ஒரிஸ்ஸா சென்றபோது பூரி ஜகன்னாதரை கண்குளிர மனம் மகிழ தரிசித்ததுண்டு. ஹைதரா
பாதிலும் அச்சு அசலாக அதே போன்ற கோவில் இருப்பதை அறிந்து மனதை ஈர்க்க தரிசிக்க சென்றோம்.
ஆஹா! வாயிலிலிருந்து பார்க்கும்போதே ஆலய அழகு மெய்சிலிர்க்க செய்கிறது.இரு புறமும் அமர்ந்த நிலையில் பிரம்மாண்டமான சிம்மங்கள் நம்மை வரவேற்க, உள்
நுழைந்ததும் பொற்கவசம் பூட்டிய துவஜஸ்தம்பம்.
அதற்கு நேர் எதிரில் சில படிகள் ஏறிச்சென்றால் ஸ்ரீஜகன்னாதர் தன் அண்ணன் பலராமன், தங்கை சுபத்ராவுடன் தரிசனம் தரும் கர்ப்பகிரஹம். வெண்ணிறத்தில் ஆதிசேஷ அவதாரமான பலராமரும், மகாமாயா ரூபமாக மஞ்சள்நிற சுபத்ரையும், சூரிய சந்திரரை இரு கண்களாகக் கொண்ட கருமைநிற கண்ணனும் நம் கண்களை அகலவிடாமல் கட்டிப் போடும் அழகு! சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை! இங்கும் பூரி போன்றே வரப்ரசாதியானவராம் பெருமான்.
உள்ளே விசாலமான முன் மண்டபத்தின் அழகு நம்மை மயக்குகிறது. ஜகன்னாதர், சுபத்ரை, பலபத்ரரை தரிசிக்கும்போது பூரியிலேயே இருப்பது போன்ற உணர்வு.
பூரியைப் போன்றே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் விக்ரகங்கள் செய்யப் படுமாம். ரத்யாத்ராவும் உண்டு.
கலிங்கா கல்சுரல் டிரஸ்டினால் பராமரிக்கப்படும் இவ்வாலயத்தில் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்து இங்கு இருக்கும் அர்ச்சகர்களே அங்குள்ள முறைப்படியே பூஜை செய்கின்றனர். சுற்றிலும் கணபதி, காசிவிஸ்வநாதர், விமலா தேவி, மகாலக்ஷ்மி, ஹனுமான் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சன்னிதியும் தனிப்பட்ட வேலைப்பாடுடன் அழகுற அமைந்துள்ளன.
2009ம் ஆண்டில் 3000 சதுர அடிப் பரப்பளவில் மூன்று பக்க வாசல்களுடன் கட்டப்பட்டுள்ள இவ்வாலயத்தை உருவாக்க கிட்டத்தட்ட 600 டன் sand stone எனப்படும் மணல் பாறைகள்
ஒரிஸ்ஸாவிலிருந்து தருவிக்கப் பட்டு 60 சிற்பிகளால் பூரி ஆலயம் போன்றே மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
கருவறையைச் சுற்றியுள்ள மண்டபத் தூண்கள் sand stone கொண்டு செந்நிறத்தில் உருவாக்கப்பட்டு நுணுக்கமான சிற்பக் கலையுடன் திகழ்கிறது.
70அடி உயர கோபுரத்தின் மேல் அமைந்துள்ள ஷிகாரா எனும் சக்கரம் மிக அழகானது.
ஆலய சுற்றுச் சுவரில் உள்ளேயும் வெளியேயும் பாகவதம், மகாபாரதக் காட்சிகள், ஜகன்னாதர் உருவான வரலாறு, தசாவதாரங்கள், பாற்கடல் பரமன்,கீதோபதேசக் காட்சிகள் மிக அழகான வண்ண ஓவியங்களாக தத்ரூபமாக வரையப் பட்டுள்ளன.கலைஆர்வம் மிக்கவர் அவசியம் காண வேண்டிய ஆலயம்.
இங்கு ஜன்மாஷ்டமி, ஏகாதசி, ராமநவமி, சிவராத்திரி, கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்
படுகின்றன. ஆலயம் காலை 6-11, மாலை 5-9 வரையும் தரிசன நேரம். சனி, ஞாயிறுகளில் ஒலி, ஒளிக் காட்சி உண்டு.
ஆலயம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில் என்ற இடத்தில் தெலிங்கானா பவன் மற்றும் KBR நேஷனல் பார்க்கிற்கு மிக அருகில் உள்ளது.
No comments:
Post a Comment