தேவர்கள் விடியற்காலையில் பூமிக்கு வரும் மாதமாகக் கொண்டாடப்படும் இந்த மார்கழியில் அவர்களை வரவேற்கக் கோலமும், அவர்களைப் போற்றிப் பாடித் துதித்து பூஜைகள் செய்வதும் சிறப்பாகும். நாமும் திருப்பாவை, திருவெம்பா
வையைப் பாடி அவனடி போற்றி அவனருள் பெறுவோம்🙏
'மாதங்களில் நான் மார்கழி மாதம்' (மாஸானாம் மார்கஸு ஹோஸ்மி)என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் கீதையில் கூறுகிறார். ஆதி காலத்திலிருந்தே இம்மாதம் கடவுளை வழிபடுவதற்கு சிறந்த மாதமாக உள்ளது. இறைவனை வழிபட மட்டுமே இம்மாதம் ஒதுக்கப் பட்டிருப்பதாலே மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.
மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களின் ஒருநாள்.அதன்படி தை முதல் ஆறுமாதம் அவர்களுக்கு காலை நேரம். மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும்வழிபாடு மிகச் சிறந்தது.
இந்நாளில் செய்யப்படும் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நோற்கப்படும் நோன்புகளில் முதன்மையானது.இந்த நோன்பு பெண்களாலேயே நோற்கப்
பட்டுள்ளது.
நல்ல மழை பெய்து நாடு சிறக்கவும், நல்ல கணவரை அடையவும், மணமானவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுவதும் இந்நோன்பின் முக்யத்துவமாகும்.மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் சுப்ரபாதம் ஒலிபரப்பிய பின்னர் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும் ஒலிபரப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் மார்கழி 30 நாட்களும் திருப்பாவையின் பாடல்களை ஆளுயர பொம்மைகளை கொலு போல் பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் வைத்து அலங்காரம் செய்வது கண்கொள்ளாக் காட்சி.
ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன.
இதில் முதல் நாமமான 'கேசவா' என்பது மாதங்களுக்கு சிகரமான மார்கழியாக விளங்குகிறது. ஆன்மிக மார்க்கத்திற்குச் செல்ல சிறப்புடை மாதமாகக் கருதப்படும் இம்மாதம் ‘மார்க சீர்ஷம்’ எனப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.
No comments:
Post a Comment