உழவுத் தொழிலைக் கொண்ட விவசாயிக்கு மழையைப் போன்றே சூரியனின் தயவும் வேண்டும். காளை, பசுவின் உதவியும் வேண்டும். ஆகவேதான் முதல்நாள் போகியும் , மறுநாள் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.
போகி என்பது இந்திரனின் பெயர். முற்காலத்தில் சோழநாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆயர்கள் ஆண்டு தோறும் மழை பொழிந்து நாடு சுபிட்சம் அடைய இந்திரனுக்கு பூஜை செய்து வந்தனர். இந்திரன் கிழக்கு திசைக்கு திக்பாலர்.
மழை வாழ்விற்கு மிக அத்யாவசியமானது. அதனாலேயே வள்ளுவரும் கடவுள் சிறப்புக்கு அடுத்து 'வான் சிறப்பு'க்கு முக்யத்துவம் கொடுத்துள்ளார்.
மழை காலம் மார்கழியோடு முடிவதால் இது காரி-கழி விழா. மழைக்கு நன்றி செலுத்தி பிரிவுபசாரம் செய்ய ஏற்பட்ட விழா. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் கொள்கையாக உள்ளது.
அக்கால இந்திரவிழா இன்று போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.பழமையின் இறந்த பகுதியைச் சுட்டெரித்து உயிர்நிலைப் பகுதியை புதுப்பித்துக் கொண்டு ஒரு புதுமைப் பெருவாழ்வு வாழ இந்தப் பண்டிகை ஒரு அறிகுறியாகும்.
இன்றுடன் தக்ஷிணாயனம் முடிந்து நாளை முதல் உத்தராயணம் ஆரம்பம்.
No comments:
Post a Comment