Bala Hari அவர்கள் கொடுத்த தலைப்புக்கான சிறுகதை “ஆசை”
ஆறுமாதங்களுக்குமுன்பு....
'ராசாத்தி! அடுத்த தெருவில ஒரு சாமி வந்திருக்காராமில்ல. அவரு கைரேகை,
சோசியம், சித்த மருந்து எல்லாம் தெரிஞ்சவராம். உன் புள்ளைக்கு சளி ரொம்ப நாளா இருக்குன்னியே,
காட்டிட்டு வரலாம் வா'.
'அப்படியா. அவரு எவ்வளவு பணம் கேப்பாரோ? என்கிட்ட 50 ரூவாதான் இருக்கு
சரசு'.
'எடுத்துக்கிட்டு வா. கூடக் கேட்டாருன்னா அப்றம் கொடுத்துக்கிடலாம்'.
இருவரும் குழந்தையுடன் அவரைப் பார்க்க சென்றனர். நாடி பிடித்து பார்த்தவர்
சளி எவ்வளவு நாளாய் இருக்கிறது, என்ன சாப்பாடு கொடுக்கிறாய் என்றெல்லாம் கேட்டுஒரு
கஷாயமும், சூரணமும் கொடுத்தார். ஐந்து நாட்கள் கொடுத்துவிட்டு, பிறகு வரச் சொன்னார்.
'பணம் எவ்வளவுங்க சாமி?' ராசாத்தி கேட்டாள்.
'பத்து ரூபாய் கொடு'.
வெளியே நல்ல கூட்டம். ஏழைகள் முதல் பணம் படைத்தவர்கள் வரை இருந்தார்கள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறை; பிரச்னை; வியாதி. இவர் எல்லாவற்றிலும் தேர்ந்தவர் என்பதால்
மக்கள் கூட்டமும் அதிகம்.
அது ஒரு நாகரிகத்தின் சாயல் அதிகம் படாத, இயற்கை அழகை இன்னும் இழக்காத
சிறு கிராமம்.பெரும்பான்மையோரின் தொழில் விவசாயம். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறு பள்ளியும்,
ஒரு சிறு ஆஸ்பத்திரியும் மட்டுமே உண்டு.அக்கிராமக் குழந்தைகளுக்கு முக்கியமாக பெண்
குழந்தைகளுக்கு உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு வழியில்லை என்று அவர்கள் கூறியபோது அவருக்கு
மிக வருத்தமாக இருந்தது.
சாமியப்பன் இவ்வூருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அந்தத் தெருவில்
ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறார். அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் ஆர்வமாக
விசாரித்தபோதும் எதுவும் சொல்லாமல் 'தான் அமைதியாக இருக்க விரும்பியே இங்கு வந்துள்ளதாகவும்,
நாட்பட்ட நோய்களையும் தம்மால் குணப்படுத்த முடியுமெ'ன்றும் சொன்னார். மேலும் அவர் ஜோசியம்,கைரேகை
பார்த்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே சரியாக நடக்க, மக்கள் அவரை நாடி வருவது அதிகமாயிற்று.
அவர் அதிகம் யாருடனும் பேசமாட்டார். தினமும் இருவேளை பூஜை. மிக எளிய உடை.
தானே உணவு சமைத்து சாப்பிடுவார். ஒரு சாமியார் போன்று இருக்கும் அவருக்கு சாமி என்ற
பெயரும் பொருத்தமாகவே இருந்தது!
தன்னிடம் வைத்தியம், ஜோசியம் பார்ப்பவர்களின் தகுதிக்கேற்றபடி பணம் கூடவோ,
குறைத்தோ வாங்கிக் கொள்வார். வசதி உள்ளவர்களிடம் சற்று அதிகமாகவே வசூல் செய்வார். ஆனால்
அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தபின்பே வைத்தியம்! மாலையில் அவ்வூர் குழந்தைகளுக்கு பாடம்
சொல்லித் தருவதுடன், இறைவனைப் பற்றியும், இறையடியார் பற்றியும், திருக்குறள் கதைகளையும்
சொல்வார்.
அவருக்கு குடும்பமோ, குழந்தைகளோ உண்டா, இங்கு வந்து தனிமையில் வாழ்வது
ஏன் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததே இல்லை.மாதம் ஒருநாள் பக்கத்திலுள்ள நகரத்திற்கு
சென்று வருவார்.
மூன்றுவருடத்திற்குப்பிறகு...
அந்த கிராமம் மட்டுமன்றி பக்கத்து கிராமங்களிலிருந்தும் நிறைய பேர் வர
ஆரம்பித்தனர். சில நாட்கள் அவர் தூங்குவது 2,3 மணி நேரங்கள் மட்டுமே! மொத்தத்தில் அக்கிராம
மக்கள் அவருடன் மிகவும் ஒன்றிவிட்டனர்.
நாட்கள் செல்லச்செல்ல அவ்வூர் மக்களுக்கு அவர் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது.அமைதியைத்
தேடி வந்தவருக்கு பணத்தின் மேல் ஆசை ஏன்? எல்லோரிடமும் பணத்தை வாங்கி யாருக்கு கொடுக்கிறார்?
ஆனாலும் அவரால் பல நன்மைகள் இருந்ததால் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை.
அன்றும் வழக்கம்போல் அவர் மாலை கதைகள் சொல்ல ஆரம்பித்தார்.சுவாரசியமாக
குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படி கதை சொல்வதால் ஊரில் இருக்கும் சிறியவர்,பெரியவர்,குழந்தைகள்
என்று அனைவரும் கூடிவிடுவர்.
திருக்குறள் அதிகாரத்தில் அன்று அவாவறுத்தல் என்பதைப் பற்றி பேசியவர்
ஆசைகளை அறவே நீக்கி இறைவனை அடையும் வழியை நாட வேண்டும்.ஆசையே துன்பங்களுள் பெரிய துன்பம்.
ஆசையினாலே நாம் அடுத்தவரை வஞ்சிக்கிறோம். தேவையற்ற ஆசைகளைத் துறந்தாலே இன்ப வாழ்வு
வாழமுடியும் என்று ஒரு சிறு கதையையும் கூறி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் விருட்டென்று எழுந்தான்.
'சாமி..உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?'
'தாராளமா கேளுப்பா'.
'எங்களுக்கு ஆசை கூடாதுனு சொல்ற நீங்க எங்ககிட்ட பணம் வாங்கி என்ன செய்யறீங்க?
அதுவும் ஆசைதான?யாருமே உங்களுக்கு இருக்கிறதா தெரியல. இந்த பணம் உங்களுக்கு எதுக்கு?'
‘அது பற்றி நீங்க சீக்கிரம் தெரிஞ்சுப்பீங்க.இப்போ போய்ட்டு வாங்க'.
அதன்பின் மேலும் ஆறு மாதங்கள்
கடந்தன. சாமியப்பனை பார்க்க சில ர் வந்தனர். அவருடன் சென்று ஊருக்கு நடுவில் ஓரிடத்தில்
ஒரு உயர்நிலைப்பள்ளி கட்டுவது பற்றி முடிவு செய்து மறுநாள் முதல் வேலைகளை ஆரம்பித்தனர்.
இதைக்கண்ட கிராம மக்களுக்கு ஆச்சரியம்!
'என்னங்க சாமி இதெல்லாம்'
'இங்கு பன்னிரண்டாம் வகுப்புவரை இந்த ஊரிலேயே எல்லாரும் படிக்க ஒரு பள்ளி
வரப் போகிறது. பெண்களுக்கு கல்வி மிக அவசியம். இந்த கிராமத்துப் பெண்குழந்தைகள் மேலே
படிக்க வெளியூருக்கு போக முடியவில்லை.இனி எல்லாரும் இங்கேயே படிக்கலாம்'.
'யாரு சாமி இம்புட்டு பணம் போட்டு பள்ளிக்கூடம் கட்டறாங்க?'
'இது உங்கள் பணம்தான். நான் பணத்தாசை
பிடித்தவன் என்று நீங்கள் கேட்டீர்களில்லையா! உங்களிடம் நான் வாங்கிய பணம்தான் இந்தப்
பள்ளியை உருவாக்கப் போகிறது'.
ஆச்சரியத்தில் மலைத்து நின்று விட்டனர் அக்கிராம மக்கள். இவரையா தப்பா
நினைத்தோம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும்.
'சாமி..உங்களைத் தப்பா நினைச்ச எங்களை மன்னிச்சுடுங்க சாமி'.
'நான் கிளம்பறேன். இன்னும் சில மாதங்களில் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்படும்.
எல்லா ஏற்பாடுகளும் நான் செய்து விட்டேன். நீங்கள் எல்லாரும் நன்றாகப் படித்து உங்கள்
வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்'என்று குழந்தைகளைப் பார்த்து சொன்னார்.
இதைக்கேட்ட அம்மக்கள் கண்கள் கலங்கியது. அவரைப் பார்த்து கைகளைக் கூப்பினர்.
'சாமி உங்க குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து எங்களோடவே இருங்க'.
'எனக்கு மனைவி இல்லை. என் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள்.
அவர்கள் அனுப்பும் பணத்தில் இது போன்ற நல்ல காரியங்களை செய்து நம் நாட்டை உயர்நிலைக்கு
கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை. அதைத்தான் நான் செய்கிறேன்'.
'நீங்களும் உங்க பிள்ளைங்ககிட்ட போறீங்களா சாமி?'
'அடுத்து இது போன்ற ஒரு ஊருக்கு
சென்று என் பணிகளைத் தொடரப் போகிறேன்'.
கையில் பெட்டியுடன் தன் ஆசையை நிறைவேற்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை
நாடிச் சென்றார் சாமியப்பன்!
No comments:
Post a Comment