Saturday, 29 February 2020

இறைவ(ன்)னுடன் பேசிய தருணங்கள்..2

காலை எழுந்தது முதல், இரவு வரை இறைவனை ஏதாவது ஒரு விஷயத்துக்கு தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். என் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை பிள்ளையார், அருகிலுள்ள சிவாலயம், சற்று தூரத்தில் உக்ரமாகாளி அம்மன்,
சீனிவாசப் பெருமாள் கோவில், கடைசியாக எங்கள் வீட்டிலிருந்து 4,5 கட்டிடம் தள்ளியுள்ள அனுமன் ஆலயம். காலை எழுந்ததும் பால்கனி சென்று அத்தனை தெய்வத்தையும்  வணங்கிய பின்பே காஃபி சாப்பிடுவேன்.

இறைவனுடன்  பேசுவது நான்தான்.பதிலை அவன் செயல்களில் காட்டிவிடுவான்.
என் அம்மாவுக்கு இதயத்தில் பிரச்னை வந்தபோது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றபோது என் அம்மா மறுத்து விட்டார். 'எனக்கு ஒரே ஆசை..என் பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேண்டும்' என ஆசைப்பட்டபோது சத்யசாயி பாபாவிடம்..சாய்ராம். என் அம்மாவை இன்னும் நான்கைந்து வருடங்கள் நல்லபடியா வை. பிறகு உன் இஷ்டம்..என கோரிக்கை வைத்தேன். பேத்தி கல்யாணத்தோடு பேரன் நிச்சயதார்த்தமும் பார்த்தபின்பே மறைந்தார்.

நாங்கள் ஜெர்மனியில் என் மருமகள் பிரசவத்திற்கு சென்றபோது என் அப்பா உடல்நிலை மோசமாகி வென்டிலேட்டரில் வைத்ததாகவும் என்னை வரச் சொல்லியும் தம்பி சொல்லிவிட்டான்.

எனக்கோ தர்மசங்கடம். குழந்தை பிறந்து 10 நாள்கூட ஆகவில்லை. டிக்கெட் விலை வேறு அதிகம். நான் ஒரே பெண். அப்பாவைப் பார்க்காமல் இருக்க முடியாது. குழப்பத்திற்கு ஒரே தீர்வாக சுவாமிநாதனிடம்..என் அப்பாவை நார்மல் ஆக்க வேண்டியது உன் வேலை. வந்து உனக்கு ஒரு அபிஷேகம் செய்கிறேன்'என ஆர்டர் போட்டேன்.

இரண்டு நாளில் அப்பா நார்மலாகியதாக செய்திவர, அடுத்த மாதம் திரும்பியபோது நேராக சென்று அப்பாவைப் பார்த்தோம். ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அடுத்த 2 மாதத்தில் மீண்டும் உடல்நிலை அதிகமாக அவரது கடைசி நாட்களில் நான் உடனிருந்தது என் பாக்கியம்.

என் கணவருக்கு திடீரென்று பேசமுடியாமல் போக பல டாக்டர்களைப் பார்த்தும் எந்த ப்ராப்ளமும் இல்லை என்று சொல்லி, Speech therapy மட்டுமே போதும் என்று சொல்லி
விட்டார்கள். ஆனாலும் சுற்றியிருப்பவர்கள் சொன்னவை..'பேச்சே வராது, குளறிதான் பேச முடியும், அவருக்கு இப்படி ஆச்சு.இவர் திக்கிதிக்கி பேசுவார்' என்றெல்லாம் சொல்ல எனக்கு பயம் அதிகமாகி விட்டது. கணீரென்று தினமும் ருத்ரம் சொல்லி பூஜை செய்பவர் மனதுக்குள்ளேயே சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை.

எங்கள் குலதெய்வத்திடம் 'ஏன் இப்படி அவரைக் கஷ்டப்படுத்தற? அவர் குரல் சரியாகிய பின்பே உன் சந்நிதி வருவேன். அவர் ருத்ரம் சொல்லி உனக்கு அபிஷேகம் செய்ய சீக்கிரம் அவருக்கு குரல் கொடு' என்று கண்டிஷன் போட்டேன்.

ஆறு மாதங்களுக்கு பின் அவர் பழையபடி பேசியபோது நேராக குலதெய்வம் சந்நிதி சென்று கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்.

'ஏய்..கண்ணா மரியாதையா நான் கேக்கறதை நடத்திக் கொடுத்துடு' என்று மிரட்டுவதும் உண்டு! அவனைக் கெஞ்சியதும் உண்டு..கொஞ்சியதும் உண்டு!

நான் வேண்டியது நடைபெறாதபோது 'இனிமேல் உன்னோடு பேசமாட்டேன். உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு. என் கஷ்டத்தை நான் பொறுத்துக்க சக்தியை மட்டும் கொடுத்துடு' என்று கோபிப்பேன்.

இறைவன் அருளிய அனுபவங்கள் ஏராளம்..அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்கு
கிறது. திருச்சிக்கு அருகில் சிறிது தூரத்தில் பாலையூர் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. அங்கு சில கொய்யா சப்போட்டா மரங்கள் இருப்பதால் அவ்வப்போது சென்று பார்த்து வருவோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் பெண் வயிற்றுப் பேரனும், பேத்தியும் வந்திருந்தபோது அங்கு சென்று வரலாமென்று  சாப்பாடு முடித்து மதியம் ஒரு மணிக்கு எங்கள் நேனோ காரில் கிளம்பினோம். பேரனோடு ஜாலியாக வம்படித்துக் கொண்டு போனபோது எங்கள் தோட்டத்திற்கு செல்ல 10,15 நிமிடங்களே இருக்கும். திடீரென்று வண்டியில் ஏதோ வித்யாசமான சத்தம் வந்தது. என் கணவர் ப்ரேக் போட முயற்சித்தும் க்ளட்ச் வேலை செய்யாததால் முடியவில்லை.  வேகமும் குறைக்க முடியாதபோது என் கணவரும் சற்று பயந்து விட்டார்.

என் பேத்தி பின்னால் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.என் பேரன் பயந்து...தாத்தா என்னாச்சு வண்டியை நிறுத்து...என்று கத்தினான்.  நானோ பயந்து கடவுளை யெல்லாம் கூப்பிட ஆரம்பித்தேன். காரின் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் போய் அடுத்த நொடி அதன் இஷ்டத்துக்கு ஓடி ஒரு பெரிய சத்தத்துடன் வலப்பக்கம் கவிழ்ந்து விட்டது. நான் சாய்ராம் என்றும் என் பேரன் ஜய்பஜ்ரங்பலி என்றும் கத்திவிட்டோம்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. அந்த அரை நொடியில் ஆயிரம் எண்ணங்கள். 'நாம் போனாலாவது பரவாயில்லை. அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால்' என்று நினைவு வேறு.கார் விழுந்து தலைக்கு மேல் நாலு சக்கரமும் சுற்றி நின்றுவிட, 'அட..நாம் உயிரோடு இருக்கிறோமா' என்று நினைத்தவள், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று பயந்து கொண்டே பார்த்தேன். நெஞ்சு படபடப்பு.

கார் அப்படியே தலைகீழாக எதிரிலிருந்த மரம் தடுத்ததால் கீழே உருண்டு விழாமல் நின்று கொண்டிருந்தது. என் கணவரும் பேரனும் சீட்டிலிருந்து கீழே விழுந்து மெதுவாக எழுந்து முன் பக்கம் நின்றிருந்தார்கள். நானும் என் பேத்தியும் கார் கவிழ்ந்ததால் கீழே விழுந்து விட்டோம். பேத்தி மலங்க மலங்க அரை தூக்கத்தில் விழித்து ' பாட்டி என்ன ஆச்சு?' என்றது.

கதவைத் திறந்து கீழே இறங்கலாமென்றால் எந்த லாக்கும்  திறக்க முடியவில்லை. கொஞ்சம் ஆடினாலும் கார் ஆடி கீழே விழுந்து விடுமோ என்று பயம். தெருவில் யாரும் இல்லை. காரின் கதவுகளில் நாங்கள் வேகமாகத் தட்ட சத்தம் கேட்டு ஏழெட்டு பேர் ஓடி வந்தார்கள்.

ஒருவர் பலமாக கதவைத் திறக்க முயல, முடியாததால் , 'உள்ளே எத்தனை பேர் இருக்கீங்க? யாருக்காவது அடி பட்டிருக்கா?'என்று கேட்க, அப்பதான் அந்த நினைவு வந்து பார்க்க, அதிசயம்..நாலு பேருக்கும் ஒரு கீறல் இல்லை. என் மனமோ என் வசமே இல்லை. பயத்தில் உடல் நடுங்க 'கிருஷ்ணா சுவாமிநாதா சாய்ராமா எதுவும் ஆகாமல் காப்பாத்து'என்று சுலோகங்களை சொல்ல ஆரம்பித்தேன்.

'கண்ணாடியைத் திறங்கம்மா' என்று ஒருவர் சொல்ல, முடியவில்லை என்று சைகை காட்டினோம். மீண்டும் முயற்சிப்போம் என்று திறக்க..என்ன அதிசயம்..
கண்ணாடி திறந்து கொண்டது.

என் கணவரும் பேரனும் மெதுவாக வெளியிலிருப்பவர்கள் உதவியுடன் வெளியே குதித்து விட்டனர். பேத்தியை தூக்கி இறக்கியாச்சு. என்னால் சாய்ந்திருந்த சீட்டில் ஏறிக் காலை வெளியில் வைக்க முடியவில்லை. கவிழ்ந்து விட்டதால் மேலிருக்கும் கண்ணாடி கீழே வந்துவிட்டது. வெளியிலிருந்தவர்..பயப்படாதீங்கஎன் காலில் ஏறி மெதுவா இறங்குங்க'என்றபடி தன் காலால் தாங்கிக் கொண்டார். அந்த நேரம் அவர் தெய்வமாகத் தெரிந்தார். கீழே ஒரே முள்செடிகள்..ஏப்ரல் மாதம்..நல்ல வெயில். என் செருப்புகள் காரில் அவிழ்ந்து விட்டதால் சூட்டில் நிற்க முடியவில்லை.

கார் விழுந்த இடத்திற்கு பின்னால் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. எங்கள் கார் விழுந்தபோது மதிய சாப்பாட்டு மணி அடிக்க பிள்ளைகள் வெளி மைதானம் வந்தபோது எங்கள் சத்தம் கேட்டு ஏதோ விபத்து என்று சொல்ல பள்ளி வேலைஆட்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கூடிவிட்டனர். அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் எங்கள் யாருக்கும் ஒரு காயம் கூட படாதது. இன்னும் சற்று முன்போ தாமதமாகவோ நடந்திருந்தால் எல்லோரும் வகுப்புகளில் இருந்திருப்பார்கள். இதுவும் கடவுள் செயல்தானே?

நாங்கள் பத்திரமாக வெளியில் வந்ததும் 10 பேராக காரைத் தள்ளி மேலே கொண்டு நிறுத்தி விட்டார்கள். 'மரம் இருந்ததால் வண்டி உருளவில்லை. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்குமோ.நீங்க கும்புடற சுவாமிதான் உங்களை ஒரு காயம் கூட படாமல் காப்பாத்தியிருக்கு' என்றபோது எனக்கு சரியான நேரத்தில் வந்து உதவிய அவர்களும் தெய்வமாகத் தெரிந்தார்கள்.

ஒரு ஆசிரியர் தன் டூவீலரில் என்னையும் பேத்தியையும் அழைத்துச் சென்று பள்ளி ஆசிரியர்கள் அறையில் உட்காரச் சொல்லி பிஸ்கட் கூல்ட்ரிங்க் எல்லாம் வாங்கித் தந்து சாப்பிடச் சொன்னார். ஆனாலும் எனக்கு அந்த அதிர்ச்சியில் எதுவும் வேண்டியிருக்கவில்லை. குழந்தைகளுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றியது அந்த தெய்வம்தானே?

என் கணவர் தினமும் பஞ்சாயதன பூஜை செய்பவர். அந்த வருடம் நாங்கள் ஷண்ணவதி செய்து கொண்டிருந்ததால் அன்று தர்ப்ணம், பூஜை எல்லாம் முடித்துதான் கிளம்பினோம். அந்த பூஜாபலனும் பித்ருக்களின் ஆசியும்தான் எங்களைக் காப்பாற்றியது என்று தோன்றியது.

நான் என் பேரன் பேத்தியுடன் வாடகை வண்டி ஒன்றில் ஏறி திருச்சி வந்துவிட்டோம். என் கணவர் இன்ஷ்யூரன்ஸ்க்கு ஃபோன் செய்தபோது, வண்டி என் பிள்ளை பெயரில் இருப்பதால் அவனுக்கு மெஸேஜ் போக உடன் அவன் ஃபோன் செய்து விட்டான்.

நாங்கள் விஷயத்தை அவனிடம் சொல்ல, அவன் மற்றவர்களிடம் சொல்லி வரிசையாக ஃபோன். காயம் படவில்லை என்பதை யாரும் நம்பாமல் வீடியோவில் பார்த்த பின்பே நம்பினார்கள். என் பெண் மாப்பிள்ளை ரொம்பவே பதறி விட்டார்கள். நல்ல
வேளையாக பாதிப்பு எங்களுக்கு இல்லை..முக்கியமாக குழந்தைகளுக்கு...பாவம் கார்தான் சப்பட்டையாகி ஆஸ்பத்திரி போய் வந்தது!

இந்த சம்பவம் கடவுள் நம்முடன் எப்பொழுதும் அரணாக இருக்கிறான், நம்மை கவனித்துக் காப்பாற்றுகிறான் என்ற நம்பிக்கையை அதிகமாக்கியது.அவனுக்கு ஜன்மம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. அதுமுதல் இறைவனுடனான நெருக்கம் இன்னும் இறுகியது.

இறைவன் பேசுவது மட்டுமா..பசித்த நேரத்தில் சாப்பாடும் போட்டிருக்கிறார்! நாங்கள் என் மகனுடன் மலேசியாவில் Battu Caves முருகன் கோவில் சென்றிருந்
தோம். மலை ஏறி தரிசனம் முடித்து வர மதியம் ஆகி பசி வயிற்றைக் கிள்ளியது. கோவில் குருக்களிடம் 'பக்கத்தில் ஹோட்டல் இருக்கா?' என்றபோது, இங்கு vegetarian சாப்பாடு கிடைப்பது கஷ்டம். என்னோடயே சாப்பிடலாம். வாங்கோ'என்று அழைத்துப் போய் கோவில் மடப்பள்ளியில் சாப்பிட்டோம். தான் சுவாமிமலை என்று அவர் சொன்னபோது நாங்களும் அந்த ஊர் என்று தெரிந்து சந்தோஷப்பட்டார். முருகப் பெருமான் அன்று எங்கள் பசியை போக்கியது அவனருள்தானே?

சப்தஸ்தான தலங்களை தரிசித்து வரும்போது திருச்சோற்றுத்துறை ஈசனை தரிசித்த முடித்ததும் அந்த குருக்கள்'நீங்க இங்கயே சாப்ட்டு ரெஸ்ட் எடுத்துண்டு வெயில் தாழ  போங்கோ' என்றார். அந்த ஊர் அன்னதானத்துக்கு பெயர் பெற்றதாம். ஈசனே அவர் வடிவில் தன் பிரசாதத்தை சாப்பிடச் சொன்னதாகத் தோன்றியது.

இதுபோல் இறைவனுடன் நான் பேசுவதும் அவர் பேசாமலே பதில் சொல்வதும் எங்கள் நித்யப்படி வழக்கமாகி விட்டது! 'இனி உன்னிடம் நான் எதுவும் கேட்கப் போவதில்லை. நீ நடத்துவதை நடத்து. இன்றுபோல் என்றும் எங்களை காத்து நோய் நொடியில்லாத வாழ்வு தந்து உன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்பதே என் வேண்டுதல்.

இறைவனிடம்_பேசிய_ தருணங்கள்..1


இறைவனைக் காட்டியதும், அவரால் முடியாததில்லை என்று போற்றியதும், அவரை இறுக்கப் பிடித்தால் நீ இனிமையாக வாழலாம் என்றும் சொல்லிக் கொடுத்ததும் என் அம்மா.

தவறு செய்தால் சுவாமி கண்ணைக் குத்திவிடும், பொய் சொன்னால் வாய் பேசமுடியாது, திருடினால் கையில் காயம் படும் என்றெல்லாம் பயமுறுத்தும் அம்மா ஒரு விஷயத்தை சரியாகப் பண்ணினால் 'சுவாமி பரிசு கொடுக்கும்' என்பார். நாங்கள் நச்சரிப்போம் எப்ப சுவாமி வரும் என்று. சுவாமியை நேரில் பார்க்க ஆசை! 'சுவாமி நம்ம கண்ல படமாட்டார். ராத்திரி வந்து பரிசை தலைமாட்டில் வைத்துச் சென்றுவிடுவார்' என்பார். அதை வைப்பது அம்மாதான் என்று தெரிய ரொம்ப நாளாயிற்று! அப்பவும் அவள் நம்மை ஏமாற்றி யிருக்கிறாள் என்று எண்ணத் தோன்றியதில்லை.

நான் நான்காம் வகுப்பு படித்த சமயம் நடந்த சம்பவம் இது. என் உடன் படிப்பவள் மல்லிகா என்று பெயர், அவள் மாலை நேரம் என் வீட்டுக்கு வந்து என்னுடன் படிப்பாள். ஒருநாள் என் பாட்டு வாத்யாருக்கு கொடுக்க 10ரூபாய்.. புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் (என் அப்பா வங்கியில் பணி புரிந்ததால் எப்பவும் புதிய நோட்டுகள் தான்) அப்பா கொடுத்ததை என் புத்தக அலமாரியில் வைத்திருந்தேன்.என் தோழி படித்து விட்டு கிளம்பிப் போய்விட்டாள்.

நான் பாட்டு கிளாஸ் கிளம்பியபோது  ஒன்பது ரூபாய்தான் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். என் ஃப்ரெண்ட் தவிர யாரும் வராததால் அவள்தான் எடுத்திருக்க வேண்டும் என்றார் என் அம்மா. என்னை அனுப்பி அவள் அம்மாவிடம் சொல்லி கேட்டுவா என்றார். நான் கேட்டபோது அவள் தான் எடுக்கவில்லை என்றாள்.

இரவு அப்பாவிடம் விஷயம் சொன்னதும் மீண்டும் அவள் வீட்டில் சென்று 'புதிய நோட்டு இருக்கா?' என்று கேட்பதோடு அந்த நோட்டின் நம்பரையும் குறித்துக் கொடுத்தார். மறுநாள் நான் மீண்டும் போய்க் கேட்டபோது அவள் அம்மாவுக்கே சந்தேகம் வந்து அவளை கோபமாகத் திட்டி விசாரித்த போது, தான்
எடுத்ததாக சொல்லி ரூபாயைக் கொடுத்தாள். என் அப்பா எழுதிக் கொடுத்த அதே நம்பர். அவள் அம்மா என் வீடு வந்து மன்னிப்பு கேட்டார். அதன்பின் அவள் என் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடன் பேசுவதுமில்லை.

ஒன்றிரண்டு மாதத்திற்கு பின் அவள் மாவு மில்லில் அரைக்கப் போனபோது அந்த மெஷின் சுற்றும்போது கையை விட்டு ஒரு விரலில் மேல்பாதி பாகம் கட் ஆகி விட்டது என்று கேள்விப் பட்டு, என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா..பாவம். தப்பு செய்தால் தண்டனை சாமி கொடுப்பார்னு சொன்னேனே. பார் அவள் அன்னிக்கு நம்ம வீட்டிலருந்து பணத்தை திருடினதுக்கு இப்டி ஆயிடுத்து பார்..என்றார். அந்த நிகழ்ச்சி என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திட  அது முதல் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகியது.

கடவுளை தாய் தந்தை குருவாக மட்டுமன்றி தோழனாகவும் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அவர் என் நண்பன். அவரிடம் கோபமும் கொள்ளலாம்..சண்டையும் போடலாம்..நான் எது தேவை என்றாலும் அவரிடம் சற்று வேகமாக  அதிகாரமாகத்தான் பேசுவேன்.

கடவுள் பேசுவாரா? அவர் பேசுகிறாரோ இல்லையோ நான் அவருடன் கண்டிப்பாக பேசுவேன். ஆனால் அதன் பலன் எனக்கு கிடைத்துவிடும்!...இங்க பாரு எனக்கு இந்த வேலை ஆகணும் நீ என்ன பண்ணுவியோ தெரியாது எப்படியாவது நடத்தி வைக்கணும்.
என்பேன்! இதை நான் சத்தமாகவே சுவாமி அறையில் நின்று கடவுளிடம் சொல்வேன்.

அதைப் பார்த்து என் கணவர் 'என்னைஅதிகாரம்
பண்ற மாதிரி சுவாமியையும் பண்ணாத. பாவம் அவர் உன்ட்ட மாட்டிண்டு கஷ்டப்பட்றார்' என்பார்!

'நான் உங்களை சாமி லெவலுக்கு வெச்சிருக்கேன்னு புரிஞ்சுக்கோங்கோ' என்பேன்!

'நான் போனா போறதுன்னு உன்னை பொறுத்துப்பேன். சுவாமிக்கு கோபம் வந்தா உனக்கு காரியமல்லாம் பண்ணிக் கொடுக்க மாட்டார்' என்று கேலி பண்ணுவார்!

என் மகன் ஈரோடில் 10ம் வகுப்பு படித்த சமயம் திடீரென்று ஒரு முழங்காலில் வலி என்றான். சாதாரண வலியாக இருக்கும் என்று மருந்தெல்லாம் தடவியும் சரியாகவில்லை. காலை அசைக்கக்கூட முடியாமல் தவிக்க, டாக்டரிடம்  சென்றபோது அவரும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். மருந்துகள் முடிந்தும் வலி குறையாம லிருக்க வேறு ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினோம். X-ray, ஸ்கேன் எல்லாம் எடுத்தும் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. 3 மாதமாகியும் எந்தபலனும் இல்லை. காலை ஊனி நடக்கவே முடியவில்லை. ஆயுர்வேத மருந்திலும் பயன் இல்லை. டாக்டரை மாற்றியதுதான் மிச்சம். உள்ளூர எனக்கு...இனிமேல் பிள்ளையால் நடக்க முடியுமா... என்றெல்லாம் கவலை,பயம்.
இறுதி ஆண்டுப் பரீட்சைகள் நெருங்கி விட, பள்ளி செல்ல முடியவில்லை. நண்பர்கள் மூலம் நடந்த பாடங்களை வாங்கிப் படித்தான்.

நானும் எங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். மனதில் திடீரென்று திருப்பதி பெருமாள் 'நான் இருக்கிறேனே.
நினைவில்லையா' என்று கேட்பது போல் தோன்ற, திருமலையானிடம் 'உன் சந்நிதிக்கு என் குழந்தையை மலையில் நடத்தி அழைத்து வருகிறேன். நீதான் அவனை நடக்க வைக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டுவிட்டேன். அன்றைய மனநிலையில் நடக்கமுடியுமா முடியாதா என்றெல்லாம் எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.

டாக்டர்கள் எல்லா சோதனையும் செய்து மருந்து சாப்பிட்டும் வலிக்கான காரணம் பிடிபடாததால் கோவை சென்று காண்பிக்கலாமா என்று யோசித்தோம். மறுநாள் எழுந்தவனை 'கால் எப்படி இருக்கு?நடக்க முடியற்தா' என்றேன். அவனும் எழுந்து சற்று ஊனிக் கொண்டு நடந்தாலும் வலி இருக்கிறது என்றான். மறுநாள் வலி வெகுவாகக் குறைந்து பிடித்துக் கொண்டு நடந்தவன் அதற்கு மறுநாள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தபோது, அந்த திருமலையானுக்குதான் நன்றி சொன்னேன்.

முன் ஜன்ம பாக்கியை இந்த ஜன்மத்தில் கடவுள் வசூல் பண்ணி விடுவார் என்பார் என் அம்மா. அது மாதிரி இந்த மலை ஏறி வந்து தரிசிப்பதும் போலும். சாதாரணமாக இருந்தால் நடந்து செல்வது பற்றி யோசித்திருக்கவே மாட்டோம்.

இதுபோல் இன்னொரு முறை தலைவலி வந்து நான்கு மாதம் சரியாகவில்லை. MRI ஸ்கேனிலும் ஒரு பிரச்னையும் இல்லை. மனம் கலங்கிய நான் அவன் தலைமுடியை காணிக்கையாகத் தருவதாக வேண்டிக் கொண்ட நாலு நாளில் தலைவலி போன இடம் தெரியவில்லை.

அவனருளை நமக்கு செய்ய இதுபோன்ற வேண்டுதல்களையும் நம் மூலம் செய்து நமக்கு புண்ணியம் தருவது அவன் செயலே!
பதிவு நீண்டு விட்டது. இன்னொரு பதிவு தொடரும்...

Thursday, 20 February 2020

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்


ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

நரசிம்மர் உக்ர தெய்வம் என்றாலும் தன்னை பக்தியுடன் வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தன் குழந்தை போல் காப்பாற்றுவார். இது நாம் பிரகலாத சரித்திரத்
திலிருந்து அறிந்த விஷயம். ஆந்திரா நரசிம்ம மூர்த்திக்கு மிகப் பிடித்த இடம் போலும்! நிறைய நரசிம்மர் ஆலயங்கள்.மங்களகிரி, அந்தர்வேதி, அஹோபிலம், சிம்மாசலம், யாதகிரி, வேதாத்ரி, மட்டபல்லி என்று நிறைய்ய உள்ளன.

யாதகிரிகுட்டா, தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான பஞ்ச நரசிம்மர்
கோவில். இந்தக் கோவில்
ஐதராபாதில் இருந்து 65 கி.மீ துரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திரேதா யுகம் நடக்கும் போது  இங்கு ஒரு குகையில்
ரிஷிய சிருங்கர், சாந்தாதேவி இருவரின் புத்திரரான யது என்ற ரிஷி அனுமானின் அருள் பெற்று தவம்  இருந்தார். இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தபோது, ரிஷியும்
தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்.
முதலில் ஜ்வாலா நரசிம்ஹ
ராகவும்,  பின்னர் உக்ர நரசிம்மராகவும், பின் கண்டபேருண்ட நரசிம்மராகவும்  தோன்றினார். ரிஷியோ அந்தத் தோற்றங்கள் வேண்டாமென்று கூற யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார். அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக லக்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார்.  இதனால் இது பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது. இன்றும் கருவறையில் இந்த ஐந்து ரூபங்களில் நரசிம்மஸ்வாமி
காட்சியளிக்கிறார்.

ரிஷி தவம் செய்த இடம் இப்போதுள்ள கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டு முக்தி அடைந்த பிறகு அங்குள்ள மக்கள் முறை அறியாது வழிபட்டதால் லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டி அங்கு  இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார். அவ்விடமே தற்சமயம் குன்றின் மேலுள்ள குடவரைக் குகை ஆலயம். அதன்பின்பே இங்கு  முறையான பூஜைகள் தொடங்கப்பட்டன. இங்கு பாஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெறுகிறது.

இங்கு பல அர்ச்சனை சேவைகள் நடைபெறுகின்றன. நாங்கள் 216 ரூபாய் கொடுத்து சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு சென்றோம். நரசிம்மர் ஐந்து ரூபங்களில் அழகுறக் காட்சி தருகிறார். 12அடி நீளமும், 30அடி உயரமும் கொண்ட குடவரைக் கோயிலில் பாறையில் சுயம்புவாக காட்சி தருகின்றனர் ஐவரும். அவற்றிற்கு கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயரும் அங்கு உள்ளார். அருகில் ஆறடிக்கும் மேல் உயரத்தில் லக்ஷ்மியும் நரசிம்மப் பெருமானும் பொற்கவசம் பூண்டு நின்ற நிலையில் அற்புதக் காட்சி தருகின்றனர். அர்ச்சனைகள் இந்த நரசிம்மருக்கே. காணும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்.

சகஸ்ரநாமம் முடியும்வரை அரைமணி நேரம் அமர்ந்து இறைவனை கண்குளிர, மனம் நெகிழ தரிசித்தோம். இவர் வைத்ய நரசிம்மராக விளங்கு
கிறார். நோய் நொடியில்லாத வாழ்வை வேண்டிக் கொண்டேன். பின் அர்ச்சனை, தீபாராதனை முடித்து அபிஷேக தீர்த்தம் சடாரி குங்குமம்  பெற்றுக் கொண்டு வெளிவந்தபோது மனம் நிறைந்திருந்தது.

பில்லி, சூன்யம், ஏவல் போன்
றவை விலகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வருகிறார்கள். ஒரு மண்டலம் (40 நாட்கள்) பிரதட்சிணம் என்னும் வேண்டுதல் இங்கே பிரசித்தம். திருமணப்பேறு, பிள்ளைப்பேறு உள்ளிட்ட எல்லா நலன்களும் இத்தலம் வந்தால் கிட்டுகின்
றனவாம்.தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பீடிக்கப் பட்டவர்களை காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும்,   பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ மூலிகைகளைத் தந்து பக்தர்களின் நோயைத் தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கி
யத்திற்கு நல்லாசியும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. நரசிம்மர் காட்சிதந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி கொண்டாடப்
படுகிறது.

கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது. முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பக்தர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம். தற்சமயம் ஆலயத்தில் புனருத்தாரணம் செய்வதால் அந்த சக்கரம் கழற்றி வைக்கப் பட்டிருப்பதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பின்பு மீண்டும் பொருத்தப்படமென்றும் கூறினார்கள்.

ஆஞ்சநேயர் இருந்த தலம் என்பதாலோ என்னமோ ஏகப்பட்ட குரங்குகள்! நம் கையில் இருப்பதைப் பிடுங்க ஆயத்தமாக உட்கார்ந்திருக்கின்றன!

ஆதி  நரசிம்மர் கோவில் இவ்வாலயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து பளிச்சென காட்சி தரும் இவ்வாலயத்தில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த ஹனுமானின் கால் அடித் தடம். மற்றொன்று அங்கு உள்ள தண்ணீர் வற்றாத தெப்பகுளம்.

யாதகிரி செல்ல ஹைதராபாதிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.தெலிங்கானா செல்பவர்கள் உடல்நல ஆரோக்யம் வேண்டி அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.