Tuesday 11 December 2018

கொலு

எனக்கு சின்ன வயதிலிருந்தே கொலு வைக்க மிகவும் ஆசை.என் பிறந்த வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை. திருமணத்திற்குப் பின் விதவிதமாய் கொலு வைக்க வேண்டும் என நினைத்திருந்த என் ஆசையில் மண்!

என் புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் எனக்கு மாமனார் இல்லாததால் என் மாமியார் என் நாத்தனார் திருமணம் ஆனபின் கொலு வைப்பதில்லை.
எனக்கு திருமணம் ஆன சில மாதங்களிலே வங்கி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற என் கணவருக்கு கண்ணன் பிறந்த மதுராவுக்கு மாற்றலாகியது. ஹிந்தி என்று தமிழில் மட்டுமே பேச, எழுதத் தெரிந்த நான் அங்கு சென்று திண்டாடியது ஒரு தனிக்கதை!

35 வருடங்களுக்கு முன் அந்த ஊரில் தமிழர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. குமுதம்,  விகடன் வாங்கக்கூட ஊரை விட்டுத் தள்ளியிருந்த கன்டோன்மென்ட்டுக்கு போக வேண்டும். நான் கொலு வைத்தால் யாரைக் கூப்பிடுவது? துலுக்கன்சாமந்திப்பூ மட்டுமே கிடைக்கும் ஊரில் எதைப் போட்டு அன்னையை பூஜிப்பது? அப்பவே என் கொலு ஆசை காணாமலே போய்விட்டது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பின் தமிழ்நாட்டுக்கு மாறுதல். என் உள்ளே ஒளிந்திருந்த கொலு ஆசை மீண்டும் தலை தூக்கியது. குழந்தைகள் அடுத்தவர் வீட்டு கொலுவைப் பார்த்து நாமும் வைக்கலாமே என்று ஆசைப்பட்டார்கள்.அச்சமயம் என் கணவருக்கு மாற்றல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வர, கொலுபொம்மைகள், படிகள் என சாமான்கள் சேர்க்க பயம்! என் பெண்ணும், பிள்ளையும் வீட்டில் இருக்கும் ஷோகேஸ் பொம்மைகள், தங்கள் பள்ளியில்  க்ராஃப்ட் வகுப்பில் முட்டை ஓடு, பிட் துணிகள், அட்டை போன்ற தேவையற்ற பொருள்களில் (art from waste) செய்த பொம்மைகளை,  தினசரிகள், சின்ன பலகைகளை படிகளாக அடுக்கி,அதில் ஒரு அங்கவஸ்திரத்தை விரித்து கொலு வைத்ததோடு, தம் வகுப்பு ஆசிரியைகளையும் கூப்பிட்டு விடுவார்கள்!

என் ஆசார மாமியாரோ 'முட்டை ஓடு பொம்மையெல்லாம் நவராத்திரி கொலுவில் வைத்தால் மகாபாவம்' என்பார்! எனக்கோ தர்மசங்கடம்!

வந்த ஆசிரியைகளோ 'ஆஹா..குழந்தைகள் அழகாக கொலு வைத்திருக்கிறார்களே' என்பார்கள்! வந்தவர்களுக்கு காபியும், சுண்டலும் செய்வது என் வேலை!

கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் இதுமாதிரி  கொலுதான் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன்பின் பத்து வருடங்கள்  மும்பைவாசம்! அங்கு ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்திக்கும் வாங்கும் எங்கள் வீட்டு பிள்ளையார்களுக்கு விசர்ஜன் கிடையாது! கொலுவிற்காக பத்திரப் படுத்தப்படும்! ஒருமுறை கொலுவில் ஒரே பிள்ளையார் மயமாக இருந்தது!கொலு மூன்றுபடிதான்..சுற்றி பார்க், கோலம் இவைதான் நிறைய!

அச்சமயம் என் தோழி ஒரு மரப்பாச்சி ஜோடியைக் கொடுத்து என்னை பெரிதாக கொலு வைக்கச் சொன்னார். அதன்பின்தான் அழகான பொம்மைகள், அமைப்பான படிகள், விளக்கு அலங்காரங்கள் என் கொலுவை மெருகேற்றின.
நான் சென்று ரசித்த பல நாடுகளின் பொம்மைகளோடு, என் பெண், பிள்ளைகள் எந்த ஊருக்கு சென்றாலும் வாங்கிவந்து தரும் பொம்மைகள் என் கொலுவுக்கு மேலும்  அழகு சேர்க்கின்றன.

என்னோடு இணைந்து என் துணைவர் செய்யும் பூக்கள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்கள் கொலுவுக்கு 'பளிச்' லுக் தருபவை! நாம் தூக்கி எறியும் சாமான்கள் என் கைவண்ணத்தில் வித்யாசமான பொம்மைகளாகக் காட்சி தரும்! என் பேரன், பேத்திகள் சாக்லேட் பேப்பர்களைக் கூட பத்திரப் படுத்தி என்னிடம் கொடுத்து 'நவராத்திரிக்கு பொம்மை பண்ணு பாட்டி' என்பார்கள்!

2016ம் ஆண்டு என் கொலு மங்கையர்மலர் கொலுப் போட்டியில் பரிசு பெற்றபோது என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.இதை என் கொலுவுக்கு கிடைத்த ஒரு சிறப்பான அங்கீகாரமாக எண்ணுகிறேன்.

இந்த வருட கொலுவில் நான் உருவாக்கியிருப்பது முத்தேவியரை! இதில் நடுநாயகமாகக் காட்சி தரும் தேவி எங்கள் ஊரான ஆடுதுறை பெருமாள் கோயிலில் அருளாட்சி செய்யும் அழகுசடைமுடி அம்மன்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணனாக கண்கவர் அழகுடன் காட்சி தருவதும் இவ்வருட கொலுவின் சிறப்பு.

No comments:

Post a Comment