Monday, 8 July 2019

#நம்_பிரதி_பிம்பங்கள்



#நம்_பிரதி_பிம்பங்கள்
நம்முடைய பிரதிபிம்பங்களாய் காணப்படும் நம் பேரக் குழந்தைகள் நமக்கு நாம் பெற்ற பிள்ளைகளை விட அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதை நாம் பல நேரங்களில் உணர்கிறோம்.
நம் குழந்தை நம்மைப் போல் இருப்பதை இயல்பாக ஏற்றுக் கொள்வோம். நம் பேரன் பேத்திகள் நம்மைப் போலவே இருக்கிறார்கள் என்று சொல்லும்போது நாம் பூரித்துப் போகிறோம்!
நம் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டும் நாம் பேரக்குழந்தைகளிடம் குழைந்து போகிறோம்! அவர்களுக்கும் நம்மிடம் உரிமை அதிகம். தம் பெற்றோரிடம் இருக்கும் பயம் நம்மிடம் இருப்பதில்லை!
நாமும் அவர்களுடன் குழந்தைகளாக மாறி விடுகிறோம்!ஓடிப்பிடித்தும்,கண்ணாமூச்சியும் விளையாடுவது மட்டுமா..என் சின்னப் பேத்தி தாத்தாவை யானையாக்கி ஏறி உட்கார்ந்து போகச் சொல்வாள்! இதை அனைத்து தாத்தா பாட்டிகளும் அனுபவித்திருப்பீர்கள்!
சென்னையில் இருக்கும் இரண்டு பேத்திகளும் பரீட்சை ஆரம்
பித்தவுடன் ஆர்டர் போட்டு விடுவார்கள், அழைத்துச் செல்ல வரும்படி!பரீட்சை முடிந்த மறுநாளே திருச்சி வந்தாச்சு!
உள்ளே நுழைந்ததுமே...ஐய்யா ஜாலி...என்று ஒரே குதியல்! ...உங்க வீட்டை விட இங்க என்ன சந்தோஷம்...என்றால்...அம்மா அப்பா கண்ட்ரோல் இல்ல.காலம்பற மெதுவா எழுந்துக்கலாம். ஜாலியா விளையாடலாம். முக்கியமா படிக்க வேண்டாம்! டெய்லி ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். எல்லாத்துக்கும் மேல ஹாய்யா ஊஞ்சல் ஆடலாம்!...என்று வரிசையாக அடுக்குவார்கள்!
சின்னவளுக்கு பார்பி விளையாட்டுதான். ஏகப்பட்ட பார்பிகள் அவளிடம். அவற்றுக்கு தலைவாருவது,டிரஸ் போடுவது, தூங்கப்பண்ணுவது என்று அவற்றுடன் பேசிக் கொண்டே விளையாடுவாள்! அவள் விளையாடும் அழகில் மயங்கி அப்படியே கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விடுவேன்...பாட்டி டிஸ்டர்ப் பண்ணாத .பேபியல்லாம் அழும்...என்பாள்! அந்தக்கால சொப்பு விளையாட்டு பார்பிகளுடன்!
பெரியவள் ப்ரீத்திக்கோ பொம்மை விளையாட்டு, சமையல் எதுவும் பிடிக்காது! Tabல் புத்தகங்கள் படிப்பதும் விளையாடுவதும்தான் பொழுது போக்கு!
சதா நேரமும் ஊஞ்சலில்தான் வாசம். வேளா வேளைக்கு சாதம்,டிஃபன் எல்லாம் ஊட்ட வேண்டும். சின்ன பேத்தி முதல் வகுப்பு. அவளுக்கு ஊட்டுவது சரி..பெரிய பேத்தி ப்ரீத்தியோ ஏழாம் வகுப்பு.
..பிரியங்கா குழந்தை.உனக்கு  வயசாகலியா.
ஊட்டச் சொல்றியே..
...நான் வருஷம் முழுக்க தானே சாப்பிட்டு போர் அடிக்கற்து பாட்டி!
ஊட்டு.ப்ளீஸ்..என்று கட்டிக் கொண்டு கெ(கொ)ஞ்சுவாள்!
அவள் பள்ளி பற்றியும், படிப்பு , டீச்சர்கள் பற்றியெல்லாம் பேசுவாள்.
...நீ படித்துவிட்டு என்னவாகப் போற?...என்றேன்.
...நான் veterinary doctor ஆகப் போகிறேன்....
...நாய், பூனைக்கல்லாம் மருந்து கொடுத்து ஊசியல்லாம் போடணுமே...
...நான் forest animalsக்கல்லாம் கூட  மருந்து கொடுப்பேன்...
...அதல்லாம் வேண்டாம்.Wild animalsலாம் பயம்...
...ஐயோ..உனக்கு ஒண்ணுமே தெரியலயே.பயப்படாத பாட்டி. மயக்கம் கொடுத்துதான் பண்ணுவேன்...
அனிமல் பிளானட், ஒயில்டு லைப் டாகுமெண்டரி, நேஷனல் ஜாக்ராபிக் அனிமல் லைஃப் போன்ற அலைவரிசைகளை விரும்பிப் பார்ப்பாள். பல விலங்குகளை பற்றிய விஷயங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லுவாள்.
சிங்கம் இப்படி சாப்பிடும், கரடி இப்படி சண்டை போடும் என்றெல்லாம் அவள் விழிமலர சொல்லும்போது, இப்பொழுதே அவள் veterinary டாக்டர் ஆகிவிட்ட மாதிரி தோன்றும்!
அவள் பள்ளி பற்றியும், ஆசிரியைகள், நண்பர்கள் பற்றி கேட்டேன்.
...பாட்டி உனக்கு தெரியுமா.எங்க science டீச்சரோட அப்பா godகிட்ட போயிட்டாராம். டீச்சர் க்ளாஸ்ல வந்து அழுதா...
...உங்ககிட்ட அதல்லாம் சொன்னாளா?...
...எங்க கிளாஸை அவாளுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அந்த டீச்சரை console பண்ணினேன்..
...நீயா..என்ன சொன்ன?..
...ஏன் அழறீங்கன்னேன்.அப்பா எங்களை விட்டு போய்ட்டார். எனக்கு தாங்க முடியல.அழறேன்னா.
...உங்களால தாங்க முடியாதுதான் மிஸ்..But இதல்லாம் nature.
நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது மிஸ். நீங்க இன்னும் கொஞ்சநாள் வீட்ல இருந்துட்டு வந்திருக்கலாம்..னேன்.
வீட்ல அம்மாவைப் பார்த்தா ரொம்ப அழுகை வரது.அதான் உங்க
ளோடல்லாம் இருந்தாமனசை லேசாக்கிக்கலாம்னு வந்தேன்னா.
..நீ போய் பெரிய மனுஷி மாதிரி டீச்சருக்கு ஆறுதல் சொன்னியா?!...
...நான் சொன்னது சரிதான பாட்டி. என்னைக் கட்டிண்டு..இவ்வளவு அழகா பேசறியே..னு praise பண்ணினா...
எனக்கு மிக ஆச்சரியம்! இந்தக் குழந்தை எப்படி இதல்லாம் பேசியிருக்கிறாள். எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையையும் இயல்பாக, லகுவாக அணுகும் குணம் அவளுக்கு இருக்கும் என்று மனதில் சந்தோஷம் ஏற்பட்டது.
அவள் கூடப் படிக்கும் பையன் ஒருவனுக்கு கால் முட்டியில் knee cap இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப் பட்டாள்.
...அவன் ஒரு காலை வளைக்காமல் நடப்பான் பாட்டி. பாக்கவே பாவமா இருக்கும். God ஏன் இப்படி
யெல்லாம் பண்றாரோ? எங்க கிளாஸ் மாடில.அவன் டெய்லி வரும்போது நான் கீழ போய் அவன் பையை மேலே எடுத்துண்டு வந்து கொடுப்பேன்...
..சமத்து. இன்னும் யாருக்கல்லாம் ஹெல்ப் பண்ணுவ?..
...எங்க கிளாஸ் மிஸ் எங்க நோட்புக்ஸ்லாம் எடுத்துண்டு staff room   போகும்போது நான் அவாகிட்ட வாங்கிண்டு போய் கொடுத்துட்டு வருவேன்..
இப்படி உதவும் மனோபாவம் இருக்கும் குழந்தைநாளை நல்ல குழந்தையாக வளர்ந்து நன்கு முன்னேறுவாள் என்ற நம்பிக்கை வந்தது. பெற்றோர்களின் வளர்ப்பே நல்ல குழந்தைகளை உருவாக்கு
கிறது. என் பிள்ளை,மாட்டுப் பெண்ணை நினைத்து பெருமை
யாக இருந்தது.
தினமும் இரவு கதை சொல்ல வேண்டும் அவளுக்கு. நாய் வளர்க்க ஆசை அவளுக்கு. அவள் அம்மா allow பண்ணவில்லையாம். தினமும் ஸ்கூல் போகும்போது ப்ரெட் எடுத்துக் கொண்டு போய் வாசலில் இருக்கும் நாய்க்குப் போடுவாள்.
...ஏன் பாட்டி உனக்கு நாய் வளர்க்க பிடிக்குமா?..
...பிடிக்குமே! நாங்க சின்ன வயசில வளர்த்திருக்கோம்...
...நீ லக்கி. நான் வேலைக்கு போறச்சே நீயும் தாத்தாவும் என்னோட வந்துடுங்கோ.நாம நாய் வளர்க்கலாம்..
...அதுக்கென்ன.ஜோரா வளர்க்கலாம்...
இதைக் கேட்டு அவளுக்கு ஒரே சந்தோஷம்.எப்ப படிப்பு முடிஞ்சு veterinary டாக்டர் ஆகலாம்னு நாளை எண்ணஆரம்பித்து விட்டாள். பெரிய மனுஷி மாதிரி பேசுபவள் சட்டென்று சின்னக் குழந்தையாகி விடுவாள்!
அவள் summer vacationக்கு கொடுத்த விளக்கம்..
S..Something special
U..Unlimited Play
M..Meet near and dear
M. Enjoying with grandparents
E..Eat Ice-creams
R..Relax and no rules
V..Visit new places
A..Achieve my goals
C..creative ideas
A..Always activities
T..Time with family
I..Idol
O.. Opportunities to learn new
N..Nice break from study
என் பேத்திகளுக்கு உங்கள் ஆசிகளையும் வேண்டுகிறேன்.

புத்தியோகம்



புத்தியோகம்
..மத்யமரில் இந்த வார டாபிக் என்ன?..என்றார் என் கணவர்.
..புத்தி யோகம்.அதைப் பத்தி என்ன எழுதற்துனு புரியல..என்றேன்.
..சுய புத்தியால எப்படி யோகம்..அதாவது பேர் புகழ் வந்துதுனுதான எழுதணும்?..
..ஆமாம். கரெக்டா சொல்லிட்டேள்!நான் என்ன வேலைக்கு போறேனா, பெரிய பதவில இருக்கேனா.
என்னனு எழுதற்து?..
..இப்ப நீ எழுதற்தல்லாம் உன் அறிவை வச்சுதான எழுதற? இதை எங்காவது கத்துண்டியா? ட்ரெய்னிங் போனியா? உன்னுடைய சொந்த திறமைதான? அதுதான் புத்தி யோகம். உனக்கு இருக்கும் திறமைகள்தான் யோகம்...
...அப்டீங்கறேள். என்னைப் பத்தி நானே..எப்பவும் மொபைலும் கையுமா இருக்கயேனு கோச்சுக்காம என்னை எழுதச் சொல்ற நீங்க எனக்கு கிடைச்சதும் யோகம்தான்! எழுதிப் பார்க்கறேன்...
அனுமனுக்கு பலத்தை யாராவது எடுத்துச் சொன்னால்தான் நினைவு வருமாம்!  அதுமாதிரி நானும் என் திறமைகளை வரிசைப் படுத்துகிறேன்!
நான் படித்தது தமிழ் மீடியம். 11ம் வகுப்பில் (அப்பொழுது 11ம் வகுப்பிற்குப் பின் P.U.C. அதன் பின்பே பட்டப் படிப்பு.) பாதிவரை சென்னையில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். காலாண்டுத் தேர்வு முடிந்ததும் வங்கியில் பணிபுரிந்த என் தந்தைக்கு ஈரோடுக்கு பதவி உயர்வுடன் மாற்றலாகியது.
என் பள்ளியில் நான் முதல் ரேங்க் மாணவி. S.S.L.C.யில் நான் நிறைய மதிப்பெண்கள் பெற்று ஸ்டேட் ரேங்க் வருவேன் என்று எதிர்பார்த்த என் பள்ளி தலைமை ஆசிரியையும், வகுப்பு ஆசிரியையும் என்னைத் தொடர்ந்து இந்தப் பள்ளியிலேயே படிக்கும்படிக் கூறினர்.
எனக்கு கீழ் 3 தம்பிகள். என் அம்மா எங்களுடன் தனியே இருக்க விரும்பாததால் அப்பா ஈரோடில் இருந்த நண்பர்களிடம் விசாரித்தார். அங்கிருந்த கலைமகள் கல்வி நிலையம் மிகச் சிறந்த பள்ளி என்று அங்கு கேட்டதில், தலைமை ஆசிரியை 'பள்ளி இறுதித் தேர்வில் எப்பொழுதும் நூறு சத வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கும் பள்ளியில் இடையில் மாணவிகளை சேர்த்துக் கொள்வதில்லை. எல்லா பாடங்களிலும் டெஸ்ட் வைப்போம். தேறினால் சேர்த்துக் கொள்கிறேன்' என்றார்.
அந்த டெஸ்டில் அதிகபட்ச மார்க் வாங்கியதால் எனக்கு அங்கு அட்மிஷன் கிடைத்தது. இறுதித் தேர்வில் 78% மதிப்பெண் பெற்றேன். அவ்வருடம்  எங்கள் பள்ளி  மாணவி பெண்களில் முதல் மார்க் (State1st.)பெற்றாள்.
எனக்கு மேலே கல்லூரி செல்ல மிகவும் ஆசை. என் பெற்றோர் விரும்பாததால் அத்துடன் என் படிப்பிற்கு முற்றுப்புள்ளி!
சென்னையில் 10 வருடங்கள் கச்சேரி செய்யும் அளவிற்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். ஈரோடு வந்தபின் சரியான  ஆசிரியர் கிடைக்காததால் அதுவும் நின்றுவிட்டது!
Drawing வரைவது எனக்கு மிகவும் பிடித்த கைவந்த கலை. அஜந்தா டிராயிங் ஸ்கூலில் சேர்ந்து ஓவியக் கலையை மேலும் மெருகேற்றிக் கொள்ள ஆசைப் பட்டேன். ஈரோடில் எனக்கு exam centre. பரீட்சை வைத்து தேறியதும் சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். என் துரதிர்ஷ்டம் எனக்கு hall ticket வரவில்லை. Phone பண்ணிக் கேட்டதில் அனுப்பி விட்டதாக சொன்னார்கள். முதல்நாள் வரை எதிர்பார்த்து கிடைத்தது ஏமாற்றமே!
18 வயதில் திருமணம். திருச்சி வாசம். பாட்டு தெரிந்த பெண்ணைத் தேடித் திருமணம் புரிந்து கொண்ட என் கணவர் உதவியுடன் சங்கீதத்தைத் தொடர எண்ணினேன்.
அடுத்த ஆறு மாதத்தில் வங்கியில் பதவி உயர்வு..கண்ணன் பிறந்த ஊர் வடமதுரை என்று மட்டுமே தெரிந்த மதுராவுக்கு மாற்றல்! என் பாட்டு ஆசைக்கு மறுபடியும் பூட்டு!
மதுராவில் நாங்கள் இருந்த இடத்தில் தமிழர் யாரும் இல்லை. தமிழ் இதழ்களும் கிடைக்காது.  புத்தகங்கள்  படிக்காமல் பைத்தியம் பிடித்தது போல இருக்கும்.ஊருக்கு வரும்போதெல்லாம் நாவல்கள், தமிழ் வார மாத இதழ்களை என் அம்மாவிடமிருந்து எடுத்துச் செல்வேன்.
சாதாரண சமையல் மட்டுமே செய்யத் தெரிந்த நான், நேரம் கிடைத்த போதெல்லாம் சமையல் புத்தக உதவியுடன் பலவித சமையல்களும் செய்து என்னவரின் பாராட்டும் பெற்றேன்!
ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல். விகடன்,குமுதம், கல்கி மற்றும் மாத இதழ்கள் வாங்கிப் படிப்பேன். அவற்றில் சிறு துணுக்குகள் எழுதினேன். பிரசுரமானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரை ஒன்று முதன்
முதலாக மங்கையர் மலரில் பிரசுரமாக என் எழுத்தின்மேல் நம்பிக்கை வந்தது.
மும்பையில் இருந்தபோது அஷ்டவிநாயகர் ஆலயம் உட்பட அங்கிருந்த பல ஆலயங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் ஞான ஆலயம் இதழில் தொடர்ந்து பிரசுரமாகியது. சக்திவிகடன், பக்தி, பெண்மணி,குமுதம் சிநேகிதி,
அவள்விகடன், தீபம், ஹிந்து தமிழ் உள்ளிட்ட பல இதழ்களிலும் என் எழுத்துகள் வெளியாகிறது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக Hindu Metroplusல் பிரசுரமான என் ப்ளாக் பற்றிய பதிவு.
பட்டப்படிப்பு படிக்காத நான் பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து என் அறிவைக் கூட்டிக் கொண்டேன்.
என் குழந்தைகள் ஹிந்தி படித்த
போது நானும் கூடப்படித்து ஹிந்தியில் பேச எழுதக் கற்றேன்.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக Hindu Metroplusல் பிரசுரமான என் ப்ளாக் பற்றிய பதிவு.
The actual Webpage can also be viewed in the following links:
I blog, therefore I am - Page -1
I blog, therefore I am - Page -2
இன்று பல விஷயங்களைப் பற்றியும் என்னால் எழுதமுடிவது என் #புத்தியோகம்!
சங்கீதத்தை மேலும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நானே கேஸட்களை வாங்கிக் கற்றுக் கொண்டு (இப்பொழுது youtube) கச்சேரிகள் செய்யாவிட்டாலும் சுருதி லய சுத்தமாகப் பாடுவது #புத்தியோகம்!
தையல் கற்றுக் கொண்டதுடன் விட்டுவிடாமல், எனக்குத் தேவையானவற்றை நானே டிசைன் செய்து இன்றுவரை தைத்துப் போட்டுக் கொள்வது #புத்தியோகம்!
என் ஓவியத்திறமையினாலேயே நான் விதவிதமாகக் கோலம் போட முடிகிறது. புள்ளி,கோடு கோலங்கள் மட்டும் போட்டுக் கொண்டிருந்த
நான் இவ்வருட மார்கழியில் கண்ணனின் பல உருவங்களை கோலமாகப் போட்டது#புத்தியோகம்!
பாரம்பரிய சமையலுடன் வித்யாசமான வெளிமாநில சமையல்களையும், புதிய செய்முறைகளையும் செய்து, அவற்றின் செய்முறைகள் பல புத்தகங்களிலும் வெளியாகி எனக்கு பரிசுகளையும் பெற்றுத் தந்தது. 25 பேருக்கு தனியாக சமைக்கும் திறமை இன்று எனக்கு இருப்பது #புத்தியோகம்!

Saturday, 6 July 2019

சபாஷ்மத்யமர்_படக்குறுங்கதைப்போட்டி... நம்பிக்கை


பத்மினி  தினமும் காலை பதினோரு மணிக்கு அவள் வீட்டுத் திண்ணையில் ஆஜராகிவிடுவாள். இரவுதான் உள்ளே செல்வாள். ஏன்? எதனால்?? யாருக்காக???
பத்மினிக்கும் பாஸ்கருக்கும் திருமணமாகி 40 வருடங்கள் ஆகிறது.  தஞ்சை மாவட்டத்திலுள்ள சிறிய கிராமத்தில் ஊராட்சித் தலைவராக இருந்த பாஸ்கரை மணம் புரிந்த
போது பத்மினியின் வயது 20.
பத்தாம் வகுப்புதான் படித்தாலும் ஓவியக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவள். பார்த்ததை அப்படியே வரையும் திறன் கொண்டவள்.
அவ்வூரில் ஒரு சிற்பக்கூடம் இருந்தது. அதிலிருந்த சிற்பி பாஸ்கரின் நண்பர்.பத்மினியின் ஓவிய ஆற்றலைக் கண்ட சிற்பி நண்பர் அவளது ஓவியங்களை சிலை வடிக்க ஆசைப் பட்டார். அவள் வரைந்த சில நடன
மாதுக்களின் ஓவியத்தைப் பார்த்து சிலைகளை வடித்தார். அவற்றை  பல ஆலயங்களுக்கும், பார்க்குகள், ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்தார்.
அதிலிருந்த ஒரு சிற்பம் அச்சு அசலாக பத்மினியைப் போலவே இருந்தது.


அதனை தாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஸ்கர் நினைத்தான். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது.
பத்மினி பாஸ்கர் தம்பதிக்கு சேகர், சுதாகர் என்று இரண்டு பிள்ளைகள். காமினி ஒரே பெண். பாசமான குழந்தைகள். 
பெரிய பையன் சேகர் catering technology படித்து சென்னையில் பெரிய ஹோட்டல் owner.  தற்போதைய swiggy, zomato என்று எல்லாவற்றுக்கும் online orderகள் அவன் ஹோட்டலில் இருந்துதான் செல்கின்றன.திருமணமாகி ஒரு பையன் முதல் வகுப்பு படிக்கிறான்.
(படம் எண்..1)

சின்னவன் சுதாகருக்கு +2  பாஸ் செய்வதே பெரும்பாடாகி  விட்டது. வேலையும் கிடைக்கவில்லை.  தஞ்சையில் ஒரு கேஸ் கம்பெனியில்  மேலாளராகப் பணியில் சேர்ந்தான்.
உழைப்புக்கு அஞ்சாதவன். கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழ்பவன். வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய ஆட்கள் உண்டு. பெரிய ஹோட்டல்களுக்கு தானே கொண்டு கொடுப்பான்.
பத்மினியும், பாஸ்கரும் எவ்வளவோ சொல்லியும், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆன்மிக நாட்டம் கொண்டவன். சமூக சேவையில் அதிக ஈடுபாடு உள்ளவன்.  அவனுக்கு துணை ரூபி என்ற நாய் மட்டுமே. எங்கு சென்றாலும் அவனுடனேயே பாதுகாப்பு காவலன் போல கூடவே செல்லும்.


கோவையில் இருக்கும் பெண் காமினியின் கணவன் ஒரு பெரிய கம்பெனியில் நிர்வாகி. பணத்திற்கும், வசதிக்கும் குறைவில்லை. அவளுக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கிறாள்.
காமினி பொழுது போகாமல் வீட்டில் இருக்க விரும்பாமல் சிறியதாக ஒரு சூப்பர் மார்க்கெட் துவங்கினாள். உதவிக்கு இரண்டு பெண்களுடன் அதைத் தானே நிர்வகித்ததில் நல்ல லாபம் வந்தது.




மூவரும் குடும்பத்துடன் 15 நாட்களுக்கு ஒருமுறை வார இறுதியில் கிராமத்திற்கு வந்து விடுவார்கள். சுதாகருடன் ரூபியும் வந்து விடும். விதவிதமான சமையல் சாப்பாடு, ரூபியுடன் விளையாட்டு என்று இரண்டு நாள் நிமிடமாகப் பறந்துவிடும். அவர்கள் திரும்பச் செல்லும்போது பாஸ்கரும் பத்மினியும் அடுத்து அவர்கள் வரும் நாளை எண்ண ஆரம்பித்து விடுவார்கள்!
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் அச்சமயம் நடந்த அந்த கோரசம்பவம் பத்மினியின் வாழ்வையே புரட்டிப் போட்டது.
அந்த வருடம் அடித்த  புயலால் அந்த கிராமம் மிக மோசமான பாதிப்பை அடைந்தது. விளை
நிலங்கள், கால்நடைகள் பலவும் அடித்துச் செல்லப் பட்டன. இரண்டு நாட்கள் புயலும், மழையும் கோரதாண்டவம் ஆடின.
ஊர்மக்கள் தம்மையும் தம் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதில் இருக்க, பாஸ்கரோ அந்த நட்டநடு  இரவில் வீடிழந்து, பொருளிழந்து  தவிப்பவர்களைப் பாதுகாக்க கிளம்பினார்.
...என்னங்க.எனக்கு பயமாயிருக்கு. காலைல போங்களேன்...என்றதைக் கேட்காமல் சென்றவர் திரும்ப வரவேயில்லை. கவலையுடன் அவரது நண்பர்களிடம் கூற அவர்கள்  சென்று பார்த்தார்கள்.
இரவு இயற்கை செய்த கோரத்தை பகலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள் ஊர் மக்கள்.  வெள்ளத்தில் போனது போக பலரின் உடல்களும் இறந்த ஆடு மாடுகளும் கண்டு மனம் பதைத்துப் போனார்கள்.
ஆற்றோரம் இருந்த சிற்பக் கூடம் சின்னாபின்னமாகி அந்த சிற்பியும் உயிரிழந்து விட்டார். பல மைல் தூரம்  தேடியும் பாஸ்கரின் உடல் கிடைக்காததால் இறந்ததாக கணக்கெடுத்துக் கொண்டார்கள். அதை நம்பாதவள் பத்மினி மட்டுமே.
தன் பெண் பிள்ளைகளுக்கு நிலைமையைச் சொல்லிக் கதறினாள் பத்மினி. மூவரும் உடன் வந்து ..அப்பா திரும்ப வந்து விடுவார்..என ஆறுதல் கூறி தம்முடன் வரும்படி அழைத்தனர்.
பத்மினியோ பிடிவாதமாக பிள்ளைகளுடன் செல்ல மறுத்து விட்டாள். அம்மா சற்று சமாதானபின் கூப்பிடலாம் என்றெண்ணி திரும்பச் சென்றுவிட்டனர்.
நாட்கள் ஓடின. இரண்டு மாதம் ஆகியிருக்கும்.  மொபைலில் அம்மாவுடன் பேசிய காமினி
..அம்மா நம்ம ஊர் சிற்பக்கூடத்து சிலை ஒன்று, உன்னை மாதிரியே இருப்பதாக அப்பா சொல்வாரே.அதை ஒரு ஹோட்டலில் அழகுக்காக வைத்திருக்கிறார்கள்...என்றாள்.
(படம் எண்..4)
சுவாரசியமின்றி அதைக் கேட்டுக் கொண்டவள்...அந்த சிற்பக்கூடத்தின் சிலைகளை யாரோ திருடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன்...என்றாள்.
..நான் அடுத்த வாரம் வரப்போ என்கூட வந்துடும்மா. இனி அப்பா திரும்ப வரமாட்டார்னு தோணுது..என்றாள்.
..அப்பா என்கிட்ட எப்பவும் சொல்லுவார் 'நான் உன்னை விட்டு போகமாட்டேன்'னு. அவரைப் பாக்கறவரைக்கும் நான் நம்ப முடியாது. இனி என்னைக் கூடப்பிடாத. நீங்கள்ளாம் எப்பவும் போல வந்து இருந்துட்டு போங்க..
அப்பா இறக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் வருவார்..என்றாள்.
பத்மினிக்கு பாஸ்கரின் நினைவுகளை மறக்க முடியவில்லை. பாஸ்கர் அவளை செல்லமாக மினி என்றுதான் கூப்பிடுவான். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணநாளன்று பாஸ்கர் சொன்னது இன்னும் அவள் காதுகளிலேயே ஒலிக்கிறது.
..ஏய்..இந்த வயசிலயும் நீ ரொம்ப அழகா இருக்கடா...
...போறுமே! பேரன் பேத்தியல்லாம் எடுத்தாச்சே. இந்த வயசுல என்ன பேச்சு இது?..வெட்கத்தோடு சொன்னாள்.
..மினிம்மா! நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே போயிடணும். பின்னால யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. நான் உன்னை தனியா விட்டுப் போகவே மாட்டேன்..
...ஏங்க நல்லநாளும் அதுவுமா இப்படியல்லாம் பேசறீங்க. நான் மட்டும் நீங்க இல்லாம எப்படி இருப்பேன்..
பாஸ்கரின் நினைவுகளிலிருந்து விடுபட முடியாதவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
விளையாட்டு போல் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பாஸ்கர் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று எதுவும் தெரியவில்லை. குழந்தைகள் தம்மோடு வரும்படி கூப்பிட்டு அலுத்து விட்டார்கள்.
ஆனால் கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில்...எப்பங்க வருவீங்க...என்று மனதில் கேட்டுக் கொண்டே  தினமும் வாசல் திண்ணைக்கு சென்று  கணவரின் வரவை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் பத்மினி!




எங்கள் பூஜையறை



      ....கடவுளை நம்பினோர் கைவிடப்படார்....
இதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. இதுதான் என்னைப் பல இன்னல்களிலிருந்து காப்பாற்றி வருகிறது என்பதை பலமுறை அனுபவித்ததுண்டு.


என் அம்மாவுக்கு பக்தி மிக அதிகம்.நிறைய சுவாமி படங்கள் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் உடன் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு விடுவார்! எல்லா பூஜைகளும் மடியாக இருந்து முறைப்படி செய்வார். பத்து வயதிலேயே எனக்கு பல ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்தார்.


திருமணமானதும் எனக்கு அதுவே தொடர்ந்தது. என் மாமியாரும் மிக ஆசாரம். ரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், அம்பிகை என்று பல படங்கள் இருந்தது. தினமும் அன்ன நைவேத்யம் உண்டு.

என் கணவர் தவறாமல் இரு வேளையும் சந்தியாவந்தனம் செய்பவர். வெளிநாடுகளுக்கு சென்றால் கூட செய்யத் தவற மாட்டார்.

என் கணவர் வேலையில் இருந்தபோது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமான வீடு. வங்கியில் கொடுக்கப்படும் quarters  பெரிதாக  இருக்கும்.  சமையலறையை ஒட்டியுள்ள அறையில் வரிசையாக சட்டம் அடித்து படங்களை மாட்டுவோம்.

ஒவ்வொரு மாறுதலின் போதும் அந்தப் படங்களை கண்ணாடி உடையாமல் pack செய்வது என் கணவருக்கு படு challenge ஆன வேலை! பல இடங்கள் மாறியதில் படங்கள் வீணாகிக் கிழிந்து விட்டது.
அதன்பின் முக்கிய படங்களுடன் விக்ரகங்கள் வாங்கிக் கொண்டேன். அவை இடம் அடைக்காது.

மும்பையில் பெரிய அறை இல்லாததால் சிறு அலமாரியில்தான் வைக்க முடிந்தது. இப்பொழுது திருச்சியில் சுவாமிக்கு தனி அறை இருப்பதால் மிக வசதியாக பூஜை செய்ய முடிகிறது.

அத்தனை தெய்வங்களும் தங்க முலாம் பூசி வைத்துள்ளதால் எப்பவும் ஜொலிக்கும் அழகுடன் அணி வகுத்து நிற்பர் எங்கள் வீட்டு பூஜை அறையில்! தி

என் கணவர் பஞ்சாயதன பூஜை செய்வார்.
மஹாகணபதி ரூபமான சோணபத்ரம், அம்பிகையின் ஸ்வர்ணரேகா,விஷ்ணுவின் சாளக்ராமம், சூரியனின் ரூப ஸ்படிகம், சிவன் பாணலிங்கம் இவற்றுடன் விஷ்ணுபாதம்  இவற்றிற்கு தினமும் அபிஷேகம் உண்டு. பாலபிஷேகம் நானும் செய்வேன்.

என் கணவர் தினமும் ஸ்ரீருத்ரம், சமகம், பூஸுக்தம், ஸ்ரீஸுக்தம், துர்காஸுக்தம் சொல்லி அபிஷேகம்செய்து திரிசதி அர்ச்சனை செய்வார். பின் நிவேதனம். காலை 8 மணிக்கு ஆரம்பித்தால் பூஜை முடிய  11 மணி ஆகும்.

வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம், சனிக்கிழமை விஷ்ணு சஹஸ்ரநாமம், ஞாயிற்றுக் கிழமை சூரிய நமஸ்காரம் இவையும் உண்டு.
எங்கள் குலதெய்வம் ஸ்ரீமதுரவீர ஸ்வாமி. காஞ்சி மகாசுவாமிகள் சொன்னபடி இவர் உக்ரமான மதுரைவீரன் அல்ல..சாந்தமான மதுரவீரன் என்று அறிந்து ஆகம முறைப்படி பூஜைகள் நடை
பெறுகிறது. சமீபகாலமாக அவரது படமும் வீடுகளில் வைத்து வணங்குகிறோம்.

முடி இறக்குதல் போன்ற பிரார்த்தனைகளுக்கு சுவாமிமலை சுவாமிநாதனும், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதனும் உடனிருந்து அருள்தரும் குலதெய்வங்கள்!

ஆடிப்பிறப்பில் ஆரம்பித்து சித்திரை வருடப்பிறப்பு வரை அந்நாளைய முறைப்படி சமையல், பூஜை இன்றும் தொடர்கிறது!
நவராத்திரியில் பெரிய அளவில் கொலு வைப்பதுடன் தினசரி பூஜை செய்வேன். லலிதா, லக்ஷ்மி,துர்கா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம் இவற்றோடு காமாக்ஷி, மீனாக்ஷி, பாலா, அன்னபூரணி என்று எல்லா அம்மன்களின் அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்வேன்!தினமும் பாயசம், சுண்டல் நிவேதனம் உண்டு.

காஞ்சி மகானும், சீரடி, சத்யசாயி பாபாவும் எங்கள் குரு🙏அவர்கள் அருளால் என் வாழ்வில் நடந்த  சில அதிசய நிகழ்வுகளும் உண்டு

விடியற்காலை விளக்கேற்றுவது சுபிட்சம் தரும் என்பதால் காலை எழுந்தவுடன் விளக்கேற்றி சின்னக்
கண்ணனுக்கு பால் நிவேதித்த பின்பே காஃபி! மா

நேரமும் தினமும் வாசலில் விளக்கு
ஏற்றுவேன்.
எனக்கு விதவிதமாகக் கோலம் போடப்பிடிக்கும் என்பதால் சுவாமி அலமாரியில் ஒரு தட்டு அதற்காகவே பொருத்திக் கொண்டேன். கோலத் தட்டுகளை வாங்குவதுடன் நானே செய்து வைத்துள்ளேன்.

சகல தேவதேவியரும் அருட்காட்சி தருவர் என் சமையலறையில்!

ஹாலில் 32 கணபதி ரூபங்களின் போஸ்டரை வருபவர் அனைவரும் வணங்கிச் செல்வர்!

என் உள்ளம்  கவர் கள்வன் கண்ணனின் நின்ற கோலமும் ராதாகிருஷ்ண தோற்றமும் எங்கள் ஹாலுக்கு extra அழகைக் கொடுப்பவை! மொத்தத்தில் எங்கள் வீட்டில் திரும்பிய இடமெல்லாம் தெய்வங்களின் காட்சி!

நாங்கள் வெளியூர் செல்லும்போதெல்லாம் எங்களுக்கு கையசைத்து விடை கொடுத்து வழியனுப்புபவர் என் குரு சாய்ராம்!

மனிதர்களிடம் மரியாதையுடன் பேசும் நம்மால் இறைவனிடம் மட்டுமே ஒருமையில் பேச முடியும். 'ஏண்டா கண்ணா..எனக்கு இந்த கஷ்டம்'...
'முருகா..உன்னை நம்பினேனே..என்னை இப்படி கைவிட்டுட்டயேடா'
'அம்மா தாயே பரமேஸ்வரி..நீதாண்டியம்மா என்னைக் காப்பாத்தணும்' என்றெல்லாம் உரிமையுடன் பேசமுடியும்.

எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும்  நிறைவான வாழ்க்கையைக் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி கூறுவதே நாம் செய்யும் ஆராதனைகள். எல்லாம் அவன் செயல் என்றிருந்தாலே அவன் நம் தீவினை போக்கி நல்லன நடக்க அருள்புரிவான்🙏

மருத்துவர்_தினம்



எனக்கு இரண்டு மகன்களுக்குப் பின் பெண் பிறந்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை! அப்பவே முடிவு செய்தேன் அவளை ஒரு மருத்துவராக்க வேண்டுமென்று.
இரண்டு வயது முதலே அவள் தன் அண்ணாக்களுடன் பள்ளி செல்வேன் என்று அடம் பிடிப்பாள் ஒரு பையில் சிலேட்டு, அவளுக்கு வாங்கிக் கொடுத்த புத்தகம் போட்டுக் கொண்டு அவர்களுடன் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து விடுவாள்.அவளை இறக்குவதற்குள் போதும் என்றாகிவிடும்!
படிப்புடன் டான்ஸ், டிராமா, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிக் கொண்டு வருவாள். சிறு வயது முதலே அவளுக்கு டாக்டராக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வேன்.    
நாங்கள் கோலாப்பூரில் இருந்தபோது +2 படித்தாள். நல்ல மார்க்குகள் எடுத்து மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் (Grant Medical college)ல்  இடம் கிடைத்தது.
மும்பையில் 150வருடங்களுக்கு மேல் பழமையான, நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. அங்குதான் முன்னாபாய் M.B.B.S. படப்பிடிப்பு நடந்தது.
அவளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு நான்தான் தினமும் கவலைப்பட்டேன். Dead body பார்த்து பயந்து விடுவாளோ
...ragging எப்படி இருக்குமோ...
உடன் படிப்பவர்கள் எப்படியோ..
என்று ஒரே டென்ஷன்!
அப்பொழுதெல்லாம் மொபைல் கிடையாது. அடிக்கடி ஃபோன் செய்யவும் முடியாது.  ஒரு மாதத்துக்குப் பிறகு call செய்தவள் படிப்பு மிக interestingகாக இருப்பதாகச் சொன்னாள்.
...Dead body பார்த்து பயந்தியா...
..சே..எனக்கென்ன பயம்? நம்ம உடம்புக்கு உள்ளே இருக்கற பார்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்...
...யாராவது பயப்பட்டாளா?...
...ஆமாம்மா. ஒரு பையனும், 2 பெண்களும் பயந்து வீட்டுக்கு போய்ட்டா.பாவம்...
...தமிழ்ப் பெண்கள் இருக்காளா?..
...இல்ல. நான் மட்டும்தான். எல்லாரும் என் நீள தலைமுடியைப் பார்த்து ஆச்சரியப் பட்றா! தொட்டு தொட்டு பாக்கறா!...
...அப்றம் கேளேன். அனாடமி ஆசிரியர் எல்லா மாணவிகளிடமும் ஜொள் விட்டதோடு, என்னிடம் ‘ஆத்தி க்யாகண்டாலா?’
(கண்டாலாவுக்கு வருகிறாயா?) என்று கேட்டதும், அங்கு ‘டிசக்ஷன்’ செய்யவிருந்த பிணத்தைக் கண்டதைவிட நடுங்கி விட்டேன்!... 
...நீ என்ன சொன்ன?...
...நான் என்ன சொல்லற்து? சீனியர்ஸ் சொன்னா 'அவர் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாம். Girlsகிட்ட அப்டித்தான் அசடு வழிவாராம்!...
...அப்பறம் ragging பண்ணினாளா?...
...இரவு 8 மணிக்கு ஹாஸ்டலிலிருந்த எங்களை சீனியர்கள் கூப்பிட்டு அனுப்பினா. 7, 8 பேராக கிளம்ப, வார்டன் கேட்க, நான் முந்திரிக் கொட்டை மாதிரி சீனியர் ரூமுக்குப் போறதா சொல்லிட்டேன்.
‘நோ ராகிங்; அறைக்குத் திரும்புங்கள்’ என்று வார்டன் சொல்லிவிட, வந்து ஜாலியா தூங்கிட்டோம்...
...சீனியர்கள்  நடந்ததை அறிந்து இரவு 2 மணிக்கு வந்து, என்னை மட்டும்  கூப்பிட்டுன் போனா. ஆட்டம், பாட்டம் வேறு! ‘தோட்டத்திலுள்ள செடி, மரங்களை எண்ணிட்டு வா’ ன்னு  துரத்த, நானும் கர்ம சிரத்தையாக எண்ணிண்டு வந்து சொன்னேன்!
...‘சே! உனக்கு அறிவில்லை? மரம், செடியெல்லாம் எண்ணினா 
எப்படி டாக்டராகற்து?’ என்று கேலி செய்ய, போறும்னு ஆயிடுத்து போ...
அதன்பின் அந்த சீனியர்களே இவளுக்கு நண்பர்களானது வேறு விஷயம்.
முதல்முறையாக பிரசவத்தை நேரில் பார்த்த பலரும்...முக்யமாகப் பையன்கள்..மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்கள் என்பாள். அம்மாவைக் கோபிக்கவே மாட்டோம்னு சொல்கிறார்கள்..என்றாள்.
அதன்பின் என் கணவர் வங்கிப்பணியில் VRS  வாங்கிக்கொள்ள நாங்கள் மும்பை சென்று விட்டோம். ஒவ்வொரு வீக்என்டும் 10 ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்கு அழைத்து வருவாள். இட்லி,தோசை, வடை என்று விதவிதமாக சமைத்துப் போடுவேன்.
அவள் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றபோது அவளைவிட நான்தான் அதிக சந்தோஷ
மடைந்தேன். எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர். அன்று நான் அவளை ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்.
ஒருமுறை அவள் மருத்துவராக ICUவில் பணிபுரிந்தபோது  இரவு ஒருவர்  இறந்துவிட,  தூக்கத்தை அடக்கமுடியாமல்  அவரை அகற்றியதும் அதே bedலேயே தூங்கினேன் என்பாள்! டாக்டர்களின் நேரம் காலமில்லாத தொண்டு ஈடில்லாதது!
நான் histerectomy
செய்துகொண்டபோதும், காலில் varicose vains அறுவை சிகிச்சையின் போதும்  என் பெண் உடனிருந்தது எனக்கு தைரியம் கொடுத்தது.
காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து, ஆணும் பெண்ணுமாக இரு அழகுக் குழந்தைகளுடன் சிறப்பான இல்லறத்தை இனிமையாக நடத்தும் என் செல்ல மகள் Dr.கிரிஜாவுக்கும், அன்பான மாப்பிள்ளை Dr.விஜய்க்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்!!

Monday, 1 July 2019

சங்கீத அனுபவம்


நான் கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னையில் சங்கீதம் கற்றுக் கொண்டேன். என் பாட்டு வாத்யார் திரு.K.S.கிருஷ்ணன் என்று பெயர். ஆல் இண்டியா ரேடியோவில் அடிக்கடி பாடுவார். அவர்  மதுரைமணி ஐயர் பாணியில், அவரைப் போலவே பாடுவார். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நிறைய சங்கதி சொல்லிக் கொடுப்பார். இப்பொழுதெல்லாம் இரண்டு சங்கதிக்கு மேல் யாரும் பாடுவதில்லை.
அவர் தெலுங்கு பேசுபவர் என்பதால் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அர்த்தம் சொல்லிவிட்டே பாட்டு சொல்லிக் கொடுப்பார். தாளம் தப்பினாலோ, ராகம் மாறினாலோ திரும்பத் திரும்ப பாடச் சொல்லி சரியாகும்வரை சொல்லிக் கொடுப்பார்.
நகைச்சுவையாக நிறைய விஷயங்கள் பேசுவார். 'மீனாக்ஷி மேமுதம் தேஹி' என்ற தீக்ஷிதர் கிருதி சொல்லிக் கொடுத்தபோது, தீக்ஷிதர் தம் இறுதி நேரத்தில் இந்த கீர்த்தனையை சிஷ்யர்களைப் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டே உயிர் நீத்தார் என்றார்.
சரணத்தில்..மதுராபுரி நிலயே மணி வலயே..என்ற வரிகளை சங்கதியுடன் சொல்லிக் கொடுத்தவர் 'இந்த வரிகளை நிறைய சங்கதியுடன் பாடுவது ஏன் தெரியுமா?'என்றார். எங்களுக்கு புரியவில்லை.
'பாடகருக்கு கொடுக்க வேண்டிய சம்பாவனை இன்னும் வரவில்லை என்பதை கச்சேரி நடத்துபவர்கள் புரிந்து கொள்ளவே ..மணி(பணம்) வ(ர)லயே..என்று பல சங்கதி
களுடன் பாடுவதன் அர்த்தம் 'என்று சொல்லி சிரித்தார். 'ஆஹா.நல்ல ஐடியா' என்று நாங்களும் ரசித்து சிரித்தோம்!
என் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது திருப்பாவை சொல்லிக் கொடுப்பேன். அந்த வயதிலேயே அத்தனையும் அவனுக்கு மனப்பாடம். போட்டிகளில் பரிசுகளும் வாங்கியிருக்கிறான். அவன் என்னிடம் முப்பதாம் பாடலில் வரும் 'சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்' என்ற வரியைச் சொல்லி 'ஏம்மா.இதை எழுதின ஆண்டாள் ஏன் எல்லாமே தப்புனு சொல்லிருக்கா?' என்று  குழந்தைத்தனமாக ஒரு கேள்வி கேட்டானே பார்க்கணும்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.  பின் அதன் பொருளை 'முப்பது பாடலும் தப்பில்லாமல் சொல்பவர்களுக்கு நாராயணர் அருள் பண்ணுவார்னு அர்த்தம்' என்று சொல்லிக் கொடுத்தேன். இப்பவும் இந்த விஷயத்தை சொல்லி அவனை பரிகசிப்போம்!
நாம் எந்த மொழியில் பாடினாலும் அதன் அர்த்தத்தை ஓரளவு தெரிந்து கொண்டு பதங்களை சரியாக உச்சரித்துப் பாடினால் நாமும் பக்தியுடன் இசையோடு ஒன்றிக் கேட்பவரையும் மகிழ வைக்கலாம்.