Wednesday 28 August 2019

ஆடி வெள்ளி சிறப்பு


ஆடி பிறந்தாலே பண்டிகைகளும் வரிசைகட்டி வந்துவிடும்.
ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரமும், விழாக்களும் ஆரம்பமாகி விடும். 

கன்னியாக்குமரி,  திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை பூஜித்து  சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும், மாங்கல்ய பாக்யமும் நிறைந்திருக்கும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆடி வெள்ளிகளில் நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை அர்ச்சிக்கும் 'நவசக்தி அர்ச்சனை’,  'சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் ஆலயங்களில் நடைபெறும்.

மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்கும் மாதமென்றால் மிகையாகாது. ஆலயமோ அலுவலகமோ அல்லது வீடோ எல்லா இடங்களிலும் பெண்கள் ஓங்கி நின்று ஆண்களை காக்கும் மாதம் ஆகும்!

மற்ற வெள்ளிக்கிழமைகளை விட  ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியை தரிசிப்பது சகல நலன்களைத் தரும்.

‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’யில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது.

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு.

ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை செய்தால்  வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.

No comments:

Post a Comment