Monday 18 November 2019

பஞ்ச பிரயாகை


இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிரயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  அலஹாபாத் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இவ்விடம் பிரயாகை எனப்படும்.

சார்தாம் யாத்திரை செல்லும்போது உத்தர்கண்ட் மாநிலத்திலும் பஞ்ச பிரயாகை என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. அவை
தேவப்ரயாகை, விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை.
இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும்.

#தேவபிரயாகை
ஹிமாலயப் பயணத்தில் தேவ பிரயாகை ஒரு முக்கியமான தலமாகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் இருக்கிறது தேவ பிரயாகை.

சதோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கௌமுகி
யிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகப் பெயர் பெறும் இடமாகும். சற்றே பழுப்பு நிறத்தில் அலக்நந்தாவும், இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் எழில் கொஞ்சும் ரம்மியமாக இருக்கிறது.

அலகநந்தாவின் பாலத்தைக் கடந்து சென்று கீழே இறங்கினால் சங்கமம் உள்ளது. இங்கு பிண்ட தர்ப்பணம் செய்வது முக்கியம். ஸ்நானம் செய்ய வசதியாக படிகள் உள்ளன. உயரமான படிகளில் ஏறுவது கடினமாக உள்ளது.

கௌமுகியிலிருந்து ஆவேசமாகவும் ஆர்ப்பாட்ட
மாகவும் அடித்துப் புரண்டு அதிவேகமாக வரும் பாகீரதி நதியும், வஸுதராவில் தோன்றி பல சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலகநந்தாவும் இங்கு சங்கமமாகி புனித கங்கையாகிறது. அதனால் இவ்விடம் ஆதிகங்கை எனப் போற்றப்படுகிறது.

அருகில்மகரவாகினியாக
வெள்ளைப் பளிங்கில் கங்காமாதாவின் சிலையும் ஹனுமன் சிலையும் உள்ளது. இவ்விடத்தில் தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்ததால் தேவப்ரயாகை எனப் பெயர் பெற்றது.

#ஸ்ரீரகுநாதர்ஆலயம்
தேவப்பிரயாகை சங்கமத்திற்கு மேலே அரை கிலோமீட்டர் ஏறிச் சென்றால் ரகுநாதர் கோவிலைக் காணலாம். பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராடரூபம் எனப்படும். அவரது நாபிக்கமலம் தேவப்ரயாக்.

தசரதரும், ராவணனைக்
கொன்ற பாவம் தீர ஸ்ரீ ராமனும் தவம் செய்த தலம் இது. அந்த இடத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்ய மண்டபம் உள்ளது.

68வது திவ்யதேசமான திருக்கண்டமெனும் கடிநகர்
எனப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வருகை தந்த பெரியாழ்வார் ரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.அவருடைய பாசுரங்களைக் கல்வெட்டாகப் பதித்திருக்கிறார்கள்.
கற்களால் ஆன இக்கோவில் மிகவும் அழகாக இருக்கிறது.

பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயத்தில் ஒரே பிரகாரம். உயரமான கருவறையில் சாளக்கிராம மூர்த்திகளாக லட்சுமணன், சீதையுடன் உயரமான கோலத்தில் சேவை சாதிக்கும்  ஸ்ரீ கோதண்ட
ராமரின் அழகில் மனம் மயங்குகிறது.

இங்கேயுள்ள ரகுநாதனின் பாதக் கமலங்களிலிருந்து சரஸ்வதி நதியானவள் அந்தர்யாமியாக உற்பத்தியாகி தேவ பிரயாகையில் அலக்நந்தாவுடனும் பாகீரதி
யுடனும் சங்கமிப்பதாக ஐதீகம்.
’தேவ பிரயாகை’ என்றால் ‘தெய்வீக சங்கமம்’ என்று அர்த்தம்.

#விஷ்ணுபிரயாகை
சமோலி மாவட்டத்தில் ஜோஷி மட்டுக்கும் பத்ரிநாத்துக்கும் இடையில் இருக்கிறது விஷ்ணு பிரயாகை. இது. ’அலக்நந்தா’ நதியும் ’தௌலி கங்கா’ நதியும் சங்கமிக்கும் இடமாகும். இரண்டு வண்ணங்களில் நதிகள் சங்கமிக்கும் காட்சி கண்களுக்கு விருந்து.

கார்வால் ஹிமாலயத்தொடரில் உள்ள சௌகம்பா என்கிற சிகரத்தில் உள்ள கிளேசியர்களி
லிருந்து இந்நதி தோன்றி பின்னர் இந்திய-திபேத்திய எல்லையில் இருக்கும் மனா என்கிற கிராமத்தில் உற்பத்தியாகும் சரஸ்வதி நதியுடன் சங்கமித்து, பிறகு பத்ரிநாத் வழியாக வருகிறது. இந்தப் பாதையில் செல்லும் அலக்நந்தாவுக்கு
‘விஷ்ணு கங்கா’ என்கிற பெயரும் உண்டு.

இது நாரதர் விஷ்ணுவுக்குப் பூஜைகள் செய்து வழிபட்ட தலம். இந்தோர் மஹாராணி அஹல்யாபாய் 1889ல் கட்டிய கோவில் இருக்கிறது.

இங்கே அருகில் உள்ள ஹனுமான் சட்டி என்கிற இடத்தில் Jaybee தொழில்நிறுவனத்தாரின்  விஷ்ணு பிரயாகை நீர் மின் திட்டம் மூலம்  400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

#நந்தபிரயாகை
நந்த பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ’நந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம்.

சக்கரவர்த்தி நந்தன் யாகம் செய்த இடமாகையால் அவர் பெயரில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணரை வளர்த்த யசோதையின் கணவன் நந்தனின் நினைவாகவும் இந்தப் பெயர் என்றும் சொல்லப்படுகிறது. இது கண்வ மஹரிஷி தவம் செய்த இடமாகவும், துஷ்யந்தன்
சகுந்தலை திருமணம் நடந்த இடமாகவும் கூறப்படுகிறது. இங்கே சண்டிதேவி, மகாதேவர், கோபாலனுக்கு  கோவில்கள் உள்ளன.

#கர்ணபிரயாகை
கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம்.
கர்ணன் தவம் செய்து கவச குண்டலம் பெற்ற இடமாகும்.

பாரதப்போரில் கர்ணன் அடிபட்டு உயிர்போகும் நிலையில் இருக்கும்போது பாண்டவர்
களுக்கு  இவன் தமது சகோதரன் என்பது தெரியவருகிறது. அவர்கள் மனம் வருந்தி கர்ணனின் கடைசி ஆசையைக் கேட்டனர்.   'இதுவரை யாரும் பிண்டம் கொடுக்காத இடத்தில் எனக்கு பிண்டம் கொடுக்க வேண்டும்'   எனக் கேட்டான்.

அர்ஜுனன், தன் காண்டீபத்தை எடுத்து ஒரு அம்பைத் தொடுத்து எய்த, அது போய் தைத்த இடத்திலிருந்து ஒரு நதி கிளம்பி யது.  இதுதான் பிண்டார் நதி. நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கும் பிண்டதானத்துக்கு  சிறப்பு அதிகம்.  இந்த பிண்டார் நதி, அலக்நந்தாவுடன் சேருமிடத்தில் கர்ணனுக்கு  பிண்டம் இட்டு இறுதிக் காரியங்களை பாண்டவர்கள் செய்ததால் கர்ணப்ரயாக் என்ற பெயர் வந்ததாக ஒரு கதை உண்டு.

காளிதாசனின் அபிஞான சாகுந்தலையில் துஷ்யந்தனும் சகுந்தலையும் இங்கே நடனமாடி
யதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கே ஸ்வாமி விவேகானந்தர்
18நாட்கள் தியானத்தில்
இருந்துள்ளார்.

இங்கு உமாதேவிக்கும் கர்ணனுக்கும் கோவில் இருக்கிறது. சங்கமத்திற்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன.

ருத்ர பிரயாகை
கேதார் நாத்திலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும், ரிஷிகேஷிலிருந்து 140கி.மீ. தொலைவிலும் ருத்ர  பிரயாகை உள்ளது. இது வெண்ணிற அலக்நந்தாவுடன்  கேதார்நாத்திலிருந்து வரும் பச்சை நிற  மந்தாகினி நதி அழகுற சங்கமிக்கும் இடம்.

இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும், ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது.

ஒரு முறை நாரதருக்குத் தன்னுடைய இசைத்திறமையின் மீது மிகவும் கர்வம் ஏற்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்
கிணங்க, கிருஷ்ணர் அவரிடம், 'உன்னுடைய இசைத்திறமையில் சிவனும் பார்வதியும் மனதைப் பறிகொடுத்துள்ளனர்' என்று சொல்ல, வியந்து போன நாரதர் அவர்களைத் தரிசிக்க இமயத்திற்
குப் பயணம் மேற்கொண்டபோது, இந்த இடத்தில் பெண்ணுரு கொண்டு வந்த ராகங்களின் அழகு கெட்டுப்போனது. நாரதர் தவறாக வீணை வாசித்ததால்
தான் ராகங்களின் அழகு கெட்டுப்போனதென்று அவர் மீது பழி ஏற்பட, நாரதரின் கர்வம் நீங்கியது. பிறகு சிவபெருமானின் சீடராக நாரதர் விளங்கினார்.

தக்ஷன் சிவபெருமானை அவமதித்ததால், நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக்
கொண்ட தாக்ஷாயிணி பிறகு பர்வத ராஜன் ஹிமவானின் புத்ரி பார்வதியாகப் பிறந்து, சிவபெருமானை மணக்க அவள் தவம் புரிந்து இடமாகவும் இது சொல்லப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் உள்ளன.

நாங்கள் தேவபிரயாக், விஷ்ணுபிரயாக் மட்டுமே சென்றோம். 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்கள் இன்னமும் சீர்படுத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment