Friday 22 November 2019

கங்கோத்ரி தாம்


கங்கை நதியின் பிறப்பிடமான
கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்த கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள். பின்னர் தேவ பிரயாகையில் அலக்நந்தா நதியுடன் சங்கமித்த பிறகுதான் கங்கை என்கிற பெயரைப் பெறுகிறாள்.

கங்கோத்ரிக்கும் மேலே 4255 மீட்டர் உயரத்தில் இருக்கும் 'கௌமுக்'
என்கிற இடத்திலிருந்துதான்
கங்கோத்ரி என்னும் க்ளேசிய
ரிலிருந்து உற்பத்தியாகிறது
பாகீரதி. கௌமுக்கை அடைய ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. கௌமுக்கையும் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் மேரு-கங்கோத்ரி

தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் வரை மிகவும் ஆக்ரோஷமாக நுரைத்துக் கீழிறங்கி, கற்கள் மணல் என்று அனைத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு
மணலின் வண்ணத்திலேயே
ஓடுகிறது பாகீரதி. போகும் வழியெங்கும் பாகீரதியின் ஆக்ரோஷமான ஓட்டம்.. பாதையெங்கும் மலைச்சாரல்கள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமையின் அழகு.

எழிலுடன் பகட்டாக வலம் வந்த பாகீரதி  வெண்மையான கூழாங்கற்களை அள்ளிக்
கொண்டு வெள்ளை வெளேரென்று நுரைத்துக்
கொண்டு தன் ஆக்ரோஷ ஓட்டத்தின் மூலம் வெண்மைப் புரட்சியையும் காண்பிக்கிறாள்!

ஏற்றமும் இறக்கமுமான  சாலைகளின் வழியாகச் செல்லும்போது மலைச்சாரல்
களின் இடையே இமயத்தின் பனிச்சிகரங்களின்  பளபளப்பு.. வளைந்து நெளிந்து உடன் வரும் பாகீரதியின் சலசலப்பு...
அங்கங்கு மலையுச்சியிலிருந்து
வரும் சிறிய அருவிகள்...
மனதைக் கொள்ளை
கொள்கின்றன!

குன்றுகளின் மேல் இறைவனின் புகழ்பாடும் சிறு கோவில்கள்..
ஆங்காங்கே மலைக்கிராமங்
கள்..மலைச்சரிவுகளில் விவசாயம்..உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரங்கள்..
பாலங்கள், மண்சரிவு ஏற்பட்ட பாதைகள் என்று பயணம் சில இடங்களில் ஆனந்தமாகவும், பல இடங்களில் பயமாகவும் இருக்கிறது!

நாங்கள் சென்ற அன்று துலா மாதப் பிறப்பானதால் செல்லும் வழியில் 'கங்கனானி' என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்தோம். தண்ணீர் குளிக்க இதமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனித்தனி இடங்கள் உள்ளது. அங்கு கங்காமாதாவின் சிறிய ஆலயம் உள்ளது.

அங்கிருந்து கங்கோத்ரிக்கு சென்றோம். ஆலயத்திற்கு ஒரு கி.மீ.தூரம் நடக்க வேண்டும்.
இந்தக் கோவிலை கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த ஜெனரல் அமர்சிங் தாப்பா என்பவர் 18ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார்.

கங்கை பூமிக்கு வர காரணமா
னவர் பகீரதன் என நாம்
அறிவோம். அவனுடைய
கொள்ளுத் தாத்தா அயோத்தியை ஆண்ட இஷ்வாகு குல அரசர் மகாராஜா சகரன். குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவியான சுமதிக்கு 60000  பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கேசினிக்கு அம்சுமான் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

அவர் அஸ்வமேதயாகம் செய்ய விரும்பினார். அதற்காக யாகக் குதிரையை எல்லா நாடுகளுக்கும் அனுப்பி அவர்களுக்கு அசுவமேத
யாகம் பற்றி சொல்வது வழக்கம். அவரை யாரும் எதிர்ப்பவர்கள் இல்லாததை அறிந்த தேவேந்திரன் தன் பதவி பறிபோய் விடுமென பயந்து அக்குதிரையை திருடிச் சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டான்.

இதனால் கோபம் கொண்ட சகரன் தன் 60000 மகன்களை அனுப்பி குதிரையைக் கண்டு பிடித்து வர அனுப்பினார். அவர்கள் கபிலமுனியின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டு அவர் திருடியதாக எண்ணி அவரைக் கடுஞ்சொற்களால் பேசினர்.

தவம் கலைந்ததால் கோபம் கொண்ட கபிலர் அவர்கள் அனைவரும் சாம்பலாக சாபமிட்டார். அதை அறிந்த அம்சுமான் அவரிடம் பணிந்து வேண்ட..அவர்கள் மோட்சம் அடைய வேண்டுமெனில் தேவலோகத்தில் இருக்கும் கங்கையில் அவர்கள் சாம்பலைக் கரைக்க வேண்டும்..என்றார்.

அம்சுமானும் அவன் மைந்தன் திலீபனும் எவ்வளவு முயற்சித்தும் கங்கையை பூவுலகிற்கு கொண்டு
வர முடியவில்லை. தம் முன்னோர் நற்கதி அடையாததை அறிந்த  திலீபனின் மகன் பகீரதன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க கங்கையை வேண்டி 1000 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் செய்தான்.

அவன் தவத்துக்கு இரங்கிய கங்கை பூமிக்கு வந்தாள். எப்படி? அவள் இறங்கிய வேகத்தில் பூமியே மூழ்கிக் காணாமல் போய்விட்டது. பூமியைக் காப்பாற்ற கங்கையை தம் சடையில் தாங்கி அவள் வேகத்தை கட்டுப் படுத்தினார் சிவபெருமான். இதனால் மனம் வருந்திய பகீரதன் சிவபெருமானைக் குறித்து மீண்டும் தவம் செய்ய, அவன் தவத்திற்கு இரங்கிய சிவன் கங்கையின் வேகத்தைக் குறைத்து பூமிக்கு அனுப்பினார். அந்நதியின் பெயர் பாகீரதி ஆயிற்று. பகீரதனின் முன்னோர்களும் நற்கதி அடைந்தனர்.இதனாலேயே ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவதை பகீரதப் பிரயத்தனம் என்கிறோம்.

இங்கு பகீரதசிலா என்ற பெயரில் பகீரதன் தவம் செய்த இடம் உள்ளது. அதைக் காணும்போது பகீரதனின் மன உறுதியை எண்ணத் தோன்றுகிறது.
வெண்ணிறக் கல்லினால் கட்டப்பட்ட கங்காமாதாவின் கோவிலும், காசிவிஸ்வநாதர் ஆலயமும் உள்ளது.
கங்காமாதாவின் சிறிய வெள்ளியிலான விக்ரகம்.அவளை தரிசித்தாலே நம் பாவங்கள் நீங்கிவிடும் என்கிறார் அங்குள்ள பண்டா. சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம்.

கணபதிக்கும் துர்கா லக்ஷ்மி சரஸ்வதிக்கும் சந்நிதிகள் உண்டு. இங்கே பஞ்ச பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. இங்குள்ள உற்சவ விக்ரகம் தீபாவளி முதல் அட்சயதிருதியை வரை ஆறுமாதங்களுக்கு கீழுள்ள
முக்பா கிராமத்தில் முகிமட் என்ற ஆலயத்தில் வைத்து வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலின் அருகிலேயே பாகீரதி மிகவும் சில்லென்று குளிர்ச்சியாக  மிக அழகாக தெளிவாக அமைதியாக ஓடுகிறாள். இவ்விடம் கங்கோத்ரி என்றாலும் அலகநந்தாவுடன் சேர்ந்தபின்பே கங்கையாகிறாள். நதி முழுதும் வெண்பளிங்குக் கற்கள். மிக கவனமாகக் குளிக்க வேண்டும். தெய்வீகம் ததும்பி நிற்கும் அழகான அந்த இடத்திலிருந்து வரவே மனமில்லை.

திரும்ப வரும்போது பைரான்காட்டிலுள்ள பைரவரை தரிசித்து செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அழகிய சிறிய ஆலயத்து பைரவரிடம் எங்கள் வருகையைப் பதிவு செய்தோம்!

திரும்ப உத்தரகாசி செல்லும் வழியில் 'பைலட்பாபா ஆஸ்ரம்' பார்க்க வேண்டிய ஆலயம். அத்தனை இறை உருவங்களும் பிரம்மாண்ட உயரத்தில்! அவற்றின் அழகு கண்களுக்கு விருந்து!

மனிதனின் கால், கை படாத இடங்களில் இயற்கை
அன்னையின் இயல்பான
நாட்டியம் கண்களையும் மனதையும் சொக்க வைக்கிறது!

No comments:

Post a Comment