தாலும் அதன்பின் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்ற மாதம் மும்பைக்கு என் தம்பி வீட்டுக்கு சென்றபோது
அவரைப் பார்க்க சென்றி
ருந்தோம். 84 வயதிலும் அந்த கணீர் குரலில் கம்பீரமும் பேசும் பாணியும். மாறவில்லை. மலபார் ஹில்ஸில் குடியிருக்கும் அவர் வீடு மிக அழகாக சுத்தமாக இருந்தது. அவரது அந்தநாள் புகைப்படங்கள் சுவரில் அவர் சிறப்பை எடுத்துக் காட்டின.
என் அம்மா, சித்திகள்,மாமாக்கள் பற்றியெல்லாம் விசாரித்தவர்
தன் இளம் நாட்களை நினைவு கூர்ந்தார். அவர்களின் புகைப்
படங்களை ஆர்வமாகப் பார்த்து பழைய நாள் ஞாபகங்களை கூறினார்.என் தாய்வழித் தாத்தா அவரது சொந்த மாமா. அவர் அப்பொழுதே தான் நியூஸ் ரீடர் ஆனபோது ' உன் குரல் உலகெங்கும் ஒலிக்கும். மிகவும் புகழ் அடைவாய்' என்று ஆசிர்வாதம் செய்ததைக் கூறி மகிழ்ந்தார். தான் வடக்கிலேயே இருந்து விட்டதால் தன் கஸின்களுடன் அதிக தொடர்பில்லை என்றார்.
குடந்தை பக்தபுரித் தெருவிலிருந்த என் தாத்தா வீட்டுக்கு பெற்றோ
ருடன் வரும்போது சுவாமிமலை செல்வது பற்றியும், குடந்தையில் இருந்த தன் தோழி பற்றியும் மறக்காமல் பேசியது ஆச்சரியமாக இருந்தது. இப்பவும் தமிழ்நாடு வந்து சுற்றிப் பார்க்கும் ஆசை இருக்கிறதாம்!
என் கணவர் தனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று சொன்னபோது
..எனக்கும் கொஞ்சம் தெரியும்..என்றபடி தன் ஜாதகத்தை பார்க்காமலே படபடவென்று சரியாக சொல்லி பலன் கேட்டார்! அவர் கணவரும் மாமனாரும் மிக நன்றாக ஜாதகம் பார்ப்பார்கள் என்றும் அவர்களிடம் தானும் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
அவர் சிறுவயதில் படித்தது, கல்லூரிப்படிப்பு அனைத்தும் மும்பையில். மும்பை SIEA வில் பள்ளிப் படிப்பு படித்ததால் தமிழ்ப் புலமை பெற்றார். Ramnarayan Ruia கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தார்.
தஞ்சை மாவட்டம் தியாகராஜ
புரத்தைச் சேர்ந்த BHELல் பணி புரிந்த திரு நாராயணசுவாமியை
மணந்த பின்பு சரோஜ் நாராயணசுவாமியாகி டில்லிவாசம். முதலில் யூகோ வங்கிப் பணியாளராக இருந்தவர் பின்பே ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிக்க பரீட்சை எழுதினாராம். அதில் தேர்வு பெற்று தமிழ்ச் செய்தி வாசிக்க நியமிக்கப் பட்டாராம்.
"B.A ஆங்கிலம் படித்துவிட்டு நான் தமிழ் செய்தி வாசிப்பாளரானது எனக்கே ஆச்சரியமான விஷயம்.காவிரிக் கரையோர பெற்றோருக்குப் பிறந்ததால் தமிழ் என் நாவில் சரளமாக வந்தது" என்றார்.
"ஆரம்ப நாட்களில் செய்திகளைப் படிக்க நிறைய பயிற்சி செய்ய வேண்டும். ல,ள,ழ மற்றும் ண,ன இவற்றை சரியாக உச்சரிக்கா
விட்டால் பொருளே மாறிவிடும்.
ஆங்கிலம் ஹிந்தியில் இருக்கும் செய்திகளை மொழிபெயர்த்த பின்பே தமிழில் படிக்க முடியும். அப்பொழுதே என் தமிழ் உச்சரிப்புக்கு பாராட்டு பெற்றவள் நான்.வெளிநாட்டு செய்திகளைப் படிக்கும்போது அவர்கள் பெயர் உச்சரிப்பை அந்த நாட்டுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொள்வேன். நான் படிப்பதில் எந்தத் தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பேன். எப்போது இடைவெளி விட்டுப் படிக்கவேண்டும், தொடர்ந்து படிக்க வேண்டும், ஏற்ற இறக்கத்துடன் படிக்கவேண்டும் என்பது மிகவும் அவசியம்.
செய்திகள் வாசிக்கும் நேரத்திற்கு 2,3 மணி நேரங்கள் முன்பே அலுவலகம் சென்றுவிட வேண்டும். இன்றுபோல் தமிழ் படித்தால் மட்டும் போதாது.மிகக்
கடினமான வேலை" என்றார்.
1962 முதல் சுமார் 50 வருடங்கள் ஆகாசவாணியில் கோலோச்
சியவர், செய்திகள் தவிர
வானிலை முன்னறிவிப்பு பிரிவிலும், NDTVயில் சில வருடங்கள் பணிபுரிந்ததாகவும் கூறினார்.
"நீங்கள் வாசித்த செய்திகளில் உங்களுக்குப் பிடித்த மறக்க முடியாத செய்தி எது?" என்றபோது "நான் படித்த எல்லா செய்திகளுமே எனக்கு பிடித்ததுதான். ஏனெனில் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் என் உழைப்பு இருக்கு. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்திகளை மொழிபெயர்த்து படிப்பதே ஒரு சேலஞ்சுதான்.
ஆனாலும் என் மனதை நெகிழ வைத்த செய்தி இந்திராகாந்தி மறைந்த செய்தியை வாசித்தது" என்றவர் சற்று மனம் கலங்கி பழைய நினைவுக்கு சென்று விட்டார்.
"இந்திரா காந்தி இறந்ததை என்னால் தாங்க முடிவில்லை. நாங்கள் இருவரும் நிறைய பேசியதுண்டு. அவரை பல பேட்டிகளும் எடுத்திருக்
கிறேன்.அந்த செய்தியை குரல் தழுதழுக்க வானொலியில் படித்து விட்டு அவர் வீட்டுக்கு விரைந்து சென்றேன். என் கணவர் அங்கு போக வேண்டாம் எனத் தடுத்தும் நான் அங்கு சென்று அவர் உடலைப் பார்த்தபோது என்னால் தாங்க முடியாமல் அழுதுவிட்டேன்."
அண்ணாதுரையின் மறைவு, பாடகர் மதுரை மணிஅய்யர் மறைவு,பங்களாதேஷ் பிரிந்தது, நிறைய பட்ஜெட் செய்திகள் படித்ததாக சொன்னவர், ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளை முதலில் தெரிந்து கொள்வது சுவாரசியமானது என்றார். பத்மினி, வைஜயந்தி
மாலா, ஹேமமாலினி போன்ற நடிகைகள் தமக்கு நெருங்கிய நண்பர்கள் என்றார்.1983ல் ICC கிரிக்கெட்டில் கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றியதை தான் செய்தியாக வாசித்ததை மிகப் பெருமையாக நினைத்
ததாகக் கூறினார்.
இந்து தமிழ் மற்றும் பல தமிழ் செய்தித்தாள்களில் நிறைய அரசியல் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார். பல ஆங்கில-தமிழ் மொழி
பெயர்ப்புகளைச் செய்துள்ளார். அவர் பணியில் இருந்தபோது தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்க டில்லி வரும் திரைப்படங்களுக்கு தமிழ் அறியாத நடுவர்களுக்கு தமிழ் வசனங்களை இந்தியில் மொழி பெயர்த்து சொல்வாராம். நேஷனல் ஃபிலிம் டெவலப்
மெண்ட் கார்ப்பரேஷனுக்கு தமிழ்ப் படங்களுக்கு ஸப் டைட்டில்(sub title) எழுதிக் கொடுத்த
துண்டாம். நம் நாட்டின் பிரதமர்
களான இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், P.V.நரசிம்ம
ராவ், I.K.குஜ்ரால் ஆகியோரை பிரத்யேக பேட்டி எடுத்தது மறக்க முடியாதது என்றார்.
பல பட்டங்கள் பரிசுகள் பெற்றாலும் 2009ம் ஆண்டு தமிழகத்தில் அன்றைய முதல்வர் திரு கருணாநிதி கையால் வாங்கிய கலைமாமணி பட்டம் வாங்கியதை பெருமையாக உணர்ந்ததாக என்றார். மும்பையின் சிறப்பான பெண்களை பேட்டி கண்டு எழுதியதாகச் சொன்னார்.
'முதல்வர் ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.மிக தைரியமும் திறமையும் நிறைய உண்டு' என்றவர் தன்னுடன் பணி புரிந்த சக செய்தி வாசிப்பாளர்கள் பற்றியெல்லாம் சொன்னார். பல விஷயங்களை சொல்லும்போது சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் மறந்து விட்டது என்றார். தான் இப்போது ரேடியோவில் செய்திகளைக் கேட்பதில்லை என்றும் டி.வி.யில்தான் பார்ப்பதாகவும் சொன்னார்.
அவர் கணவர் ஒரு வரம் என்றார். "ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டு அந்யோன்யமாய்
வாழ்ந்தோம்.பத்து வருடங்க
ளுக்கு முன்பு அவர் மறைந்தபோது என்னால் தாங்க முடியவில்லை. ரொம்பவே மனம் பேதலித்து விட்டேன். அதனால் என் நாத்தனார் மகன் என்னை மஸ்கட் அழைத்துச் சென்றார். கொஞ்சம் மனம் தேறிய பின்பே திரும்ப வந்தேன்."
"எங்கள் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகளும் நான்கு பெண்களுமாக ஒன்பது குழந்தைகள். என் சொந்த சகோதரிதான் சென்னையிலுள்ள எக்ஸ்னோராவின் பிரசிடென்ட் திருமதி சுலோசனா ராமசேஷன். எனக்கு ஒரு பெண், ஒரு பிள்ளை.என் பெண், பிள்ளை, மாப்பிள்ளை, மருமகள் எல்லோரும் சிறப்பாகப் படித்து உயர்ந்த வேலைகளில் இருக்கிறார்கள். பேரன் பேத்திகள் மூன்று பேர். அவர்கள் எல்லாரும் அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வந்து கவனித்துக் கொள்கி
றார்கள். என் உடல்நிலையும் எந்த பிரச்னையும் இல்லாததால் நான் தனியாக இருப்பதாக உணர்வ
தில்லை.உதவிக்கு இரண்டு
பெண்கள் இருக்கிறார்கள்"
"சீரடி பாபா என் இஷ்ட தெய்வம். நினைத்தால் நானே காரை ஓட்டிக் கொண்டு சீரடிக்கு தரிசனம் செய்ய சென்று விடுவேன். கார் ஓட்டுவது எனக்கு பிடித்த விஷயம். இப்ப வயதாகி விட்டதால் என் குழந்தைகள் எனக்கு கார் ஓட்ட தடை போட்டு விட்டார்கள்" என்று கூறி வருத்தப்பட்டார்!
5 வருடம் முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்றின் வீடியோவைப் போட்டுக் காட்டியவர்...அப்ப எப்படி குண்டா நன்னா இருக்கேன் பாரு. வயசானா உடம்பு குறைஞ்சிடுமா...
என்று குழந்தைத் தனமாகக் கேட்டவர் என் கணவரிடம்
...உங்களுக்கு ஜோஸ்யம் தெரியும்னேளே? when I will kick the bucket னு சொல்வேளா...
என்றார்! என் கணவர்
...அதுக்கல்லாம் இன்னும் டைம்
இருக்கு. கவலைப் படாதங்கோ. நீங்க இன்னும் நிறைய பேருக்கு பேட்டி கொடுக்கணும்...என்றார். உடனே...பிரிட்டன்,சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா ரேடியோக்கல்லாம் நான் பேட்டி கொடுத்திருக்கேன். நம்ம நாட்டைப் பற்றி ரொம்ப ஜாக்கிர
தையாக பேசணும். அவா நான் பேசறதை கண்காணிச்சிண்டே இருப்பா...என்றார்.
பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்த அந்த நாட்களில் குடும்பப் பொறுப்பிலிருந்தும் நழுவாமல் தன் தொழிலிலும் ஈடுபாடு கொண்டு சிறப்பாகப் பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்ற திருமதி சரோஜ் நாராயணசுவாமி ஒரு சாதனைப் பெண் என்பதில் சந்தேகமில்லை. அவர் எனக்கும் உறவினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி!
'சித்தி..உங்களோட ஃபோட்டோ எடுத்துக்கணும்' என்றதும் ஓ.கே. சொல்லிவிட்டு, 'எனக்கு எல்லா ஃபோட்டோவும் அனுப்பிவை' என்றவர் ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு 'நான் நன்னா இருக்கேனா? ரொம்ப வயசான மாதிரி தெரியறேனோ' என்றவரிடம் 'இல்ல சித்தி! அழகா யங்கா( young) இருக்கேள்.உங்க குரல் இப்பவும் பழைய மாதிரியே இருக்கு. கொஞ்சமும் நடுக்கமோ பிசிறோ இல்லை' என்றதும் அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பாக்கணுமே! எந்த வயசுப் பெண்ணிற்கும் தான் எப்பவும் அழகாகவும் இளமையாகவும்
இருக்கும் ஆசை உண்டு போலும்!
சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதால் நாங்கள் கிளம்பவும், 'குங்குமம் எடுத்துக்கோ. இங்கல்லாம் வெற்றிலை கிடைக்காது' என்றவர்'அடிக்கடி வாங்கோ. இதுமாதிரி நம்ம மனுஷாளோட பேசற்து சந்தோஷமா இருக்கு' என்று கூறி வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
No comments:
Post a Comment