Thursday 13 February 2020

சார்மினாரும் மகாதேவர் ஆலயமும்...
















பாரிஸின் ஈஃபில் டவர், ஆக்ராவின் தாஜ்மஹால் , டில்லியின் குதுப்மினார் போல் ஹைதராபாதின் சிறப்பு சார்மினார். நான்கு உயர்ந்த  கோபுரங்களுடன் சதுர வடிவில் கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு,  பழைய ஹைதராபாத் நகரில் நெருக்கமான கடைகள் நிறைந்த இடத்தில் ம்யூஸி நதியின் கரையில் அழகுற கம்பீரமாகக் காட்சிதரும்  சார்மினார் தற்சமயம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப் படுகிறது.

சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதன் அடையாளமாக, பெர்சிய கலைக் கட்டிட நிபுணர்களால் முகம்மது குதுப் ஷா என்ற அரசரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது. மன்னர்
தன் காதலி பாக்மதியை முதலில் சந்தித்ததன்  நினைவாக இதைக் கட்டியதாகவும், பாக்மதி என்ற நகரின் பெயரே  ஹைதராபாத் என மாற்றப்பட்டதாகவும் கூறப்
படுகிறது.

முகம்மதியரின் முதல் நான்கு கலிஃபாக்களைக் குறிக்கும் விதமாக 48.7 மீட்டர் உயரத்தில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரண்டு தளங்களை உடைய கோபுரங்களின் உள்ளே காணப்படும் அழகான கட்டமைப்பு கண்ணுக்கு விருந்து! மேல் தளத்தில் தொழுகைக்கான பள்ளிவாசல் உள்ளது. மேலே ஏறிச் செல்ல 149 வளைந்து செல்லும் படிகள் உள்ளன.

நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளுடன் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலும் பெரிய  கடிகாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப் பாதையும் உண்டு எனப்படுகிறது.

சார்மினாரின் உள்ளழகு வளைவுகளைக் கொண்ட நுழைவாயிலுடன்  இஸ்லாமிய கலாசாரப்படி அழகுற அமைந்
துள்ளது. தொழுகைக்கான 45 அறைகளும் உண்டு. சுற்றிலும் உள்ள லட் பஜாரில்(Lad Bazaar) ஹைதராபாதின் சிறப்பான கல், முத்து நகை விற்கும் கடைகள் சார்மினாரின் அழகுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. இரவில் அந்த இடமே வண்ண விளக்
கொளியில் தகதகக்கிறது. நான்கு பக்கமும் நீண்டு இருக்கும் இந்த சிறப்பான கடைத்தெரு பற்றி  சரோஜினி நாயுடு அவர்கள் In the bazaars of Hyderabad என்று கவிதை எழுதியுள்ளார்.

சார்மினாரின் அழகை ரசிப்ப
தோடு, அந்தக் கடைகளின் அழகு...கண்களைக் கட்டி இழுக்க..மனதை மயக்க கல் வைத்த, முத்து பதித்த வளையல் மற்றும் நெக்லஸ்களை வாங்காமல் எந்தப் பெண்ணாலும் வர முடியாது! தரமான முத்துக்
களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளும் உண்டு.

அவ்விடத்தில் கிடைக்கும் உஸ்மானியா பிஸ்கட் மற்றும் ஈரானியன் டீயின் சுவை அமிர்தம்! விடுமுறை நாளில் விடிகாலை நேரம் 6 மணிக்குள் இங்கு வந்து பிஸ்கட்டும், டீயும் சாப்பிடுவது பலரின் வழக்கமாம்!

கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்த என் கண்களில் பட்டது ஸ்ரீமகாதேவர் ஆலயம். அட..நம்ம சாமி என்றபடியே சென்று தரிசித்தேன்.  1857ம் ஆண்டு தோன்றிய அந்த சிவாலயம் மிக அழகாகக் காட்சியளிக்கின்றது. அங்கு நகைக்கடைகள் வைத்துள்ள வடநாட்டு மார்வாரி வியாபாரிகளால் ஏற்படுத்தப் பட்ட கோவில்.

கீழுள்ள சிவலிங்கம் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பின் ஆலயம் சில படிகள் மேலே ஏறிச் சென்று உயரத்தில் விஸ்தரிக்
கப்பட்டு  கணபதி, லக்ஷ்மி நாராயணர், சாய்பாபா, மகாலக்ஷ்மி, ராமர், ஹனுமன் , துர்கை போன்ற தெய்வ சன்னிதிகள் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஸ்படிக லிங்கம் மிக அருமையாக உள்ளது. சார்மினாரின் சத்தமான கடைத்தெருவில் இருந்தும், அங்கு காணப்படும்  தெய்வீகமான அமைதியான ஏகாந்த சூழ்நிலையில் தியானம் செய்ய முடிகிறது. எல்லா தெய்வங்களின் சிறப்பான நாட்கள் கொண்டாடப்
படுகிறது. கீழுள்ள ஹாலில் பிரவசனங்கள் நடைபெறுமாம். தினமும் 400 பேரும், தீபாவளி சமயம் 10000 மக்களும் தரிசனத்துக்கு வருவதுண்டாம்.

இவ்விடத்தை சுற்றி பல மார்வாரிகள் வாழ்கின்றனர். தினமும் லட்சக் கணக்கில் நகை வியாபாரம் நடைபெறுகிறதாம்.  இதற்கு ஒரு சுவையான காரணம் கூறப்படுகிறது! ஔரங்கசீப் அரசனான பின்பு அந்த இடத்தின் தலைவனாக  ஐந்தாம் நிஜாம் நியமிக்கப்பட்டபோது அங்கு நகைக்கடைகள் வைத்திருந்த மார்வாடிகளுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கினாராம். சார்மினார் செல்லும் வழியில் அவர்கள் கடைகளில் காணப்படும் நவரத்தினங்களைக் காண்பது நல்ல சகுனமாக எண்ணினார்
களாம். எப்படியோ இன்று அந்த உலகப் புகழ் பெற்ற சார்மினாருக்கு நிகராக ஸ்படிகலிங்கேஸ்வரரும் அருள் செய்து கொண்டுள்ளார்!

ஹைதராபாத் செல்பவர்கள் சார்மினாரைக் கண்டு சிற்பக் கலையை ரசிப்பதோடு  அவசியம் மகாதேவரை தரிசித்து வரவும்.

No comments:

Post a Comment