ஆன்மாவைப் பாவங்களிலிருந்து நீக்கி பண்படுத்துவது பண்டிகை. ஸ்ராவணம் என்னும் ஆவணி அவிட்டம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூவர்ணத்தாரும் கடைப் பிடிக்க வேண்டிய பண்டிகை.
இதுவரை செய்த பாவங்களை நீக்கி தம்மைப் புனிதப்படுத்து
வதற்காக ஆண்களால் செய்யப் படுவதே ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிதலும், காயத்ரி ஜபத்தன்று காயத்ரி மந்திரம் ஓதுவதும். ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீராமரும் கூட ஆவணி அவிட்டம் செய்ததாக புராணங்கள் உரைக்கின்றன. ஆவணி அவிட்டத்தன்று வேதம் ஓதுவது மிக விசேஷமானது.
இதில் செய்யப்படும் காயத்ரி ஜபம் மிக சக்தி வாய்ந்த கர்மா. காயத்ரீ என்பது தன்னை தியானம் பண்ணுபவர்களை ரக்ஷிப்பது. காயத்ரி வேத மந்திரங்க
ளுக்கெல்லாம் அன்னை, காயந்தம்+த்ராயதே இதி = காயத்ரி. சந்தியாவந்தன காயத்ரியான நிச்ரு காயத்ரியில் 23 எழுத்துக்களும், வேதத்தில் வரும் காயத்ரி சந்தஸில் 24 எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள 24 எழுத்து மந்திரங்களும் எல்லா தேவதைகளையும் குறிப்பது.
வேதங்களின் மாதாவான ஸ்ரீகாயத்ரி தேவியை காலையில் பிரம்ம ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசாவித்ரி தேவியை மதியம் ருத்ர ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசரஸ்வதி தேவியை மாலையில் விஷ்ணு ஸ்வரூபிணியாயும் த்யானம் செய்வதே ‘த்ரி கால சந்த்யா வந்தனம்’ எனப்படுகிறது.
'யக்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவின் ஜீவஸ்வரூபத்தைக் கொண்டதும், மிக புனிதமானதும், எல்லா தோஷங்களையும் நீக்கி பரிசுத்தம் செய்யக் கூடியதும், ஆயுளைக் கொடுக்கக் கூடியதும், மிக உயர்வுள்ளதும், வெண்மையாக பிரகாசிப்பதுமான யக்ஞோபவீதமே, நீ எனக்கு மோட்சத்தை அளிப்பாயாக’ என்பதே உபவீதம் அணியும் போது கூறும் மந்திரத்தின் பொருள்.
சந்தியாவந்தனம் பிரும்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்தன் ஆகிய மூவராலும் செய்யத் தக்கது. சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் செய்வதாலேயே ஒருவன் சகல வைதிக காரியங்களும் புரிய அருகதை பெறுகிறான். சந்தியாவந்தன மகிமையைப் பற்றி ஜகத்குரு மகா பெரியவாள் அவர்கள் 1939-ல் முடிகொண்டான் கிராமத்தில் அருளிய உபதேசத்தின் சாரம்.
ஸந்தியாவந்தனத்தின் மகிமை
யைப் பற்றி ஒரு கதை.சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்திலிருந்து
கொண்டு ஆட்சி செய்த ஒரு கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்யம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. ஒரு நாள்
ராத்திரி பகவானையே ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டு அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டான்.
அப்போது அவன் ஸ்வப்னத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக ஒரு பெரிய ரூபம் தோன்றி அவனிடம், “ராஜாவே! உனக்கு ஏற்பட்டிருப்பது கர்ம வியாதி. அதாவது போன ஜன்மத்தில் நீ பண்ணின பாபத்தில் தீராமல் மிச்சமாயிருந்த சேஷமே ரோகமாகியிருக்கிறது. இதை நீ அனுபவித்துத்தான் தீர்த்துக்
கொள்ள வேண்டுமேயோழிய மருந்தால் குணப்படுத்த முடியாது. ஒன்று வேண்டுமானால் நீ செய்யலாம். உன் அளவிற்கு எள்ளினால் ஒரு ப்ரதிமை பண்ணி அதற்குள்ளே பூராவும் தங்கத்தினால் நிரப்பி, அதிலே உன் கர்மாவை, பாபத்தை, ரோகத்தை ஆவாஹனம் செய்து சத்தான ஒரு ப்ராமணனுக்கு தானம் கொடுத்துவிடு. அப்போது கர்மா உன்னைவிட்டு அவனிடம் போய்விடும். அவன் நல்ல மந்த்ர சக்தியுள்ளவனாயிருந்தால் ரோகத்தை செரித்துக்கொண்டு விடுவான். அது எப்படியானாலும் அவனுக்கு இப்படி ரோகத்தை உண்டாக்குவதற்கு பரிஹாரமாகத்தான் இவ்வளவு தங்கம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லிற்று.
விடிந்ததும் ராஜா எள்ளினால் ஒரு கால புருஷன் உருவத்தைச் செய்து அதனுள் துவரம்பருப்பு வடிவில் ஏராளமான பொற்காசுகளை வைத்து, அவற்றை தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். ஆனால் அவன் ரோகத்தை வாங்கிக் கொள்ள யாரும் வரவில்லை.
வெளியூர், வெளி ராஜ்யங்களி
லிருந்தாவது எவராவது வரமாட்டார்களா என்று நாலா திக்கிலும் தண்டோரா போட ஆள் அனுப்பினான். இந்த விஷயம்
கர்நாடக ராஜ்யத்திற்கும் எட்டிற்று.
நல்ல மந்த்ர சக்தியும் தைர்யமும் உள்ள ஒரு கன்னட பிரம்மசாரி தானம் வாங்கிக் கொள்ளுவ
தற்காகத் திருவனந்தபுரம் வந்தான்.
ராஜாவுக்கு ஸந்தோஷம் தாங்க முடியவில்லை. முறையாகத்
தாரை வார்த்து எள்ளுப் பொம்மையை பிரம்மசாரிக்குத் தானம் பண்ணினான்.
அப்போது ஓர் ஆச்சரியம் நடந்தது. பிரம்மச்சாரி ப்ரதிமையையே உற்றுப் பார்க்க, அது தன்னுடைய வலது கையை உயரத் தூக்கிக் கொண்டு சுண்டு விரலையும் கட்டை விரலையும் மடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நீட்டிக் காட்டிற்று.
ராஜாவின் பூர்வகால கர்ம சேஷம் கால புருஷன் என்ற மூர்த்தியாக ப்ரதிமையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதனால், உயிரற்ற பிம்பம் நிஜமாகவே பிராணன் உள்ள ஜீவனாக ஆகி விட்டது.
அது இப்படி மூன்று விரலை உயர நீட்டிக் காட்டியதும் பிரம்மச்சாரி தலையை ஆட்டி “அதெல்லாம் முடியாது” என்றான்.
உடனே பிம்பம் மோதிர விரலை மடக்கி விட்டு மற்ற இரண்டு விரல்களை மட்டும் நீட்டியபடி வைத்திருந்தது.“அதுவும்கூட
முடியாது” என்று கர்னாடக பிரம்மச்சாரி தலையாட்டினான்.
பிம்பம் நடு விரலையும் மடக்கி, ஆள்காட்டி விரல் ஒன்றை மாத்திரம் காட்டிக் கொண்டிருந்தது.
”போனால் போகிறது. உன்னிஷ்டப்
படியே ஆகட்டும்” என்றான் பிரம்மச்சாரி.
அப்படி அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் பிம்பம் பரம ஸந்தோஷத்தோடு அவன் காலிலே விழுந்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்தது. அப்புறம் பிம்பம்
வெறும் பிம்பமாக மட்டும் நின்றது. காலபுருஷன் அதை விட்டுச் சென்று விட்டான்.
அந்த உருவச் சிலையிலிருந்த பொற்காசுகள் அனைத்தையும் அந்தப் பிரம்மசாரி தானமாக அடைந்தார்.
காலபுருஷன் காட்டிய மூன்று விரல்களும் மூன்று வேளைகளில் செய்யப்படும் சந்தியாவந்தனம், மற்றும் மாத்யான்னிகத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை, மாலை சந்தியாவந்தனங்களின் பலன். ஒரு விரல் ஒரு வேளை மட்டும் செய்யப்படும் மாத்யான்னிகத்தின் பலன். கால புருஷன் கடைசியாகக் கேட்ட அந்த ஒரு வேளையின் பலனை மட்டும் பிரம்மசாரி அவனுக்கு அளித்ததால் அவருக்கு ஐஸ்வர்யம் கிட்டியது.
ஆனால், மாத்யான்னிகத்தின் பலனைக் கொடுத்து தானத்தைப் பெற்றுக் கொண்ட்தால் அவருக்கு பாபம் சம்பவித்தது. அதைப் போக்கிக் கொள்வதற்காக, தனக்குத் தெரிந்த கோவில் குருக்களிடம் பொற்காசு மூட்டையைக் கொடுத்து பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, அவர் தல யாத்திரை புறப்பட்டார்.
வழியில் ஒரு கிழ வேதியர் எதிர்ப்பட்டார். அவரது தவக்கோலம் கண்ட பிரம்மசாரி அவர் காலில் விழுந்து வணங்கித் தன் பாபம் போக்க வழி சொல்லுமாறு கேட்டார். அந்த வேதியர், “நீ செல்லும் வழியில் ஒரு பசு மாடு எதிர்ப்படும். நீ அதைப் பின் தொடர்ந்து செல். அது எவ்வளவு தூரம் போகிறதோ அவ்வளவு தூரம் நீ ஒரு கால்வாய் வெட்ட வேண்டும். இதுவே உன் பாபம் நீங்க வழி” என்று சொன்னவர், தானே அகத்திய முனிவர் என்பதை வெளிப்படுத்தி விட்டு மறைந்தார்.
பிரம்மசாரி அதன்படியே கால்வாய் வெட்டும் செலவுக்காக கோயில் குருக்களிடம் சென்று தான் கொடுத்து வைத்த திரவியத்தைக் கேட்டார். அவருக்கோ பிரம்மசாரி தன்னிடம் கொடுத்த செல்வத்தை அபகரித்துக் கொள்ளவேண்டும் என்று துராசை ஏற்பட்டது.
அவர் பிரம்மசாரியிடம் ஒரு மூட்டை துவரம் பருப்பைக் கொடுத்து, “நீங்கள் கொடுத்தது இதுதான்” என்று சொல்லி விட்டார். பிரம்மசாரி மன்னனிடம் சென்று முறையிட, குருக்கள் வரவழைக்கப்
பட்டார். பிரம்மசாரி தங்கள் ஊர் கோயிலில் உள்ள சுவாமி முன் அவரை சத்தியம் செய்யச் சொன்னார்.
குருக்கள் ஆபிசாரப் பிரயோகம் செய்வதில் வல்லவர். அவர் சுவாமியைப் பக்கத்தில் உள்ள மரத்தில் ‘ஆவாஹனம்’ செய்து விட்டார். அதை இறைவன் பிரம்மசாரிக்கு உணர்த்திவிட, அந்த மரத்தின் முன்தான் குருக்கள் பிரமாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிட்டான்.
வேறு வழியில்லாமல் குருக்கள் மரத்தடியில் பிரமாணம் செய்தபோது தீச்சுவாலைகள் தோன்றி அவரை எரித்தன. பிரம்மசாரி தன் தனத்தை அடைந்து அதன் மூலம் வேதியர் சொன்னவாறு கால்வாய் வெட்டி தன் பாபத்தைப் போக்கிக் கொண்டார். அதுவே இன்றும் கன்னடியன் கால்வாய் என்ற பெயரில் இருக்கிறது.
ஸ்ரீபரமாச்சார்யாள் சொன்ன இந்தக் கதையினால் சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் இவற்றின் மகிமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.