Saturday, 16 November 2019

மத்யமரில் என் பதிவு..

திரு சுவாமிநாதன்@Swaminathan Ramasubramanian அவர்கள் பதிவுக்கு என் சொந்த அனுபவமே பதில். கமெண்டில் இவ்வளவு பெரிதாக  எழுதமுடியாது என்பதால் இந்தப் பதிவு..

வாசகி அனுபவம் என்ற பகுதியில் வெளியானது.
தன் ஜெர்மனி மருமகள் நாள் கிழமைக்கு மடிசார் கட்டிக் கொள்ளும் அழகையும், ரசம் சாதம், இட்லி, தோசை சாப்பிடும் பாந்தத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறார் நம் மும்பை வாசகி ராதா பாலு..

என் மகன் ஜெர்மனியில் கணினித் துறையில் பணி புரிந்து வருகிறான். அவனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது, ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணை தான் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு டன் டன்னாக ஐஸ் வைத்தான்.

அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள்.

மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.

அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அதனால் என் பிள்ளை மூலம்தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்!

சென்ற வருடம் என் இரண்டாவது மகனின் திருமணத்திற்கு வந்திருந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தோம்.

அவளுக்காக நான் வாங்கி வைத்திருந்த நூடுல்ஸூம், ப்ரெட்டும், பட்டரும் ஒதுக்கி விட்டு, ரசம் சாம்பார், தயிர்சாதம், இட்லி, தோசையை எங்களோடு தரையில் அமர்ந்து கையால் சாப்பிட்டாள்.

என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், அவளை வேற்று நாட்டவளாக எண்ணவே தோன்றவில்லை.

சின்னவனின் திருமணத்தின்போது, வேளைக்கு ஒரு புடவை கட்டி, தலை நிறைய பூ, கை நிறைய வளையல்,
விதவிதமாய் நகைகள் போட்டு அவள் அசத்தியதைப் பார்த்து திருமண வீடே அதிசயப்பட்டுப் போனது.

அவள் என் பேத்தியை வளர்க்கும் விதமும் மிக அருமை? குழந்தை கொஞ்சம் சிணுங்கினால் கூட பொறுத்துக் கொள்ள மாட்டாள். குழ்ந்தைக்கு அன்னபிராசனம்,
காதுகுத்தல் செய்தபோது, தானும் எங்களைப் போல் மடிசார் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நாலு மணிநேரம் ஓடியாடி வேலை செய்தவளைப் பார்த்து நான் அசந்து போனேன்.

நான் பார்த்திருந்தால் கூட இவ்வளவு நல்ல பெண் எனக்கு மருமகளாக கிடைத்திருக்க மாட்டாள் என்பதை என் மனம் ஒப்புக் கொண்டது.

எனக்கு உதவியாக வீட்டு வேலைகளை அழகாகப் புரிந்து கொண்டு என்னோடு செய்வது, வேலைக்காரியிடம் கூட அன்பாகச் சிரித்துப் பேசுவது, என் பெண்ணிடமும் மற்ற பிள்ளைகளிடமும் பாசமாக நடந்து கொள்வது என எல்லாவற்றையும் பார்த்துப் பூரித்துப் போனேன்.

என் மகனிடமும் அதைச் சொல்லி மனமார அவளைப் பாராட்டினேன். "அப்படின்னா என் செலக்ஷன் ஓ.கே. தானேம்மா" என்று கேட்டுச் சிரித்தான்.

தினமும் இரவு அவர்களுடன் வெப்காம் மூலம் பேசுவதும், என் பேத்தியின் விஷமங்களையும்,
பேச்சையும் ரசிப்பதும் எங்களது அன்றாட வேலைகளில் ஒன்று! 'அம்மா, டிசம்பர் மாதம் நாங்கள் முவரும் மும்பை வருகிறோம்!" என்று என் மருமகள் சொன்னது முதல் நான் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டேன்!
......................................................
☝️இது 2006ம் ஆண்டு குமுதம் சிநேகிதியில் பிரசுரமான கட்டுரை. என் மகனுக்கு 2004ம் வருடம் திருமணம் ஆயிற்று. என் மருமகள் வெளிநாட்டுப் பெண் போல இருக்க மாட்டாள். எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். சென்ற ஆண்டு இங்கு வந்தபோது எங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு குடந்தை அருகில் கிராமத்திற்கு சென்றி
ருந்தோம். எங்கள் உறவினர்
களுடன் அன்பாகப் பழகி என் பிள்ளையுடன் சேர்ந்து நமஸ்காரம் செய்து மரியாதையோடு நடந்து கொண்டதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாகி
விட்டனர்.

என் மூன்றாம் மருமகள் அயர்லாந்து பெண். அவளும் எங்கள் குடும்பத்தில் மிகவும் ஒன்றி மிக அன்பாக நடந்து கொள்வாள். அவர்கள் தம் குழந்தைகளிடம் கூட கடினமாகப் பேசாமல் பொறுமையாகப் பேசுவதும்,ஒவ்வொரு முறையும் thanks சொல்வதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள்.

எல்லா மனிதர்களிடமும் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் உண்டு. அதில் ஈர்ப்பு ஏற்படும் போதுதானே இருவருக்குள் காதல் ஏற்படுகிறது. இப்போது காலம் மாறிவிட்டது. நாமெல்லாம் கணவன்/மனைவி வேறுபட்ட எண்ணங்களோடு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ்ந்தோம்/வாழ்கிறோம். இன்றைய இளைய தலைமுறை அப்படி இல்லை.நிறைய யோசித்து முடிவெடுத்து சிறப்பாகவும் வாழ்கிறார்கள்.

வாழ்க்கை வாழ்வது ஒருமுறை. அதை தம் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ ஆசைப்
படுகிறார்கள். இதில் என்ன தவறு? பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே இன்று டைவர்ஸில் முடிகிறதே.

'உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று சுலபமாக சொல்லிவிடலாம். இன்று நமக்கு ஆதரவாகப் பேசும் உறவும் நட்பும் நாளை நமக்கு கஷ்டம் வரும்போது கண்டுகொள்ள மாட்டார்கள்.

என் பிள்ளைகள் காதலித்த
போதும் நாங்கள் இதையெல்லாம் யோசித்தோம்..அவர்களுக்கும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் உறுதியாக இருந்ததாலேயே திருமணத்திற்கு சம்மதித்தோம். இன்றுவரை அவர்கள் எங்களுடன் பாசமாக இருப்பதுடன், அவர்களும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் வாழ்வதும் சந்தோஷமாக இருக்கிறது.






No comments:

Post a Comment