Thursday 20 February 2020

சுரேந்திரபுரி..ஆன்மிக அருங்காட்சியகம்..


யாதகிரி ஆலயத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள சுரேந்திரபுரி நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம். ஆம். ஆலயம் பல நிறைந்த இடத்தைப் பார்ப்பது சரியல்ல..
தரிசிப்பதுதானே! நாம் எங்கோ தேவலோகத்துக்குள் சென்றுவிட்ட உணர்வைத் தருகிறது இந்த அருங்காட்சியகம். இது இந்தியாவில் எங்கும் காணமுடியாத தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்ட முதல் Mythological Museum..ஆன்மிக அருங்காட்சியகம் இது.

ஹைதராபாதுக்கு அருகில் யாதகிரி புவனகிரிக்கு அருகில் உள்ள ஒரு சுவாரசியமான காண வேண்டிய அருங்காட்சியகம்  சுரேந்திரபுரியாகும். இந்திய
புராணங்கள், இதிகாசங்கள், ஆலயங்கள் போன்ற ஆன்மீகத் தகவல்கள் மற்றும் மேன்மைகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும்  நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதை உருவாக்கியவர் யார்..ஏன் என்ற கேள்விகள் எழுகிறதல்
லவா? தெலுங்கானாவிலுள்ள  கம்மம் என்ற ஊரில் பிறந்த குண்டா சத்யநாராயணா என்பவர் ஒரு சாதாரண விவசாயி. மேல்படிப்பு படிக்க வழியில்
லாதவர். ஆன்மீக உணர்வு மிகுந்தவர். அவருடைய  இளைய மகன் சுரேந்திரன் எதிர்பாராத விதமாக மிகச்சிறு வயதில் இறந்தபோது, அவன் பெயர் இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்க விரும்பி இந்த அருங்காட்சி
யகத்தை  உருவாக்கினார்.

இதை உருவாக்க எண்ணிய
வருக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டன. தன் 70 வயது முதுமைக் காலத்தில் ..நம் நாட்டில் பக்தி அழியக் கூடாது, ஆன்மிகம் மேம்பட வேண்டும், புராண இதிகாசங்களை மக்கள் இலகுவாக அறிய ஏதாவது செய்ய வேண்டும்.. என்று எண்ணினார்.

எவர் உதவியும் நாடாது  தன் சொந்தப் பணத்தில்  பல கஷ்டங்கள் சவால்களுடன் தனியொருவராக நின்று இதை உருவாக்கினார். அவர் மனைவி அவருக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத் தக்கது. 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'என்பது இவருக்கு சரியாகப் பொருந்தும். இந்த அருங்காட்சியகம் நம் ஆன்மிகத்தைப் போற்றிக் கொண்டு அவர் மகன் பெயரில் தலைசிறந்து விளங்குகிறது.

17 ஏக்கர் பரப்பில் 31/2 கிலோ மீட்டர்  நடைபாதையுடன் 3000க்கும் மேற்பட்ட மெகா உயர கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டு, மே 2003 முதல் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. பின் மேலும் சீரமைக்கப்பட்டு 2009 பிப்ரவரியில் அன்றைய ஆந்திர கவர்னர் அவர்களால்  'குண்டா சத்யநாராயணா தாம்' என்ற பெயரில் துவங்கி வைக்கப்பட்டது.

இனி நாமும் உள்ளே சென்று தரிசிப்போம். நுழைவிடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மாதியரை தரிசித்து இங்குள்ள ஆலயங்களைத் தொழுவோம். வாஸ்து ஆகம சாத்திரப்படி  தென்னாட்டு வடநாட்டு கோபுரங்களுடன் காட்சி தரும் ஆலயத்தில் நுழைந்ததும் கோசாலை உள்ளது. 16அடி உயர பஞ்சமுக ஹனுமதீஸ்வரர் கம்பீரத்துடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இந்த விக்கிரகம் காஞ்சியிலிருந்து கருநிறக் கல்லால் செய்து இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்களாம்.நேபாள் பசுபதிநாத் போன்ற பஞ்சமுக லிங்கேஸ்வரர், திருமலை பாலாஜி, மகா லக்ஷ்மி சந்நிதிகள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. நவகிரக தேவர்கள் அவர்களின் வண்ணங்கள் கொண்ட தனித்தனி சந்நிதிகளில் அருளாட்சி செய்கின்றனர். அனைத்து தெய்வங்களும் சக்தி வாய்ந்த தெய்வங்களாம்.பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

இங்கு ஒரே சிலையில் இரு புறமும் அமைந்துள்ள பஞ்முக சிவனும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் எங்கும் காணக் கிடைக்காத காட்சி. வெளியில் காட்சி தரும் நாககோடீஸ்வர லிங்கம் புற்று மண்ணால் செய்யப்பட்ட கோடி சிறுலிங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு காலசர்ப்பத்தால் சூழப்பட்டு 101அடி உயரத்தில் மிகபிரம்மாண்டமாய்க் காட்சி தருகிறார். நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், குஜதோஷங்களை நீக்கும் அளப்பரிய சக்தி கொண்டவராம் இவர். சிவராத்திரி நாட்களில் இங்கு நிறைய மக்கள் இவரை வணங்க வருவார்களாம்.

அடுத்து சுரேந்திரபுரிக்கு செல்வோம். உள்நுழைய பெரிவர்களுக்கு 350ரூ.யும், 5முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தை
களுக்கு 300ரூ. டிக்கட். மொபைல் காமிராக்களுக்கு 100ரூ.

உள்ளே நாம் செல்லும் பாதை
யைக் கோடிட்டு காட்டியுள்ளார்கள். அந்த வழியில் சென்றால்தான் எல்லாவற்றையும் பார்க்க முடியும். எதையும் நாம் தொட முடியாதபடி தடுப்பு வேலி உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள  மிகப் பிரசித்தமான பெரும்பாலான முக்கியமான கோயில்களின் மாதிரி வடிவமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் தத்ரூபமாக இவை கலை
நயத்துடன் உருவாக்கப்பட்
டுள்ளன. இந்த ‘மாதிரி வடிவமைப்பு’களில் இருந்தே அக்கோயில்களின் கட்டிடக்கலை பாணி மற்றும் தனித்தன்மைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு துல்லியமாக இவை படைக்கப்பட்டிருப்பது ஒரு அற்புதமான சாதனையாகும்.

ஹிந்து புராணங்களின் கடவுளர்கள் தொடர்பான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பவடிவங்கள், ஹிந்து புராணிக பாரம்பரியம் குறித்த பல தகவல்களை இந்த மியூசியத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம். பாண்டுவுக்கு சாபம் எப்படி வந்தது, சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் பொன்னால் செய்த சீதையுடன் அசுவமேதயாகம் செய்தது, ராவணன் கைலாயத்தை தூக்கியது  போன்ற சிறிய நிகழ்ச்சிகளையும் அழகாக செய்திருப்பது கண்ணைக் கவர்கிறது.

பிரலம்பன்,தேனுகன்,காளியன் போன்ற அரக்கர்ளின் வாயில் குகை போல் நாமும் ஏறி இறங்கிச் சென்று உள்ளிருக்கும் திருவிளையாடல்களை ரசிக்கலாம்.  கைலாய குகையில் தண்ணீரில் செல்வதும், வைஷ்ணோதேவியை சிறு குகையில் சென்று தரிசிப்பதும் தெய்வீக அனுபவங்கள்.சுற்றிப் பார்க்க 3-4 மணி நேரம் ஆகிறது. மேலே 8 திக்பாலர்கள் சூழ நடுவில் கேன்டீன் உள்ளது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புத்த சரிதம், கிருஷ்ண லீலா,  சிவ தாண்டவம், ஹனுமத் பிரபாவம், சப்தலோகங்கள் மிக அழகாக உருவாக்கப் பட்டுள்ளன. நாகலோகத்தில் சீறும் நாகங்களின் ஒலி, எம லோகத்தில் பாவம் செய்து பலனை அனுபவிக்கும் உயிர்களின் கூக்குரல், சக்கர வியூகத்தில் சண்டை சத்தம் என்று நம்மை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்லும் அற்புத உணர்வு
பூர்வமான ஆன்மிகக் களஞ்சியம்.

அங்கு வடிக்கப்பட்டுள்ள சிலைகள் தத்ரூபமாக நம்முடன் பேசுவது போல் காணப்படுவது விந்தையாக உள்ளது. அஷ்டலக்ஷ்மிகள், தசாவதாரங்கள், கைலாயம், இந்திரலோகம், வைகுண்டம்...
சொல்ல வார்த்தைகளில்லை. நாம் உயிருடன் மேலே சென்று சகல லோகங்களும் சுற்றி மீண்டும் பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுகிறது! முக்யமாக இக்கால இளைய தலைமுறை இதன் மூலம் பல அரிய புராண விஷயங்களை அறியலாம்.

ஹைதராபாத் செல்பவர்கள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய இடம் சுரேந்திரபுரி.

No comments:

Post a Comment