Thursday 21 November 2019

எங்கள்_வீட்டு_கொலு


உலகமனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி கொண்டாடுவதன் தத்துவம். இதன் காரணமாகவே இமயம் முதல் குமரி வரை அன்னை கொலு வீற்றிருக்கும் காட்சி வீடு தோறும் காணப்படுகிறது. தேவியானவள் உலகிலுள்ள அத்தனை உருவத்திலும் உலவுகிறாள் என்பதாலேயே கொலுவாக எல்லா உருவங்களிலும் அவள் பூஜிக்கப் படுகிறாள்.

மஹாளய பக்ஷம் பதினைந்து நாட்களும் பித்ரு பூஜைக்கு முக்கியமானது. தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷம் தேவதைகளின் பூஜைக்கு உரியது. சமஸ்த தேவதைகளும் பராசக்தியில் அடங்குவதால் நவராத்திரி பராசக்தியை வணங்கும் பூஜையாயிற்று.

ப்ரும்ம ஸ்வரூபியான பராசக்தி மக்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் கொடியவர்களைக் களைய ஐந்து முறை அவதரிக்கிறாள்.

திருப்பாற்கடலில் ஆலிலை மேல் ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருக்க, அவரது நாபியிலிருந்து தோன்றிய பிரம்மா எதுவும் செய்யத் தோன்றாது மயங்கி நிற்க தேவி பிரசன்னமாகி அவருக்குத் தெளிவும், சிருஷ்டிக்கும் வல்லமையும் தந்து, விஷ்ணுவின் யோக நித்திரையைக் கலைத்து மது கைடபர்களைக் கொல்ல சக்தியளித்து மறைந்ததே முதல் அவதாரம்.

மோகினியாகத் தோன்றியது இரண்டாவது அவதாரம்.

தாக்ஷாயணி மூன்றாவது,

பார்வதியாகத் தோன்றியது நான்காம் அவதாரம்.

ஈசன் நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சாம்பலாக்க, விஸ்வகர்மா அச்சாம்பலைப் பிசைந்து உருவமாக்க, ஈசனின் க்ருபையால் உயிர் பெற்றவனே பண்டாசுரன். அவனது துன்பங்கள் அதிகரிக்க தேவர்கள் ஸ்ரீவித்யா என்ற மந்திரத்தால் அம்பாளைப் பிரார்த்தித்து ஹோமம் செய்தனர்.

அந்த ஹோம குண்ட மத்தியில் ஸ்ரீசக்கரமென்ற ரதத்தில் அம்பிகை தோன்றினாள். லலிதாம்பிகை என்ற நாமத்துடன், உடன் அநேக சக்திகளையும் உருவாக்கி சிந்தாமணி க்ருஹத்தில் காமேஸ்வரருடன் சௌபாக்கியவதியாய் விளங்கிய இதுவே தேவியின் ஐந்தாவது அவதாரம்.

பகலில் செய்யும் பூஜை ஈஸ்வரனுக்கும், இரவில் செய்யும் பூஜை தேவிக்கும் உரியது. ஆனால் இந்த ஒன்பது தினங்களில் பகல், இரவு இரண்டு நேரம் செய்யும் பூஜையும் தேவிக்கே உரியன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட ஒரு நாளே பூஜை செய்ய உகந்தது. ஆனால் பராசக்தியை ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்கவே நவராத்திரி என்று ஒன்பது தினங்கள் விதிக்கப் பட்டுள்ளன.

சித்திரையும், புரட்டாசியும் யமனின் இரண்டு விஷப்பற்கள் என்பதால், இவ்விரண்டு மாதங்களிலும் பலவிதமான விஷ நோய்கள் ஏற்படும். அவற்றை நீக்க ஈசுவரி அருள் வேண்டியே, சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதம் பாத்ரபத நவராத்திரியும் அனுஷ்டிக்கப் படுகின்றன. சரத் காலத்தில் வருவதால் இது ‘சாரதா நவராத்திரி’ எனப்படுகிறது.

‘சக்தி’ என்றால் விசை, ஆண்மை, பலம், வல்லமை, ஊக்கம் என்பது பொருள். சக்தியின் தயவின்றி இவ்வுலகில் நாம் எந்தக் காரியமும் செய்ய இயலாது. அவளுடைய அருளை வேண்டியே, நாம் நவராத்திரியின் போது அவ்வம்பிகையைப் பூஜிக்க வேண்டியது அவசியம். ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கிய ஈசுவரி பத்தாம் நாள் சிவத்தில் கலந்து ‘அர்த்த நாரி’யாகிறாள்.

இந்த ஒன்பது நாளும் தினமும் தேவி மகாத்மியம், துர்கா சப்தசதி, தேவி ஸஹஸ்ர நாமம், ல்லிதா த்ரிசதி, லலிதாம்பாள் சோபனம் போன்றவற்றை பாராயணம் செய்து சுமங்கலிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் விசேஷ பலன் கிடைக்கும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் தேவி மாஹேஸ்வரி, கௌமாரீ, வாராஹி என்ற பெயர்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதியாகவும் பூஜிக்கப் படுகிறாள். தேவியை ஒன்பது நாட்களும் ஒன்பது வடிவங்களில் வழிபடுவது அவசியம்.

முதல் நாள் மதுகைடபர் அழிவுக்குக் காரணமான தேவி ‘குமாரி’யாகிறாள். இரண்டாம் நாள் ‘ராஜராஜேசுவரி’. மூன்றாம் நாள் மகிஷனை வதம் செய்து சூலம் தாங்கிய ‘மஹிஷாஸூர மர்த்தினி’க் கோலம்.

நான்காம் நாள் வெற்றிக்கு விளக்கமான ‘விஜய லட்சுமி’. ஐந்தாம் நாள் ‘மோஹினி’யானாள்,
ஆறாம் நாள் சர்ப்ப ராஜா ஆசனத்தில் அமர்ந்த ‘சண்டி’கைக் கோலம்!

ஏழாம் நாள் சண்ட, முண்டர்களை அழித்து ஸ்வர்ண ஆசனத்தில் வீணை வாசிக்கும் தோற்றம். எட்டாம் நாள் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்து கருணை பொழியும் ‘ஜகன் மாதா’ கோலம். ஒன்பதாம் நாள் வில், அம்பு, அங்குசம், சூலமுடன் ‘ஸ்ரீ லலிதா பரமேசுவரி’யின் கோலம்.

பத்தாம் நாள் தேவி ஈசுவரனைப் பூஜித்து ‘சிவ சக்தியைக்ய ரூபிணி’ ஆகிறாள். ‘ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராக்ஞி’ என்று ஆரம்பிக்கும் லலிதா ஸகஸ்ர நாமம் கடைசியில் ‘சிவஸ்க்தியைக்ய ரூபிணி’ என முடிவது இதனை நன்கு உணர்த்துகிறது.

நவராத்திரி விரதத்தை மேற் கொண்டதால் சிவன் முப்புரம் எரித்தார். ஸ்ரீராமன் சீதையையும், இழந்த ராஜ்ஜியத்தையும் பெற்றார். பராசக்தி அருளால் திருமால் மது கைடபர்களை அழித்தார். இந்திரன் நவராத்திரி பூஜை செய்து, விருத்திராசுரனை அழித்தான்.

ஆதி சங்கரர் சக்தியின்றி ஓரணுவும் அசையாது என்பதை சௌந்தர்யலஹரி முதல் சுலோகத்தில் உரைத்துள்ளார்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், அபிராமி பட்டர் ஆகியோரும் அன்னையின் அருள் பெற்றவர்கள். நாமும் நவராத்திரி ஒன்பது நாட்களும் தேவியைப் பூஜித்து இகபர சுகங்களைப் பெறுவோமாக.

எங்கள் வீட்டு கொலுவில் இந்த வருட ஸ்பெஷல்...
அன்னை ஸ்ரீபாலாவும் அவளைத் தம் வீணை இசையால் ஆராதிக்கும் ஸ்ரீமகாபெரியவரும்...
தேவி க்ருஹலக்ஷ்மியும்🙏

No comments:

Post a Comment