Sunday, 18 August 2019

மத்யமர் இசை விழா



இசை..சங்கீதம்..பாட்டு..இவை அனைத்துமே நம் வாழ்வோடும் உணர்வோடும் கலந்தது. இறை உணர்வை நம்முள் தோற்றுவிப்பது.இசை  (music) என்பது ஒழுங்காக, கட்டுப்
படுத்தப்பட்ட, நம் செவிவழிச் சென்று மனதை மயக்கும் இனிய ஒலியாகும்.
குழந்தைகள் பாடும் ரைம்ஸோ, கிராமிய இசையோ, திரைப் பாடலோ, கர்நாடக இசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதமோ, வேத மந்திரமோ...எல்லா இசைக்கும் முக்கியம் ராகம் தாளம் பாவம்.
நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே இசை நம்மோடு பயணமாகிறது. குழந்தை பிறந்ததும் தாலாட்டு, அடுத்து திருமணங்களில் ஆரம்பிக்கும் மந்திர ஒலியும்,அந்தந்த நிகழ்ச்சிகளுக்கான ஊஞ்சல், மாலைமாற்றல், நலங்கு முதலான பாடல்கள். இது போல் பிறந்தது முதல் ஆரம்பமாகும் இசை இறந்தபின் ஒப்பாரி வரை  ஒவ்வொரு அங்கத்திலும் இணைந்து பிணைந்து வருகிறது.
சற்குரு தியாகராஜ சுவாமிகள் சரபோஜி மகாராஜாவின் வயிற்று வலியை கீர்த்தனைபாடி குணப்படுத்தியதும், முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வறண்டு கிடந்த பூமியை அமிர்தவர்ஷினி ராகக் கீர்த்தனம் பாடி மழையை பொழிய வைத்ததும், நாவுக்கரசர் அரவம் தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனை உயிர்ப்பித்ததும், ஞானசம்பந்தர் பூம்பாவையை பதிகம் பாடி  உயிரெழச் செய்ததும் அன்றே நடந்த உண்மை நிகழ்ச்சிகள்.
இன்று நாம் இசையை ரசித்து கேட்கும்போது நரம்பியல் சம்பந்தமான ‘என்டார்பின் ஹார்மோன்’ அதிகமாக சுரக்கிறது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதன் விளைவாக அதிகமாக கோபப்படுபவர்கள், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இசையை கேட்டால் குணமடைகிறார்கள் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது.
இசையைக் கேட்பதால், மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோன் சுரப்பதால்  இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுவதாக  ஆய்வுகள் கூறுகின்றன.
மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்
போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதால் மனம் சோர்வாகவோ,சோகமாகவோ இருக்கும்போது  பிடித்த இசையைக் கேட்கும்போது மனது லேசாகிறது.
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மகுடி இசையில் மயங்கி ஆடும் கொடிய விஷமுள்ள நாகம் முதலாக  மற்ற உயிரினங்களையும்
பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.இசையைக் கேட்கும் பசு அதிக பால் தருவதாகக் கூறப்படுகிறது.
ஏழு ஸ்வரங்களும் ஒவ்வொரு பிராணிகளின் ஒலியாக,  ஸ-மயில், ரி-ரிஷபம், க-ஆடு, ம-க்ரௌஞ்சபட்சி, ப-குயில், த-குதிரை, நி-யானை என்று மகாபெரியவர் சொல்வாரென்று  திருமதி விசாகா ஹரி ஒரு கதாகாலட்சேபத்தில் கூறினார்.
வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக் கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விரண்டு  இசைகளுமே சாமகானத்தி
லிருந்தே தோன்றியவை ஆகும்.
டிசம்பர் கச்சேரிகள் ஆரம்பித்தது எப்படி தெரியுமா? சுதந்தரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தங்கள் நாட்டுக்குச் செல்வர். அப்போது, இங்கே விடுதலை போராட்டங்கள் நடந்தால் யார் தடுப்பது என்று யோசித்தனர்.
நம் மக்களை  வசப்படுத்தக்கூடிய சக்தி இசைக்கு இருப்பதை உணர்ந்து டிசம்பர் மாதத்தில் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க, தங்களுக்கு ஆதரவாக இருந்த தமிழர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பர் சீசன் இசை நிகழ்ச்சி உருவானதற்கு இதுவே காரணமாம்!
கடந்த பத்து நாட்களாக நம் மத்யமரில் நடந்த இசை விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  விதவிதமாய் ராகங்கள்..
வித்யாசமான பாடல்கள.. பலப்பல பா(ba)வங்கள்! கர்நாடக இசை..மெல்லிசை..திரையிசைப் பாடல்கள் என்று அசத்திவிட்டார்கள்!
நான்கு வயது முதல் தொண்ணூற்று நான்கு வயது வரை சிறப்பாக பாடிய அத்தனை பேரின் திறமைகளையும் பாராட்ட வார்த்தைகள் ஏது? வயதானவர்களும் இளமையாக மாறி அமர்க்களப் படுத்தி விட்டார்கள்!
நம்மால் பாடமுடியுமா..நாம் பாடினால் ரசிப்பார்களா..லைக் கமெண்ட் வருமா..நமக்கு ராகம் தாளம் சரியாகத் தெரியாதே..
பாடலாமா..வேண்டாமா என்றெல்லாம் 'பூவா தலையா' போட்டு யோசித்துக் கொண்டிருந்தவர்களையும்  பாடவைக்க மேலும் நான்கு நாட்களை அதிகரித்த அட்மின்களின் ஐடியா பாராட்டத் தக்கது! ஆரம்பத்தில் பாடியவர்களைவிட கடைசி இரண்டு நாட்கள்தான் அதிகம் பேர் பாடியிருப்பார்கள் என நினைக்கிறேன்!
டிசம்பர் இசைவிழாக்களுக்கு சென்றால் தனிஆவர்த்தனத்தின் போது பாதி பேருக்கு மேல் கேன்டீனுக்கு சாப்பிடப் போய்விடுவார்கள்! நம் மத்யமரில் ஆலாபனை,ஸ்வரம், தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லாத தொடர்ந்த இசைமழை!
நம் இசைமழையில் நனைவதற்கு அவ்வப்போது வான்மழையும் இறங்கி வந்ததோ! நாமும் சுகமாக snacksகளைக் கொறித்துக்  கொண்டும், காஃபி, டீ என்று குடித்துக் கொண்டும் சொகுசாக இருந்த இடத்திலிருந்து கொண்டே விதவிதமான சங்கீதத்தை ரசிக்க முடிந்தது!
பதிவுகளை உடனுக்குடன் பத்து நிமிடங்களில் அப்ரூவ் செய்த அதிவேக மாடரேட்டர்களின் பணி சிறப்பானது.பாராட்டுக்கள்!
விலை கொடுத்தாலும் வாங்க முடியாத சந்தோஷத்தை இங்கு பாடிய ஒவ்வொருவரும் அடைந்ததை மறுக்க முடியாது. அனைத்து மத்யமர்களுக்கும் தம் குரலைக் காட்ட மேடை அமைத்துக் கொடுத்து, பலரின் பாராட்டையும் பெற்றுத் தரக் காரணமான மத்யமர் அட்மின்களுக்கு @Shankar Rajarathnam, @Meenakshi Loganathan,@Revathi Balaji,@Keerthivasan Rajamani நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை🙏
#ராதாபாலு
அனைவரின் பாடல்களையும் கேட்டு ரசித்து லைக், கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்திய அனைத்து மத்யம நண்பர்களுக்கும் நன்றி🙏

No comments:

Post a Comment