அடைத்துக் கொண்டு விட்டாரோ?

நாட்டில் எத்தனை திறமை வாய்ந்த  ஜோசியர்கள்.அவர்களாலும் இப்படி ஒரு நிலைமை வரும் என்பதைச் சொல்ல முடியவில்
லையே. இங்குதான் நாம் இறைவன் இருக்கிறான் என்று உணர முடிகிறது.  அன்றைய வழக்கங்கள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்று அறிய முடிகிறது. மறந்துபோன கை அலம்பும் பழக்கம் இன்று மறுக்க முடியாத அவசியம் ஆகிப் போனது. என்னே இறைவனின் திருவிளையாடல்.

ஒரு சின்ன கண்ணுக்கு தெரியாத கிருமி எப்படி இவ்வுலகையே ஆட்டி வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது! பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதியல்லை. ஆனால் இன்று போல் உலகின் அத்தனை  தெருக்களும் அமைதியாக இருந்ததுண்டா? பூமியின் பாரம் தாங்காத பூமாதேவி ஓய்வு எடுக்கிறாளோ?! அவளுடன் இணைந்து  சகலமும் சாந்தியில் திளைக்கின்றன. இயற்கை தவிர அத்தனையும் மக்கள் உட்பட ஓய்வு எடுக்கிறோம்!

உலகை நல்வழிப்படுத்தவும் நாடுகளுக்குள் பகைமையைத் தவிர்க்கவும் அமைதியை நிலைநாட்ட போராடிய பெரியோர் எத்தனை பேர்? இன்று கொரோனா என்ற பெயரில் உருவான கிருமி கோடீஸ்வரனிலிருந்து ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டி வரை அத்தனை பேரையும் பேரமைதியில் ஒடுக்கி விட்டது.

நேரத்துக்கு ஒரு நாடாகப் பறக்கும் ஒரு தொழிலதிபருக்கும் சின்ன சந்தில் வாழும் ஏழைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரிதான்..வாழ்வதும் ஒருமுறையே என்று ஆணித்தரமாக அறிய வைத்து விட்டது கொரோனா.

இதிலிருந்து மீள நமக்கு ஒரே வழி அந்த இறைவனிடம் கதறி அழுது நம்மைக் காப்பாற்ற வேண்டுவது ஒன்றே.அவன்தாள் வணங்கி அவனருளை வேண்டுவோம். நாம் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்து, நடத்திவைப்பது பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, “பகவானே.! உன் சித்தம்.!" என்று சொல்லி,அவனைச் சரணடைவோம். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.

இனி வரும் தமிழ்ப் புத்தாண்டு சார்வரியில் நமக்கு புதிதான சுத்தமான பூமியைத் தந்து நம்மை ஆரோக்யமாக வாழவைக்க இறைவனை பிரார்த்திப்போம்.