Friday, 8 May 2020

கனவு நனவானது!


என்னுடைய  டீன்ஏஜில் பிரபல எழுத்தாளர் திரு மணியனின் பயணக் கட்டுரைகளை படித்து பாரிஸ், சுவிட்சர்லாந்து,ரோம் போன்ற இடங்களுக்கு போக ஆசைப்பட்டு கனவு கண்டவள் நான்! நடுத்தர குடும்பவாசியான  எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சமும் நினைத்துக்  பார்த்ததில்லை !பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் ஜெர்மனிக்கு  வேலைக்கு சென்றபோது அங்கு சென்ற  நான் அவனிடம் 'எனக்கு  சுவிட்சர்லாந்தை பார்க்க வேண்டும்.ஆல்ப்ஸ் மலையில் நடக்க வேண்டும்' என்று கேட்டேன். என் மகனும்  காரிலேயே எங்களை அழைத்துச் சென்றான். அங்கு ஜூரிச்சில் அவன் நண்பன் இருந்ததால் அங்கு  தங்கினோம். மறுநாள் ஐரோப்பாவின் மிக உயரமான ஜுங்க்ப்ராஜோக் (Jungfrajoch) சிகரத்திற்கு சென்றோம்.ஆஹா...என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

 ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல்

என்று பாடியபடியே என் கணவரைப் பார்த்தேன். அவரோ இயற்கை அழகில் சொக்கிப் போயிருந்தார்.அங்கிருந்து வரும் வழியில் மிகப் பெரிய அழகிய ட்ரம்மல்பேக் ( Trummelbech ) நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தோம். அந்த நீர்வீழ்ச்சியை பல இடங்களில்  அதன் ஒவ்வொரு அழகையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார்கள்.அங்கிருந்து ஜூரிச்சிற்கு ஸஸ்டேன் பாஸ் (Susten Pass) வழியாக வந்தோம்.மலைப்பாதை ஒற்றையடிப் பாதை போல இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சுற்றிலும் பளபளவென்று ஒரு வெள்ளிமலையில் செல்வது போல இருந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்த நாங்கள்  வழியில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குள் குளிர் நடுக்கி விட்டது. பாதிவழி வந்தபின்  பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பாதை மூடப்பட்டு விட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் அந்தப் பாதையில் வரக் கூடாதாம். திரும்பிப்  போகும்படி சொன்னார்கள்.சுற்றிலும் காடு மாதிரி  மரங்கள். அத்தனையிலும் பனி உறைந்து இருந்தது.தெருவில் ஈ காக்கையைக்  காணோம்! சற்று தொலைவில் ஒரு ஹோட்டல் தென்பட,  அங்கு நின்றிருந்த கார்கள் பாதிக்குமேல் பனி மூடியிருந்தது. ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்று சொல்லிவிட எங்களுக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை.நேரம்  ஆக ஆக இருள் கவிந்து ,ஸ்னோவினால் எங்கள் காரின் சக்கரம் மறைய ஆரம்பித்து விட்டது. என் கணவரும், நானும் 'இனி என்ன செய்வது? திரும்ப வந்த   வழியிலேயே சென்று விடுவோம்' என்றோம்.  மலைப்பாதை. வேறு போக்குவரத்து இல்லாததால் வழி பூராவும் ஒரே பனி படர்ந்து வழியே தெரியவில்லை.என் மகனோ அந்த நேரத்திலும்  கூலாக 'கவலைப் படாதம்மா.வழி மறைந்து விட்டால் காரில் ஹீட்டரை போட்டு விட்டு தூங்கலாம்.காலை  கிளம்பி செல்லலாம்'என்றான்! ஆள் அரவமில்லாத அந்தகாரத்தில் அதுவரை ரசித்த பனி அச்சுறுத்தும் அரக்கன் போல தெரிந்தது. நானோ எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தேன். ஒருவழியாக கீழே வந்து வேறு வழியில் ஜூரிச் சென்றோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதம். ஆனாலும் நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். அதன்பின் பலமுறை நான் ஜெர்மனி சென்றாலும் இந்த புகைப்படத்தைக் காணும்போது அந்த மகிழ்ச்சியும்,திகிலும் கலந்த அனுபவம் இன்றும் இனிக்கும் நினைவுதான்!

No comments:

Post a Comment