Tuesday, 18 February 2020

என் உயிர் நீதானே...




திருமணத்தில் கூறப்படும் சப்தபதி மந்திரத்தில் ஏழாவது அடியில் வரும் மந்திரம் 'கணவனும்,
மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்.'

கணவரும், மனைவியும் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப்  போன்றே குறைகளையும் ரசித்து குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பமயம்தான்!

எனக்கு 19 வயதில் திருமணமாகி, உடன் குழந்தைகள் பிறந்துவிட, வாழ்க்கையின் சிரமங்கள்  என்னை தடுமாறச் செய்தபோது, வங்கி அதிகாரியான என் கணவர், என்னிடம் அதிகாரம் காட்டாமல், கோபப்படாமல் என்னை அரவணைத்த ஆசைக் கணவர்!

குழந்தைகளைக் காலை வேளை
களில் தயார் செய்ய நான்  சிரமப்பட்டபோது, தானும் பங்கு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அன்புத் தோழன்!

கம்ப்யூட்டர் அறிமுகமான புதிதில் அதை இயக்கும் முறையை புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொன்ன ஆசான்!

எனக்கு வயிற்றிலும்,காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது வீட்டில் அத்தனை வேலைகளும் செய்து, ஒவ்வொரு வேளையும் கையில் மாத்திரையும், தண்ணீ
ருமாக என்முன் நின்று என்னைக் கண்கலங்க வைத்த தாயுமானவர்!

நான் ஆலயங்கள்  பற்றியும்,
பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதுவதால், எந்தக் கோயிலுக்கு சென்றாலும் 'என் மனைவி எழுத்தாளர்' என்று பெருமையோடு சொல்லி,அங்குள்ள ஸ்பெஷல் பற்றியெல்லாம் கேட்டு எனக்கு சொல்லி எழுத உதவும் என் காரியதரிசி!

எங்களுக்கு எதிலும் ஒளிவு,
மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம்.
பணி ஒய்வு பெற்றபின் இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்!

எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்! 'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா' என்றால், 'உன்னை என்று மணந்து கொண்டேனோ, அன்றிலிருந்து உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்! உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதலர்!

எங்களுக்கு திருமணமாகி 40 வருடங்களைக் கடந்து விட்டோம்.
ஆனாலும் ‘இன்று புதிதாய் மணந்தோம்’ என்ற ரீதியில்தான் வாழ்கிறோம். இன்றும் என்னை அவ்வப்போது அவர் காதலோடு பார்க்கும்போது 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று பாடுவேன்!

நேரம் கிடைக்கும்போதெல்
லாம் என்னை சீண்டுவதும் தீண்டுவதும் இன்னும் தொடரும் செயல்கள்! கோபமோ தாபமோ நாங்கள் பேசாமல் இருந்தது
மில்லை..விலகிப் படுத்தது
மில்லை!

ஊடல்...கோபம் இல்லாத வாழ்க்கை யாருக்கேனும் உண்டா என்ன? அவர் அலுவலகத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற நாட்கள்..நேரம் ரெக்கை கட்டிப் பறக்கும்! ஒரு நாள் அவர் ‘pant'டுக்கு பட்டன் தைக்கச் சொன்னார். நான் மறந்துவிட்டேன். மறு நாள் காலை நேர அமளியில், ‘என் pantல் பட்டன் கூட தைக்காமல் நாள் முழுக்க அப்படி என்னதான் செய்கிறாய்?’ என்று சத்தம் போட்டார்.

சமையல் டென்ஷனிலிருந்த எனக்கும் ‘ஈகோ’ கிளம்பியது. ‘சே, நானென்ன சும்மாவா இருக்கிறேன்?’ என்று கேட்க வாயெடுத்தேன். அப்படிக் கேட்டால் கோபம் இன்னும் அதிகமாகும்.

‘அட்டா, நேற்று பட்டன் தைக்க எடுத்தேனா, சட்டையைத் தொட்டதும் உங்கள் ஞாபகம் வந்து, எதோ பழைய நினைவுகளில் மூழ்கி பட்டன் தைக்கவே மறந்து போச்சு! சாரி, இதோ இப்ப தைத்துவிடுகிறேன்’ என்று கூலாக சொன்னேன்.

அதற்கு மேலும் சத்தம் போடுவாரா என்ன? பிறகு நான் அவரை ‘தாஜா’ செய்ய... (தவறு என்னுடைய
தாயிற்றே!) அவர் என்னைக் கொஞ்ச... இது போன்ற சந்தர்ப்பவாத சமாளிப்புகள் எங்கள் தாம்பத்யத்துக்கு மெருகூட்டும் ரகசியங்கள்!

ஒருவர் செய்த தவறுகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டாமல், சரியான சமயத்தில் சொல்லிப் புரியவைப்பது, ஒருவர் அழகை மற்றவர் தாராளமாகப் புகழ்வது, விட்டுக் கொடுப்பது... இவற்றால் தாம்பத்ய சுவை கூடுமென்பது என் அனுபவம்!

வெளியில் அலுவலகத்தில் ஆயிரம் கவலை, டென்ஷன் என்று வேலை முடித்து ஓய்ந்து வீட்டுக்கு வரும் கணவன் அன்பும், ஆதரவும் தேடுவது மனைவியிடம்தான்.
அதைப் போர்க்களமாக்காமல், பூஞ்சோலையாக்கினால், கணவன் மகுடிக்கு மயங்கி ஆடும் நாகம்தான்!

எங்கள் தாம்பத்யத்தில் சில நாள் முன்பு கூட சுவாரஸ்யம்தான்! ‘லைட்டை அணை’ என்று என் கணவர் சொல்ல, நானோ லேசாக அவரை அணைக்க முயன்றேன். ‘ஏய்! என்ன இது?’ என்றார் அவர். ‘நீங்கதான லைட்டா அணைக்கச் சொன்னீங்க?’ என்று நான் ‘கடி’க்க ‘என்ன ரொமேன்ஸா?’ என்றார் குரல் குழைய. சேச்சே! இது ரொ’விமன்’ஸ் என்று நான் திரும்பவும் கடிக்க... அதற்குப் பின் அங்கு பேச்சுக்கு இடமேது!?

காலை நாங்கள் இருவரும் இணைந்து கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேரன்...தாத்தா வேலன்டைன்ஸ் டேக்கு எங்க போலான்னு plan பண்றியா? பாட்டிக்கு என்ன gift தரப்போற?..என்று சிரித்தான்! அவரோ..நானே உன் பாட்டிக்கு giftதான்...என்று சொல்ல, நானோ..நான்தான் உங்களுக்கு gift...என்று வேகமாக சொல்ல, என் பேரனோ...வேலன்டைன்ஸ் டேல சண்டை போடக்கூடாது. ஜாலியா இருக்கணும்...என்று எங்களுக்கே அட்வைஸ் செய்கிறான்!






No comments:

Post a Comment