Thursday, 30 January 2020

வசந்த பஞ்சமி


இன்று வசந்த பஞ்சமி
நாம் வணங்கும் மூன்று தேவியரில் முக்கியமான தெய்வம் சரஸ்வதி தேவி. அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப்
படுகிறாள்.  அவள் பூமியில் நதிகளாக ஓடுகிறாள் என்று வேதங்கள் கூறுகின்றன.

சரஸ்வதி தேவியானவள் ஆதிபராசக்தியின் அம்சம். ஒளி மிகுந்தவள். கல்விக்கு அதிபதி எல்லா கலைகளுக்கும் தலைவி! அவள் பிரம்ம ஞானத்தைத் தருபவள்.

பிரம்மா தன் மனைவி சரஸ்வதியுடன் வசிக்கும் இடம் சத்ய லோகமாகும். அங்கு அழகான வெண்தாமரைப் பீடத்தின் நடுவில் வீற்றிருக்
கிறாள். உலகிலுள்ள 64 கலைகள், திறமைகள், மனோசக்திகள் உடலுருவம் தாங்கிக் கொண்டு அசுரர், நரகர், கருடர், யக்ஷர், கிம்புருடர் போன்ற பலருடன் இச்சபையில் உள்ளனர். கணபதி, சுப்ரமண்யர் போன்றோரும் இச்சபையில் வீற்றிருக்கின்றனர். அப்ஸரஸ்கள் நிறைந்த இந்த சபை, எல்லா சபைகளையும் விட உயர்ந்ததாக விளங்குகிறது. அங்கு ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் உள்ளனர். நான்கு வேதங்களின் அதிபதிகள் மற்றும் அ முதல் க்ஷ வரையிலான 51 அக்ஷர தேவதைகளும் வீற்றிருக்கின்றனர். வீணாகானம் அவையை நிரப்பிக் கொண்டி
ருக்கிறது.

அந்த அம்பிகையின் அவதார நாளாகக் கொண்டாடப்படுவது வசந்த பஞ்சமி. பிரம்மன் அம்பிகையை வாக்வாதினி, வாகீசுவரி, வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி, சரஸ்வதி தேவி என்றெல்லாம் போற்றித் துதித்தார். இவ்வாறு ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் வசந்த பஞ்சமியாகும். இன்று இத்திருநாள் கொண்டாடப்
படுகிறது. .

நீல சரஸ்வதி, உக்ரதாரா, சகவதாரா, நீலதாரா என்பவை சரஸ்வதியின் அம்சங்கள். சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும் வீற்றிருக்கிறாள். வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி, நம் உடலில் வெவ்வேறு பெயர்
களுடன் வியாபித்திருக்கிறாள் என்று சாக்த தந்திர நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும்.

அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது.

ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம், பாஸர் என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் வேத வியாசர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

கூத்தனூர் சரஸ்வதி கோயில் புராண சிறப்பு பெற்றது.

தற்போது சென்னைக்கருகில் பெரியபாளையத்திலிருந்து ஒரு கி.மீ.தொலைவில் உள்ள அரியப்பாக்கத்தில் சரஸ்வதி தேவிக்காக அழகியத் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

வசந்த பஞ்சமி தினத்தில் அன்னை சரஸ்வதியை வழிபடுவதால் கலைகளில் முன்னேற்றம் பெறுவதோடு நமது உள்ளங்களில் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி பெருகி, வாழ்வில் வசந்தம் வீசிட  அவளை வணங்குவோம்🙏

ரசகுல்லா பிறந்த கதை

இனிப்புப் பிரியர்களின் பட்டியலில் முக்யமான இடத்தைப்  பிடிப்பது ரசகுல்லாதான். சர்க்கரைப் பாகில் மிதக்கும் வெண்ணிறப் பஞ்சு போன்ற ரசகுல்லா கடந்த 150 ஆண்டுகளாகச் சுவைக்கப்
பட்டுவருகிறது! இதற்கு ஆதாரம் ரஸமலாய்தான்!

இந்த ரசகுல்லாவைக் கண்டுபிடித்தது யார்?
பாலாடைக் கட்டியாலான இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்றவர்கள் வங்காளிகள்.  மேற்குவங்கத்தில்
1868-ல் நொபின் சந்திரதாஸ் என்பவர் ரசகுல்லாவை உருவாக்கினார். இதனால் ‘ரசகுல்லாவின் கொலம்பஸ்’ என்று பாராட்டப் படுகிறார். வட கொல்கத்தாவில் பாக்பஜார் பகுதியில் இன்றும் அவருடைய இனிப்புக் கடையில் ரசகுல்லாவுக்கு கூட்டம் அலைமோதுகிறது!

தமிழகத்தைப் பொறுத்தவரை வங்க இனிப்புகள் என்றாலே கே.சி.தாஸ் இனிப்பகம்தான் நினைவுக்குவரும். கே.சி.தாஸ் என்பவர் நொபின் சந்திரதாஸின் மகன் என்பதையும் ரசகுல்லா உருவான சிக்கலான வரலாற்றையும் அந்நிறுவனத்தின் இணையதளம் நமக்குச் சொல்கிறது.

பாலிலிருந்து பாலாடைக் கட்டியைப் பிரித்தெடுப்பது நெடுங்காலமாகத் தவறான உணவுப் பழக்கமாக இந்தியாவில் கருதப்பட்டுவந்தது. போர்த்து
கீசியர்களிடமிருந்துதான் பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் முறையை மேற்கு வங்கத்தினர் கற்றுக்கொண்டார்கள். அதுவும், சர்க்கரைப் பாகில் பாலாடைக் கட்டியைக் கொதிக்கவைத்து ரசகுல்லாவை முழுசாக வெளியில் எடுக்கப் பல வருஷம் படாதபாடுபட்டார் நொபின் என்கிறது வரலாறு!

இந்த ரசகுல்லாவுக்கு நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரும் அடிமையாம்! வில்லியம் ஹெரால்ட் என்ற அவர்களது சமையல் வல்லுனர் பலநாள் முயன்றும் அவரால் இந்த சுவையுடன் செய்ய முடியாமல் தோல்வி அடைந்து , தம் நாட்டிற்கு இங்கு தயாரிக்கப்பட்ட ரசகுல்லாக்களை எடுத்துச் சென்றாராம்!

இத்தனை சுவையான  ரசகுல்லா தமக்கே உரியது என்று உரிமை கோரியது மேற்கு வங்காளம்! நொபின் சந்திர தாஸால்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்று புவிசார்  குறியீட்டை 2015-ல் கோரியது மேற்கு வங்காள அரசு.

ஆனால் அது தமக்கே சொந்தம் என்று வரிந்து கட்டிக்கொண்டு ரசகுல்லாவுக்கு உரிமை
கொண்டாடியது ஒடிஸா அரசு!  600 ஆண்டுகளுக்கு முன்னரே ரசகுல்லாவின் முன்னோடியான ‘சென்னா பொடா’ பூரி ஜகநாதர் கோயிலில் ஸ்பெஷலாம்!

அதற்கு ஒரு சுவையான கதை!
பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதானப்படுத்த
ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார்! அதனால்  பனிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று  ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்! யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம்!

ஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. ரசகுல்லா தயாரிப்புப் பயிற்சி நிறுவனத்தைக்கூடத் தாங்கள் நடத்திவருவதாயும் ஒடிஸா கூறியது. இப்படி ஒரு இனிப்புக்கு நடந்த காரசாரமான சண்டை 2017 நவம்பரில் ‘ரசகுல்லா மேற்கு வங்கத்துக்கே சொந்தம்’ என்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்குவந்தது.

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கும்பகோணம் ஃபில்டர் காபி போல் பெங்கால் ரசகுல்லாவும் ஃபேமஸ் ஆயிற்று!

அவருடன் பேசிய முதல் வார்த்தை


என்னை என் கணவர் குடும்பத்தார் பெண் பார்த்தது பிப்ரவரியில்.அச்சமயம் என் மாமா 'பெண்ணுடன் தனியா பேசுகிறீர்களா?' என்றபோது என் கணவர் மறுத்து விட்டார். ஏப்ரலில்தான் திருமணம். இடையில் இந்தக் காலம் போல் நாங்கள் சந்தித்ததோ பேசியதோ கிடையாது. மாப்பிள்ளை அழைப்பன்று காரில் அவருடன் என்னை உட்கார வைத்து புகைப்படம் எடுக்க அவரது நண்பர்கள் கேட்டபோது 85 வயதான எங்கள் இருவரின் தாத்தாக்களும் 'நல்லநேரத்திற்கு முன்பு அதல்லாம் கூடாது' என மறுத்து விட்டார்கள். மறுநாள் திருமணத்தன்றும் பேச வாய்ப்பில்லை. மதியம் நலங்கிற்கு தயாரானேன். 'நலங்கிற்கு மாப்பிள்ளையை அழைத்து வா' என்றார்கள். 'நான் மட்டுமா?'என்றேன். 'நாங்களும் வருவோம். நீதான் கூப்பிடணும்'என்றார்கள். நான் அவரிடம் தயங்கியபடி மெதுவான குரலில் 'நலங்கிடணும்..வாங்கோ' என்றேன். அதுதான் நான் அவரிடம் பேசிய முதல் வார்த்தை!

சகலமும் தரும் தைவெள்ளி🙏


ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை என்பது நாம் அறிந்ததே. தட்சிணாயனத்தில் ஆடியும், உத்தராயணத்தில் தை மாதமும் மிக முக்யமானவை. அதனாலேயே ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு மிகவும் விசேஷமாகக் கூறப்படுகின்றன.

தை முதல் வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மை யாவும் கிடைக்கும்.  செவ்வரளி மற்றும் சிவப்பு நிறப் பூக்கள் போட்டு  வணங்குவது சிறப்பு. வீட்டிலும் விளக்கு பூஜை செய்வதால் செல்வம் சேரும்.

தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயில் அல்லது  சிவாலயம் சென்று அங்குள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண்
திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்க்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!

அன்னைக்கு மாவிளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இதனால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். தை முதல் வெள்ளியில் கணபதிக்கு கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யும் வழக்கம் பல வீடுகளில் உண்டு.

அன்றைய தினத்தில் லலிதா நகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட அம்மன் சுலோகங்களை பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக நம்மை வந்தடையும் என்பது உறுதி.

இன்றைய படிக் கோலம் நான் போட்டது. என் ஆறு வயது குட்டிப் பேத்தி பிரியங்கா தான் கோலத்துக்கு கலர் செய்வதாகக் கூறி நான் சொல்லிக் கொடுத்தபடி அழகாக கலர்ப்பொடி போட்டு வெண்மைக் கோலத்தை வண்ணக் கோலமாக்கினாள்! அவளது ஆர்வத்தையும் கோலத்தில் டிசைன் போட்ட அவள்  வேகத்தையும் நீங்களும் பார்த்து ரசித்து வாழ்த்துங்களேன்!

மார்கழி முழுவதும் நான் போட்ட கோலங்களைப் பார்த்து ரசித்து லைக் மற்றும் கமெண்ட் போட்ட அனைத்து மத்யம நண்பர்
களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏






மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..


உழவுத் தொழிலைக் கொண்ட விவசாயிக்கு மழையைப் போன்றே சூரியனின் தயவும் வேண்டும். காளை, பசுவின் உதவியும் வேண்டும். ஆகவேதான் முதல்நாள் போகியும் , மறுநாள் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.
போகி என்பது இந்திரனின் பெயர். முற்காலத்தில் சோழநாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆயர்கள் ஆண்டு தோறும் மழை பொழிந்து நாடு சுபிட்சம் அடைய இந்திரனுக்கு பூஜை செய்து வந்தனர். இந்திரன் கிழக்கு திசைக்கு திக்பாலர்.
மழை வாழ்விற்கு மிக அத்யாவசியமானது.  அதனாலேயே வள்ளுவரும் கடவுள் சிறப்புக்கு அடுத்து 'வான் சிறப்பு'க்கு முக்யத்துவம் கொடுத்துள்ளார்.
மழை காலம் மார்கழியோடு முடிவதால் இது காரி-கழி விழா. மழைக்கு நன்றி செலுத்தி பிரிவுபசாரம் செய்ய ஏற்பட்ட விழா. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் கொள்கையாக உள்ளது.
அக்கால இந்திரவிழா இன்று போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.பழமையின் இறந்த பகுதியைச் சுட்டெரித்து உயிர்நிலைப் பகுதியை புதுப்பித்துக் கொண்டு ஒரு புதுமைப் பெருவாழ்வு வாழ இந்தப் பண்டிகை ஒரு அறிகுறியாகும்.
இன்றுடன் தக்ஷிணாயனம் முடிந்து நாளை முதல் உத்தராயணம் ஆரம்பம்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்புகளில் மற்றொன்று ஸ்ரீதியாகராஜ ஆராதனை. புஷ்ய பஞ்சமி எனப்படும் தை மாதத்தில் (தெலுங்கு கன்னடம் மராட்டியர்களுக்கு தை மாதம்..நமக்கு மார்கழி) வரும் தியாகராஜ ஆராதனை அவர் பிறந்த திருவையாறில் ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கீத மும்மூர்த்திகளே இன்று நம்முடைய இசைக்கு ஆதாரமான சங்கீதத்தின் தந்தைகள் எனலாம். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்..

தியாகராஜ சுவாமிகள், சாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் பதினான்கு ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் அவதரித்தார்கள்.

1762ல் திருவாரூரில் பிறந்த சாமா சாஸ்திரிகளின் ஆத்மார்த்த தெய்வம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன்.  இவரது பல கீர்த்தனைகள்  நாகை  நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.

1767ல் திருவாரூரில் பிறந்த  தியாகய்யர்  ஸ்ரீராமர் மேல்  அளப்பறிய பக்தி கொண்டு தெலுங்கு மொழியில்  பல கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர். ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றவர்.

திருவாரூரில் பிறந்த  முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர்,  கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியில் மட்டுமே விடிகாலை எழுந்து ஆலயம் செல்வதும், திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பாசுரங்களைப் படிப்பதும் ஏன்?

பாவை நோன்பு 2000  ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில்  ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயினி தேவியை வழிபட்டு  தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.   பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலா
யிற்று. அதே முறையில் ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள்.

பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை  உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம்  செலுத்தாமல் இறைவனிடம் மட்டுமே மனதினைச் செலுத்தி நோன்பினை  மேற்கொள்ள
வேண்டும் என்பதைத் திருப்பாவையில் கூறுகிறாள் ஆண்டாள்.

கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்கவும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதம் மேற்கொள்ள வேண்டும்.

26 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடித்து 27ம் நாள்  முடித்து வேண்டியதைப் பெற  கூடாரவல்லி அன்று அந்த கோவிந்தனைச் சரணடைகிறாள் கோதைபிராட்டி!

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..


திருவாதிரை
மாதங்களில் சிறந்தது மார்கழி. மார்கழி பிறந்தாலே மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். விடியற்காலை முதலே ஒரு தெய்வீகச் சூழ்நிலை காணப்படுவது இந்த தனுர் மாதத்தில் மட்டுமே.
இம்மார்கழியில்தான் நாராயணனுக்குகந்த வைகுண்ட ஏகாதசியும், நடராஜனுக்குகந்த திருவாதிரையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு கடவுள் நிம்மதியாகத் தூங்குகிறார். மற்றொரு தெய்வம் ஆனந்தமாய் ஆடுகிறார்!
நட்சத்திரங்களுள் சிறந்தது திருவாதிரை. தமிழகக் கோயில்களுள் சிறந்தது தில்லை சிற்றம்பலம் என்னும் சிதம்பரம். அதுவே ‘கனக சபை’ எனப்படுகிறது. தில்லையில் சிவபெருமான் இடதுகாலைத் தூக்கி திரு நடனம் புரியும் நடராஜப் பெருமானாகத் திகழ்கிறார்.
#புலித்தோல்
ஆணவ அகங்காரம் என்னும் புலியைக் கொன்று அதன் தோலை சிவபெருமான் அணிந்தார். இது அகங்காரத்தை அடக்குவதன் பொருள்.
#தூக்கிய பாதம்
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண மாயையாகிய முயலகனை மிதிக்கின்ற பாங்கில் ஒரு காலைத் தூக்கிய வண்ணம் பெருமான் ஆடுகிறார். மாயையை மிதித்து அழித்தலொழிய ஞானம் கிடைக்காது என்பதே இதன் தத்துவம்.
#மான்
மனிதமனம் மானைப் போல் துள்ளிக் குதித்து அங்குமிங்கும் ஓடும். ஆடல்வல்லானின் கையிலுள்ள மான் அவரையே பார்த்திருப்பது போல் ஜீவர்களும் மனதைத் தீயவழியில் செலுத்தாமல் ஈசன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
#உடுக்கைடமருகம்
விதையினால் ஒரு மரத்தையே உண்டாக்கலாம். அதுபோல் நாதம் என்ற விந்துதான் உலகையே உண்டாக்கியது. ‘ஓம்’ என்கிற ஓசையே பிரணவ நாதம். அதன் மூலம் ஒரு மனிதன் தன்னை தெய்வ நிலைக்குப் போக வல்லவனாக முடியும் என்ற தத்துவமே உடுக்கை.
#கனல்
எந்தப் பொருளையும் அக்னி எளிதில் சாம்பலாக்கும். எரிந்த பின் மிஞ்சுவது நீறு. சிவ ஞானம் என்ற அக்னி கர்மத்தை எரித்து, சாந்தமும் இனிமையும் நிறைந்த வாழ்வைத் தரும். திருநீறு சகல பாவங்களையும் போக்குமென்பது இதன் பொருள்.
#சந்திரன்
தூய்மைக்கு இருப்பிடம் பரமாத்வாகிய நடராஜன் என்பதைக் குறிக்கிறது.
#ஊர்த்துவ தாண்டவம்
பிரபஞ்சத்தை அமைப்பதிலும், அதை முறையாக நடத்துவதிலும் சிவமும், சக்தியும் சேர்ந்தே பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த ஆனந்தத்தால் இருவரும் விதவிதமாகத் தாண்டவமாடியதில் சிவமும், சக்தியும் ஒருவருக்கொருவர் நிகராயினர். தாண்டவத்தின் இறுதியில் வெற்றி சிவனுக்கே.
#பஞ்சாட்சரம்
ஸ்ரீ நடராஜ வடிவமே பஞ்சாட்சரமாகும். நடராஜரின் திருவடி ‘ந’காரமாகவும், திருவுந்தி ‘ம’காரமாகவும், திருத்தோள் ‘சி’காரமாகவும், திருமுகம் ‘வ’காரமாயும் கொண்டு சிவபெருமான் திருநடனம் செய்கிறார்.
பஞ்ச நடன சபைகள்
திருவாலங்காடு – ரத்ன சபை
சிதம்பரம் – பொற்சபை
மதுரை – ரஜத சபை (வெள்ளி)
திருநெல்வேலி – தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்ரசபை
மதுரையில் பஞ்ச சபைகளும் உள்ளன. வெள்ளியம்பலத்தில் உள்ள ரஜத சபை, நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள தேவசபை, மற்றும் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள சித்ர சபை இவற்றிலுள்ள மூர்த்திகள் சாந்தாகாரச் சிலைகள். முதல் பிரகாரத்திலுள்ள கனக சபை, ரத்தின சபை இவற்றிலுள்ளவை உற்சவ மூர்த்திகள். கம்பத்தடி மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் பெருவடிவமுள்ளது. இங்குள்ள ரஜத சபை என்னும் வெள்ளியம்பலத்தில் ஆடவல்லார் இராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கி இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி, கால் மாற்றியாடியதால் இதற்கு ‘சொர்க்க தாண்டவம்’ என்று பெயர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோச மங்கை ஆலயத்தில் மரகதம் எங்கிற பச்சைக் கல்லினாலான ஸ்ரீ நடராஜ விக்ரகம் உள்ளது.
தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரகாரம் அருகிலுள்ள வடகுரங்காடுதுறை என்னும் ஆடுதுறை பெருமாள் கோயிலில் கற்சிலையில் நடராசர், சிவகாமி அம்மையுடன் மூலவராகக் காட்சியளிப்பது சிறப்பானது.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

உலகில்  இசையே நம்மை நாடு, இனம், மதம், சாதி போன்றவைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது.மழைக்கு ஒரு காலம்..மலர்கள் பூக்கவும் பயிர்கள் விளையவும்  ஒரு பருவம்..
கொட்டும் பனிக்கும்  காற்றுக்கும்
மழைக்கும்  என்று ஒரு காலம்..
அது போல, இசைக்கு என்று இருப்பதே மார்கழி மாதம்!

இசை கச்சேரிகள் ஆரம்பித்ததன் இன்னொரு காரணம் என்ன  தெரியுமா? சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தங்கள் நாட்டுக்குச் செல்வர். அப்போது, இங்கே விடுதலை போராட்டங்கள் நடந்தால் யார் தடுப்பது என்று யோசித்தனர்.

நம் மக்களை  வசப்படுத்தக் கூடிய சக்தி இசைக்கு இருப்பதை உணர்ந்து டிசம்பர் மாதத்தில் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க, தங்களுக்கு ஆதரவாக இருந்த தமிழர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பரில்  இசை நிகழ்ச்சி உருவானதற்கு இதுவும் ஒரு காரணமாம்!

இசைக் கச்சேரி என்றதும் நம் நினைவுக்கு வருவது கச்சேரி செய்யும் வித்வாம்சினிகளும் கேட்க வரும் பெண் ரசிகர்களும் அணிந்து வரும் பட்டுப் புடவை
களும் அலங்காரங்களும்! பூக்கள் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அவர்கள் தலையில் குறைந்தபட்சம் நான்கு முழம் பூ இருக்கும்!

'மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்று ஆண்டாள் பாடிய திருப்பாவை சற்றே மறக்கப்பட்டு, இந்நாட்களில் அலங்காரங்களுக்கு ஏற்ற மாதமாக மார்கழி மாறி
விட்டது!  விதவிதமான வண்ணப் புடவைகளிலும் அதற்குப் பொருத்தமான நகைகளிலும் வித்வாம்சினிகள் மின்ன..பக்க வாத்தியம் வாசிக்கும் ஆண்களும் 'நாங்கள் மட்டும் குறைவா?' என்பதுபோல் அவர்களின் புடவைக்கு மேட்சாக பலப்பல கலர்களில் பளபள சட்டைகள் அணிந்து வருவதும் பழக்கமாகி விட்டது!

அத்துடன் ஒவ்வொரு சபாவிலும் விதவிதமான புதுவகை
சிற்றுண்டிகள்..காதுக்கு இனிய இசை..மனதில் இறை சிந்தனை..வயிற்றுக்கும் வித்யாசமான உணவு என்று ரசிகர்களைக் கவர்ந்து மனதில் மகிழ்ச்சி தரும் மார்கழியைப் போற்றுவோம்!

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

தினம் தினம் கேட்டாலும் தெவிட்டாத பாடல்களும், இனிய குரல்களும் நம்மை மார்கழி உற்சவத்தில் ஈடுபடவைக்கும். பல வருடங்களுக்கு முன்பே சபாக்கள் இருந்தும், அவற்றில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், உரிய வரைமுறைப்படுத்தாமல் இருந்தது.

மியூஸிக் அகாடமியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலரும் வழக்குரைஞராக பணியாற்றினர். மார்கழி மாதமான டிசம்பர் மாத இறுதியில் அவர்களுக்கு விடுமுறைக் காலமாக இருந்ததால் அச்சமயம் இசை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்தனர். இதன் பொருட்டே சென்னை இசை விழா டிசம்பர் மாத இறுதியில் நடைபெறுவதாக  சொல்லப்
படுகிறது.

இப்படித் தொடங்கிய விழா இன்று சென்னையின் அடையாளத்தைக் குறிப்பதுடன் நமது முக்கிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஏறத்தாழ
100 சபாக்களில் 500 க்கும் அதிகமான  கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், வாத்தியங்கள் மூலமும் இசை அமிர்தத்தை இன்பமாகப்  பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து கூட அதிகம் பேர் இங்கு வருகிறார்கள்.

இசை ரசிகர்களின் விருப்பத்துக்
கிணங்க சபாக்கள் இலவச
மாகவும், கட்டணத்துடனும் காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன. இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரி
களை இடைவிடாமல் ரசிகர்கள் கேட்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினியாட்டம் என கர்நாடக இசையின் அனைத்து வடிவங்களும் ரசிகர்களுக்கு  இசை விருந்தாக்கப் படுகின்றன. இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம்.
இசைவிழா உருவாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

மார்கழி சிறப்பபூ..17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் பெருமைகளில் நம் இசைவிழாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இசைவிழா ஆரம்பித்தது எப்பொழுது..ஏன் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு விழாக்களும்
ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.  குறிப்பிட்ட சிறப்பு கொண்டவை,ஊர் முழுக்க பேசப்படும். சில விழாக்கள் உலகம் முழுக்க கவனிக்கப்படும்.

பிரேசிலில் ரியோடி ஜெனிரோவில் கொண்டாடப்படும் 5 நாள் விழா மிகவும் பிரபலமானது. அமெரிக்
காவில் லூசியானா மாகாணத்
தில் நியூ ஆர்லியன்ஸில்
நடைபெறும் நியூ ஆர்லியன்ஸ் & ஹெரிடேஜ் விழா பழமையான  புகழ்மிக்க விழா. இதேபோல் இந்தியாவில் நம் சென்னையில் நடைபெறும் மார்கழி இசைவிழா நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டு உலகம் முழுக்க இருக்கும் மக்களை ஈர்க்கும் பெரு விழாவாக உள்ளது.

நம் தருமமிகு சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இந்த இசை விழாவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்
படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வரும் இந்த இசைவிழாவில் நம் நாடு மட்டுமன்றி வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் கலந்து கொள்வதும் நாம் அறிந்ததே.

முதன் முதலில் 1927 ஆம் ஆண்டு Music Academy
தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன் கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்
பட்டன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. இந்த மாதத்தில் எவ்வளவோ சிறப்புகள் உண்டு. பொதுவாக இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் இது விதை விதைப்பதற்கான காலம் அல்ல. விதை வளர்வதற்கான காலம்.

இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும் என்ற காரணத்திற்காகத் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது ஏன சொல்கின்றனர்.

ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இறைவனை வணங்க வேண்டிய மிக அற்புத மாதம் என்பதால் திருமணம் செய்யப்படுவதில்லை.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

கோலம்  உருவானது எப்படி? வேத  காலத்தில் அங்குரார்ப்
பணத்தின்போது முளைப்பாலிகை  பால்,  பால்குடம் ,  விளக்கு  இவற்றை  வைக்க  தனித்தனி    கட்டங்கள்  வரைந்து  அரிசிமாவு,  மஞ்சள்பொடி நிரப்புவர்.
அதுவேகாலப்  போக்கில்  கட்டக் கோலங்களாகி விட்டன. 

அக்கினி  வளர்க்க  ஒன்பது குழிகள் தோண்டிக் குண்டம்
அமைப்பர்.அவற்றை இணைக்க கோடு  இட்டதே  புள்ளிக்  கோலமானது. தமிழ்  மக்கள்  பழங்காலத்தில்  மணல்  ஓவியம்  வரைந்ததாக  பழைய  நூல்களில் காணப்படுகிறது. வெண்மையும், 
சிவப்பும்  இணைந்த  கோலம்  சிவ-சக்தி  ஐக்கியமாகக்  கூறப்படுகிறது.

வடநாடுகளில்  போடப்படும்  ரங்கோலி பற்றிய   சுவையான கதை  இது.  ஹோலி  என்ற   முனிவரின் மனைவி  அவள் கணவர்  இறந்ததால்  அவர்  உருவத்தை  பல  வண்ணப்  பொடிகளால்  வரைந்து  அதன்  மீது  48  நாட்கள்  படுத்து  தன்   உயிரை  விடுகிறாள்.அவள்  நினைவாக  பல  வண்ணங்களில்  போட்ட  கோலம்  ரங்கோலி  ஆயிற்று.

கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.  நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  சங்கடங்களைத் தீர்க்கும். வீடு  வளம் பெறும்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள். கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும். வாசலில் சூர்யோத
யத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும்.

விசேஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  நல்லது. கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க இரவானாலும்  கோலமிட  வேண்டும். அமாவாசை
மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.

நகரங்களிலோ இன்று ஸ்டிக்கர்  கோலங்களே பல  வீடுகளுக்கு முன் காட்சி அளிக்கின்றன.
தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மங்கையர்கள் தினமும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வது போல் மார்கழியில் தங்கள் வீட்டு கோலத்தை அழகுப்படுத்து
கிறார்கள்! காலையில்
குனிந்து, நிமிர்ந்து கோலம் போடும்போது உடல் இயக்கங்கள் சீராகி சிந்தனை ஒருநிலைப்படும். புள்ளிகளை இணைப்பதற்கு ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சீராக கோடுகள் போடும்போது கவனச்சிதறல்கள் ஏற்படாது. அது கோலத்திற்கு மட்டுமல்ல, எல்லா செயல்க
ளுக்கும் கைகொடுக்கும்.

புள்ளிக்கோலம் போடுவது மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சி. கவனமெல்லாம் புள்ளிகள் மீதே கூர்மையாக பதியும்போது கண் பார்வை திறன் மேம்படும். அக்காலப் பெண்கள் வயதான போதும் அவர்களுடைய கண்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

புள்ளிகள்தான் கோலத்திற்கு ஜீவனாகவும் அமைந்தி
ருக்கின்றன. அவை  கோடுகளை முறைப்படுத்தி முழுமையான வடிவமாக்கி கோலமாக மாற்றுகின்றன. புள்ளிகள் ஒழுக்க வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. புள்ளி பிசகாத  நெறியான வாழ்க்கை வாழ்ந்தால், கோலம் போன்று வாழ்க்கை அழகாக அமையும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய மார்கழிக் கோலங்கள் புதிய அவதாரமெடுத்தி
ருக்கின்றன. அவைகள் ரங்கோலி கோலம், சிக்கு கோலம், பூக்கோலம், தண்ணீர் கோலம், 3 டி கோலம், மயில் கோலம், தேர் கோலம், சங்கு கோலம், ரோஜா கோலம் என பல விதங்களில் இருந்தாலும் பச்சரிசி மாவை கொண்டு மாக்கோலம் போடுவதுதான் சிறந்தது. அது வெண்மை நிறத்தில் பளிச்சென்றும், பார்க்க அழகாகவும் இருக்கும். அவை எறும்பு, வண்டு, பறவை இனங்களுக்கு உணவாகவும் மாறும்.

வெறுமனே கோலம் மட்டும் போடாமல் அதன் மத்தியில் சாணத்தை உருண்டையாக பிடித்து அதன் நடுவில் பூசணிப்பூக்கள் வைப்பது கோலத்திற்கு கூடுதல் அழகு தருவதுடன் மங்களத்தின் அடையாளமாகவும் உள்ளது.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மாதங்களில் நான் மார்கழி' என்ற மகாபாரதக் கண்ணனுக்கு பிடித்த இம்மாதத்தில் அல்லன நீக்கி நல்லன செய்ய வேண்டும் என்பதை பஜனை, ஆலய வழிபாடு, கோலம், விடிகாலை பூஜை என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்.

மார்கழியில் தேவர்கள் பூலோகம் வரும் நாளாக உரைக்கிறது ஆன்மிகம். அந்நாளில் இறைவனை அதிகம் பூசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது மெய்ஞானம். மார்கழி மாதத்தில் விடிகாலை காற்றில் ஓஸோன் அதிகமிருப்பதால் உடலுக்கு
நல்லது என ஆராய்ச்சிகளால் அறிய வைத்தது விஞ்ஞானம். இதில் கோலம், பஜனை, பொங்கல், இசைவிழாக்கள் இவை எப்படி வந்தன?

ஆண்கள் வெளியில் நடந்து சென்று வீதிபஜனை செய்வதால் அதன் பலனைப் பெறுகிறார்கள். அக்காலப் பெண்கள் விடிகாலை வேளையில் வீதிகளில் பஜனை செய்வது யோசிக்க முடியாத விஷயம். அவர்களும் பலன் பெற உருவானதே வாசலில் கோலம் போடும் வழக்கமானது. அந்நாளில் அத்தனையும் தனி வீடுகள்.  அகன்ற பெரிய மண்தரை வாசல்கள். அவற்றில் சாணி கரைத்து தெளித்தால் பச்சையும் பிரவுனும் இணைந்த அழகிய வண்ணம்! அதில் பளிச்சென்ற  கண்களைப் பறிக்கும் அழகில் அரிசிமாக்கோலம்.

இதில்தான் எத்தனை பயன்கள்! பூலோகம் வரும் தேவர்களுக்கு வரவேற்பு! கோலம் போடும் பெண்களுக்கு உடற்பயிற்சியுடன் ஓஸோனால் கிடைக்கும் பலன்! வீதிவலம் வருவதால் ஆண்க
ளுக்கு இறையருளுடன் நடைப்
பயிற்சி! கோலம் என்ற அழகான கலையின் வளர்ச்சி! தெய்வங்கள் கூட மார்கழியில் பிஸி! நமக்கு அருளை வாரிவழங்க விடியலில் நமக்காக வழிமீது விழி வைத்து காத்திருக்கும் தெய்வங்
கள்! தினமும் நீலமேக வண்ணனுக்கும் , நாகம் பூண்ட நமச்சிவாயருக்கும் சுடச்சுட பொங்கல் நிவேதனம்! 

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி ' அயோத்திக்கு செல்ல வேண்டாம். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய்' என்றார். சுவாமிகளும் மருதாநல்லூர் திரும்பி ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீதரஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கி, அதை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டு பிடிக்க
வேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் ஏற்பட்டு, காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்மகர்ஜனையாக 'ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது.

அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி,அவரைத் தேடி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளதாகச் சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்ததால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தைப் பட்டார். அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்று அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய 'அதடே பரபிரும்மம்' என்ற பாடல் இன்றுவரை குருவணக்கமாக பாடப்படுகிறது.

சத்குரு சுவாமிகளால் உருவாக்கப்பட்ட தெலுங்கு, மராட்டி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற  பல மொழிகளில், பல  பாகவதர்களால் பாடப்பெற்ற சிறந்த பாடல்களை இணைத்துப் பாடும் நாமபஜனை முறையே இன்றும் பாகவதர்
களால் பாடப்படுகிறது. 1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

போதேந்திராள், திருவிசநல்லூர் ஐயாவாள்,மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்ற முப்பெரும் ரத்தினங்களால் உருவான திவ்யநாம பஜன் இன்று நம்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுதும் பிரபலமானதே நம் தமிழகத்தின் சிறப்பு.

Tuesday, 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்த வெங்கட்ராமன் என்ற பெயர் பெற்ற சத்குரு ஸ்வாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை காவியங்களில் பற்றுடையவர். பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால் சுவாமிகள் ராமஜபம் மட்டுமில்லாமல், உள்ளும்புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார்.

திருவிசைநல்லூரில் வசித்த இவர் தம் தந்தையுடன் வைதிக காரியங்களை செய்து வந்தார். ஒருவர் வீட்டு சிரார்த்தத்துக்கு சென்றவர் ராமநாம ஜபத்தில் தன்னையே மறந்து விட்டார். மாலை பயத்துடன் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது 'இன்று நீங்கள் மிக அருமையாக சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்'என்றபோது பகவான் அருளை நினைத்து வியப்பு ஏற்பட்டது.

தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊர்  குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்ததால் தன் மனைவி ஜானகியுடன் ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்தி சென்றார்.

உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமநாமம்  சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதை கண்டார். தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படு
கிறார்களே! ஆனால், இங்குள்ள மக்கள் இவ்வளவு பக்தியாக இருக்கிறார்களே, என எண்ணியவராய், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு நாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். 

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மருதாநல்லூர் சுவாமிகளின் முயற்சியே இன்றைய நாமசங்கீர்த்தன முறை.
கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும்.

ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள் மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி
யவர்கள் ஆவர்.

நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள்.

சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கினார். மருதாநல்லூர் பாணி என்று புகழ்பாடும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

நாம சங்கீர்த்தனத்தின் பெருமை அளவிடற்கரியது. பஜனை பாடத் தெரிய வேண்டியது அவசிய
மில்லை. உடன் அமர்ந்து கேட்டு நாமாக்களை திருப்பிச் சொன்
னாலே போதும்.பலரும் பாடும்போது ஏற்படும் நாம ஒலியின் வேகமே நம்மை மறந்து இறை உணர்வில் ஒன்றச் செய்யும்.

'கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும்'என்பது போல் எப்படி சொன்னாலும் பலன் நிச்சயம்.

இந்த பஜனை முறை எப்பொழுது ஆரம்பித்தது? 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சத்குரு போதேந்திர ஸ்வாமிகள் 'ராமநாம சங்கீர்த்தன்' என்ற பெரில் முக்தியைப் பெற 'ராமநாமம் தவிர வேறு நாமம் தேவையில்லை.அதையே தொடர்ந்து சொன்னால் போதும்'என்றார்.

இதுவே விஷ்ணு ஸகஸ்ர நாமத்தில் வரும் ஸ்ரீராமராம ராமேதி என்ற ஸ்லோகத்தின் பொருள். ராம என்ற ஒரு நாமமே நாராயணனின் ஆயிரம் நாமாக்களுக்கு சமம் என்று ஈஸ்வரனே சொல்கிறார்.

இவரை அடுத்து வந்த சத்குரு ஸ்ரீதர ஐயாவாள் இந்த பஜனை முறையை மேலும் விரிவு
படுத்தினார். ஜாதிவேறுபா
டில்லாத நிலையை எடுத்துச் சொன்னவர் அவரே

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

போதேந்திரர் காலத்திலிருந்த ஸ்ரீதர ஐயாவாள் சிவனிடம் அதீத பக்தி கொண்டவர். திருவிசநல்லூரிலிருந்து தினம் இரவு திருவிடைமருதூர் சென்று மகாலிங்கரை தரிசனம் செய்து வருவார்.

ஒருநாள் அவர் வீட்டில் தந்தையின் சிரார்த்தத்திற்கு செய்து வைத்திருந்த உணவை பசி என்று கேட்ட ஒரு கீழ்சாதி மனிதருக்கு அளித்து விட்டார். இது பற்றி அறிந்த அந்தணர்கள் இது சாஸ்திர விரோதமென்றும், இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர ஐயாவாள் காசி சென்று கங்கையில் நீராட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து அவரை குடும்பத்துடன் நீக்கி வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

'நான் எப்படி காசிக்கு செல்வேன்' என வருத்தப்பட்டார் ஐயாவாள். அந்த நிமிடமே அவர் வீட்டுக் கிணற்றில் நீர் பொங்கிப் பெருகி ஊரெங்கும் ஓட ஆரம்பித்தது. கங்கை கிணற்றிலிருந்து பெருகி வர ஆரம்பித்து சாதி வெறியை அடித்துச் செல்லலானாள். அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்க ஐயாவாள் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். இன்றும் அந்த நிகழ்வு நடந்த நாளான கார்த்திகை மாத அமாவாசை அன்று அவர் இருந்த வீட்டுக் கிணற்றில் கங்கை பெருகி வருவதைக் காணலாம்.

'எந்த சாதி மனிதரும் அவர்களுக்கு பிடித்த எந்தக் கடவுளையும் பாடலாம்.அதற்குத் தடையில்லை. ஆனால் அப்படிப் பாடுவதை நிறுத்தாதீர்கள்'  என்று கூறி பஜனை சம்பிரதாயத்தில்  மாற்றங்களை உண்டாக்கினார்.

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகளே பஜனை பத்ததி என்ற முறையை உருவாக்கினார். அந்த முறையே இன்றளவும் பின்பற்றப் படுகிறது.சத்குரு சுவாமிகள் பற்றி 

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியில் விடிகாலை பஜனை செய்வது புண்ணியம் தரும் என்பதை நாம் அறிவோம். அந்நாளில் அத்தனை ஊர்களிலும் பரவலாக இருந்த இந்த பஜனை இப்போது மிகவும் குறைந்து விட்டது. இந்த நாம பஜனை ஜீவாத்மாவுடன் ஐக்கியமாவதற்கான சிறந்த வழி. இன்னிசை வாத்ய கோஷத்துடனான பஜனை எல்லா உள்ளங்களையும் எளிதில் இழுத்து மனதை பகவத் ஸ்மரணம் செய்ய வைக்கிறது.

மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

நம் மதத்தில் இன்றுவரை அதிகமாகி வரும் ஒரு நல்ல பக்தி விஷயம் நாமபஜனை மட்டுமே. சாஸ்திரங்களில் எந்த பூஜையும் செய்ய ஆசை இருந்தாலும் அவற்றை செய்ய சக்தியும் வசதியும் இல்லாதவர்க்கு இந்த நாம பஜனையே அத்தனை பலன்களும் தருவதாகக் கூறப்படுகிறது. பகவான் கண்ணனே கலிகாலத்தில் தான் நாம சங்கீர்த்தனம் செய்யும் இடங்களில் இருப்பதாக 'கலௌ ஸங்கீர்த்தம் கேசவம்' என்று கூறியுள்ளார்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

'
சிவன், விஷ்ணு, விநாயகர்,ராமன் போன்ற தெய்வங்களை போற்றும் மார்கழியின் சிறப்பு மிகுந்த மகிமை கொண்டது. மல்லிகையும், செண்பகமும் மணம் கமழும் மாதமிது. இம்மாதத்தில் வரும் மார்கழி திருவாதிரையும், ஆருத்ரா தரிசனமும் விஷ்ணு வழிபாடும்,வைகுண்ட ஏகாதசியும் யாவருக்கும் பெரும் பாக்கியத்தை கொடுக்க வல்லன.

மார்கழி திருவாதிரை என்றால் அதில் சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கை சைவர்களிடம் நிறைந்து இருப்பதைக் காணலாம்.

மாதங்களில் மார்கழியாக விளங்கும் பெருமாளின் சிறப்பான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலில் நுழைந்தால் விஷ்ணு லோகம் பெறலாம் என்பது நம்பிக்கை.

'தரிசனம் மாமாங்க தரிசனம்’ என்பர். மார்கழியில் இறைவனைச் சேவித்தால், பன்னிரண்டு ஆண்டுகள் சேவித்த பலன் கிட்டும்.

மார்கழி சிவபெருமானுக்குத் திருவாதிரை, முருகனுக்குப் படி பூஜைகள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, விநாயகருக்கு சஷ்டி விரதம், அம்பாளுக்கு நீராட்டு, சூரியனுக்கு விசேஷ வழிபாடுகள் என அமர்க்களப்படும் மாதம் இது.

அனுமன், மார்க்கண்டேயன் ஆகிய சிரஞ்ஜீவிகள் அவதரித்த மாதம் இது. `மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி’ என்று சிறப்பிக்கிறது, மார்க்கண்டேய புராணம்
சகல பயங்களையும் போக்கும்  `மிருத்யுஞ்ஜய ஹோமம்’ நடத்த சிறந்த மாதம் மார்கழி.


மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஹனுமத் ஜெயந்தி.

ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

மார்கழி மாதத்தின் மூல நட்சத்திர நாளை, ஸ்ரீஅனுமன் ஜெயந்தி நாள் என்று போற்றுவார்கள். இந்த நாளில்தான் ஸ்ரீஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயு மைந்தன் அவதரித்த நன்னாள் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்துங்கள். வெண்ணெய்க் காப்பு செய்து தரிசியுங்கள். வெற்றியைத் தரவல்ல வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியது அனைத்தையும் தந்து காத்தருள்வார் ஸ்ரீஅனுமன்!

அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.

ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்துங்கள். வெண்ணெய்க் காப்பு செய்து தரிசியுங்கள். வெற்றியைத் தரவல்ல வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியது அனைத்தையும் தந்து காத்தருள்வார் ஸ்ரீஅனுமன்!

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது

இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறும் ஹனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உண்டு. அவரது தாய் அஞ்சனாதேவி, தந்தை கேசரி என்ற  வானரத் தலைவர். இவர்களின் குல தெய்வம் வாயு பகவான். இவரே ஹனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் ஹனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் ஹனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஹனுமனின் ராமபக்தி அளவிடற்கரியது. வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.ஹனுமன் சிவனின் அவதாரமாகவும் கூறப்படுவார்.

பெருமாள்  கோயில்களில் ஹனுமாருக்கு தனி சன்னதி உண்டு.  வைணவர்கள் அவரை திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்.

குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் அனுமனுக்குப் மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சூரியனைக் கண்டு அது ஒரு பழம் என்று அதை தவறாகப் புரிந்துகொண்டு, அதைச் சாப்பிட வானில் தாவினார். இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயுபகவான் காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று இல்லாமல் உலக உயிர்கள்
கஷ்டப்பட  ஈசன்  தலையிட்டு ஹனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார்.

இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் ஹனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என கடவுள் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என வாயு வரம் அளித்தார். அக்னிதேவனும்
ஹனுமனுக்கு நெருப்பினால் எவ்வித்  தீங்கும் ஏற்படாது எனவும்,
வருணன்  நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித தீங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர்.

பிரம்மா ஹனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் என வரமளி
த்தார். மகாவிஷ்ணு கதாயுதத்தை  வழங்கினார். எனவே இந்த வரங்களினால் ஹனுமன் ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவராகவும் மாறுகிறார்.

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ஹனுமனின் பெருமை சிறப்பாகக் கூறப்படுகிறது.இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் காட்சி
தருகின்றன.

தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர ஹனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது.
காசியில் ஹனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.

உலகிலேயே மிக உயரமான 135 அடி உயர ஹனுமன் சிலை, ஹைதராபாத்தில் உள்ளது .
சென்னை நங்கநல்லூர், மும்பை நெருல், திருச்சி கல்லுப்பட்டி ஆலயங்கள் மிகப் பிரபலமான ஹனுமன் ஆலயங்களாகும். நாமும் இந்நன்னாளில் ஹனுமனை வணங்கி அவனருள் பெறுவோம்.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்பு🙏
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், மார்கழியில் அதிகாலைப் பொழுதில்,வளி மண்டலத்தில்தூய்மையான ஓஸோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருவதாகவும், அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதாக கூறுகிறது விஞ்ஞானம்.

நம் முன்னோர்கள் அதை இறைவழிபாடு என்ற பெயரில் நாம் கேள்விகள் கேட்காமல் பின்பற்றும் சடங்குகளாக்கி விட்டது மெய்ஞானம்.

மார்கழி பஜனையில் ஆண்கள் சத்தமாகப் பாடல்கள் பாடி, நன்றாக மூச்சு விட்டு சத்தமாகப் பாடல்கள் பாடி, ஊர் முழுவதும் சுற்றி வரும்போது ஓஸோன் உள்ளிழுக்கப்பட்டு ஆரோக்யம் கிடைக்கிறது.

அதே போன்று பெண்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யும் வண்ணம் பெரிய பெரிய கோலங்களை விடியற்காலையில் போடும் போதும் அதே நல்ல விளைவுகள்.

மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் சிறப்பான குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும்  வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும்.

சிவன், விஷ்ணு, விநாயகர்,ராமன் போன்ற தெய்வங்களை போற்றும் மார்கழியின் சிறப்பு மிகுந்த மகிமை கொண்டது. மல்லிகையும், செண்பகமும் மணம் கமழும் மாதமிது. இம்மாதத்தில் வரும் மார்கழி திருவாதிரையும், ஆருத்ரா தரிசனமும் விஷ்ணு வழிபாடும்,வைகுண்ட ஏகாதசியும் யாவருக்கும் பெரும் பாக்கியத்தை கொடுக்க வல்லன.

மார்கழி திருவாதிரை என்றால் அதில் சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கை சைவர்களிடம் நிறைந்து இருப்பதைக் காணலாம்.

மாதங்களில் மார்கழியாக விளங்கும் பெருமாளின் சிறப்பான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலில் நுழைந்தால் விஷ்ணு லோகம் பெறலாம் என்பது நம்பிக்கை.

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..


தேவர்கள் விடியற்காலையில் பூமிக்கு வரும் மாதமாகக் கொண்டாடப்படும் இந்த மார்கழியில் அவர்களை வரவேற்கக் கோலமும், அவர்களைப் போற்றிப் பாடித் துதித்து பூஜைகள் செய்வதும் சிறப்பாகும். நாமும் திருப்பாவை, திருவெம்பா
வையைப் பாடி அவனடி போற்றி அவனருள் பெறுவோம்🙏

'மாதங்களில் நான் மார்கழி மாதம்' (மாஸானாம் மார்கஸு ஹோஸ்மி)என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் கீதையில் கூறுகிறார். ஆதி காலத்திலிருந்தே இம்மாதம் கடவுளை வழிபடுவதற்கு சிறந்த மாதமாக உள்ளது. இறைவனை வழிபட மட்டுமே இம்மாதம் ஒதுக்கப் பட்டிருப்பதாலே மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.
மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களின் ஒருநாள்.அதன்படி தை முதல் ஆறுமாதம் அவர்களுக்கு காலை நேரம். மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும்வழிபாடு மிகச் சிறந்தது.

இந்நாளில் செய்யப்படும் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நோற்கப்படும் நோன்புகளில் முதன்மையானது.இந்த நோன்பு பெண்களாலேயே நோற்கப்
பட்டுள்ளது.

நல்ல மழை பெய்து நாடு சிறக்கவும், நல்ல கணவரை அடையவும், மணமானவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுவதும் இந்நோன்பின் முக்யத்துவமாகும்.மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.


திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை  இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் சுப்ரபாதம் ஒலிபரப்பிய பின்னர் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும் ஒலிபரப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் மார்கழி 30 நாட்களும் திருப்பாவையின் பாடல்களை ஆளுயர பொம்மைகளை கொலு போல் பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் வைத்து அலங்காரம் செய்வது கண்கொள்ளாக் காட்சி.

ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன.

இதில் முதல் நாமமான 'கேசவா' என்பது மாதங்களுக்கு சிகரமான மார்கழியாக விளங்குகிறது. ஆன்மிக மார்க்கத்திற்குச் செல்ல சிறப்புடை மாதமாகக் கருதப்படும் இம்மாதம் ‘மார்க சீர்ஷம்’ எனப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.