Wednesday, 12 December 2018

சர்வமும் தரும் சனி பகவான்

சர்வமும் தரும் சனி பகவான்

சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. எதிராளிகளை கோபத்துடன் திட்டும்போது 'சூரியன், சந்திரன்' என்றெல்லாம் கூறாது 'சனியனே' என்று வைகிறோம். ஆக, நம்மை அறியாமலே நாம் சனியின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம்!

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும் சனி அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ந்து நன்மை தீமைகளை உண்டாக்குகிறார்.

ஒருவர் பிறந்த ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரித்தால் அது 'அர்த்தாஷ்டம சனி'. பிறந்த ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலம் 'கண்டச் சனி' எனப்படும். எட்டாம் ராசியில் இருந்தால் 'அஷ்டமத்துச் சனி'. பிறந்த ராசியிலிருந்து 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரித்தால் 'ஏழரை நாட்டுச் சனி'. முதல் சுற்றில் 'மங்கு சனி' எனப்படும். அப்பொழுது மிகவும் கஷ்டப்படும் நிலை வரும். அடுத்த சுற்று 'பொங்கு சனி'. பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேரும். மூன்றாம் சுற்று 'மரணச் சனி' எனப்படும்.

சனியின் பிடியில் அனைவரும் அகப்பட்டே ஆக வேண்டும்! இதற்கு சிவபிரானும் விதிவிலக்கல்ல! சனியின் தாக்கத்தாலேயே சிவபெருமான் பிச்சை எடுத்தார்; ராமபிரான் சீதையைப் பறிகொடுத்து வாடினார்; சந்திரமதியை அரிச்சந்திரனே வாளால் வெட்டும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனவாசம் சென்றது சனியினாலேயே. ராவணன் நவ கிரகங்களை படிகளாக்கி மிதித்தபோது சனியின் பார்வை பட்டதாலேயே கேடு காலம் ஆரம்பித்து, மரணமடைந்தான். நளனோ மனைவியை இழந்து, சுய உருவமும் இழந்து பைத்தியம் போல திரிய, "நீ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடு" என்று நாரதர் சொன்னதற்கிணங்க, அவன் திருநள்ளாறு சென்று வழிபட, சனியும் அவனை விட்டு விலகி, "நளராஜனே! உன் சரிதம் படித்து, நள்ளாறு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் எத்துன்பமும் ஏற்படாது" என்றருளினார்.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த      நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.

சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் தரிசனம் தரும் விஸ்வரூப சர்வ மங்கள் சனீஸ்வர பகவான் நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தந்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை துடைத்தெறிகிறார்.

மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்!

சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!

சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.

சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.

சனி காயத்ரி:
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

எளிய 'சனிப்போற்றி" துதி:

முனிவர்கள் தேவர் ஏனை
மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன்
மகிமையல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே!
கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே உனைத் துதித்தேன்
தமியனேற்கருள் செய்வாயே!
நீரினை உண்டெழு மேக வண்ணா போற்றி!
நெடுந்தவத்தில் உறு கமலக் கண்ணா போற்றி!
சூரியன் தன் தவத்தில் வருபாலா போற்றி!
தூய நவக்கிரக்த்துள் மேலா போற்றி!
காரியெனும் பேர் கொள் உபகாரா போற்றி!
காசினியில் கீர்த்தி பெற்ற தீரா போற்றி!
மூரி கொளும் நோய் முகவா முடவா போற்றி!
முதுமணிகள் முண்டகத்தாள் போற்றி! போற்றி!

இந்தநாள்...இனியநாள்

இந்தநாள்...இனியநாள்!!

என் பேத்திகள் தாம்பரம் சங்கரா குளோபல் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவள் ப்ரீத்தி ஆறாம் வகுப்பு; சின்னவள் ப்ரியங்கா UKG.

நேற்று அவர்கள் பள்ளியில் LKG, UKG குழந்தைகளுக்கு Grand-Parents day நடந்தது. அதற்காகவே நாங்கள் திருச்சியிலிருந்து வந்தோம்.
என் பேத்தி ப்ரியங்கா ஹிந்தி பாட்டுக்கு  நடனம் ஆடியதோடு, தாத்தா பாட்டி பெருமை பற்றி  சில நிமிடங்கள் பேசினாள்.

LKG, UKG குழந்தைகள் அத்தனை பேரும் ஏதாவது ஒரு ப்ரோக்ராமில் இருந்தார்கள். அழகழகாக ராதா கிருஷ்ணன் உடை, காக்ரா சோளி என்று வண்ணமயமாகக் காட்சியளித்த குட்டிகளின் அழகு மெய்மறக்கச் செய்தது. அவர்களின் சந்தோஷம், கோபம், சிரிப்பு, பயம் என்று ஒவ்வொரு உணர்வும் அற்புதம் என்று எண்ணுவேன்! நடனம் ஆடும்போது அவர்களின் ஒவ்வொரு பாவமும் அழகு!

இது தாத்தா பாட்டிகளுக்கான விழாவாச்சே? நிகழ்ச்சி நடத்தும் ஆசிரியை  வந்திருந்தவர்களைப் பார்த்து 'இன்று குழந்தைகளைப் போல தாத்தா பாட்டிகள் ஸ்டேஜில் வந்து விளையாட வேண்டும்' என்று சொல்ல, 'தாத்தா பாட்டி' என்று எல்லா குட்டிகளும் கோரஸாக பாடினார்கள்!!

முதலில் தாத்தாக்களுக்கான போட்டி.'எல்லா தாத்தாக்களும் மேடைக்கு வரவும்' என்று அழைக்க,  என் கணவர் முதல் ஆளாக மேடைக்கு சென்றார்! என் கணவர் எப்போதுமே எங்கள் பேரன், பேத்திகளுக்கு சரியாக ஓடிப் பிடித்து, ஏறி இறங்கி விளையாடுவார்! இங்கு என்ன விளையாட்டோ என்று எனக்கு ஒரே டென்ஷன்!

'பலூன் உடைக்கும் போட்டி' என அறிவித்த ஆசிரியை எல்லாருக்கும் 2 பலூன்களைக் கொடுத்து, 'தன் பலூனை உடைக்காமல் மற்றவர் பலூன்களை உடைக்க வேண்டும். கடைசி வரை பலூன் கையிலிருப்பவரே வின்னர்'என்று அறிவித்தார்!

ரெடி என்றவுடன் அத்தனை தாத்தாக்களும் அடுத்தவர் பலூனைக் குறிவைத்து ஓடி ஓடி உடைக்க, பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கோ ஒரே வேடிக்கையாக இருந்தது! என் கணவரின் வேகம் பார்த்து அந்த ஆசிரியை 'most energetic தாத்தா' என்று பட்டம் கொடுத்து பாராட்டினார்.என் பேத்திகளுக்கோ செம குஷி!

பரிசைப் பெற்ற இன்னொரு தாத்தா சாமர்த்தியமாக இரு பலூன்களையும் ஒரே கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் அடுத்தவர் பலூன்களை அநாயாசமாக உடைத்துவிட்டார்! இந்த ட்ரிக் வேறு யாருக்கும் தெரியவில்லை!

அடுத்து தாத்தா பாட்டி இருவருக்குமான Balls and basket போட்டி! தாத்தாக்கள் கையில் கூடை வைத்திருக்க, பாட்டிகள் பந்துகளை ஒவ்வொன்றாக எடுத்து கூடையில் தூக்கிப்போட, எதிரிலுள்ளவர்கள் அவற்றை கீழே விழாமல் பிடிக்க வேண்டும்! இதில் எங்களுக்கு பரிசு கிடைத்தது.

இவை தவிர, பல்லாங்குழி, தாயக்கட்டம்,  பரமபதம் என்று பழங்கால விளையாட்டுக்கள்! மொத்தத்தில் வந்திருந்த அத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் போட்டியில் வென்ற பரிசுகளுடன், நினைவுப் பரிசும் உண்டு.

மேடையில் ஏறி பரிசுகளைப் பெற்றபோது, சிறுவயதில் பள்ளியில் பெற்ற பரிசுகளின் நினைவு வந்து,  நாங்களும் சிலமணி நேரங்களுக்கு குழந்தைகளானோம்!

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது ஆசிரியைகள் சிலர் என் கணவரைப் பார்த்து,
'சார்.உங்கள் வயதுக்கு நீங்கள் இவ்வளவு உற்சாகமாக விளையாடியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கு' என்று ஒரே பாராட்டு மழை! இவர் முகத்தில் பெருமையைப் பார்க்கணுமே!

என் பேத்திகளைப் பார்த்து 'உங்க தாத்தா, பாட்டி ரொம்ப கிரேட்' என்று சொல்ல, என் பேத்திக்கு ஏக சந்தோஷம்!

மொத்தத்தில் இந்த விழா வித்யாசமானதாகவும், உற்சாகமானதாகவும் எங்களை பழைய பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்றது!!

தாத்தாக்களின் விளையாட்டை நீங்களும் கீழேயுள்ள வீடியோவில் ரசிக்கலாம்! வேஷ்டி,ஆரஞ்சு கலர் ஷர்ட் அணிந்திருப்பவர் என் கணவர்!


Tuesday, 11 December 2018

#தனித்திறமைகள்


#தனித்திறமைகள்

கோலம், பாட்டு, கைவேலை, தையல், சமையல் என்று எனக்கு பல திறமைகள்(!) இருந்தாலும் என் தனித்திறமை எழுத்து! 'உன் முக்கியமான எழுத்து திறமை பற்றி எழுதவிட்டுட்டயே' என்று என் கணவர் சொல்ல,' ஆமாம்..மறந்தே போச்சே!' என்று அதையும் எழுதிவிட்டேன்!

நான் கடந்த 35 ஆண்டுகளாக பல இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். கம்ப்யூட்டர் இல்லாத நாட்களில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி அனுப்பணும். அதன் காப்பியெல்லாம் கிடையாது. மெயிலில் அனுப்பவும் முடியாது. அது தேர்வாகவில்லையெனில் திரும்பவும் வராது. இப்ப எல்லாம் computerல் save பண்ணிக்கலாம். எனக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்தது என் செல்லப் பிள்ளைகள்! ரொம்பப் பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள். நான் எழுதி புத்தகங்களில் வந்த அத்தனை கட்டுரைகளையும் பத்திரமாக வைத்துள்ளேன். அவற்றை தொகுத்து எனக்கு ஒரு blog ஆரம்பித்து அதில் போட்டவர் என் அன்புக் கணவர்! நான் எழுத்தாளர் என்பதில் அவருக்கு அலாதி பெருமை!

நான் எல்லாவிதமான கட்டுரைகள் எழுதினாலும் ஆலயதரிசனக் கட்டுரைகள் என் ஸ்பெஷல். ஞான ஆலயம், பக்தி, சக்திவிகடன், தீபம், ஹிந்து தமிழ் அனைத்திலும் என் ஆலய தரிசனக் கட்டுரைகள் வெளியாகும். எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள ஆலயம் சென்று தரிசித்து அது பற்றி எழுதுவேன். சிங்கப்பூர் பலமுறை சென்றுள்ளேன். அங்குள்ள ஆலயங்களின் அழகும், அமைதியும் எனக்கு மிகப் பிடித்தவை. நான் சென்று தரிசித்த கெய்லாங் சிவாலயம் பற்றி எழுதிய கட்டுரை இத்துடன் இணைத்துள்ளேன். என் blog....http://radhabaloo.blogspot.com இதுவரை நான் அனுப்பிய தனித்திறமை பதிவுகளுக்கு லைக்கிட்டும், கமெண்ட் போட்டும் என்னை மகிழச் செய்த அனைத்து மத்யமர்களுக்கும் நன்றி!நன்றி!!

#ராதாபாலு
#கெய்லாங்சிவன்கோயில #சிங்கப்பூர்
சிங்கப்பூர் ஒரு அழகிய நகரம். தமிழ், ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதால் இங்கு தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். 1800 களில் இங்கு வாழ்க்கை தேடிச் சென்ற மக்கள் உருவாக்கியவையே இங்குள்ள இந்து தெய்வங்களுக்கான ஆலயங்கள். சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில்களில் சிறந்த உற்சவங்களும், திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்தியக் கட்டடக் கலைஞர்களால் தென், வட இந்திய ஆலய அமைப்புகளை இணைத்து வித்தியாசமாக, தனித்துவமிக்கதாக இவ்வாலயம் எழுப்பப் பட்டுள்ளது. இளஞ்சிவப்பும், வெளிறிய பழுப்பு நிறமும் இணைந்த வண்ணத்தில், மூன்று கோபுரங்களுடன், எண்கோண வடிவ கலையழகுடன் பத்து அடிக்கு மேற்பட்ட உயரத்தில் காட்சி தருகிறார் சிவபெருமான்.

அலங்கார வளைவுடன் காணப்படும் நுழை வாயிலில் இருந்து 21 படிகள் ஏறிச் சென்றால் விஸ்தாரமான பெரிய மண்டபம். அழகிய தெய்வீக சிற்பங்க்களைக் கொண்ட பெரிய தூண்கள். மேல் விதானக் கோலங்கள் கண்கவர் காட்சி. தகதகவெனப் பிரகாசிக்கும் கொடி மரத்துக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திகேஸ்வரரைத் தொழுது, முன்னே சென்றால் ஸ்ரீ விஸ்வநாதரின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி, சிவபெருமானைத் தொழுவோம்.

சற்று மேலே பார்வையைச் செலுத்த, ஆஹா... எல்லா ஆலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் காட்சி தரும் 63 நாயன்மார்களும் எண்கோண மண்டப விமானத்தில், வண்ணமயமாய்க் கைகூப்பித் தொழுதபடி நின்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈசனின் சன்னதிக்கு நேர் மேலே நடராஜ தரிசனம். விஸ்வநாதப்பெருமான் வெள்ளித் திருவாசியுடன் காட்சி தருகிறார். ஐயனின் இடப்பக்கம் காட்சி தரும் குமரப் பெருமானை வணங்கி, சன்னிதியை சுற்றி வரும்போது மோனத்துடன் தரிசனம் தரும் தட்சிணா மூர்த்தியையும், சுற்றுத் தெய்வங்களையும் வணங்கி அம்மனின் சன்னிதிக்கு வருவோம்.

இரண்டடி உயர விசாலாட்சி அன்னை சிந்தையைக் கவரும் வண்ணம் தரிசனம் தருகிறாள். ஆலயத்தின் தூய்மையும், தெய்வங்களின் சாந்நித்தியமும் தெய்வீகமான அமைதியும், மனதுக்கு புத்துணர்வைக் கொடுக்கின்றன. நவக்கிரக சன்னிதியையும், நடராஜ சபையையும் வணங்கி கீழே வருவோம்.

கீழே வலப்பக்கம் உள்ள நர்மதேஸ்வரர் என்ற பாணலிங்கம், ஆத்ம லிங்கமாகப் போற்றப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு ஜாதி, மத பேதமின்றி யாரும் அபிஷேகம், வஸ்திரம், புஷ்பம் சாத்தி அலங்காரம், தீபாராதனை செய்யலாம். செய்யும் முறை அங்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கான பால், சந்தனம், விபூதி, கங்கை நீர், வில்வம் போன்றவை ஆலயத்தில் கிடைக்கிறது. நாமே நம் கையால் அபிஷேகம் செய்வது மன சாந்தியைத் தருகிறது. திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு நீண்ட வரிசையில் நின்றே அபிஷேகம் செய்ய முடியுமாம்.

கீழுள்ள சுற்றுச் சுவர்களில் ஈசனின் தாண்டவக் கோலங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கீழ்ப் பிரகாரத்தின் இடப்பக்கம் சூரிய பகவான், சந்திரன், சனீஸ்வரர், காலபைரவரின் சன்னிதிகள் உள்ளன. இங்கு நவராத்திரி, வசந்த நவராத்திரி, சிவராத்திரி, ஸ்கந்த சஷ்டி, திருவாதிரை போன்ற உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடத்தப்படுகிறது. மேலே ஏறிச் செல்ல முடியாதவர்களுக்காக லிஃப்ட் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் இலவச தேவார வகுப்புகளும், இலவச ஹோமியோபதி மருத்துவமும் செய்யப்படுகிறது. கல்யாணம், காது குத்து, அன்னபிராசனம், சிரார்த்தம் போன்றவைகளும் செய்து வைக்கப் படுகின்றன. ஊழியர்களுக்கான வீடுகளும் ஆலயத்தினுள்ளேயே அமைந்துள்ளது. ஆலயம் கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2-ல் உள்ளது. பாயா லேபர் ஸ்டே ஷனில் (Paya Laber MRT) இருந்து நடந்து செல்லலாம். சிங்கப்பூர் செல்பவர்கள் அவ்சியம் கண்டு தரிசிக்க வேண்டிய ஆலயம்.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை, மாலை 6 மணி முதல் 9 வரை. ஆத்மலிங்க பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11-45 வரை. மாலை 6.30மணி முதல்8.45 வரை

குறும்புக்குழந்தைகள்--Part-2


குறும்புக்குழந்தைகள் - Part-2

முதல் இரண்டு குழந்தைகள் பிள்ளைகளாகிவிட, அடுத்து பெண் வேண்டும் என்ற ஆசை என்னைவிட என் கணவருக்கு அதிகம்! என் பெண் ரொம்...ப சமத்து! நீஞ்சி,தவழ்ந்து என்றெல்லாம் முயற்சிக்கவே இல்லை! கீழே விட்டால் அப்படியே படுத்துக் கொண்டிருப்பாள்! ஆறு மாதத்தில் நானே உட்கார வைத்தேன்! 8 மாதத்தில் நிற்க வைத்தபின்...நல்லவேளை...தானே நடக்க ஆரம்பித்துவிட்டாள்!  மழலையே இல்லாத திருத்தமான பேச்சு! 'இது ஏன் இப்படி?அதை இப்படி பண்ணினா என்ன?' என்று அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது எங்களால்!

இரண்டு வயது முதல் அண்ணாக்களுடன் 'ஸ்கூல் போறேன்' என்று ஒரே அடம்! ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு இறங்க மாட்டாள்! மூன்று வயதில் பள்ளிக்குப் போக ஆரம்பித்தவள் ஒருநாளும் பள்ளி செல்லமாட்டேன் என்று அடம் பண்ணியதில்லை. பள்ளியில் எல்லா ஆசிரியைகளுக்கும் ரொம்ப பெட்!

பாபநாசத்தில் LKG, UKG படித்தபோது பள்ளியில் நடந்த Rhymes போட்டி,பேச்சுப்போட்டி, நடனம்,  மாறுவேடப்போட்டி என்று எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசு பெற்றுவிடுவாள்! மாறுவேடப் போட்டிக்கு மடிசாருடன் பிள்ளையார் பூஜை செய்ததைப் பார்க்கணுமே! நிறைய குட்டி ஸ்லோகங்கள் சொல்லுவாள். இந்தக் குழந்தை இவ்வளவு அழகாகச் செய்கிறாளே என்று ஏகப்பட்ட பாராட்டு!

எல்லா போட்டிகளிலும் சேர்ந்து பரிசும் பெறுவாள். பள்ளிக்கு லீவே போடமாட்டாள். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவில் General Proficiency, Full attendance, Smartness, Cleanliness, மாறுவேடப்போட்டியில் பரிசு என்று கைகொள்ளாமல் வாங்கி எல்லாரிடமும் பாராட்டு பெற்றாள்!

அவளுக்கு டீச்சர் விளையாட்டு மிகவும் பிடிக்கும்.எப்பொழுதும் கையில் ஒரு ஸ்கேலுடன் சுவற்றில் ஏதாவது எழுதி, கீழே மாணவர்கள் அமர்ந்திருப்பதாக பாவித்து, தன் வகுப்பு ஆசிரியை போல் பாடம்  நடத்துவாள்! பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்!

சின்ன வயது முதலே டாக்டராக வேண்டும் என்று அவளிடம் சொல்வேன். அவளுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, +2வில் 95% வாங்கி மும்பை Grant Medical Collegeல் M.B.B.S. படித்து டாக்டரானாள். அப்போதெல்லாம் டாக்டருக்கு படிப்பது மிகவும் costlyயான விஷயம். இவள்  மெரிட்டில் வந்ததால்   ரூ.10000 மட்டுமே அவளின் 4 வருடத்திற்கான ஃபீஸ்! மேலே Clinical Research படித்து இன்று வெளிநாட்டு ஃபார்மா கம்பெனியில் Senior Medical Officerஆக பணி புரிகிறாள்.

கடைக்குட்டி பிள்ளை செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை! அவன் கேட்டதெல்லாம் வாங்கித்தர வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிட மாட்டான்! அவனை சமாதானம் செய்வதற்குள் என் பிராணனே போய்விடும். குழந்தை சாப்பிடாதபோது எனக்கு எப்படி சாப்பிட முடியும்?

10 வயசிலிருந்தே ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொண்டு சைக்கிளை எடுத்துண்டு ஓடிவிடுவான். இவன் திரும்பி வரவரைக்கும் பயந்து கொண்டு உட்கார்ந்திருப்பேன்!

படிப்பு அவனுக்கு வேப்பங்காய்! அதிலும் தமிழ் கசப்பு மருந்து என்றால் கணக்கும், கம்ப்யூட்டரும் கருப்பஞ்சாறு! Homework செய்ய வைப்பதற்குள் போதும் என்றாகிவிடும்! தமிழ் அவனுக்கு பிடிக்காத மொழி!  தமிழில் எப்பவும்  ஃபெயில் மார்க்!  அவன் பெயரையே 'கர்த்திக்' என்று எழுதுவான்! 'ஏண்டா..காலை விட்டுட்டியே'என்றால் 'இதோ இருக்கே' என்று தன் காலைக் காட்டுவான்! என் பெண்தான் அவன் தமிழ் டீச்சர்! ஒருமுறை அவன் பள்ளியில் ஒரு பழமொழிப் போட்டியில் சேர்த்து விட்டார்கள். பாவம் என் பெண்! சில பழமொழிகளைச் சொல்லிக் கொடுத்து திரும்ப சொல்லச் சொன்னாள். பத்துமுறை படித்தும்..ம்ஹூம்...எதுவும் நினைவில்லை! என்மகள் பாதியை சொல்லி அவனை மீதி பழமொழியை சொல்லும்படி சொன்னாள். சிலவற்றை சரியாக சொன்னவன், 'மடியிலே கனமிருந்தால்'என்று சொல்ல,அவன் பட்டென்று 'எழுந்திருக்க முடியாது' என்று சொல்ல எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை! இன்றும் அவனுக்கு தமிழ் தகராறு!

அவன்எப்பவும் 10க்கு மேல்தான் ரேங்க் எடுப்பான். கேட்டால் 'பத்துதான பெரிசு. நான்தான பெரிய ரேங்க் வாங்கிருக்கேன்'என்பான்! என் மகள் விளையாட்டாக'நீ இப்படி படித்தால் நான் டாக்டரானதும் என்னிடம் கம்பௌண்டரா வந்துடு.' என்பாள்! என் பெரிய பிள்ளை 'படிக்காமல் மாடு மேய்க்கப் போறயா' என்றால் ' நான் பெரிய மாட்டுப் பண்ணை வைத்து உங்களுக்கெல்லாம் freeயா பால் தருவேன்'என்பான்!

மூன்று குழந்தைகளும் ஹிந்தி ப்ரவீண் படித்தவர்கள். இவனுக்கு ஆர்வம் இல்லாததால் ஹிந்தி படிக்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே உ.பி.யில் இருந்துவிட்டதால் மீண்டும் என் கணவருக்கு வங்கியில் வடக்கே மாற்றல் வராது என தப்புக் கணக்கு போட்டு விட்டோம். இம்முறை மகாராஷ்டிரா. என் பிள்ளை மராட்டி, ஹிந்தி என்று தட்டித் தடுமாறி படித்து 10ம் வகுப்பில் பாஸ் செய்து, +1ல் அவனுக்கு பிடித்த computer science எடுத்து B.E., பின் IITயில் M.Tech படித்து தற்போது லண்டனில் பணிபுரிகிறான். இவன் எப்படி படித்து என்னவாகப் போகிறானோ என்று நான் வேண்டாத தெய்வமில்லை. இன்று அவன்தான் நால்வரில் அதிகமாக சம்பாதிக்கிறான்.

என் மகள் வயிற்றுப் பேரன் சரியான விஷமம். ஒருமுறை என் பெண்ணின் மோதிரத்தை வாயில் போட்டுக் கொண்டு திணற, உடன் ஒரு டாக்டரிடம் அழைத்துப் போய் அவர் பின்கழுத்தில் வேகமாகத் தட்ட மோதிரம் வெளியில் வந்தது. இது மாதிரி நிறைய...எழுத முடியாது!

இப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் என் பேரனும், நானும் ஃப்ரெண்டாகத்தான் பழகுவோம்! அவன் வகுப்பில் 'உன் வீட்டில் உனக்கு பிடித்தவரைப் பற்றி எழுது'என்றபோது, 'என் பாட்டிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'என்று கட்டுரை எழுதினானாம்! Swimming, Skating, Football என்று எல்லா விளையாட்டிலும் திறமைசாலி.

குழந்தைகளின் குறும்பை எழுத வாய்ப்பளித்து, அவர்களைப் பற்றிய அந்தநாள் நினைவுகளில் மூழ்கச் செய்த மத்யமர் தள அட்மின்களுக்கு மிக்க நன்றி!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பும் ஆற்றலும் பெருக.. இன்பமும் ஈதலும் நிறைய... உற்சாகமும் ஊக்கமும் வளர.. எல்லையில்லா ஏற்றங்கள் சிறக்க... ஐயங்கள் நீங்கி அறிவாற்றல் மலர.... ஒற்றுமையுடன் ஓங்கி உயர்வு பெற... ஔவியம் விலக்கி உயர்வுடன் வாழ தீமைகள் தீவினைகள் விலக.. நோக்கங்கள் நிறைந்து ஆக்கங்கள் பெருக... தேசங்கள் நேசமாய்இணைய மாசுகள் நீங்கி வாசங்கள் மலர.... ஒளிரும் தீப ஒளியால் இருள் நீங்கி அல்லவை தேய்ந்து நல்லவை நாடி சொந்தங்கள் சேர்ந்து எண்ணங்கள் பகிர்ந்து நட்புகள் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்க நிம்மதி பெருகி மங்கலம் தங்கிட தீபாவளியே வருக! வாழ்க! இனிப்போடும் களிப்போடும் நினைவில் தேனாய் இனிக்கும் இனிய மத்யம நட்புக்களே! நீவிர் என்றென்றும் வானாய் உயர்ந்து வாழ்வாங்கு வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஆசை...சிறுகதை


Bala Hari அவர்கள் கொடுத்த தலைப்புக்கான சிறுகதை  “ஆசை”

ஆறுமாதங்களுக்குமுன்பு....

'ராசாத்தி! அடுத்த தெருவில ஒரு சாமி வந்திருக்காராமில்ல. அவரு கைரேகை, சோசியம், சித்த மருந்து எல்லாம் தெரிஞ்சவராம். உன் புள்ளைக்கு சளி ரொம்ப நாளா இருக்குன்னியே, காட்டிட்டு வரலாம் வா'.

'அப்படியா. அவரு எவ்வளவு பணம் கேப்பாரோ? என்கிட்ட 50 ரூவாதான் இருக்கு சரசு'.

'எடுத்துக்கிட்டு வா. கூடக் கேட்டாருன்னா அப்றம் கொடுத்துக்கிடலாம்'.

இருவரும் குழந்தையுடன் அவரைப் பார்க்க சென்றனர். நாடி பிடித்து பார்த்தவர் சளி எவ்வளவு நாளாய் இருக்கிறது, என்ன சாப்பாடு கொடுக்கிறாய் என்றெல்லாம் கேட்டுஒரு கஷாயமும், சூரணமும் கொடுத்தார். ஐந்து நாட்கள் கொடுத்துவிட்டு, பிறகு வரச் சொன்னார்.

'பணம் எவ்வளவுங்க சாமி?' ராசாத்தி கேட்டாள்.

'பத்து ரூபாய் கொடு'.

வெளியே நல்ல கூட்டம். ஏழைகள் முதல் பணம் படைத்தவர்கள் வரை இருந்தார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறை; பிரச்னை; வியாதி. இவர் எல்லாவற்றிலும் தேர்ந்தவர் என்பதால் மக்கள் கூட்டமும் அதிகம்.

அது ஒரு நாகரிகத்தின் சாயல் அதிகம் படாத, இயற்கை அழகை இன்னும் இழக்காத சிறு கிராமம்.பெரும்பான்மையோரின் தொழில் விவசாயம். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறு பள்ளியும், ஒரு சிறு ஆஸ்பத்திரியும் மட்டுமே உண்டு.அக்கிராமக் குழந்தைகளுக்கு முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு வழியில்லை என்று அவர்கள் கூறியபோது அவருக்கு மிக வருத்தமாக இருந்தது.

சாமியப்பன் இவ்வூருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அந்தத் தெருவில் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறார். அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் ஆர்வமாக விசாரித்தபோதும் எதுவும் சொல்லாமல் 'தான் அமைதியாக இருக்க விரும்பியே இங்கு வந்துள்ளதாகவும், நாட்பட்ட நோய்களையும் தம்மால் குணப்படுத்த முடியுமெ'ன்றும் சொன்னார். மேலும் அவர் ஜோசியம்,கைரேகை பார்த்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே சரியாக நடக்க, மக்கள் அவரை நாடி வருவது அதிகமாயிற்று.

அவர் அதிகம் யாருடனும் பேசமாட்டார். தினமும் இருவேளை பூஜை. மிக எளிய உடை. தானே உணவு சமைத்து சாப்பிடுவார். ஒரு சாமியார் போன்று இருக்கும் அவருக்கு சாமி என்ற பெயரும் பொருத்தமாகவே இருந்தது!

தன்னிடம் வைத்தியம், ஜோசியம் பார்ப்பவர்களின் தகுதிக்கேற்றபடி பணம் கூடவோ, குறைத்தோ வாங்கிக் கொள்வார். வசதி உள்ளவர்களிடம் சற்று அதிகமாகவே வசூல் செய்வார். ஆனால் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தபின்பே வைத்தியம்! மாலையில் அவ்வூர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதுடன், இறைவனைப் பற்றியும், இறையடியார் பற்றியும், திருக்குறள் கதைகளையும் சொல்வார்.

அவருக்கு குடும்பமோ, குழந்தைகளோ உண்டா, இங்கு வந்து தனிமையில் வாழ்வது ஏன் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததே இல்லை.மாதம் ஒருநாள் பக்கத்திலுள்ள நகரத்திற்கு சென்று வருவார்.

மூன்றுவருடத்திற்குப்பிறகு...

அந்த கிராமம் மட்டுமன்றி பக்கத்து கிராமங்களிலிருந்தும் நிறைய பேர் வர ஆரம்பித்தனர். சில நாட்கள் அவர் தூங்குவது 2,3 மணி நேரங்கள் மட்டுமே! மொத்தத்தில் அக்கிராம மக்கள் அவருடன் மிகவும் ஒன்றிவிட்டனர்.

நாட்கள் செல்லச்செல்ல அவ்வூர் மக்களுக்கு அவர் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது.அமைதியைத் தேடி வந்தவருக்கு பணத்தின் மேல் ஆசை ஏன்? எல்லோரிடமும் பணத்தை வாங்கி யாருக்கு கொடுக்கிறார்? ஆனாலும் அவரால் பல நன்மைகள் இருந்ததால் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை.

அன்றும் வழக்கம்போல் அவர் மாலை கதைகள் சொல்ல ஆரம்பித்தார்.சுவாரசியமாக குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படி கதை சொல்வதால் ஊரில் இருக்கும் சிறியவர்,பெரியவர்,குழந்தைகள் என்று அனைவரும் கூடிவிடுவர்.

திருக்குறள் அதிகாரத்தில் அன்று அவாவறுத்தல் என்பதைப் பற்றி பேசியவர் ஆசைகளை அறவே நீக்கி இறைவனை அடையும் வழியை நாட வேண்டும்.ஆசையே துன்பங்களுள் பெரிய துன்பம். ஆசையினாலே நாம் அடுத்தவரை வஞ்சிக்கிறோம். தேவையற்ற ஆசைகளைத் துறந்தாலே இன்ப வாழ்வு வாழமுடியும் என்று ஒரு சிறு கதையையும் கூறி முடித்தார்.

கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் விருட்டென்று எழுந்தான்.

'சாமி..உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?'

'தாராளமா கேளுப்பா'.

'எங்களுக்கு ஆசை கூடாதுனு சொல்ற நீங்க எங்ககிட்ட பணம் வாங்கி என்ன செய்யறீங்க? அதுவும் ஆசைதான?யாருமே உங்களுக்கு இருக்கிறதா தெரியல. இந்த பணம் உங்களுக்கு எதுக்கு?'

‘அது பற்றி நீங்க சீக்கிரம் தெரிஞ்சுப்பீங்க.இப்போ போய்ட்டு வாங்க'.

 அதன்பின் மேலும் ஆறு மாதங்கள் கடந்தன. சாமியப்பனை பார்க்க சில ர் வந்தனர். அவருடன் சென்று ஊருக்கு நடுவில் ஓரிடத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி கட்டுவது பற்றி முடிவு செய்து மறுநாள் முதல் வேலைகளை ஆரம்பித்தனர்.

இதைக்கண்ட கிராம மக்களுக்கு ஆச்சரியம்!

'என்னங்க சாமி இதெல்லாம்'

'இங்கு பன்னிரண்டாம் வகுப்புவரை இந்த ஊரிலேயே எல்லாரும் படிக்க ஒரு பள்ளி வரப் போகிறது. பெண்களுக்கு கல்வி மிக அவசியம். இந்த கிராமத்துப் பெண்குழந்தைகள் மேலே படிக்க வெளியூருக்கு போக முடியவில்லை.இனி எல்லாரும் இங்கேயே படிக்கலாம்'.

'யாரு சாமி இம்புட்டு பணம் போட்டு பள்ளிக்கூடம் கட்டறாங்க?'

 'இது உங்கள் பணம்தான். நான் பணத்தாசை பிடித்தவன் என்று நீங்கள் கேட்டீர்களில்லையா! உங்களிடம் நான் வாங்கிய பணம்தான் இந்தப் பள்ளியை உருவாக்கப் போகிறது'.

ஆச்சரியத்தில் மலைத்து நின்று விட்டனர் அக்கிராம மக்கள். இவரையா தப்பா நினைத்தோம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும்.

'சாமி..உங்களைத் தப்பா நினைச்ச எங்களை மன்னிச்சுடுங்க சாமி'.

'நான் கிளம்பறேன். இன்னும் சில மாதங்களில் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்படும். எல்லா ஏற்பாடுகளும் நான் செய்து விட்டேன். நீங்கள் எல்லாரும் நன்றாகப் படித்து உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்'என்று குழந்தைகளைப் பார்த்து சொன்னார்.

இதைக்கேட்ட அம்மக்கள் கண்கள் கலங்கியது. அவரைப் பார்த்து கைகளைக் கூப்பினர்.

'சாமி உங்க குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து எங்களோடவே இருங்க'.

'எனக்கு மனைவி இல்லை. என் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தில் இது போன்ற நல்ல காரியங்களை செய்து நம் நாட்டை உயர்நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை. அதைத்தான் நான் செய்கிறேன்'.

'நீங்களும் உங்க பிள்ளைங்ககிட்ட போறீங்களா சாமி?'

 'அடுத்து இது போன்ற ஒரு ஊருக்கு சென்று என் பணிகளைத் தொடரப் போகிறேன்'.

கையில் பெட்டியுடன் தன் ஆசையை நிறைவேற்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நாடிச் சென்றார் சாமியப்பன்!

குறும்புக்குழந்தைகள்-- Part-1


#குறும்புக்குழந்தைகள்# Part-1

குழந்தைகள் என்றாலே குறும்புதானே? குழந்தைக் குறும்புக்கு authority விஷமக்காரக் கண்ணன்தானே? அவன் செய்யாத குறும்பா! எனக்கு மூன்று பிள்ளைகள்...ஒரே செல்லப்பெண்!

நாங்கள் மதுராவில் இருந்தபோது பிறந்த என் மூத்த மகன் பெயரும் கண்ணன்தான்! அவன்செய்த விஷமங்கள் சொல்லி மாளாது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் அங்கு குடியிருந்த வீடு மகா பழசு! அலமாரிகளுக்கு கதவு கிடையாது. பாத்ரூமில் அலமாரியே கிடையாது! சோப்பெல்லாம் பாத்ரூம் படியில்தான் வைத்திருப்போம். என் மகன் தவழ ஆரம்பிக்கும்போது நைஸாக பாத்ரூம் சென்று அங்குள்ள சோப்பெல்லாம் தின்று விடுவான்!

ஒருநாள் அலமாரியைப் பிடித்துக் கொண்டு நின்று, அங்கிருக்கும் சாமானெல்லாம் கீழே தள்ளி பெரிய சத்தம் கேட்க, சமையலறையில் வேலையாயிருந்த நான் ஓடிவந்து பார்க்க வாய் முழுக்க மாவுடன் வெண்ணை தின்ற கண்ணனாகக் காட்சிதர, எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!

மறுநாள் முதல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு bench காலில் கட்டிப் போட்டு விடுவேன். சிறிது நேரம் ஏதாவது விளையாடிவிட்டு, நகர முடியாததால் நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி பெரிதாக அழ ஆரம்பித்து விடுவான். அடுத்த வீட்டுக்காரர்களெல்லாம் வந்து 'என்னாச்சு' என்று கேட்டு'குழந்தையை இப்படிக் கட்டாதீர்கள்' என்று advice வேறு செய்வார்கள்! தவறானால் யசோதையே கட்டியிருப்பாளா என்பேன் நான்! பின் வீட்டு வேலைகளை யார் செய்வது?

எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவனுக்கு பிடிக்காது. கூட்டத்தைக் கண்டாலே உடனே பெரிதாக அழ ஆரம்பித்து விடுவான். 2 வயதாக இருக்கும்போது அவனை என் பெற்றோர் ஒருமுறை சுவாமிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அன்று மதுரைசோமு அவர்கள் முருகன் சன்னதியில் பாடிக் கொண்டிருந்திருக்கிறார். என் அம்மா பாட்டைக் கேட்கும் ஆசையில் உள்ளே கால் வைத்ததுதான் தாமதம், என் பிள்ளை அவரைவிட பெரிதாக அழ ஆரம்பிக்க, எல்லோரும் என் அம்மாவை திரும்பிப் பார்க்க வெளியில் வந்துவிட்டாராம். என் அப்பாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே போக நினைத்தால் என் அம்மாவையும் விடாமல் ஒரே அழுகையாம்!

பள்ளியில் படிக்கும்போது தினமும் பென்சில், ரப்பர், ஸ்கேல் என்று ஏதாவது ஒன்றைத் தொலைத்துவிட்டு வநதுவிடுவான். கேட்டால்'கீழ விழுந்துடுத்து' என்று அநாயாசமாக சொல்வான்! +1 படிக்கும்போது ஒருநாள் பஸ்ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு சாவியையும் அதிலேயே விட்டுவிட்டு போயிருக்கிறான். மாலை வீட்டுக்கு வநதவன் 'சைக்கிள் சாவி எடுக்க மறந்து ஸ்கூல் போய்ட்டேன். சைக்கிளைக் காணும்' என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டான்! 'ஏண்டா இப்படி தொலைத்துவிட்டு வந்திருக்கயே' என்றால்,'அது போயிடுத்து. இப்ப எனக்கு பசிக்கறது. டிஃபன் கொடு' எனக் கேட்கும் அவனை என்ன செய்வது? என் கணவரோ 'ஏதோ பண்ணிட்டான். போகட்டும் விடு. அவனை வெய்யாதே' என்பார். என் கணவர் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர் என்பதால், குழந்தைகள் மேல் பாசம் அதிகம்.

அவன்+2வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று, BITS Pilaniயில் படித்து, ஜெர்மனியில் M.S மற்றும் மூன்று Ph.D-க்களை பெற்று, பெர்லினில் பல்கலைக்கழகத்தில் ப்ரொஃபஸராகப் பணிபுரிகிறான்.இப்பொழுது அவன் பெண்களுக்கு பணத்தை அநாவசியமாக செலவழிக்கக் கூடாது என்று பாடம் எடுக்கும்போது, நான் இந்த சம்பவத்தை சொல்வேன்! சிறு வயதில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தவன், இன்று நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கிறான்!

அடுத்தவன் இவனைவிட மகா மெகா குறும்புக்காரன்! இருவருக்கும் ஒன்றரை வயதே வித்யாசம் என்பதால் எப்பவும் அடிதடிதான் வீட்டில்! மூத்தது மோழை இளையது காளை என்பதற்கேற்ப பெரியவனிடம் வம்புக்கு போய், அவன் சாமான்களை உடைத்து அவனை அழவிடுவதில் அலாதி ஆசை!

இரண்டு வயதில் மருந்து என்று நினைத்து டெட்டாலைக் குடித்து விட்டான். 'மருந்து நன்னால்ல' என்று என்னிடம் சொன்னபோதுதான் அவன் குடித்தது டெட்டால் என்று தெரிந்து பதறிவிட்டேன். நல்லவேளையாக அதில் 4,5 சொட்டுகள் மட்டுமே இருந்தது. என் அம்மா பயந்துபோய்'பிள்ளையாரப்பா காப்பாத்து.  தூன்னு துப்பு 'என்று சொல்ல, அவனும் 'பிள்ளையாரப்பா காப்பாத்து தூ...தூ'என்று சொல்லிக் கொண்டே துப்ப, அந்த நேரத்திலும் எனக்கு சிரிப்பு வந்தது! உடன் என்தம்பி அவனை டாக்டரிடம் அழைத்துப் போக, அவரும் பரிசோதித்து வாயில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தாராம். 'நான் டெட்டால் குடிச்சேன்' என்று எல்லாரிடமும் மழலையில் பெருமையாக சொல்லிக் கொள்வான்.

இவனுக்கு எண்ணை தேய்ப்பதற்குள் நான்படும் பாடு! அந்தநாளில் வேண்டாம் என்றும் விடமுடியாது. என் மாமியாரோ பேரனுக்கு சரியாக'அதென்ன பிடிவாதம் எண்ணை தேச்சுக்க'என்று சொல்லி அவனை இழுத்து வந்து, இறுகப் பிடித்துக் கொள்ள, எண்ணையை தேய்த்தால் நேரே போய் தலைகாணி, மெத்தை எல்லாவற்றிலும் தலையைத் தேய்த்து விடுவான். இவன் தலையை அலசுவதோடு மறுநாள் அவற்றை துவைப்பது எக்ஸ்ட்ரா வேலை எனக்கு!

அடிக்கடி வங்கியில் என் கணவருக்கு மாற்றலானதால் என் குழந்தைகள் 6 பள்ளிகளில் படித்தார்கள். மதுரையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எப்பொழுதும் முதல் rank வாங்குபவன் கணக்கில் மார்க் குறைந்து second rank வாங்கினான். கணக்கில் மார்க் குறைந்ததால் அந்த டீச்சரிடம் பேசாமல் இருந்தானாம். இதை அந்த டீச்சரே எங்கள் வீடு தேடி வந்து சொல்லி, கணேஷ் என்னுடன் பேசாதது எனக்கு வருத்தமா இருக்கு என்றார்!

ஈரோடில் 10th படிக்கும்போது 90சதம் மார்க்குகள் பெற்றான். பள்ளி ஆசிரியைகள் அவனை science க்ரூப் எடுத்துக் கொள்ள சொன்னார்கள். அவனோ தனக்கு பிடித்த காமர்ஸ் க்ரூப்தான் எடுத்துக் கொண்டான். ப்ரின்சிபால் அவனிடம் 'science எடுத்துக் கொண்டால் state1st வரலாம்' என்று சொல்ல, இவனோ commerceலேயே வந்து காட்டுகிறேன்' என்று சவால் விட்டு 1996ல் state first பெற்று எங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தான். அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி கையால் பரிசுகளும், கல்லூரிப் படிப்புக்கான தொகையும் பெற்று, என்னை ஈன்றபொழுதின் பெரிதுவக்க வைத்தான். மேலும் KKR Palmoil கம்பெனியாரால் மாருதி800 கார் பரிசாகப் பெற்றான். ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளியில் +2வில் முதலாக வந்த மாணவர்களில் என் இரு மகன்களின் பெயரும் உள்ளது.

அச்சமயம் என் கணவருக்கு மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூருக்கு மாற்றலாக, அங்கு B.Com. படித்து, XIM புவனேஸ்வரில் MBA முடித்து Education Consultantஆகப் பணிபுரிகிறான்.

அருள்தரும்ஆனந்தசாயி

#ஆன்மிகம்
🙏#அருள்தரும்ஆனந்தசாயி🙏

#இன்றுஸ்ரீசத்யசாயிபாபாவின்93ம் பிறந்தநாள்🙏

ஸ்ரீசத்ய  சாய்  பாபா  என்  குரு; தெய்வம்; என்ன  கஷ்டம்  வந்தாலும் சாய்ராம் ..சாய்ராம்..என்று   என் உதடுகள்  அழைப்பது  அவரையே!அவர்  நாமம்  சொன்னதும் என் மனக்கவலைகள்  பறந்து  விடும். இது இன்று!

ஆனால் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்யசாயி பாபாவைப்  பற்றி அதிகம் தெரியாது...எந்த   ஈடுபாடும் கிடையாது. என் மாமியாருக்கும், கணவருக்கும் சீரடி பாபாவிடம் பக்தி அதிகம்.ஒவ்வொரு வியாழனும் பூஜை செய்வார்கள்.பர்த்தி பாபா எங்களை ஆட்கொண்டது எங்கள் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

ஆம்!  நாங்கள்  அச்சமயம் ஈரோடில் இருந்தோம்.என்  கணவருடன் வங்கியில் பணி புரிந்த சாயி பக்தை சுவாமியின் எழுபதாம் பிறந்தநாளுக்காக எங்கள்  வீட்டில் ஒரு  நாள்  பஜனை  வைத்துக் கொள்ளும்படி கேட்டார்.  பாபாவின் புகைப்படம் கூட எங்கள்  வீட்டில் இல்லை என்பதால் அவர்களே சமிதியின் புகைப்படம் ஒன்றைக் கொண்டு  வைத்து  பஜனையும் செய்தோம். நான் பலமுறை சொல்லியும் அந்தப் படத்தை
திரும்ப அவர்கள் எடுத்து  செல்லாததுடன்  என்னையே  வைத்துக்  கொள்ளும்படி  சொல்லிவிட    பாபா  'இனி  நான்  உங்கள்  வீட்டை  விட்டு   போவதாக இல்லை'  என்று  எங்கள்  வீட்டிலேயே தங்கி  விட்டார் ! அதன்பின் நானும், என்மகளும் சமிதியின் வாரபஜனை, நாராயண சேவை, நகர சங்கீர்த்தனம் எல்லாவற்றிலும் தவறாமல் பங்கு கொள்வோம்.

'நீ என்னை  நோக்கி  ஓரடி  எடுத்து வைத்தால்  நான் உன்னை  நோக்கி பத்தடி   வைத்து  வருவேன்'  என்பது சாயியின்  திருவாக்கு.  இதனை நான்  பலமுறை   உணர்ந்து அனுபவித்துள்ளேன். என் மகன் +2 படிக்கும்போது சுவாமியின் பஜனைக்கு சென்ற நான், என்  மகன்  நல்ல மதிப்பெண்கள் பெற்று  பள்ளியில் முதலாக வர வேண்டும்  என வேண்ட, சட்டென்று பாபா  படத்திலிருந்த பூ ஒன்று கீழே விழுந்தது. என்  மகன்  மாநிலத்தில் முதலாக வரப்போவதை அன்றே சூசகமாக பாபா சொன்னதை பிறகுதான் என்னால் உணர முடிந்தது!

ஒரு  கார்  வாங்க  அருள்  செய்ய பாபாவை  நான்  வேண்ட  அவரோ, மாநில  முதலாக  வந்த  என் மகனுக்கு  ஒரு  காரையே  பரிசாகப் பெற  அருள்  செய்தார். ஆம் !KKR பாமாயில் கம்பெனியினர்  என் மகனுக்கு மாருதி800 காரைப் பரிசாக அளித்தனர். எங்களுக்கு மிக ஆச்சரியம்! பெரிய விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கும் கார் பரிசு ஒரு +2 மாணவனுக்கு கொடுத்ததை அனைவரும் பாராட்டினர். ஒரே நேரத்தில்  நான் ஆசைப் பட்ட இரண்டு  விஷயங்களையும் நிறைவேற்றி  விட்டார் என் சுவாமி!

என் மகள் மருத்துவம் படிக்க விரும்பினாள் .  நாங்கள் அப்போது கோலாப்பூரில் இருந்தோம். அச்சமயம்  பெங்களூரில் என்மகன் வேலையில் இருந்ததால் அங்கு தங்கி, பர்த்திக்கு செல்வதாக முடிவு செய்தோம். பர்த்திக்கு அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டபோது காலை, மாலை இரு வேளையும் தரிசனம் உண்டு என்றார்கள். நாங்கள் சென்று சேர மாலை 5 மணிக்குமேல் ஆகிவிட்டதால் தரிசனம் முடிந்து விட்டதாகவும், இனி மறுநாள்தான் தரிசனம் என்றும் கூறிவிட்டார்கள். அங்கேயே இருக்கும் அறைகளில் தங்கலாம் என நாங்கள் முடிவு செய்தபோது, திடீரென்று சுவாமி மீண்டும் வருகிறார் என்று அனைவரும் தரிசன ஹாலுக்கு ஓடினர்.

நாங்களும் ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். அவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரிசனத்திற்கு வந்ததால், சுவாமி மீண்டும் வந்ததாகச் சொன்னார்கள். தரிசன நேரம் முடிந்துவிட்டதால் கூட்டம் இல்லை. நான்காம் வரிசையில் இடம் கிடைத்ததால் சுவாமியை கண்குளிர தரிசனம் செய்தோம்.சுவாமி பல மாணவர்களோடு பேசினார்; சிலரை தொட்டு அணைத்து ஆசிர்வாதம் செய்தார். சட்டென்று கையை சுழற்றி விபூதி வரவழைத்து அனைவருக்கும் கொடுத்தார். ஆஹா...சுவாமி எப்படி விபூதி வரவழைப்பார்..நம்மால் காணமுடியுமா..என்ற ஏக்கத்தை சுவாமி அப்பொழுதே போக்கி விட்டார்!

அச்சமயம் +2 படித்துக் கொண்டிருந்த என் பெண்ணுக்கு  எம்.பி.பி.எஸ் படிக்க மிக விருப்பம். அதுவரை நுழைவுத் தேர்வு இல்லாமலிருந்த மகாராஷ்டிராவில் அவ்வருட முதல் நுழைவுத் தேர்வு ஆரம்பிக்கப் போவதாக திடீர் அறிவிப்பு வந்தது. 15 நாளில் நுழைவுத் தேர்வு என்று அறிவித்த அரசு, விண்ணப்ப ஃபாரங்களையும் கொடுக்க ஆரம்பித்தது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, சில மாணவர்களும், பெற்றோர்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நுழைவுத் தேர்வு நடத்தாமலேயே மேற்படிப்பு அட்மிஷன் செய்யக் கோரினர். இப்போது என் மகள் மிக மனம் சோர்ந்து விட்டாள்.

அடுத்தமுறை நான் பர்த்தி சென்றபோது, என் மகளுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவேண்டி அவரது ஆசியை வேண்டி,  ஒரு  கடிதம்  எழுதி  எடுத்து  சென்றிருந்தேன். சுவாமி வந்த  போது   நான்  வெகுதூரம்  தள்ளி  அமர்ந்திருந்ததால் அக்கடிதத்தைக்  கொடுக்க முடியவில்லை.சுவாமியின்  ஆஸ்ரம விலாசம் எழுதி தபால்  பெட்டியில் போட்டுவிட்டேன். 'சுவாமி  நமக்கு  பதில்  போட்டால்  எப்படியிருக்கும்' என்று  ஒரு  கற்பனை  வேறு!

ஒரு  வாரம்  கழித்து ஒருஇன்லெண்ட் கடிதம்  ஒன்று பெங்களூரில் என் பிள்ளை வீட்டுக்கு வந்தது. அதன் ஃப்ரம் அட்ரஸைப் பார்க்கையில், ‘பிரசாந்தி நிலையம்’, புட்டபர்த்தி என்றிருந்தது. ஒரு நிமிடம் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது. நான் எழுதிய கடிதத்திற்கு பதிலா? நம்ப முடியாமல் முன் பக்க விலாசத்தை பார்த்தபோது அங்கேயே பக்கத்து வீட்டிற்கு அந்தக் கடிதம் வந்திருந்தது. அவர்கள் மகன் பர்த்தியில் படிப்பதாயும், அவன் கடிதம் என்றும் கூறினார்கள். கடந்த 4, 5 வருடமாகக் குடியிருக்கும் அவர்கள் விலாசத்திற்கு வரவேண்டிய கடிதம், தவறுதலாக ஏன் என் வீட்டிற்கு வர வேண்டும்? சுவாமியின் அருளை என்ன சொல்வது? கண்டிப்பாக என் மகளுக்கு மெடிகல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது!

அதன் பின்பு 2 நாளில் நான் கோலாப்பூர் திரும்பிவிட, உள்ளே வந்ததும் என் கண்ணில் பட்டது அம்மாத ‘சனாதன சாரதி’. ஆவலோடு எடுத்துப் பிரித்தவளின் கண்ணில் பட்டது, பக்தர்களின் கடிதங்களுடன் காட்சி தந்த பகவானின் வண்ணப்படம்! ‘உன் கடிதம் என் கையில் கிடைத்து விட்டது’ என்று சொல்கிறாரோ பகவான்! அடுத்த வாரமே நுழைவுத்தேர்வு ரத்தாகி மதிப்பெண் அடிப்படையில் மும்பாய், கிராண்ட் மெடிகல் கல்லூரியில் என் மகளுக்கு அட்மிஷன் கிடைத்தது

இப்படி பகவான் எனக்குஅருளிய  விஷயங்கள் பலப்பல. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நடந்த  இந்த சம்பவம்  பாபாவின்  பேரருள் எனலாம்!

நான் பலமுறை பர்த்திக்கு சென்றிருக்கிறேன். அங்கு  சர்வீஸ் செய்பவர்களைப் பார்க்கும்போது 'சாயிநாதா! இது போன்ற  ஒரு வாய்ப்பை எனக்கு ஒருமுறை கொடுப்பாயா?' என்று  மனமுருக வேண்டுவேன். குழந்தைகளின் படிப்பு, வீட்டில் வேலை என்று  எனக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லை. ஆனால்  அதையும் நிறைவேற்றி வைத்தார்   அந்த கருணாசாயி!

 அடிக்கடி  பர்த்திக்கு  சர்வீசுக்கு  சென்றுவரும்  என் தோழியிடம்  நான்  என்   விருப்பத்தைக்  கூற  அவளும்  சமிதியில்  சொல்லி,விண்ணப்பித்து,  அதற்கான  விதிமுறைப்படி  என்னை  2006ம் ஆண்டு ஒரு வார சர்வீசுக்கு  அழைத்துச் சென்றாள். ஆஹா!  அந்த ஒரு வாரம் சொர்க்கமாக இருந்தது. அதிலும் சுவாமி அமர்ந்து  அனைவருக்கும் அருளாசி வழங்கும்  இடத்தைப் பெருக்கி,  துடைக்கும் சர்வீஸ்  கிடைத்ததை என்னவென்று சொல்ல? தினம் தினம் அவரது பாததூளி பட்ட  இடத்தில்  சேவை செய்ததோடு, தினமும் இரு வேளையும் அவரது   தரிசனம் வெகு அருகில்!  அந்த  அனுபவத்தை நினைக்கும்போதே இன்றும்  எனக்கு மெய்சிலிர்க்கிறது.

இன்று  அவர்  நம்முடன் இல்லையென்றாலும்  அவர்
நம்மைப்  பார்த்துக்  கொண்டும்  நம் கஷ்டங்களைத்  தீர்த்துக்  கொண்டும் தெய்வீக  நிலையில்  நம்மைக் காப்பாற்றுவதை  உணர  முடிகிறது.  #ஓம்ஸ்ரீசாயிராம்!🙏
#ராதாபாலு

கொலு

எனக்கு சின்ன வயதிலிருந்தே கொலு வைக்க மிகவும் ஆசை.என் பிறந்த வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை. திருமணத்திற்குப் பின் விதவிதமாய் கொலு வைக்க வேண்டும் என நினைத்திருந்த என் ஆசையில் மண்!

என் புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் எனக்கு மாமனார் இல்லாததால் என் மாமியார் என் நாத்தனார் திருமணம் ஆனபின் கொலு வைப்பதில்லை.
எனக்கு திருமணம் ஆன சில மாதங்களிலே வங்கி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற என் கணவருக்கு கண்ணன் பிறந்த மதுராவுக்கு மாற்றலாகியது. ஹிந்தி என்று தமிழில் மட்டுமே பேச, எழுதத் தெரிந்த நான் அங்கு சென்று திண்டாடியது ஒரு தனிக்கதை!

35 வருடங்களுக்கு முன் அந்த ஊரில் தமிழர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. குமுதம்,  விகடன் வாங்கக்கூட ஊரை விட்டுத் தள்ளியிருந்த கன்டோன்மென்ட்டுக்கு போக வேண்டும். நான் கொலு வைத்தால் யாரைக் கூப்பிடுவது? துலுக்கன்சாமந்திப்பூ மட்டுமே கிடைக்கும் ஊரில் எதைப் போட்டு அன்னையை பூஜிப்பது? அப்பவே என் கொலு ஆசை காணாமலே போய்விட்டது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பின் தமிழ்நாட்டுக்கு மாறுதல். என் உள்ளே ஒளிந்திருந்த கொலு ஆசை மீண்டும் தலை தூக்கியது. குழந்தைகள் அடுத்தவர் வீட்டு கொலுவைப் பார்த்து நாமும் வைக்கலாமே என்று ஆசைப்பட்டார்கள்.அச்சமயம் என் கணவருக்கு மாற்றல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வர, கொலுபொம்மைகள், படிகள் என சாமான்கள் சேர்க்க பயம்! என் பெண்ணும், பிள்ளையும் வீட்டில் இருக்கும் ஷோகேஸ் பொம்மைகள், தங்கள் பள்ளியில்  க்ராஃப்ட் வகுப்பில் முட்டை ஓடு, பிட் துணிகள், அட்டை போன்ற தேவையற்ற பொருள்களில் (art from waste) செய்த பொம்மைகளை,  தினசரிகள், சின்ன பலகைகளை படிகளாக அடுக்கி,அதில் ஒரு அங்கவஸ்திரத்தை விரித்து கொலு வைத்ததோடு, தம் வகுப்பு ஆசிரியைகளையும் கூப்பிட்டு விடுவார்கள்!

என் ஆசார மாமியாரோ 'முட்டை ஓடு பொம்மையெல்லாம் நவராத்திரி கொலுவில் வைத்தால் மகாபாவம்' என்பார்! எனக்கோ தர்மசங்கடம்!

வந்த ஆசிரியைகளோ 'ஆஹா..குழந்தைகள் அழகாக கொலு வைத்திருக்கிறார்களே' என்பார்கள்! வந்தவர்களுக்கு காபியும், சுண்டலும் செய்வது என் வேலை!

கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் இதுமாதிரி  கொலுதான் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன்பின் பத்து வருடங்கள்  மும்பைவாசம்! அங்கு ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்திக்கும் வாங்கும் எங்கள் வீட்டு பிள்ளையார்களுக்கு விசர்ஜன் கிடையாது! கொலுவிற்காக பத்திரப் படுத்தப்படும்! ஒருமுறை கொலுவில் ஒரே பிள்ளையார் மயமாக இருந்தது!கொலு மூன்றுபடிதான்..சுற்றி பார்க், கோலம் இவைதான் நிறைய!

அச்சமயம் என் தோழி ஒரு மரப்பாச்சி ஜோடியைக் கொடுத்து என்னை பெரிதாக கொலு வைக்கச் சொன்னார். அதன்பின்தான் அழகான பொம்மைகள், அமைப்பான படிகள், விளக்கு அலங்காரங்கள் என் கொலுவை மெருகேற்றின.
நான் சென்று ரசித்த பல நாடுகளின் பொம்மைகளோடு, என் பெண், பிள்ளைகள் எந்த ஊருக்கு சென்றாலும் வாங்கிவந்து தரும் பொம்மைகள் என் கொலுவுக்கு மேலும்  அழகு சேர்க்கின்றன.

என்னோடு இணைந்து என் துணைவர் செய்யும் பூக்கள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்கள் கொலுவுக்கு 'பளிச்' லுக் தருபவை! நாம் தூக்கி எறியும் சாமான்கள் என் கைவண்ணத்தில் வித்யாசமான பொம்மைகளாகக் காட்சி தரும்! என் பேரன், பேத்திகள் சாக்லேட் பேப்பர்களைக் கூட பத்திரப் படுத்தி என்னிடம் கொடுத்து 'நவராத்திரிக்கு பொம்மை பண்ணு பாட்டி' என்பார்கள்!

2016ம் ஆண்டு என் கொலு மங்கையர்மலர் கொலுப் போட்டியில் பரிசு பெற்றபோது என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.இதை என் கொலுவுக்கு கிடைத்த ஒரு சிறப்பான அங்கீகாரமாக எண்ணுகிறேன்.

இந்த வருட கொலுவில் நான் உருவாக்கியிருப்பது முத்தேவியரை! இதில் நடுநாயகமாகக் காட்சி தரும் தேவி எங்கள் ஊரான ஆடுதுறை பெருமாள் கோயிலில் அருளாட்சி செய்யும் அழகுசடைமுடி அம்மன்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணனாக கண்கவர் அழகுடன் காட்சி தருவதும் இவ்வருட கொலுவின் சிறப்பு.

Night at the Golu!நகைச்சுவை பதிவு!!

Night at the Golu!
நகைச்சுவை பதிவு

கணபதி...எல்லோரும் எழுந்திருங்க. வீட்டில் எல்லாரும் தூங்கியாச்சு.

பார்வதி...கணேசா! நீ எங்க கிளம்பிட்ட?

கணபதி...நவராத்திரி நாளையோட முடியற்தே. நம்ம இடத்துக்கு கிளம்ப வேண்டியதுதான.

பார்வதி...பத்து நாளா ஒரே இடத்தில உட்கார்ந்து கால்வலி . கொஞ்சம் நடப்போமா.

லக்ஷ்மி...பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம்...எங்க போனாலும் படுத்து தூங்கற்துதான் வேலை.வந்து எனக்கு கொஞ்சம் காலைப் பிடிச்சு விடுங்கோ... வலி தாங்கல.

விஷ்ணு...நல்ல தூக்கத்துல இருந்தேன். சரி வா. பக்கத்துல உக்காரு.

பார்வதி....சரஸு பார்த்தியா லக்ஷ்மியை. அதிர்ஷ்டக்காரி. வீட்டுக்காரர் எப்புடி கால் பிடிச்சு விடறார்.

சரஸ்வதி....பணப்பை அவகிட்ட இருக்கே..அதான்!

பார்வதி...அதுவும் சரி. நம்மகிட்ட இல்லையே!

சரஸ்வதி...நீங்களும் பரமேஸ்வரரை கூப்பிடுங்கோளேன்!

பார்வதி...ஹ்ம்.கிழிச்சார். தன் உடம்புல பாதியைக் கொடுத்து  காலத்துக்கும் நிக்க வச்சுடுவார்.

சரஸ்வதி...நீங்கள்ளாம் கொடுத்து வச்சவா. எங்காத்துக்காரர் என்கூட ஒரு இடம் வரதில்ல. கோவில்லதான் அவருக்கு இடம் இல்லனா கொலுவிலயும்  இல்லையே?😰

பார்வதி....இதான் உன் கவலையா? அடுத்த வருஷ கொலுபொம்மை ஸ்பெஷலா சரஸ்வதி பிரம்மாவை உருவாக்க வெச்சுடுவோம்!

முருகன்....என் மாமாக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா ராஸக்ரீடை பண்ணிண்டிருக்காரே.ஹ்ம்ம்..

கண்ணன்...ஏன் அலுத்துக்கற முருகா. வள்ளி, தெய்வானை எங்கே?

முருகன்....ரெண்டு பேரும் நவராத்திரி விரதம்னு சொல்லிட்டு அவா பிறந்தாத்துக்கு போயாச்சு.

ராமர்....இந்த வீட்டில பாயசம்,சுண்டல்,பட்சணமெல்லாம் செம டேஸ்ட்டு. இங்கயே பெர்மனென்ட்டா இருந்துடப் போறேன்.

சிவன்....அதான் நன்னா சாப்பட்றவாளை 'சாப்பாட்டுராமன்'ங்கறா!

ராமர்...ஹி.ஹி...
சீதை...மூணு அம்மாக்களுமா விதவிதமா சமைச்சுப் போட்டு நாக்கை வளர்த்து வெச்சிருக்கா. காட்டுல அடுப்பை ஊதி ஊதி நான் இவருக்கு சமைச்சுபோடறதுக்குள்ள போறும்னு ஆய்டுத்து!

பக்கத்தில் ஏதோ கசமுசவென்று சத்தம்...

முருகனும், கணபதியும் அடுத்து இருந்த திருமணம் நடக்கும் பொம்மைகளிடம் போய் பேட்டி எடுத்தனர்.

முருகன்...வருஷாவருஷம் கல்யாணமா உங்களுக்கு?

மாப்பிள்ளை....பணம் கிடைத்தா தினமும் கூட பண்ணிக்கலாமே!

கணபதி...எவ்வளவு குழந்தைகள்?

மாப்பிள்ளை....நாலஞ்சு இருக்கு. எல்லாரும் இந்த கொலுவிலதான் அங்கங்க இருப்பாங்க.

செட்டியாரம்மா....நேத்து ஒரு அம்மா பச்சைகலர்ல ஒரு பட்டு புடவை கட்டிட்டு வந்தாங்களே.அது போல ஒரு புடவைவாங்கித்தாங்க!

செட்டியார்....இந்த வருஷ வியாபாரம் சரியில்ல. டூப்ளிகேட் பட்டு வாங்கிக்க!

செட்டியாரம்மா...இங்க நாமளே  அப்டிதான!!😢

முருகனும்,பிள்ளையாரும் மொபைலுக்காக சண்டை போட்டு ஓடியதில் zooவில் இருந்த மிருகங்கள் பயந்து ஓட ஆரம்பித்தன.

திடீரென்  ஏதோ பேச்சுக் குரல் கேட்க
எல்லாரும் அவரவர் இடத்தில் போய் நின்றனர்.

'ஏதோ சத்தம் கேட்டுதே'என்று பாதி தூக்கத்தில் எழுந்து வந்த வீட்டு எஜமானர் கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றிலும் பார்த்து விட்டு திரும்பிப் போய் படுத்து விட்டார்.

முருகனும், கணபதியும் அடுத்து குறவன், குறத்தியிடம் தம் பேட்டியை ஆரம்பித்தனர்.

கணபதி...இந்த கொலுவில எத்தனை வருஷமா இருக்கீங்க?

குறவன்...ஒரு பத்து வருஷம் இருக்கும் ஷாமி.

குறத்தி...ஏன் சாமி..உங்க தம்பிதான எங்க சாதிப் பொண்ணை கல்யாணம் கட்டிக்கிச்சு?

கணபதி...ஆமாம்.அதோ நிக்கிறானே அவன்தான்.

குறவன்...நல்லா இருக்கட்டும் ஷாமி.

முருகன்...சங்கீத மும்மூர்த்திகளிடம்...மாமா நீங்கள்ளாம் சௌக்யமா?

தியாகய்யர்....என்னத்தை சொல்ல.நேத்து ஒரு பெண்மணி என் பாட்டை பாடினா. தவறான உச்சரிப்பு. தாளமில்லாத பாட்டு. சரியில்லாத ராகம். எழுந்து ஓடமுடியாம உக்காந்திருக்கேன்.😵

'நீங்கள்ளாம் யாரு? எந்த ஊரு?'..கீழே இருந்த பொம்மைகளைப் பார்த்துக் கேட்டார் கணபதி.

நாங்கள்ளாம் art from waste ல் உருவானவர்கள். குப்பைத் தொட்டியிலும், சாக்கடையிலும் இருக்க வேண்டிய எங்களை இப்படி அழகான உருவங்களா மாத்தி உங்களுடன் வெச்சிருக்காங்களே.அதுவே எங்க  அதிர்ஷ்டம்!
 .
பார்வதி....எல்லாரும் அவாவா இடத்துக்கு போங்கோ. . நாளைக்கு நம்ம எல்லாரையும் பெட்டில வெச்சு அடுக்கிடுவா. அடுத்த வருஷம்தான் நாம பார்த்துக்க முடியும்.

கொலுவில் இருந்த மிருகங்கள் அங்குமிங்கும் சென்று கொலுவை ரசித்தன.

எல்லோரும் அவரவர் இடம் செல்ல, முருகன் மட்டும் மொபைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்!

பார்வதி....முருகா! நான் சொன்னது காதில் விழலயா?

முருகன்....இதோ போறேம்மா!

கணபதி....அப்படி என்னதான் எழுதற?

முருகன்....FBல மத்யமர்னு ஒரு க்ரூப் இருக்கு. அதில போஸ்ட் போட்டிண்டிருக்கேன்.

கணபதி....எனக்கு தெரியாதே.அதுல என்ன ஸ்பெஷல்?

முருகன்....அம்மா, அப்பாவை மட்டுமே சுத்தி வந்துண்டிருந்தா உனக்கு என்ன தெரியும்? என்னை மாதிரி உலகத்தை சுற்றி வரணும்!

பார்வதி....அதைப் பற்றி சொல்லேன் முருகா.

முருகன்....அதில் நல்ல போஸ்ட்டை தேர்ந்தெடுத்து  POTWனு சர்ட்டிஃபிகேட் கொடுப்பா. நல்ல விஷயங்களை ஷேர் பண்ணினா GEM ஆகலாம். இந்தாத்து மாமிக்கு கூட POTW கிடைச்சிருக்காம். அவா சந்தோஷத்தில வரவா, போறவாகிட்டல்லாம் இதைப் பற்றி சொல்லிண்டிருக்கா! நானும் அதில join பண்ணிருக்கேன்.

எல்லா தெய்வங்களும் கோரஸாக....நாமெல்லாம் இப்போ மேல் லோகத்திலயோ, பாதாள லோகத்திலயோ இல்லாம மத்தியில் பூலோகத்திலதான இருக்கோம். அதனால நாமும் மத்யமர்தான்!நாம எல்லோரும் மத்யமர்ல சேர்ந்து டுவோம்!

ராதாபாலு

மார்கழி நினைவுகள்...!!


மார்கழி  மாதம்  வந்தாச்சு…!
மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் திருப்பாவை,  திருவெம்பாவைப்  பாடல்களும் ,  எல்.ஆர்.ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத  ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  இனிக்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃ பிளாட்டுகளில் வாசலும்  இல்லை: கோலமும்  இல்லை:  அதை ரசிப்பவரும்  இல்லை.

என்   சின்ன வயதில் நான்கு
மணிக்கெல்லாம்  என் அம்மா ‘எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு’  என்பார்.  இதமான மார்கழிக் குளிரில் கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும்.

கோலத்தை  போட்டு  முடித்து குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று  பஜனையில்  பாடிவிட்டு,  சுடச்சுட  பொங்கலைப்  பெற்றுக்கொண்டு  வந்து  வீட்டில்  அதை  ருசித்து  சாப்பிடும்  அனுபவம் ….இன்றும்  மனம்  அந்த  நாளுக்காக  ஏங்குகிறது!   அறியாத  வயதில்  அன்று  செய்த  அந்தப்  புண்ணியம்தான்  இன்று  அன்பான  கணவரையும்,  அருமையான  குழந்தைகளையும்  கிடைக்கச்  செய்தது  போலும்!

எட்டு  வயது முதல்  எந்தக்  கோலம்  பார்த்தாலும்  அதை  அப்படியே  மனதில்  வைத்து  மறுநாள்  வாசலில்  போடுவேன். விதவிதமாகக்  கோலம்  போடும்  என்  அம்மா  அச்சு  மாதிரி  சிறிதும்  வளையாமல்,  கோணல்  இல்லாமல்  புள்ளி  வைக்கும்  திறமையும்,  அளவெடுத்தாற்போல்  கோலம்  போடும்  அழகும்    என்னிடம்  கொஞ்சம்  குறைவுதான். 
ஆனாலும்  புள்ளிக்கோலம்,  வளைவுக்  கோலம்,  நேர்கோட்டுக்  கோலம், ரங்கோலி என்று  எனக்குத்  தெரிந்த  கோலங்களைப்   போட்ட நோட்டுகள்  ஏழெட்டு  இன்னமும்  என்னிடம்  உள்ளன.

திருமணம் ஆனதுமே உத்திரபிரதேசத்திற்கு மாற்றலாகி விட்டதால் அங்கு கோலம் போட வாய்ப்பில்லை. என் முதல் பிரசவத்திற்கு என் அம்மா வீட்டிற்கு  நாகர்கோவிலுக்கு வந்தபோது, என் மகன் பிறந்த அன்றுவரை வாசல் நிறைத்து கோலம் போட்டிருந்தேன்.

திரும்ப தமிழ்நாட்டிற்கு மாற்றிவந்தபோது அதிர்ஷ்ட  வசமாக  நாங்கள்  குடியிருந்த  வீட்டு  வாசல்கள்  கோலம்  போட   ஏற்றதாக  இருந்ததால்,  நானும்,  என்  மகளும்  சேர்ந்து  அமர்க்களமாகக்  கோலம்  போடுவோம். என்  கணவருக்கு,  பிள்ளைகளுக்கு  ரொம்ப  பிடித்த  கோலங்கள்  கூட  உண்டு!  தினமும்  போட   வேண்டிய  கோலங்களை  என்  பிள்ளைகள்தான்  தேர்ந்தெடுத்துக்  கொடுப்பார்கள்! 

தினமலர்  பத்திரிகையின்  பரிசைக்  கூட  பெற்றுள்ளோம். பல கோலப்  போட்டிகளிலும்  கலந்து  கொண்டு  பரிசுகளைப்  பெற்றதுண்டு! இன்றும்  எங்கள்   ஃபிளாட்டில் மார்கழி  முழுவதும் விதவிதமாய்க் கோலம் போடுவேன்! இது  போன்ற  இனிய நினைவுகளும், அனுபவங்களும்  அக்காலப்  பெண்கள்  பலருக்கும்  இருக்கும்  என  நினைக்கிறேன்.

கோலம்  போடுவது  ஒரு  கலை மட்டும்  அல்ல.  நம்  உடலுக்கும்,  .கைகளுக்கும்,  இடுப்புக்கும்,  கண்ணுக்கும்,  மூளைக்கும் சிறந்த  உடற்பயிற்சியும்  கூட. மார்கழி  மாத  விடிகாலைகளில்  காற்றில் ஓசோன் நிறைந்திருப்பதை  அந்நாளிலேயே  அறிந்த  நம்  முன்னோர்  இப்படி  கோலம்,  பஜனை,  கோவிலுக்கு  செல்வது  என்ற  பழக்கங்களை  உண்டாக்கியுள்ளனர். கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள். கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும்.

கோலம்  உருவானதற்கான  சில  சான்றுகளைப்  பார்ப்போம். வேத  காலத்தில்அங்குரார்ப்பணத்தின்
போது முளைப்பாலிகை  பால்,  பால்குடம் ,  விளக்கு  இவற்றை  வைக்க  தனித்தனி    கட்டங்கள்  வரைந்து  அரிசிமாவு,  மஞ்சள்பொடி  நிரப்புவர்.அதுவே  காலப்  போக்கில்  கட்டக் கோலங்களாகி விட்டன.  அக்கினி  வளர்க்க  ஒன்பது  குழிகள்  தோண்டிக்  குண்டம் அமைப்பர்.
அவற்றை  இணைக்க  கோடு  இட்டதே  புள்ளிக்  கோலமானது. தமிழ்  மக்கள்  பழங்காலத்தில்  மணல்  ஓவியம்  வரைந்ததாக  பழைய  நூல்களில் காணப்படுகிறது.
வெண்மையும்,  சிவப்பும்  இணைந்த  கோலம்  சிவா-சக்தி  ஐக்கியமாகக்  கூறப்படுகிறது.

வடநாடுகளில்  போடப்படும்  ரங்கோலி பற்றிய   சுவையான கதை  இது.  ஹோலி  என்ற   முனிவரின் மனைவி  அவள் கணவர்
இறந்ததால்  அவர்  உருவத்தை  பல  வண்ணப்  பொடிகளால்  வரைந்து  அதன்  மீது  48  நாட்கள்  படுத்து  தன்   உயிரை  விடுகிறாள்.அவள்  நினைவாக  பல  வண்ணங்களில்  போட்ட  கோலம்  ரங்கோலி  ஆயிற்று.

கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.  நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  நல்லது. வீடு  வளம் பெறும்..வாசலில் சூர்யோதயத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும். விசேஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  நல்லது. கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க இரவானாலும்  கோலமிட  வேண்டும்.
அமாவாசை  மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.

இன்று  ஸ்டிக்கர்  கோலங்களே  பல  வீடுகளுக்கு முன் காட்சி
அளிக்கின்றன. தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.