Friday, 8 May 2020

கனவு நனவானது!


என்னுடைய  டீன்ஏஜில் பிரபல எழுத்தாளர் திரு மணியனின் பயணக் கட்டுரைகளை படித்து பாரிஸ், சுவிட்சர்லாந்து,ரோம் போன்ற இடங்களுக்கு போக ஆசைப்பட்டு கனவு கண்டவள் நான்! நடுத்தர குடும்பவாசியான  எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சமும் நினைத்துக்  பார்த்ததில்லை !பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் ஜெர்மனிக்கு  வேலைக்கு சென்றபோது அங்கு சென்ற  நான் அவனிடம் 'எனக்கு  சுவிட்சர்லாந்தை பார்க்க வேண்டும்.ஆல்ப்ஸ் மலையில் நடக்க வேண்டும்' என்று கேட்டேன். என் மகனும்  காரிலேயே எங்களை அழைத்துச் சென்றான். அங்கு ஜூரிச்சில் அவன் நண்பன் இருந்ததால் அங்கு  தங்கினோம். மறுநாள் ஐரோப்பாவின் மிக உயரமான ஜுங்க்ப்ராஜோக் (Jungfrajoch) சிகரத்திற்கு சென்றோம்.ஆஹா...என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

 ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல்

என்று பாடியபடியே என் கணவரைப் பார்த்தேன். அவரோ இயற்கை அழகில் சொக்கிப் போயிருந்தார்.அங்கிருந்து வரும் வழியில் மிகப் பெரிய அழகிய ட்ரம்மல்பேக் ( Trummelbech ) நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தோம். அந்த நீர்வீழ்ச்சியை பல இடங்களில்  அதன் ஒவ்வொரு அழகையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார்கள்.அங்கிருந்து ஜூரிச்சிற்கு ஸஸ்டேன் பாஸ் (Susten Pass) வழியாக வந்தோம்.மலைப்பாதை ஒற்றையடிப் பாதை போல இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சுற்றிலும் பளபளவென்று ஒரு வெள்ளிமலையில் செல்வது போல இருந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்த நாங்கள்  வழியில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குள் குளிர் நடுக்கி விட்டது. பாதிவழி வந்தபின்  பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பாதை மூடப்பட்டு விட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் அந்தப் பாதையில் வரக் கூடாதாம். திரும்பிப்  போகும்படி சொன்னார்கள்.சுற்றிலும் காடு மாதிரி  மரங்கள். அத்தனையிலும் பனி உறைந்து இருந்தது.தெருவில் ஈ காக்கையைக்  காணோம்! சற்று தொலைவில் ஒரு ஹோட்டல் தென்பட,  அங்கு நின்றிருந்த கார்கள் பாதிக்குமேல் பனி மூடியிருந்தது. ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்று சொல்லிவிட எங்களுக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை.நேரம்  ஆக ஆக இருள் கவிந்து ,ஸ்னோவினால் எங்கள் காரின் சக்கரம் மறைய ஆரம்பித்து விட்டது. என் கணவரும், நானும் 'இனி என்ன செய்வது? திரும்ப வந்த   வழியிலேயே சென்று விடுவோம்' என்றோம்.  மலைப்பாதை. வேறு போக்குவரத்து இல்லாததால் வழி பூராவும் ஒரே பனி படர்ந்து வழியே தெரியவில்லை.என் மகனோ அந்த நேரத்திலும்  கூலாக 'கவலைப் படாதம்மா.வழி மறைந்து விட்டால் காரில் ஹீட்டரை போட்டு விட்டு தூங்கலாம்.காலை  கிளம்பி செல்லலாம்'என்றான்! ஆள் அரவமில்லாத அந்தகாரத்தில் அதுவரை ரசித்த பனி அச்சுறுத்தும் அரக்கன் போல தெரிந்தது. நானோ எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தேன். ஒருவழியாக கீழே வந்து வேறு வழியில் ஜூரிச் சென்றோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதம். ஆனாலும் நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். அதன்பின் பலமுறை நான் ஜெர்மனி சென்றாலும் இந்த புகைப்படத்தைக் காணும்போது அந்த மகிழ்ச்சியும்,திகிலும் கலந்த அனுபவம் இன்றும் இனிக்கும் நினைவுதான்!

Monday, 4 May 2020

இன்று காமதா ஏகாதசி🙏🏼3.4.2020


M...சித்திரை மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். தம்பதிகளின் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. நினைத்ததை நிறைவேற்றித் தருவதுடன் ஏழு ஜன்ம பாவங்களும் நீக்கிவிடும்.

நாகராஜனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ஒரு கந்தர்வன் சாப விமோசனம் பெற அவன் மனைவி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பயனால் கந்தர்வன் நலமடைந்தான்.முன்னொரு காலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை ஆண்ட புண்டரீகன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருந்தபோது அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான். லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். அச்சமயம் அவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார்.

இதைக் கேட்ட  இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப்  விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழி
பட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

உடலின் இயக்கத்தை உறுதி செய்யும் உணவில்லாதபோது நம் வயிறு  ஓய்வுகொண்டு தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும். இதற்காகவே ஏகாதசி அன்று உபவாசம் இருக்க நம் முன்னோர்
கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உடல் பேசாமல் இருந்து மனம் கண்டபடி நினைவுகளால் அலைக்கழிக்கப் படக்கூடாது என்பதற்காக அன்றைய நாளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்கள். எனவேதான் ஏகாதசி அன்று நாம் புண்ணிய நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை.

ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றையும் பகவானிடம் ஈடுபடுத்தி அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாயாலேயே ..
'சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்'
என்று கூறியுள்ளார். பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம்...என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது நாம் தேடி செல்வது இறைவனின் சந்நிதானமே. துன்பம் நீங்க அவனருள் தேவை.

இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. நாம்,  வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மோசமான நிலை. வீட்டில் மகிழ்வாக இருக்கிறோம் என்பதை விட நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பயமும் உள்ளூர இருப்பதை மறுக்க முடியாது.

இதுபோன்ற அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது அவசியம். அதுவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்குள் உருவாக்கும். அப்படி நாம் பயனுனடையவே நம் முன்னோர்கள் இது போன்ற விரத நாட்களை வகுத்திருக்கிறார்கள்.

அத்தினங்களில் இறைவழிபாடு செய்யும்போது நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறது. அப்படி சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம்.

இத்தகைய சிறப்புகளை உடைய காமதா ஏகாதசியைக் கடைப்பிடிக்க கிடைக்கும் நன்மைகளைப் புராணம் பட்டியலிடுகிறது.

ஏழு ஜன்மப் பாவம் தீரும்..
ஆன்மா சுத்தமாகும்..
சாபங்கள் தீரும்..
மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை..
எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்..
தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்..
தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்..

ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வணங்க வேண்டும். தற்போது ஆலயங்கள் எல்லாம் மூடியிருக்கிற காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து வழிபடலாம்.

சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. அப்படி விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இன்றைய நிவேதனம்..
பயத்தம் கஞ்சி
கேரட் அல்வா



ஸ்வீட்_கொரோனா_காபி


சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.
எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட  வேறு வழியின்றி  கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!
என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!
இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால்  அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!
நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!
திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!
என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.

வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.
கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன்.

Saturday, 2 May 2020

கண்ணனுக்கு அல்வா..!!

சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' என்று அழைக்கப்படுகிறது.

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது பெரியோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள்.

நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த பாபமோசனிகா ஏகாதசி விரதம். எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.
இன்று ஏகாதசி ஸ்பெஷல் நிவேதனம் கோதுமை அல்வா.

என் கணவருக்கு பிடித்த ஸ்வீட் செய்து தருவதாக சொன்னபடி இன்று அல்வா செய்து குட்டி கண்ணனுக்கு கொடுத்தாச்சு!

'எனக்குதான் அல்வா கொடுத்துண்டிருந்த..இப்போ கண்ணனுக்கும் அல்வா கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளப் போறியா' என்றார் என் கணவர்!!

ஸ்வீட்_கொரோனா_காஃபி


ஆய கலைகள் அறுபத்து நாலில் சமையலும் ஒன்று. பீம பாகம்,
நளபாகம் என்று ஆண்களே அக்காலத்தில் சமையல் வல்லுனர்களாக இருந்திருக்
கிறார்கள். திரௌபதி ரொம்பவே சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்பாளோ! ஐந்து கணவரும் வகை வகையாக சமைத்து...திரௌபதி சாப்பிட வாம்மா...என்று அன்பொழுகக் கூப்பிட்டு ஆசையுடன் பரிமாறி இருப்பார்களோ!! தமயந்தியும் கொடுத்து வைத்தவள். நளன் ராஜ்ய பரிபாலனத்துடன் சமையலும் செய்திருப்பானோ!!

இன்றும் திருமணம் போன்ற பெரிய விழாக்களில் ஆண்கள்தானே சமைக்கி
றார்கள்.அன்று ஆண்கள் வசம் இருந்த சமையல் பெண்கள் மேல் திணிக்கப்பட்டதோ..அல்லது பெண்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்களோ..‌யாருக்கு தெரியும்!!

என் கணவர் ஓரளவு அடிப்படை சமையல்கள் செய்வார். என் பிள்ளைகளும் நன்றாகவே சமைப்பார்கள். பெரிய பிள்ளை பொங்கல் செய்தால் அதில் ஏகப்பட்ட ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு நெய்யைக் கொட்டி பண்ணுவான்! டீயை பாலிலேயே கொதிக்க விட்டுப் போடுவான்! ப்ரெட், கேக் எல்லாம் சூப்பராக செய்வான்.

என் மாட்டுப் பெண்ணும் பிஸ்ஸா, கேக் எல்லாம் நிறைய வெரைட்டி  செய்வாள். நாங்கள் ஜெர்மனி சென்றால் எங்களுக்காக Eggless cake செய்வாள்.

சென்னையில் இருக்கும் அடுத்த பிள்ளை Bread making classக்கு சென்று கற்றுக் கொண்டும்,  YouTube பார்த்தும்  விதவிதமாய் செய்கிறான். ஆர்கானிக் ப்ரெட் தயாரித்து கடைகளுக்கு supply செய்து கொண்டிருந்தான்.

இப்பொழுது கொரோனா lock downல் மாலை நேர snacks ப்ரெட்தான்!! இட்லி, தோசை போரடித்துப் போன பேரன் பேத்திகள் இந்த வித்யாசமான snackஸை நன்கு enjoy செய்கிறார்கள்!

என் மகளுக்கும் ஆர்வம் அதிகரிக்க அவள் வடா பாவ், பானிபூரி, கப் கேக் என்று ஜமாய்க்கிறாள்! தினமும் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பும் அவர்கள் செய்த Lock down special ரெசிபிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!

இன்று நான் செய்தது simple & easy நட்ஸ் பக்கோடா.
ஜில்ஜில் பலாப்பழ பாயசம்

மசாலா தட்டை

தேவை
புழுங்கல் அரிசி -- 1 கப்
பொட்டுக்கடலை பொடி -- 1/2 கப்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகுப்பொடி --1/2 டீஸ்பூன்
காரப்பொடி -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -- சிறிது
உப்புபொடி -- தேவையான அளவு
விழுது நெய் --2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -- 1 கொத்து
எண்ணை  -- பொறிக்க

மசாலாவிற்கு
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு
இரண்டையும் நைசாக அரைக்கவும்.

செய்முறை
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த மசாலா, ஊறவைத்த கடலைப் பருப்பு, கருவேப்பிலை, மிளகுப்பொடி, காரப்பொடி, சீரகம், பெருங்காயம், நெய்  சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

சிறு உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு தட்டைகளாகத் தட்டி முள் கரண்டியால் சிறு ஓட்டைகள் போடவும். எண்ணையைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறித்து, எண்ணை
வடிந்ததும் எடுத்து வைக்கவும்.
சூப்பரான கரகர தட்டை வாயில் போட்டால் கரையும்!

பலாப்பழ பாயசம்..
ஒரு பலாசுளையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
10-12 பலாசுளைகளை கொட்டை நீக்கி நறுக்கி 10 நிமிடம் நீரில் வேகவிட்டு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் அத்துடன் வெல்லம் தேவையான அளவை நீரில் சுடவைத்து வடிகட்டி சேர்க்கவும்.
அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்து
5 -10 நிமிடம் கொதித்ததும் அரை கப் பால் சேர்க்கவும்.
ஏலப்பொடி, மிந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பலாப்பழ பாயசம் ஃப்ரிட்ஜில் வைத்து கப்பில் விட்டு கூலாக சாப்பிட தேவாமிர்தம்தான்!!

ஸ்வீட்_கொரோனா_காபி

சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.

எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட  வேறு வழியின்றி  கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!

என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!

இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால்  அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!

நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!

திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!

என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.

வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.

கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன்.






இன்று அட்சய திருதியை


அட்சயதிருதியை என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? ஏன் அட்சயதிருதியை கொண்டாடப்படுகின்றது என்பது பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சயதிருதியை என்றும், பரசுராமரின் பிறந்த நாளாக அட்சயதிருதியை கொண்டாடப்
படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதிகாசங்களின்படி, அட்சய
திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த நாளாகவும் கூறப்படுகிறது. மகாலட்சுமியின் அருளால்  குபேரன் செல்வந்தனானதும் அட்சய திருதியை அன்று தான்.

கண்ணனின் அருளால் குசேலன் குபேரன் ஆனது, தனது தாயை மீட்க,  தேவலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் எடுத்து வந்தது, அன்னபூரணி தேவி தோன்றியது,  மகாபாரதத்தை வியாசர் கூற, விநாயகர்
எழுதத் தொடங்கியது, தர்மபுத்திரர் அட்சய பாத்திரத்தைப் பெற்றது. திரௌபதிக்குக் கண்ணன் புடவை சுரந்து காத்த நாளும் இந்த அட்சய திருதியை அன்று தான். இத்தகைய  பற்பல சிறப்புகள் நிறைந்த நாள் அட்சயதிருதியை ஆகும்.

அட்சயம் என்றால் குறையாத என்று பொருள். அட்சய திருதியை அன்று கற்கும் கல்வியும், செய்யப்படும் தானமும், நற்செயல்களும் குறைவின்றித்  தொடரவேண்டும் என்பதை உரைக்கவும் அட்சயதிருதியை என்ற பெயர் ஏற்பட்டது. அட்சயதிருதியை அன்று சூரியன், சந்திரன் இருவருமே உச்சத்தில், சம  அளவு ஒளியுடன் திகழ்வதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

தானியங்களைச் சமர்ப்பித்துத் திருமாலை வழிபட வேண்டிய நாளாக அட்சயதிருதியை கருதப்படுகிறது. யஜுர் வேதத்தில் அட்சய திருதியை நாளில் வெள்ளை நிறப் பொருட்கள்,
மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்கி அதைப் பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

மஞ்சளில் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நலன் தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் கிழங்காகவும் வாங்குவதால் வாழ்க்கை நலமாக வளமாக சிறப்பாக இருக்கும் எனப்படுகிறது.

இந்நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிக நன்மை தரும். அவர்களுடைய தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தங்கம், வெள்ளி இவை  லட்சுமியின்  அம்சமாகக் கூறப்
படுவதால் தற்காலத்தில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

சித்தர்கள் ஜீவசமாதி உள்ள  திருவண்ணாமலை போன்ற ஆலயங்களுக்குச் செல்வது புண்ணியத்தை தரும்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிம்மாசலம் நரசிம்மர் கோயிலில், எப்போதும் சந்தனக்காப்பால் மூடப்பட்டிருக்கும் நரசிம்மரை  அட்சயதிருதியை அன்று மட்டும்  சந்தனக் காப்பு இல்லாமல் முழுமையாகத் தரிசிக்கலாம்.

தம்உலகப் புகழ்ப்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான  ரதங்களை ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை அன்று தான் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.

பத்ரிநாத், கேதார்நாத்தில் குளிர்காலம் முடிந்து கோயில் நடைதிறக்கப்படும் நாள் அட்சயதிருதியை ஆகும்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் பெரிய கடைவீதியில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை,  வடுவூர்  ராமர் கோயிலில் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை நடைபெறும் கருட சேவை,  மன்னார்குடி ராஜகோபாலனின் கருட  சேவை போன்ற கருட சேவை உற்சவங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.

ஏன் பன்னிரு கருட சேவை?  திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு  இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன்,  விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.

அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவர்களுக்காக சாரங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு  வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும்  தரிசிப்பவ
ர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.

"அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’
என்பது கும்பகோணத்தின் சிறப்பைக் கூறுகிறது.

நாமும் அவனருள் நாடி, அவன் திருப்பாதம் பற்றி இன்றைய நிலை மாற வேண்டுவோம்🙏🏼

நன்றி..!நன்றி


நன்றி..!நன்றி
சமையல் ஸ்பெஷலுக்கு என் பெயரையும் குறிப்பிட்ட மத்யமர்களுக்கு நன்றி🙏🏼.
நேற்று என் நட்சத்திர பிறந்த நாளுக்கு நான் செய்த ஸெவன் கப் கேக்!

ஸெவன் கப் கேக்

கடலை மாவு..1கப்
தேங்காய் துருவல்..1கப்
நெய்..1கப்
பால்..1கப்
சர்க்கரை..3கப்
ஏலப்பொடி..1டீஸ்பூன்

செய்முறை
கடலைமாவை 4 ஸ்பூன் நெய்யில் வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.

அத்துடன் பால், நெய், தேங்காய், சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.

நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.

மிந்திரி  பருப்பை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
சுலபமான சுவையான கேக் நாவில் கரையும்!

மாத்தி_யோசி


ஆயி_மாஜி_ஆயி😀

நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!🚋🏘️ எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்.

மணமான ஆறு மாதத்திலேயே என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்! ‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும்😞, ஏகப்பட்ட பிரமிப்போடும்🤨, சில இந்திப் புத்தகங்களோடும்📚 பயணமானேன். நான் படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது😙

என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து🤫 ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்குக் கவலையில்லை!🕺

ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு🍱 என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும்👭 ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க ‘அச்சா’😁, 'மாலும் நஹி’🥺 என்ற இரண்டு வார்த்தைகளோடு அசடு வழிந்தேன்🥴!

என் கண்கள்👀 என்னவரைத் தேட அவரோ அனைவருடனும் அமர்க்களமாகப் பேசிக்🗣️ கொண்டிருந்தார்.சே.. என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று ‘போதுமடா சாமி’ என்றாகி விட்டது!😞

நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரச்னை #‘படா_பேஜார்’தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள்,பறவைகள் 🐀🐆🐎🦜🐦🐓 மற்றும் பொருட்களுக்கும்🥛🍯 கூட ‘பால்’ உண்டு. பானி (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத்🍼 (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். குத்தா என்றால் ஆண் நாய்!🐕 குத்தி என்றால் பெண் நாய்🐩. இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல்!🚚 முதல் வேலையாக குழந்தைகளுக்கு இந்தியைக் கற்றுக் கொடுத்து எல்லாரும் பிரவீண் முடித்தார்கள்.

மீண்டும் கோலாப்பூருக்கு மாற்றல். நமக்குதான் இந்தி தெரியுமே என்று #'கெத்'தாக இருந்தேன்!💃 அங்கு சென்றதும்தான் புரிந்தது #மகாராஷ்டிர_மொழி #மகாகஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்👵🙎🙍🤷🙆
களுமாக நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்!

இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை 'பஸா'🙋 என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் டீக் ஹை என்று சொல்ல சோபாவைக்🛋️ காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறாள் என்று! அசட்டு சிரிப்புடன்🥴 அமர்ந்தோம்🙂! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல்😖 சரவெடி போல் விடாது பேச 'அச்சா..அச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்க
ளுக்கு இந்தி புரியவில்லை. அவர்கள் பேசியதில் 'சாய்' ☕என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி வந்து விட்டோம்.😮

என் பிள்ளை ஒருநாள் என்னிடம் 'ஆயி மாஜி ஆயி..மல ஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக் கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல்🤔 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான்.👩 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா' என்று நான் டென்ஷனாக..😟

'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'.
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே.🙎 'மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு🍛 வேணுனு அர்த்தம்' என்றான்.
இக்கட, அக்கட, புடே ,காலி என்று  எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!😅

அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்!🌃 ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’🤦 அவள் வீடு சென்ற என்னை ‘பன்ரி, குத்துக் கொட்றி’ (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க,🙄 நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ ‘குந்திக்க’ ஞாபகம் வர அமர்ந்தேன்!😊

‘நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐‘நிம்ம ஹேஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) 'நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) 😰என்று ‘சரவெடி’ 💥மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் ‘புஸ்வாணமாகி’ ⛲நான் வீடு திரும்பினேன்!

வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது? நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, ‘ஏண்டி, வீச்சாரிக்காயோ?🙁 உடம்பு வண்ணமே வைக்கவில்லையே?’😟 என்று கேட்க,😇 நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார். ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்னா இருக்கியா’ என்று அர்த்தமாம்.🙂 ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்😆! அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்🤩! என் அப்பா கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரையாம்!😆😅

ஈரோடில் பெண்களை 👸பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளைதான இருக்கா' என்றதும் தான் இந்த பிள்ளைக்கு அர்த்தமே புரிந்தது!😅😉

விளக்கமாற்றுக்குக்கூட,🧹 ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லயே?😆

இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!😃
#ராதாபாலு

மாத்தி யோசிக்கு என்ன எழுதலாம் என்று மாத்தி மாத்தி யோசித்தும் ஒன்றும் சரிவரவில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரி எழுதாமல் இந்த முறை ஸ்மைலிகளை சேர்த்து எழுதிப் பார்த்தேன்! வித்யாசமாக இருந்தது! நீங்களும் படித்துப் பார்த்து கமெண்டுங்கள்!